நெஞ்சசாரம் துஞ்சும் நினைவுகளே – 3

அத்தியாயம் 3

அந்தப் பூங்காவில் இருந்த வாங்கிலில் மகளோடு சென்று அமர்ந்துகொண்டான் இளங்கோவன். அவனுக்குள்ளும் பெரும் போராட்டம். பார்வை மகள் முகத்தில் இருக்க, அவள் கன்னம் தலை என்று வருடிக்கொண்டிருந்தாலும் சிந்தனைகள் வாணியிடம் சிக்கியிருந்தன.

அவளை அவளோடான வாழ்க்கையை எல்லாம் கடந்து, நெடுந்தூரம் பயணித்து வந்துவிட்டான்தான். ஆனாலும் அவளையும் அவள் கண்ணீரையும் பார்த்தபோது என்னவோ ஒரு குற்றவுணர்ச்சி அவனைப் போட்டுப் பந்தாடியது. ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்துவிட்டவன் போன்று மறுகினான்.

“நீயும் இரு.” இவர்களை நெருங்காமல், சற்றுத் தள்ளி நின்றவளைப் பார்த்துச் சொன்னான்.

அந்த வாங்கிலின் அடுத்த நுனியில் சென்று அமர்ந்துகொண்டாள் வாணி.

அப்பாவின் மடியில் ஆசையாய் அமர்ந்திருந்தாலும் ஒரு கூச்சம் இன்னும் மிளிரிடமிருந்து விடுபடவில்லை. அன்னையை அன்னையைப் பார்த்தாள்.

இளங்கோவனுக்கும் புரிந்தது. அவன் பெண்ணுக்கு அவன் அப்பா என்று தெரிந்துதான் இருக்கிறது. அப்பா மீதான ஆர்வமும் ஆர்ப்பரிப்பும் நிறைய இருந்தாலுமே இயல்பான பாசத்தோடு ஒட்டிக்கொள்ள முடியவில்ல.

அப்பாவின் சூட்டை, அவன் அன்பை, அவன் அரவணைப்பை அவள் அறிந்ததேயில்லையே. பிறகு என்னதான் செய்வாள்?

வெளியே சொல்ல முடியா வலியுடன் மகளைப் பார்த்தான். அவள் கன்னம் வருடி நெற்றியில் முத்தமிட்டான். சுருள் முடியும், குண்டு விழிகளும், பால் வண்ண நிறமும் என்று அப்படியே அன்னைதான்.

மார்புக்குள் பொத்திவைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. பயந்துவிடுவாளோ என்று மென்மையாக அணைத்துக்கொண்டான்.

அவன் தோளிலும் மார்பிலும் தினமும் சாய்ந்து விளையாடி, அவனோடு தொற்றிக்கொண்டு ஊர் சுற்றி, பிடித்ததை வாங்கிச் சாப்பிட்டு, தினமும் அவன் வண்டியில் பள்ளிக்கூடம் சென்று வந்து, அவனோடு உறங்கி எழவேண்டிய மகள், இன்றுதான் அப்பாவின் அண்மையையே அனுபவிக்கிறாள். அந்த அப்பாவும்தான்.

காலத்தோடு சேர்ந்து அவனும் ஓடுகையில் எதுவும் தெரியவில்லை. இப்படியான பொழுதுகளில் நடந்தவற்றை திரும்பிப் பார்க்கையில்தான் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

கொஞ்சம் நிதானித்திருக்கலாமோ, இந்த மகளுக்காகவேனும் பொறுமை காத்திருக்கலாமோ? அவனுக்குத் தெரியவில்லை. இன்றைக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அன்றைக்கு… எதையும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.

அவனை அப்படி யாரும் விடவில்லை. அதுதான் உண்மை. எல்லா பக்கத்தாலும் அழுத்தத்திற்கு மேல் அழுத்தம் கொடுத்து அவனைச் சின்னாபின்னமாக்கியிருந்தார்கள்.

காற்றே இல்லாத ஒரு பானைக்குள் போட்டு அடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி, அவன் சூழ்நிலையும் அவனைச் சுற்றியிருந்தவர்களும் நெருக்கியத்தில் எதுவும் வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் என்று அனைத்திலிருந்தும் விடுபட்டிருந்தான்.

அந்த அனைத்திற்குள்ளும் அவன் குழந்தையும் அடங்கிப்போனதுதான் வேதனை.

விவரம் புரிகிற காலம் வருகையில் என்ன நினைப்பாள்? ஏன் அப்பா அவசரப்பட்டாய் என்று கேட்பாளா, இல்லை, என்னைக் கூட நீ நினைக்கவில்லையே அப்பா என்பாளா, இல்லை, தன் சோகத்தை எல்லாம் தனக்குள் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைப்பாளா?

