என் சோலைப் பூவே 4 – 1

அத்தியாயம்-4

 

யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே!

 

“நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரையே வரவழைத்தேன்..” என்றார் கண்ணன் புன்னகையுடன்.

 

“நான் சொல்லித்தான் கண்ணன் உன்னைக் கூப்பிட்டான்.” என்றபடி ரஞ்சனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் சந்தானம். “எங்கள் மேல் இருக்கும் கோபம் இன்னும் போகவில்லையா ரஞ்சன்?”

 

அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாது இருந்தவனின் முதுகில் தட்டி, “நானும் சித்துவும் செய்தது பிழைதான். மன்னித்துவிடு..” என்றார் அவர், கௌரவம் பாராது.

 

வயதில் பெரியவர், செல்வாக்கான மனிதர் பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்டது சங்கடமாக இருந்தாலும், அதை அவனால் எற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதேபோல அவரிடம் தன் கோபத்தையும் காட்ட முடியவில்லை. “அங்கிள், அது..” என்று தடுமாறினான் சொல்வதறியாது.

 

மீண்டும் அவன் தோளில் கையை வைத்து, “உன் நிலை புரிகிறதப்பா. ஆனால் ரஞ்சன்.. எப்படி உனக்குச் சொல்வது?” என்று அவனிடமே கேட்டவர் தொடர்ந்தார்.

 

“சித்து கண்கள் கலங்க ஒருவன் என் கையைப் பிடித்து இழுத்தான் என்று சொன்னதும் பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவாக கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. ஆனால் நடந்தது நடந்ததுதானே. அதை எல்லாம் மறந்துவிட்டு வேலைக்கு வா.”

 

அவர் மகள் கண் கலங்கினாள் என்பதற்காக எதையும் செய்ய முடியுமா? தீர விசாரிக்க வேண்டாமா? நானும் இன்னொருவரின் பிள்ளைதானே என்று முணுமுணுத்த மனதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், “இல்லை அங்கிள். எனக்குத் திரும்ப வேலைக்கு வர விருப்பம் இல்லை.” என்றான் உறுதியான குரலில் தெளிவாக.

 

“ஏன் விருப்பம் இல்லை? சரி சொல்லு, நான் என்ன செய்தால் உன் கோபம் போகும்?” என்று கேட்டவரிடம் என்ன சொல்வான்?

 

பதில் சொல்லாது இருந்தவனிடம், “என்னடா இது? அவர் உன்னை மதித்து வந்து மன்னிப்பும் கேட்டுவிட்டார். பிறகும் என்ன?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டார் கண்ணன்.

 

“நீ கொஞ்சம் பொறு கண்ணா.” என்று சொன்ன சந்தானம், “சித்துவையும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லவா?” என்று கேட்டார்.

 

அவரின் கேள்வியே, அவருக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியபோதும், “இல்லையில்லை. வேண்டாம்.” என்றான் ரஞ்சனும் அவசரமாக.

 

அவளின் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை. மன்னிப்புக் கேட்கிறேன் என்கிற பெயரில் அவள் அவனிடம் கதைப்பதோ அதை அவன் நின்று கேட்பதோ, நினைக்கவே பிடிக்கவில்லை.

 

“பிறகு என்ன? நீ வேலைக்கு வா. உன்னைப் போன்ற நல்ல தொழிலாளியை என்னால் இழக்க முடியாது.” என்று சொல்லிக் கொண்டிருந்தவரைச் சடாரென்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.

 

அதை உணர்ந்து, “நீ நினைப்பது புரிகிறது ரஞ்சன். அது காலையில் ஏதோ அவசரத்தில், கோபத்தில், யோசியாது வெளியே போகச் சொல்லிவிட்டேன்..” என்றார் தணிவாகவே.

 

அவர் என்ன சொன்னபோதும் அவனால் அவரின் சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கூனிக் குறுகி நின்றதே கண் முன்னால் வந்து போனது. அதை நினைக்க நினைக்க மனம் கொதிநிலையை அடைவதும் குறைய மறுத்தது.

