நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே 4.2

உலகமே தெரியாத செல்லப் பெண்ணுக்கு எதற்குத் திருமணம் என்று அவளும் கேட்கவில்லை, அவர்களும் யோசிக்கவில்லை.

அவர் சொன்ன ‘பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்’ என்பதை அவள் பிடித்துக்கொண்டாள். உண்மையில் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறானா என்ன? அவளுக்குக் குழப்பம்.

அன்று கோயிலுக்கு வந்திருந்தாள். அதே குழப்பத்துடனேயே சுவாமி கும்பிட்டுவிட்டு அவள் வெளியில் வர, அவன் தன் தங்கையோடு வந்துகொண்டிருந்தான்.

பார்த்தவள் அப்படியே நின்றுவிட்டாள். பளிச்சென்று இருந்தான். அதுவும் அவன் தங்கை என்னவோ சொன்னதற்கு பற்கள் தெரிய சிரித்துக்கொண்டு வந்தவனைக் கண்டு அவள் இதயம் சறுக்கிற்று. ஒதுங்கி வழிவிட வேண்டும் என்பதைக் கூட மறந்து, கொஞ்சம் மலைப்புடன்தான் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவனும் இவளைக் கண்டுவிட்டான். முக்கியமாக அவளின் விடாத பார்வையை. தங்கையும் பக்கத்தில் இருக்கையில் என்ன இது என்று இருந்தது அவனுக்கு. ஆனாலும் சுற்றி விழிகளைச் சுழற்றினான். அவளோடு யாரும் வந்ததுபோல் தெரியவில்லை. தங்கையோடு நெருங்கி வந்தவன், “தனியாவா வந்தனீங்க?” என்றான் அவளிடம்.

அப்படி அவன் தன்னிடம் நேரடியாகப் பேசுவான் என்று எதிர்பாராதவள் கொஞ்சம் திணறி ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.

“என்னத்தில வந்தனீங்க?”

“ந…டந்து”

“மாமாக்குத் தெரியுமா?”

இப்போது இல்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தாள்.

என்ன இது என்று மெல்லிய கோபத்துடன் அவளை ஒரு பார்வை பார்த்தான் இளங்கோ.

“இல்ல, அது கோயிலுக்குத்தானே எண்டு…” பள்ளிச் சிறுமிபோல் பதில் சொன்னாள்.

“சரி இஞ்சயே நில்லுங்க. வெளில போகாதீங்க.” என்றுவிட்டு தங்கையோடு கோயிலுக்குள் வந்து கும்பிட்டான்.

“அந்தப் பிள்ளை அங்க கடைக்கு வந்தாலும் இப்பிடித்தான். விடாம என்னையே பாக்கும். என்ன பிரச்சினையை இழுத்து வைக்கப்போகுதோ தெரியேல்ல.” என்று தங்கையிடம் முணுமுணுத்தான்.

சின்ன சிரிப்புடன் தமையனை நோக்கி, “விசயமே தெரியாதாடா உனக்கு?” என்றாள் இந்து.

அவனுக்கும் அவளுக்கும் ஒன்றரை வயதுதான் வித்தியாசம் என்பதில் பெயர் சொல்லித்தான் அழைப்பாள் இந்து. இரண்டு வருடங்களுக்கு முதல்தான் திருமணமாகிற்று. அவள் கணவன் இந்த வருடம் டுபாய் சென்றிருந்தான்.

இளங்கோவன் அவளைக் கேள்வியாக ஏறிட, “உனக்கும் அவாக்கும் கலியாணம் பேசுப்படுது.” என்றாள் அவள்.

அவன் கண்களில் அதிர்ச்சியும் வியப்பும்.

“என்னடி இது? சம்மந்தப்பட்டவன் என்னட்ட ஒருத்தரும் ஒரு வார்த்த சொல்லேல்ல.” என்றான் இன்னுமே திகைப்பு நீங்காமல்.

“அதுக்கு முதல் அவா ஓம் எண்டு சொல்லோணுமே.”

“ஓ!” என்று இழுத்தவனுக்கு இத்தனை நாள்களும் நடந்தது மாப்பிள்ளை பார்க்கும் படலாமா என்றிருந்தது.

திரும்பி அவளைப் பார்த்தான். அவள் வீட்டினர் போயும் போயும் அவனை அவளுக்கு மாப்பிள்ளையாக்க முயல்கிறார்கள் என்பதை அவனால் யோசிக்கவே முடியவில்லை.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சின்னத்தம்பி குஷ்பு அளவுக்குப் பொத்தி வைத்திருப்பார் சிவமூர்த்தி. அவள் அழகு, நளினம், நிறம், எழில் எல்லாமே உண்மையில் அப்படித்தான்.

அழகி என்பதை விடப் பேரழகி. சிவமூர்த்தியின் அன்னையைப் போல என்று இவன் அன்னை ஒருமுறை சொல்லிக் கேட்டிருக்கிறான். புகைப்படத்தில் அந்தப் பெண்மணியைப் பார்த்திருக்கிறான். கிட்டத்தட்ட 70 நெருங்கும் வயதில் இருந்த அவரே அத்தனை அழகாய் இருந்தார். அவரின் சாயல்தான் அவள்.

அப்படியான அவளுக்கு அவனை மாப்பிள்ளையாக்க முயல்வதுதான் உறுத்தியது.

“என்னை ஏனடி?” என்றான் சந்தேகமாக.

“உனக்கு என்ன குறை?” இந்து அவனை முறைத்தாள்.

“அப்பிடி என்ன நிறை?” என்று திருப்பிக் கேட்டான் தமையன்.