அதற்குமேல் எதையும் யோசிக்க முடியாமல் மகள் நெற்றியில் உதடுகளைப் பதித்து விழிகளை மூடிக்கொண்டான்.

எவ்வளவு நேரம் கடந்ததோ. பனித்திருந்த விழிகளை அவன் திறந்து பார்த்தபோது, அவன் பெண் குழப்பமும் கேள்வியாக அவனைத்தான் பார்த்திருந்தாள்.

அவளிடம் அவள் வயதுக்கேற்ற துடிப்போ துறுதுறுப்போ இல்லை. ஏனோ? காயப்பட்ட அன்னையால் வளர்க்கப்படுகிறவள் என்பதால் அவள் சோகம் இவளிலும் படர்கிறதா?

திரும்பி அருகில் இருப்பவளைப் பார்த்தான்.

அவ்வளவு நேரமாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த வாணி, அவன் பார்க்கவும் முகத்தை வேகமாகத் திருப்பிக்கொண்டாள். அதே வேகத்தோடு முகத்தை அவள் துடைப்பதிலேயே அழுகிறாள் என்று புரிந்தது.

பிரயோசனமற்ற கண்ணீர்! கசப்பும் வெறுப்புமாக எண்ணினான் இளங்கோவன். இன்றைக்கு அழுது என்ன பிரயோசனம்? இப்படி அவனைக் குற்றவுணவில் ஆழ்த்த முயலும் அந்தக் கண்ணீர் மெல்லிய கோபத்தைக் கூட அவனுக்குள் உண்டாக்கிற்று.

கொஞ்ச நேரம் என்ன பேச என்று தெரியாமல் அவனும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

“எப்பிடி இருக்கிறாய்?” பார்வை மகள் மீதிருக்க வினவினான்.

வாணிக்கு நெஞ்சு வெடிக்கும் நிலை. இன்று அவன் அவளுக்கு யாருமே இல்லை. ஆனாலும் அவனருகில் அவள் உணர்வுகள் எல்லாம் கட்டவிழ்ந்துகொண்டு கதறுகின்றன.

“சத்யா!” சற்றே அழுத்தி அழைத்தான். அதில் இலேசான கோபமும் இப்படி அழாதே என்கிற அதட்டலும் கலந்து கிடந்தன.

அவளும்தான் அழக் கூடாது என்று நினைக்கிறாள். அனைத்தையும் நானும் கடந்து வந்துவிட்டேன் என்று காட்டத்தான் ஆசைப்படுகிறாள். முடிய வேண்டுமே. வேக வேகமாய்க் கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். அந்தக் கைக்குட்டை என்னை விட்டுவிடு என்று கதறும் அளவுக்கு ஈரமாகியிருந்தது.

“சத்யா!” என்றான் அவன் திரும்பவும். அதில் என்ன இது என்கிற சங்கடமான கேள்வி ஒளிந்திருந்தது.

அவன் தன்னைப் பற்றித் தவறாக ஏதும் நினைத்துவிடுவானோ என்று அவளும் சங்கடப்பட்டாள். வேகமாகக் கண்களைத் துடைத்துக்கொண்டு, “சொறி, அழக் கூடாது எண்டுதான் நினைக்கிறன். ஆனா அது அழுகை வருது.” என்று அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள்.

“எல்லாம் மாறி எவ்வளவோ காலமாயிற்றுது சத்யா.”

உண்மைதான். உண்மையேதான். அவள் மட்டும்தான் அவன் விட்டுவிட்டுப் போன இடத்திலேயே நிற்கிறாள்.

“மிளிர்க் குட்டி அப்பாவை மறந்திட்டீங்களா?” அவளிடம் பேசிப் பலன் இல்லை என்று நினைத்தானா அல்லது அவளோடு பேசப் பிடிக்கவில்லையா தெரியவில்லை. திரும்பவும் மகளிடம் பேச்சுக்கொடுத்தான்.

அவள் இல்லை என்று தலையை அசைத்தாள்.

“அதுதானே பாத்தன். என்ர குஞ்சு அப்பாவை மறப்பாவா?” என்று அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான் அவன்.

பார்வையைத் திருப்பிக்கொண்டாள் வாணி. அவளும் அவன் மார்பளவுதான் வருவாள். வேலை முடிந்து வருகிறவன் இதேபோல்தான் அணைத்து அவள் நெற்றியிலும் தருவான்.

“எப்ப இலங்கை வந்தனீங்க?”