 

அவனின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? சொந்த பந்தங்கள் எல்லோரும் அவனது குடும்பத்தை ஒதுக்கியது ஏன்? வருங்கால மனைவி என்று இருந்தவளின் அலட்சியம் எதற்காக? ஒரு பெண் ஆண் மகனான அவனை அத்தனை பேருக்கும் முன்னால், தைரியமாக அறைந்ததற்கு காரணம் என்ன? பணமில்லாதவன்! காசு காசு காசு! அந்தக் காசு இருப்பவன் இல்லாதவனைப் போட்டுப் படுத்தும் பாடு இதெல்லாம்!

 

இதை எல்லாம் நினைக்க நினைக்க மனதில் வன்மமும் ஆத்திரமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் அதைக் காட்டவோ வெளிப்படுத்தவோ முடியாதே. அந்த இயலாமையில் இன்னும் இன்னும் எரிமலையானது அவன் மனது.

 

“வருகிறாய் தானே வேலைக்கு?” என்கிற கேள்வியில் சிந்தனை கலைந்தவன் மறுக்கத் தொடங்கும் முதலே, “இனியும் நீ மறுத்தாயானால், என்னிடம் வேலை செய்த ஒருவனுக்கு தவறு இழைத்து விட்டோமே என்று என் மனம் கடைசிவரை குன்றும் ரஞ்சன். அதனால்தான் இவ்வளவு தூரம் உன்னிடம் கேட்கிறேன். எனக்கு எப்படியும் உன் அப்பா வயதுதான் இருக்கும். அவர் ஒரு பிழை செய்தால் மன்னிக்க மாட்டாயா?” என்றவரின் கடைசிக் கேள்வியில் முற்றாக விழுந்தான் ரஞ்சன்.

 

அப்பா! அவரின் அருகாமைக்கும் பாதுகாப்பான சிறகுகளுக்கும் மனம் வெகுவாக ஏங்கிப் போயிற்று!

 

அதுவரை அவர்களின் உரையாடலில் தலையிடமால் இருந்த கண்ணன், சந்தானத்திடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவன் வருவான் அண்ணா. நீங்கள் போங்கள். நான் வரும்போது கூட்டிக்கொண்டு வருகிறேன்..” என்றார்.

 

அவரை முறைத்தவனை ஒரு பொருட்டாக கண்ணன் மதிக்கவே இல்லை.

 

“கட்டாயம் வந்துவிடு ரஞ்சன்..” என்றுவிட்டு எழுந்து சென்றார் சந்தானம்.

 

அவர் போனதும், “உங்களை யார் அப்படிச் சொல்லச் சொன்னது?” என்று பாய்ந்தவனை, கண்டிப்போடு பார்த்தார் கண்ணன்.

 

“கோபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு கூடாது. அவர் இதைவிட இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் நீ?”

 

மீண்டும் அதே கேள்வி! அவனுக்கு இன்னும் பதில் தெரியாக் கேள்வி. அமைதியாகி விட்டவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எழுந்து கைகழுவச் சென்றார் கண்ணன்.

 

அங்கிருந்த பேப்பரினால் கழுவிய கையையும் வாயையும் துடைத்தபடி வந்தவர், “வாடா..” என்றார் அவனிடம்.

 

தன் இயலாமையை நொந்தபடி கதிரையில்(நாற்காலி) இருந்து எழுந்தவனுக்கு வாழ்க்கையே கசந்து வழிந்தது.

உண்ட உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு வந்த கண்ணனையும் ஏற்றிக் கொண்டு சென்று, வண்டியைக் கடை வாசலில் நிறுத்தினான். அவர் இறங்கிய பிறகும் அவனால் இறங்க முடியவில்லை. முதன் முதலில் அந்தக் கடையின் வாசலை மிதிக்கையில் எப்படி உணர்ந்தானோ அதைவிட மோசமாக, அவமானமாக, முதுகெலும்பு அற்றவனாக, கையாலாகதவனாக அவனுக்கு அவனே தெரிந்தான்.

 

அவன் நிலையை உணர்ந்த கண்ணன், அவன் முதுகில் தட்டி, “இறங்கு ரஞ்சன்..” என்றார்.

error: Alert: Content selection is disabled!!