“லூசு மாதிரி கதைக்காத அண்ணா. காசு பணம் மட்டும்தான் நிறையா? உன்ர ஒழுக்கம், நேர்மை, ஓயாத உழைப்பு எல்லாத்தையும் பாத்து அவாக்குக் கட்டிவச்சா அவேக்குப் பிறகு காலத்துக்கும் அவே மாதிரியே அவாவை நீயும் பாப்பாய் எண்டு நினைக்கினமாம்.” என்று விளக்கிச் சொன்னாள் இந்து.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டான் அவன்.

இத்தனை பேச்சுகளும் பார்வை அவளில் இருக்கவேதான் நடந்தது.

தமையனின் அந்த விடாத பார்வையைக் கவனித்து, “என்னடா பிடிச்சிருக்கா?” என்றாள் இந்து.

“உனக்கே இது அநியாயமாத் தெரியேல்லையா? அந்தப் பிள்ளையை நான் வேண்டாம் எண்டு சொல்ல என்ன இருக்கு? ஓம் எண்டு சொல்லப் பயமா இருக்கு.”

“லூசா அண்ணா நீ. திரும்ப திரும்ப அதையே சொல்லாத. அவாக்கு நீ தகுதி இல்லை எண்டு நினைச்சா உன்னைக் கேட்டு வருவினமா எண்டு யோசி. உனக்குத்தான் உன்ர தரம் தெரியேல்ல. இப்பிடித் தாழ்வு மனப்பான்மையோட இருக்காத!” என்று அதட்டினாள் இந்து.

“இப்ப ஆரடி தாழ்வு மனப்பான்மை எண்டு சொன்னது. அந்தப் பிள்ளையை ராணி மாதிரி வச்சிருப்பினம். அப்பிடியான பிள்ளைக்குப் போய் என்னை ஏன் எண்டு யோசிச்சன்.” என்றவன், “சரி வா!” என்று வெளியே வந்தான்.

அவள் அங்கேதான் அமர்ந்திருந்தாள். இவர்களைக் கண்டதும் எழுந்து நின்றாள்.

இந்தப் பெண் எத்தனை பகட்டாக வாழலாம்? அதற்கு ஏற்ற அத்தனை வசதி வாய்ப்பும் உண்டு. ஆனால், அவனைக் கண்டதும் ஆசிரியரைக் கண்டதும் எழுந்து நின்று கேள்வியாக நோக்கும் மாணவியைப் போல் அவள் அவன் முகம் பார்க்கவும் மனம் கனிந்து போயிற்று அவனுக்கு.

அவளுக்கு அவனைப் பிடிக்குமா என்ன? கொஞ்சம் குறுகுறுப்போடு அவளை நோக்கினான். அவள் தடுமாறி பார்வையை அகற்றிக்கொள்ள, அவன் உதட்டில் புன்னகை ஒன்று மலராவா என்று வந்து கேட்டுவிட்டுப் போனது.

அவனுக்குத் தெரிந்த ஆட்டோக்காரரை அழைத்து அவளையும் இந்துவையும் சேர்த்து ஆட்டோவில் ஏற்றினான்.

“இனி இப்பிடித் தனியா வரேல்ல சரியா?” என்றான் அதட்டலா கனிவா என்று பிரித்தறிய முடியாக் குரலில்.

அவள் சரி என்று தலையாட்ட, “பின்னாலதான் நான் வருவன்.” என்றுவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்தான்.

அவர்கள் வீட்டு வாசலில் இறங்கி அவள் பணம் கொடுக்க முற்பட, “விடுங்க, நான் குடுக்கிறன்.” என்று தடுத்தான்.

அவளிடம் சின்ன தலையசைப்பைக் கொடுத்துவிட்டு அவன் இந்துவோடு புறப்பட்டுவிட, அந்தத் தலையசைப்பில் அவள் வீழ்ந்துதான் போனாள். ஏதோ ஒரு கனவுலகம் அவளை வந்து சூழ்ந்துகொண்டது. தன் அறையின் கட்டிலில் விழுந்தவள் விழிகளுக்குள் கனவுகளின் படையெடுப்பு.

அதன் பிறகு இன்னும் அதிகமாக அவனைக் கவனிக்க ஆரம்பித்தாள். இளங்கோவும் அவர்களாகப் பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று தனக்கு எதுவும் தெரியாததுபோல் இருந்துகொண்டான். எப்போதும் அவனுடைய க்ரைம் பார்ட்னர்தான் இந்து. அவளும் அவனுக்கு விடயம் தெரியும் என்பதை வெளியில் விடவில்லை.

அதன் பிறகு வயது வேலையைக் காட்டியதா, இல்லை அவன் வசீகரித்தானா அவளுக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் அன்னை சொன்னதுபோல் அவள் கண்களுக்கும் அவன் நன்றாகத்தான் இருந்தான்.

அதுவும் அன்று அவர்கள் வீட்டுக்கு என்னவோ வேலையாக வந்தவனுக்கு உணவு கொடுக்க அவளை அனுப்பிவிட்டார் குணவதி.

மெல்லிய தயக்கமும் கூச்சமுமாகச் செம்பில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தவளிடம், “நீ சாப்பிட்டியா?” என்று அவளைப் பிரத்தியேகமாகப் பார்த்து அவன் கேட்ட ஒற்றைக் கேள்வி போதுமாக இருந்தது, மிச்சம் மீதியாக இருந்த அவளை மொத்தமாக அடித்து வீழ்த்துவதற்கு. அவன் ஒருமையில் அழைத்தது வேறு தித்தித்தது.

அதன் பிறகு அவள் மறுக்கவில்லை. மாறாக அவன் வருவான் என்று கணித்த பொழுதுகளில் எல்லாம் தன்னை அலங்கரித்துக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள்.

error: Alert: Content selection is disabled!!