எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் போட்டவனிடம், “கண்ணன் அண்ணாவா?” என்று கேட்டான் ஜீவன்.
“ம்..”
“என்னவென்று கேளேன்டா..”
“என்ன கேட்பது? ஏதாவது ஆறுதல் சொல்வார்..” என்றான் சலிப்புடன்.
“நீயாக ஒன்றை முடிவு செய்யாமல், என்ன சொல்கிறார் என்று கேள்.” என்றான் சுகந்தன்.
திரும்பவும் விடாமல் கைபேசி அடிக்க, நண்பர்களின் பேச்சை ஏற்று அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான் ரஞ்சன்.
“ஏன்டா, ஒரு மனுஷன் கூப்பிட்டால் என்ன, ஏது என்று கேட்கமாட்டாயா? அவ்வளவு பெரிய மனிதனா நீ?” என்று, அவ்வளவு நேரமும் அவர் அழைக்க அழைக்க அவன் எடுக்காமல் இருந்த கோபத்தில் பொரிந்தார் கண்ணன்.
“சாரி அண்ணா.”
“சரி விடு. நீ இங்கே கடைக்கு வா!” என்றவரின் பேச்சில் அவன் உடல் இறுகியது.
மீண்டும் அவன் அந்தக் கடை வாசல் படியை மிதிப்பதா? பணம், வசதி, ஆள்பலம் தன இல்ல; அதற்காக அவனுக்கு ரோசம், மானம், மரியாதை எதுவுமே இல்லை என்று நினைத்துவிட்டாரா? என்று எண்ணியவன் சூடாகப் பதில் சொல்ல முதலே முந்திக் கொண்டார் கண்ணன். “சந்தானம் அண்ணாவுக்கு நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் ரஞ்சன். அவர் மன்னிப்புக் கேட்டார். சித்ராவும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்றாள். சந்தானம் அண்ணாதான் உன்னை வரச் சொன்னார்.”
அவருக்கு உண்மை தெரிந்தால் என்ன? அவர்கள் மன்னிப்புக் கேட்டால் என்ன? நடந்தது இல்லை என்றாகிவிடுமா? அவன் பட்ட அவமானம் மறைந்து விடுமா? அல்லது எல்லோர் முன்னிலையிலும் கூனிக் குறுகி நின்றானே. அது இல்லை என்றாகி விடுமா?
“இனி நான் அங்கு வரமாட்டேன்..” என்றான் உறுதியான குரலில்.
“அப்படிச் சொல்லாதே ரஞ்சன். சின்னப்பிள்ளை தானே அவள். தெரியாமல் செய்துவிட்டாள். அதுதான் மன்னிப்புக் கேட்கிறாளே. அவளுக்காக மட்டும் சொல்லவில்லை. உன் வீட்டு நிலையையும் யோசித்துப் பார். உனக்காக்கவும்தான் நான் இதைச் சொல்கிறேன்.” என்றவருக்கு, பதில் சொல்லாமல் இருந்தே தன்னுடைய மறுப்பைத் தெரிவித்தான் ரஞ்சன்.
அவன் வீட்டு நிலைதானே வாய்மூடி, அவளை அடிக்கத் துறுதுறுத்த கையை அடக்கி அவன் வெளியே வந்ததற்கே காரணம். அவனிடம் மிஞ்சி இருப்பது சுயகவுரவம் ஒன்றுதான். அதையும் இழக்க முடியுமா?
அவருக்கும் அது புரிந்தது. கைபேசியில் கதைத்து அவனைச் சமாதானப் படுத்த முடியாது என்று நினைத்தவர், “எங்கே நிற்கிறாய்? நான் உன்னுடன் நேரே கதைக்கவேண்டும்.” என்றார்.
“நான் இங்கே ஜீவன் சுகந்தனோடு இருக்கிறேன்..”
“நான் இப்போது அங்கே வர முடியாதேடா. நீ இங்கே வாயேன் ரஞ்சன்.” என்றார் மீண்டும்.
“இல்லை அண்ணா. என்னால் முடியாது.”
“ப்ச்! போடா. இவ்வளவு பிடிவாதம் கூடாது ரஞ்சன் உனக்கு. சரி, மதியம் நாம் வழமையாகச் சாப்பிடும் ஹோட்டலுக்கு வா. இல்லை என்காதே. நீ வருகிறாய். நான் பார்த்துக்கொண்டு இருப்பேன். இப்போது வைக்கிறேன்.” என்றவர் வைத்தும் விட்டிருந்தார்.
மதியம் வரை நண்பர்களுடேனேயே இருந்தான் ரஞ்சன். மதியம் ஒரு மணி ஆனதும், “வருகிறேன்டா..” என்றபடி எழுந்தான்.
“சரிடா..” என்ற ஜீவன், “நான் ஒன்று சொல்லவா ரஞ்சன்.” என்று கேட்டான்.
