சிவமூர்த்தி யாழ்ப்பாண டவுனில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். அது அவரின் அப்பாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவர்கள் குடும்பத்தின் அடையாளம்.
அங்கு வேலைக்குச் சேர்ந்தவன்தான் இளங்கோவன்.
அப்பா, அம்மா, தங்கை என்று அவனுடையதும் சின்ன குடும்பம்தான். வறுமையோடு சேர்த்து அவனுக்குப் படிப்பும் வரவில்லை.
இரு குடும்பமும் ஏதோ ஒரு வழியில் தூரத்து உறவினர்கள்.
அதுவரையில் இதுதான் வேலை என்றில்லாமல் கிடைக்கிற வேலைகளுக்கெல்லாம் போய்வந்துகொண்டிருந்தான் இளங்கோ. அவனுடைய 21வது வயதில் இளங்கோவனின் அப்பா கதிர்வேலன்தான் அவனை அழைத்துவந்து சிவமூர்த்தியோடு கதைத்து வேலைக்குச் சேர்த்துவிட்டார்.
எப்போதும் உறவுக்காரர்களை வேலைக்கு வைக்க விரும்பமாட்டார் சிவமூர்த்தி. ஆனால், அவன் வீட்டு நிலை முகத்திற்கு நேராக மறுக்க விடவில்லை. முதலில் நிற்கட்டும், அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதை வைத்து மேலே பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்.
ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக இருந்தான் இளங்கோ.
நல்ல கெட்டிக்காரன். நேர்மையானவன். கடின உழைப்பாளி. வேகமாக வேலையையும் பிடித்துக்கொண்டான். ஒரு கெட்ட பழக்கம் இல்லை. ஒரு நாள் பிந்தியதில்லை. அனாவசியமாக விடுப்பு எடுத்ததில்லை. முகம் சுளிப்பதில்லை. முக்கியமாக ஆட்களோடு நயமாகப் பேசி, நல்லபடியாக வியாபாரம் செய்துவிடுவான். கூடவே அனைத்திலும் பொறுப்பாகவும் இருந்தான்.
எல்லாவற்றையும் விடக் கை மிக மிகச் சுத்தம். அப்போதெல்லாம் கடையின் திறப்பே அவனிடம் இருக்கிற அளவுக்கு நம்பிக்கையானவனாக மாறியிருந்தான்.
பிறகு பிறகு சிவமூர்த்திக்குக் கடை குறித்து எந்த யோசனைகளும் இல்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை அவன் காதில் போட்டுவிட்டால் போதும். அது அப்படியே நடக்கும். வீடு தேடி வந்து அன்றைய கணக்கு வழக்குகளைச் சொல்லிவிட்டுப் போவான்.
அவ்வளவு அருமையான ஒருவன். அவருக்கு அவனை மிக மிகப் பிடிக்கும்.
21 வயதில் வந்தவன் 27 வயதாகியும் அவரை விட்டுப் போகவே இல்லை. அவ்வப்போது அவருக்குத்தான் மெல்லிய யோசனை வந்துபோகும். தொழிலைப் பிடித்துக்கொண்டான். அவர் பொருள்களைக் கொள்வனவு செய்யும் மொத்த வியாபாரிகளையும் அவனுக்கு நன்றாகத் தெரியும்.
டவுனுக்குள்ளும் அவனுக்கு என்றே ஒரு பெயரையும் நாணயத்தையும் சம்பாதித்து வைத்திருந்தான். சில நேரங்களில் அவனுடைய வியாபாரத் தந்திரங்களைக் கண்டு அவரே புருவங்களை உயர்த்தியிருக்கிறார்.
இப்படி இருக்கையில்தான் அவன் வீட்டில் அவனுக்குத் திருமணத்திற்குப் பார்க்கிறார்கள் என்கிற செய்தி அவர் காதுக்கு வந்தது.
அவருக்கும் அதிசயமாக மகள் திருமணத்தைப் பற்றி யோசிக்கையில் இவன்தான் கண்முன்னே வந்து நின்றான்.
ஒரே மகள். செல்லப்பெண். பயந்த சுபாவம். அவள் கேட்டது கிடைக்கும். ஆசைப்பட்டது நடக்கும். கண்ணுக்குள் பொத்தி என்பார்களே அப்படித்தான் வளர்த்தார்கள். அவளும் பல்கலையை முடித்த நேரம் அது. வேலைக்கு அனுப்புகிற எண்ணமே இல்லை.
பணிவானவன். பண்பானவன். கெட்டிக்காரன். நேர்மையானவன். ஒழுக்கமானவன். ஒரேயொரு குறை படிப்பில்லை.
அவனை மகளுக்குக் கட்டி வைத்தால் மகள் வாழ்க்கை குறித்துப் பயப்படவே தேவையில்லை.
அந்த நேரம் பவன் கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். அவனுக்கு அப்போது தகப்பனின் கடையை வந்து பொறுப்பெடுத்துக்கொள்வதில் விருப்பமே இல்லை.
கொழும்பு, அந்த வாழ்க்கை, கணனியின் முன்னான உடை கசங்காத வேலை, அதில் கிடைக்கும் நல்ல சம்பளம் என்று அதன் மீதுதான் முழு மோகமும். அங்கேயே நிரந்தரமாக இருந்துவிடும் எண்ணத்தில் இருந்தான்.
அதனால் தனக்குப் பின் கடையை யார் கவனித்துக்கொள்வார்கள் என்கிற கவலை அவருக்கு ஏற்கனவே இருந்தது. மகளுக்கு இவனை மணமுடித்து வைத்துவிட்டால் அந்தக் கவலையும் தீர்ந்துவிடும்.
மனைவி மகனோடு பேசினார்.