“என்ன?” ஏதோ ஒரு உலகத்தில் தொலைந்திருந்தவள் வேகமாய் இவன் புறம் திரும்பி வினவினாள்.

அவள் விழிகளில் என்ன இருந்ததோ? கொஞ்ச நேரம் அவன் பேச்சுமே நின்று போனது. அவளுக்கு ஒரு மாதிரியாக முகம் கன்றிவிட பார்வையை அகற்றிக்கொண்டாள். அதன் பிறகே அவன் கேட்ட கேள்வி புத்திக்கு உரைத்தது.

“வந்து ரெண்டு கிழமையாகுது.”

“பிறகேன் வந்ததும் சொல்லேல்ல எனக்கு?”

“அது நாடு மாறினதால மிளிருக்குக் காய்ச்சல், இருமல், தடுமல் எண்டு…”

“பிள்ளைக்கு வருத்தம் வந்ததா? இப்ப சுகமா?” மகள் முகத்தை வாஞ்சையுடன் பார்த்து வினவினான் அவன்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

“திரும்பவும் அங்க போயிடுவியா?”

“இல்ல. இஞ்சயே இருப்பம் எண்டு இருக்கிறன்.”

“பிள்ளைக்கு ஸ்கூல்?”

“நான் படிச்ச ஸ்கூல்லயே கேட்டிருக்கிறன்.”

“எப்பிடி உன்னத் தனியா விட்டவே?” இருவருக்குள்ளும் பேச்சுக் கொஞ்சம் இயல்பாக வர ஆரம்பிக்கவும் அவ்வளவு நேரமாக மனத்தை அரித்துக்கொண்டிருந்த வினாவை வினவினான்.

“நானாத்தான் வந்தனான்.”

அவளாக வந்தாளா? அவனால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாகப் பார்த்தான். ஆனாலும் விடுத்துக் கேட்கப் போகவில்லை.

அதைவிட இப்படிப் பேசுவது நல்லதும் இல்லை என்று தோன்ற, “நீ இஞ்சயே இரு. நான் பிள்ளையோட சும்மா நடந்திட்டு வாறன்.” என்றான்.

அவள் சரி என்று தலையை ஆட்டினாள்.

அவன் மகளோடு எழுந்துகொள்ள, “அம்மா!” என்றாள் மிளிர் தயக்கமாக.

சொந்தத் தகப்பனோடு போவதற்குத் தயங்கும் மகள். இதுதான் அவள் பெற்ற மகளின் நிலை. அவள் வாழ்க்கை மட்டுமல்லாமல் மகள் வாழ்க்கையும் இப்படியாகிப் போயிற்று. அதற்கு அவளும் ஒரு காரணம். மீண்டும் கண்களைக் கண்ணீர் மறைக்க, மகளைத் தன்னிடம் அழைத்தாள்.

அவளைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு, “உங்களுக்கு உங்கட அப்பாவப் பிடிக்கும் எல்லா?” என்று கனிவுடன் வினவினாள்.

அவள் ஆம் என்று தலையை அசைத்தாள்.

“நாங்க கட்டாரில் இருந்ததால இவ்வளவு நாளும் அப்பாவைப் பிள்ளை பாக்கேல்லை என்ன?”

அதற்கும் ஆம் என்று தலையை அசைத்தாள் அவள்.

“இனி நாங்க இஞ்சதானே இருக்க போறம். அதால இனி அடிக்கடி அப்பாவைப் பாக்க வரலாம். அப்பாவோட விளையாடலாம். இப்பிடி நீங்க அப்பாவோட கதைக்காம, சிரிக்காம இருந்தா அப்பா பாவம் எல்லா. கவலைப்படுவார் என்ன? அதால இப்ப அம்மான்ர செல்லக்குஞ்சு உங்கட அப்பாவோட போவீங்களாம். பிறகு இன்னொரு நாளைக்கும் வரலாம். சரியா?”

மிளிர் இப்போதும் தலையை ஆட்டிவிட்டுத் தகப்பனைத் திரும்பிப் பார்த்தாள்.

“சரி, அப்பாவோட போங்க.” என்று இறக்கிவிட்டாள் வாணி. அவ்வளவு நேரமாக வாணியையே உள்ளூர வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த இளங்கோவன் மகளை நோக்கிக் கைகளை நீட்டினான்.

அதன் பிறகு மிளிர் தயங்கவில்லை. ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள்.

கண்ணில் நீருடன் போகிறவர்களையே பார்த்திருந்தாள் வாணி. கையில் தூக்கியிருந்த மகளிடம் என்னவோ பேச்சுக் கொடுத்தபடி போய்க்கொண்டிருந்தான் அவன்.

error: Alert: Content selection is disabled!!