என் சோலைப் பூவே 5 – 2

ஆனாலும், முகேஷிற்கு அவன் அதைச் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது. அதுவும் அவன் வேலைதான். என்றாலும், அவனை வேண்டுமென்றே செய்ய வைத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்தது போன்று கட்டை விரலை உயர்த்திக் கொண்டாடிய நண்பர்களின் செயல் அவளுக்குப் பிடிக்கவில்லை.

 

அவர்களை வேகமாக நெருங்கி, “இதயரஞ்சன், எழுந்திருங்கள்!” என்றாள் அதட்டலாக. “டேய்! உன் செருப்பை உனக்குப் போடத் தெரியாதா? காலை நீட்டிக்கொண்டு ஹாயாக அமர்ந்திருக்கிறாய்.” என்று முகேஷிடமும் பாய்ந்தாள்.

 

“நான் எங்கே போடமாட்டேன் என்று சொன்னேன். இது எனக்குச் சின்னது என்று சொல்லியும் கேட்காமல் அவராகத்தான் மாட்டுகிறார்..” என்றான் முகேஷ், ரஞ்சனிடம் கொடுத்த காலை இழுக்காமலேயே.

 

ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாது நின்றவள், “அவனே போட்டுக் கொள்ளட்டும். நீங்கள் எழும்புங்கள் இதயரஞ்சன்.” என்றாள் ரஞ்சனிடம் படபடப்பான குரலில்.

 

அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல், முகேஷின் காலில் செருப்பை மாட்டிவிட்டே எழுந்தான். “உன் காலுக்கு இந்தச் செருப்புத்தான் சரியான அளவு. இதையே வாங்கு. அடுத்த சைஸ் என்றால் காலை விட்டுக் கழன்றுவிடப் பார்க்கும்.” என்றுவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

தன்னையும் தன் பேச்சையும் பொருட்படுத்தாமல் செல்பவனின் முதுகையே முறைத்துக் கொண்டு நின்றாள் சித்ரா.

 

அவளைப் பிடித்து அருகே இழுத்த ராகினி அவள் காதருகில் குனிந்து, “அன்று உன் அப்பாவிடம் உனக்குத் திட்டு வாங்கித் தந்தவனை முகேஷ் தன் காலைப் பிடிக்க வைத்துவிட்டான், பார்த்தாயா..” என்றாள் மகிழ்ச்சியோடு.

 

ரஞ்சனின் அலட்சியத்தினால் உண்டான ஆத்திரமும் சேர்ந்துகொள்ள, “லூசாடி நீ? அன்று நான் செய்தது பிழை. அதுதான் அப்பா திட்டினார். அதற்கு எதற்கு அவனை அவமானப் படுத்துகிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டவளை மேலும் கீழுமாகப் பார்த்தாள் ராகினி.

 

“என்னடி அவனுக்குச் சார்பாகக் கதைக்கிறாய்?” சந்தேகக் குரலில் கேட்டவளை முறைத்தாள் சித்ரா.

 

“உளறாதே! நான் யார் பக்கமும் கதைக்கவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.” என்றாள் பல்லைக் கடித்தபடி.

 

“சரி. நீ சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவன் இவன் காலைப் பிடித்ததில் என்ன தப்பு? அது அவன் வேலைதானே. அதற்கு எதற்கு உனக்குக் கோபம் வரவேண்டும்?”

 

“தேவைக்கு ஒன்றைச் செய்வது வேறு ராக்கி. நீங்கள் நால்வரும் வேண்டுமென்றே அவனை அப்படிச் செய்ய வைத்தது பிழை. அன்று அப்பாவிடம் அவன் ஒன்றுமே சொல்லவில்லை. சொன்னது கண்ணன் அண்ணா. அதுவும் உண்மையைத்தான் சொன்னார்.” என்றாள் சித்ரா.

 

ஏதோ சொல்லத் தொடங்கிய ராகினியை முந்திக்கொண்டு, “சரி சரி விடுங்கள். இதற்கு மேல் இதைப்பற்றி எதுவும் கதைக்க வேண்டாம். சித்து சொல்லு, இன்று எங்கே போகலாம்? சினிமா அல்லது ஏதாவது நல்ல ஹோட்டல்?” என்று கேட்டான் மோகன்.

 

“ப்ச்! எனக்கு இப்போது எங்கும் வரும் ‘மூட்’ இல்லை..” என்று சலித்தவளிடம்,

 

“ஏன்?” என்று கேட்டான் முகேஷ் ஒருமாதிரிக் குரலில்.

 

“அதுதான் ‘மூட்’ இல்லை என்கிறேனேடா..” என்று சிடுசிடுத்தாள்.

 

முகேஷுக்கு சித்ராவின் கோபத்தில், சலிப்பில் அதிருப்தி உண்டாகி இருந்தது. அவளுக்காகத்தானே ரஞ்சனை அவமானப் படுத்தினான். சந்தோசப்படுவாள், அவனைப் பாராட்டுவாள் என்று பார்த்தால் அவளோ அந்த ரஞ்சனுக்காகக் கதைக்கிறாளே. இது நல்லதில்லையே என்று ஓடியது அவன் சிந்தனை. சித்ராவின் மீதான அவனுடைய ஒருதலைக் காதலுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தான் முகேஷ்.