குணவதிக்கு முதலில் அவனா என்று இருந்தாலும் சிவமூர்த்தி எடுத்துச் சொல்லவும் கேட்டுக்கொண்டார். குறிப்புப் பார்த்த இடத்தில் அமோக பொருத்தம். அதில் மிச்ச சொச்சமாக இருந்த குணவதியின் மனக்குறையும் தீர்ந்து போயிற்று.
பவன் கொஞ்சம் பெருமை பிடித்தவன். அவனுக்குத் தம்மிடம் எடுபிடி வேலை செய்யும் ஒருவனைத் தங்கைக்குத் துணையாக்குவதில் விருப்பமே இல்லை. அவன் எல்லாம் ஒரு ஆளா என்று ஒரு எண்ணம். பிடிவாதமாக நின்று மறுத்தான்.
வீட்டோடு இருந்து கடையையும் பார்த்துக்கொள்வான், எங்களுக்கும் உதவி, தங்கையும் நன்றாக வாழ்வாள், எனக்குப் பிறகு நம்பிக்கையான ஒருவனாக உனக்குக் காலம் முழுக்க இருப்பான் என்று தந்தை திரும்ப திரும்பச் சொன்னது அவனையும் ஒரு மாதிரியாகச் சம்மதிக்க வைத்திருந்தது.
இது எல்லாம் முடிந்த பிறகுதான் வாணியின் காதுக்குக் கொண்டுபோனார்கள்.
முதன்முதலில் அவளுக்குள் உண்டான உணர்வு அவனா என்கிற ஏமாற்றம்தான். கூடவே மனத்தில் ஒரு சிணுக்கம். மகாராணியைப் போல் வாழும் அவளுக்கு ஒரு மகாராஜாதானே கணவனாக வரவேண்டியவன். பிறகேன் அவர்கள் கடையில் வேலை செய்கிற ஒரு வேலைக்காரனைக் கணவனாக்க வேண்டும்?
அவன் சற்றே நிறம் குறைவு. ஏழ்மையின் வறுமை அவனிடத்தில் அப்படியே தெரியும். பளிச்சென்று மனத்தைக் கவரும் ஆடைகள் அணிய மாட்டான். பெண்களின் மனத்தைக் கவரும் வண்ணம் சிரித்துப் பேசமாட்டான்.
அவளுக்குத் தெரிந்து அவன் அவளின் கண்ணில் பட்ட பொழுதுகளில் எல்லாம் அவர்கள் வீட்டில் ஏதோ ஒரு வேலையைச் செய்தபடியோ, மூட்டையைத் தூக்கியபடியே, வியர்த்து வழிந்தபடியோதான் இருப்பான்.
அவனை எனக்குப் பிடிக்கவில்லை என்று வாயைத் திறந்து சொல்லத் தயங்கினாள். அப்படியெல்லாம் சொல்லிப் பழக்கமில்லை. எதுவாக இருந்தாலும் அம்மா, அப்பா, அண்ணா சொல்கிறவற்றை மட்டுமே கேட்டு நடப்பாள். அவர்களும் அவள் முகம் பார்த்து நடக்கிறவர்கள்.
ஆனால், மகள் சொல்லாமலேயே மகளின் முகத்தை வைத்து மனத்தை அறிந்தார் சிவமூர்த்தி. தான் அறிந்துகொண்டதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் அவளை அடிக்கடி கடைக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்தார்.
பொத்தி பொத்திப் பாதுகாக்கும் மகளை அப்படி அவர் பலர் வந்துபோகும் கடைக்கு அழைத்துவர ஆரம்பித்தது அத்தனை பேரின் கவனத்தையும் கவர ஆரம்பித்தது.
“படிப்ப முடிச்சிட்டா. எப்பிடியும் வெளில வேலைக்கு விடப்போறேல்ல. அதான் இஞ்ச வந்து வேலை பழகட்டும் எண்டு நினைச்சன்.” என்று சமாளித்தார்.
அங்கேயும் வியர்த்து விறுவிறுத்து நின்றவன் அவளைப் பெரிதாகக் கவரவில்லை. அதைவிட அவளொருத்தி அங்கே இருக்கிறாள் என்று அவன் கவனித்துப் பார்க்கவும் இல்லை. அது பெரும் ஏமாற்றம் அவளுக்கு.
ஆனால், இளங்கோ அவளைக் கவனிக்காமல் இல்லை. இந்தப் பெண் ஏன் என்னையே கவனிக்கிறாள் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால், அவள் அவனுக்குப் படியளப்பவரின் பெண். அவள் உறவுக்காரியாக எல்லாம் அவன் நெஞ்சில் இல்லவே இல்லை.
அதில் முடிந்தவரை அவள் கண்ணில் படாமல் ஒதுங்கிக்கொண்டான். அதுவும் சேர்ந்து அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ என்கிற உணர்வைக் கொடுத்துவிட, தயங்கி தயங்கி அவன் வேண்டாம் சென்று அன்னையிடம் சொன்னாள் வாணி.
“அப்பிடிச் சொல்லாதீங்கோம்மா. எங்கட கைக்கையே வளந்த பிள்ளை நீங்க. உலகம் தெரியாது. நாலு பேரோட நெளிவு சுளிவாப் பழகத் தெரியாது. செல்லமாவே வளத்துப்போட்டம். அவன் அருமையான பிள்ளை. காலத்துக்கும் எங்களோடயே இருப்பான். யோசிச்சு பாரு. கொஞ்சம் நிறம் குறைவே தவிர பாக்க நல்லாத்தானே இருக்கிறான். பாசமான பொறுப்பான பெடியன். கவனிச்சுப் பார்.” என்று எடுத்துச் சொன்னார் குணவதி.