“என்ன, சொல்லுடா”
“மானத்துக்கும் ரோசத்துக்கும் நம்முடைய மூளையும் மனதும் வேண்டுமானால் அடங்கும் மச்சான். ஆனால் வயிறு அடங்காதுடா. எது என்றாலும் யோசித்துச் செய்.” என்றான்.
ஒரு நொடி அவனையே பார்த்த ரஞ்சன், ஒரு பெருமூச்சோடு தலையை மட்டும் அசைத்துவிட்டுக் கிளம்பினான். அங்கே ஹோட்டலுக்குள் நுழைந்து, கண்ணனுக்கு முன்னால் சென்று அமர்ந்தான்.
மதிய உணவை உண்டுகொண்டிருந்த கண்ணன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீயும் எதையாவது ஆடர் பண்ணிச் சாப்பிடு.” என்றார்.
“இல்லை. எனக்கு வேண்டாம். நீங்கள் ஏன் வரச்சொன்னீர்கள்?” என்று இறுக்கமான குரலிலேயே கேட்டான்.
“சொல்கிறேன். முதலில் சாப்பிடு. பசியில் இருந்தால் கோபம்தான் வரும்.”
“எனக்குப் பசியில்லை.”
“பொய் சொல்லாதே ரஞ்சன். நீ வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவு அங்கே கடையில் இருக்கிறது. கொண்டு வரவேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். உன்னைச் சந்திக்க வந்த அவசரத்தில் மறந்துவிட்டேன். அதற்கு என்ன, இங்கே வாங்கிச் சாப்பிடு.”
அவனுக்கும் பசி வயிற்றைக் கிள்ளியதுதான். ஜீவன் சொன்னது போல் மனதின் வைராக்கியத்துக்கு அவன் வயிறு அடங்க மறுத்தது. ஆனால், இங்கே வாங்கிச் சாப்பிடவும் அவன் கையில் சுத்தமாகப் பணமும் இல்லையே. அன்று காலையில் தானே இருந்த பணம் மொத்தத்தையும் வழித்துத் தாயிடம் கொடுத்திருந்தான். அதைச் சொல்லி கண்ணனின் அனுதாபத்தையோ அல்லது அவரின் பணத்தில் உண்ணவோ பிடிக்காமல் கோபத்தைத் தனக்குத் துணைக்கழைத்தான்.
“இப்போது நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லாவிட்டால் நான் போகிறேன்..” என்றவன், கதிரையில்(நாற்காலி) இருந்து எழவும், அவன் கையைப் பிடித்து அமர்த்தினார் கண்ணன். “இந்தக் கோபத்துக்கும் ரோசத்துக்கும் மட்டும் குறைச்சல் இல்லை”
‘என்னிடம் எஞ்சியிருப்பது அது மட்டும்தானே..’ என்று எண்ணியது அவன் மனம். ஆனாலும் வெளியே அமைதியாக அவரையே பார்த்தான்.
“திரும்பவும் வேலைக்கு வாடா..” என்றார் அவர் நேரடியாக.
“என்னிடம் பணம்தான் இல்லை கண்ணன் அண்ணா. அதற்காக மானம், மரியாதையை, தன்மானமும் இல்லை என்று நினைத்தீர்களா?” என்று கேட்டான் கோபமாக.
“அதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறார்களே, பிறகு என்னடா?” என்று கேட்டவரின் கேள்விக்கு அவன் பதிலே சொல்லவில்லை.
மேசையில் இருந்த தண்ணீர் கிளாசை அவன் கைகள் இரண்டும் சுற்றிக் கொண்டிருக்க பார்வையோ அதையே வெறித்துக் கொண்டிருந்தது.
“ரஞ்சன் நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உன் மனநிலை எனக்கு விளங்காமல் இல்லை. ஆனால் என்ன செய்வது சொல்லு? நாமும் கொஞ்சம் சமாளித்துத்தான் போகவேண்டும். அவர்களைப் போல நம்மிடம் பணமா குவிந்து கிடக்கிறது. ஒரு வேலை போனால் இன்னொரு வேலை என்று அலட்சியமாக நினைக்க? உன் அம்மா தங்கையைப் பற்றி யோசி. இதை விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு என்ன செய்யப் போகிறாய்? இதே சம்பளத்தில் கிடைக்குமா? இப்போது நீயாகப் போகவில்லையே. அவர்களாகத் தானே உன்னைத் தேடி வருகிறாகள்..” என்றவரின் பேச்சை மட்டுமே கேட்டிருந்தான்.
பதில் எதுவுமே சொல்லாமல் இருந்தவனின் மனதில் என்ன இருக்கிறது? அல்லது என்ன நினைக்கிறான்? எதுவுமே புரியவில்லை கண்ணனுக்கு.
“என்னடா வேலைக்கு வருகிறாயா?”என்று கேட்டவருக்குப் பதில் சொல்லாமல் இருந்தவனின் தோளை ஒரு கரம் பற்றியது.