 

அவன் காதலை அறிந்திருந்த ராகினியின் விழிகளும் முகேஷின் விழிகளும் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.

 

“அதென்ன திடீரென்று மூட் சரியில்லை. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தாய். நீ வருகிறாய். நாம் ஏதாவது படத்துக்குப் போகிறோம்.” என்றான் முகேஷ் பிடிவாதமாக.

 

சித்ராவுக்கு அப்போதே தலைவலி ஆரம்பித்து இருந்தது. இதில் சினிமாவுக்கு வேறு போய் அதை இன்னும் அதிகரிப்பதா என்று நினைத்தவள், “சினிமா வேண்டாம். ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்.” என்றாள்.

 

“சரி, ஹோட்டலுக்கே போகலாம். சித்து நீ அங்கிளிடம் சொல்லிவிட்டு வா.” என்று அவளை அனுப்பினாள் ராகினி.

 

“மகி நீ மோகனின் வண்டியில் வா. மோகன் போய் வண்டியை எடு.” என்று அவர்களையும் அனுப்பியவள், முகேஷிடம் திரும்பினாள்.

 

“இன்னும் எத்தனை நாளைக்கு சித்துவிடம் காதலைச் சொல்லாமல் மறைக்கப் போகிறாய். அவளை முதல் நாள் கல்லூரியில் பார்த்ததில் இருந்தே காதலிக்கிறேன் என்று சொல்கிறாய். நாம் கல்லூரியில் சேர்ந்தே இரண்டு வருடமாகிவிட்டது. கல்லூரி முடிந்தாலும் நீ காதலைச் சொல்வாய் போல் எனக்குத் தெரியவில்லை. காத்திருந்தவன் நீ பாத்திருக்க வந்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான். பிறகு நீ தாடியை வளர்த்துக் கொண்டு தேவதாசாக அலை.”

 

“அப்படிச் சொல்லாதே ராக்கி. எனக்கு மட்டும் சொல்ல விருப்பம் இல்லையா என்ன. பயமாயிருக்குடி. அந்த ரஞ்சனை அடித்த மாதிரி என்னையும் அடித்துவிட்டாள் என்றால் என்ன செய்வது?” என்றவனை முறைத்தாள் ராகினி.

 

“பயந்த கோழி! உனக்கெல்லாம் எதற்கடா காதல். இன்று ஹோட்டலில் வைத்து அவளிடம் உன் விருப்பத்தைச் சொல்கிறாய். இல்லை என்றால் அவள் என்ன அடிப்பது நானே உன் கன்னம் பழுக்க நாலு போட்டுவிடுவேன்.”

 

அவனுக்கும் அதே எண்ணம் ஏற்கனவே இருந்ததில், “சொல்கிறேன். சொல்லத்தான் வேண்டும்..” என்றான், அங்கே பெட்டியை லாரியில் ஏற்றிவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்த ரஞ்சனைப் பார்த்தபடி. அவனைத் தொடர்ந்த ராகினியின் பார்வையும் பொருளோடு முகேஷைப் பார்த்தது.

 

சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “எங்கேடா உள்ளே போன சித்துவை இன்னும் காணோம்?” என்று பொறுமையற்றுக் கேட்டாள் ராகினி.

 

“அங்கிளிடம் சொல்லிவிட்டு வரவேண்டாமா. கொஞ்சம் பொறு.” என்றான் முகேஷ்.

 

அவர்கள் யாருக்காகக் காத்திருக்கிறார்களோ அவள் கடையின் பின்பக்கம் சென்று, மேலே ஸ்டோர் ரூமுக்குப் படியேறிக் கொண்டிருந்த ரஞ்சனை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.

 

அவள் வருவதை உணராது, உள்ளே சென்று ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தவன், “நீங்கள் எதற்கு அவன் காலில் செருப்பை மாட்டி விட்டீர்கள்?” என்று, திடீரென்று கேட்ட சித்ராவின் குரலில் சற்றே திகைப்புற்று, பெட்டியைத் தூக்குவதை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

 

அவளைக் கண்டதும் அவனுக்கு ஆத்திரம்தான் வந்தது. அந்த விசாலமான மேல் தளத்தில் பெட்டிகள் நிறைந்து கிடக்க, அங்கு அவனும் அவளும் மட்டுமே. அதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? ஒரு பெண்ணாக அவள் இதை யோசிக்க வேண்டாமா?

 

அந்த இடத்தில் அவளோடு நிற்கப் பிடிக்காமல் வெளியே செல்ல நினைத்தவன், அவள் கேட்டது காதிலேயே விழாதது போன்று பெட்டியைத் தூக்க முயல, அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா. “நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லுங்கள்?” என்றாள் பிடிவாதக் குரலில்.

 

அவளின் அந்தப் பிடிவாதக் குரலும், அவன் கையை அவள் பிடித்ததும் உண்டாக்கிய சினத்தில், ஒரே உதறலில் உதறி அவன் தன் கையை விடுவித்த போது, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பெட்டிகளோடு மோதிக்கொண்டு நின்றாள் சித்ரா. அந்தளவுக்கு ஆக்ரோஷம் நிறைந்திருந்தது அவன் உதறலில்.

 

விழிகளில் நெருப்புப் பறக்க, “வெளியே போ!” என்று உறுமினான் ரஞ்சன்.

 

error: Alert: Content selection is disabled!!