இணைபிரியா நிலை பெறவே 25.1

அத்தியாயம் 25

“ஆரு சிரிக்காத!” அவள் சிரிப்பின் எதிரொலியாக அவன் முகத்திலும் முறுவல் மலர்ந்தாலும் அதட்டினான் சகாயன்.

அவளுக்கு அது முடிய வேண்டுமே. அவளுக்குத் தொளதொளப்பாக இருப்பது அவன் உடலை இறுக்கிப் பிடித்தவண்ணம், அதுவும் அவனின் விடைத்த மார்பை இறுக்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு அவளுக்குள் கண்டபாட்டுக்குக் கற்பனை ஓடிற்று.

மயிர் அடர்ந்த ஆரோக்கியமான திடகாத்திரமான கால்களுக்கு மேலே மடித்துக் கட்டிய நைட்டியைப் பார்க்க பார்க்க சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துகொண்டே இருந்தது.

“உன்னை!” என்று பல்லைக் கடித்தவனுக்குக் கோபம்தான் வரமாட்டேன் என்றது.

முன்னூறு கிலோமீற்றர்களுக்கு மேல் பைக்கிலேயே பயணம் செய்து வந்தாலோ என்னவோ வியர்வையிலும் புழுதியிலும் உடல் கசகசவென்று இருக்க, அவள் தமையனின் உடைகள் ஏதும் கிடைக்குமா என்றுதான் அலமாரியைக் கிண்டினான். எதுவுமே அகப்படவில்லை என்றதும் இதை எடுத்து மாட்டிக்கொண்டான். அந்தளவில் உடல் முழுக்க கடிப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

அவளானால் சிரித்தே அவனை வெட்கப்பட வைத்துவிடுவாள் போலும். பானில் பட்டரை பூசி, அதன் மீது சீனியைத் தூவி எடுத்துக்கொண்டு திரும்பியவன் பார்வையில் கண்கள் பளபளக்க அவள் கைப்பேசியை எடுப்பது பட்டது.

என்ன செய்யப்போகிறாள் என்று புரிந்ததும் பானை வைத்துவிட்டுப் பாய்ந்து வந்து அவளைப் பிடித்திருந்தான் அவன்.

“கொன்றுவன் ராஸ்கல். கொண்டுவா ஃபோனை!” அதட்டியபடி கைப்பேசியை அவளிடமிருந்து பிடுங்க முயன்றான்.

“ஒரேயொரு ஃபோட்டோ சகாயன். திரும்ப இப்பிடி ஒரு சான்ஸ் கிடைக்காது.” அவன் கைக்கு அகப்படாமல் தன் கைகளில் மாற்றியபடி சிரிப்புடன் கெஞ்சியவளை அவன் விடவில்லை.

“ஏன், காலத்துக்கும் அத வச்சு என்ர மானத்த வாங்கவா?” அவளிடமிருந்து கைப்பேசியைப் பறிப்பது எல்லாம் அவனுக்கு நொடி நேர வேலை. ஆனால், விளையாடப் பிடித்திருந்தது. இதில் அவன் பழையபடி தன்னை நெருங்கிவிட்டதைக் கவனிக்கத் தவறினாள் ஆரபி.

அவன் கண்கள் சிரிப்பில் மின்னின. “இப்ப என்ன, உனக்கு ஃபோட்டோ எடுக்கோணும். அவ்வளவுதானே? எடு!” என்றவன் அவள் மீதே சாய்ந்தான்.

அப்போதுதான் மறுபக்கம் சுவர் இருக்க தான் அவன் கைகளுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்றே புரிந்தது அவளுக்கு.

“எடு ஆரு!”

மூச்செடுக்கவே அவளுக்கு முடியவில்லை. இதில் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது?

“ஆரு?”

“ம்?”

“ஃபோட்டோ எடுக்கேல்லையா?”

சேட்டைதானே இவனுக்கு? இடுப்பில் பிடித்துக் கிள்ளிவிட்டாள் ஆரபி. ஹாஹா என்று சத்தமாக நகைத்தவன் அவள் கன்னக்கதுப்பில் புதைந்தான். அடர்ந்த அவன் மீசை காதோரும் உரசியதில் பெரும் அலையொன்று வந்து மொத்தமாய் அடித்துச் செல்லும் உணர்வு அவளுள். ஆரபியின் கையில் இருந்த கைப்பேசி நழுவித் தரையைத் தொட்டது. அதை உணரும் நிலையில் அவள் இல்லை.

நேசம் தந்தவனின் புது நெருக்கம். வெடித்துப் பறக்கும் இலவம் பஞ்சாய் அவள் உள்ளத்தினுள் உணர்வுகளின் வெடிப்பு. “சகாயன்!” சத்தமே இன்றி அவள் உதடுகள் முணுமுணுத்தன.

“ம்!”

“ப்ளீஸ்!” என்றவள் வார்த்தை முடியும் முன்னே அவள் இடை பற்றித் தன்னிடம் இழுத்தான் அவன். “இடுப்பில கை பட்டதுக்கே துள்ளி ஓடுறாய் என்ன? நான் தொட்டா தாங்க மாட்டியோ?”

இது என்னவிதமான பேச்சு? முகம் இரத்த நிறம் கொண்டுவிட அவனிடமிருந்து தப்பிக்க முயன்றாள். முன் அனுபவத்தில் அவன் விடவில்லை. அவள் கரங்கள் இரண்டையும் பற்றித் தானே தன் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக்கொண்டு, முழுமையாக அவளைத் தன் அணைப்பினுள் கொண்டுவந்தான்.

“ஆரு!” அவள் தாடை பற்றி நிமிர்த்தினான். அவன் உள்ளத்தில் ஓங்கி நின்ற காதல் நெருக்கத்தைக் கேட்டது. அந்த நெருக்கம் நேசத்தை ஆழமாக்க ஆசை கொண்டது.

“தொடவாடி?” என்றான் அவளையே பார்த்து. இடை வளைத்திருந்த கரம் தன் இறுக்கம் கூட்டி மறுத்துவிடாதே என்று சமிக்ஜை செய்ய சட்டென்று சிவந்தாள் ஆரபி. கேள்வி கேட்டவன் பதிலுக்காய்க் காத்திருக்கவில்லை. தன் உதடுகள் கொண்டு அவள் இதழ்கள் வழி பதிலைத் தேட ஆரம்பித்தான்.

மயங்கி நின்றவள் காட்டிய இணக்கம் உள்ளத்தை நிறைவாக்க மெல்ல விலகினான் சகாயன். சிவந்த முகத்தை அவள் அவன் மார்பிலே மறைக்க அவன் உதட்டில் அழகான முறுவல். “கோவமா?” என்றான் நேசமிகு குரலில். இல்லை என்று அவள் தலை மறுப்பாக அசைந்தது.

“அப்ப என்னப் பாக்கிறது?” தாடை பற்றி முகம் நிமிர்த்த முனைந்தான். மறுத்து இன்னுமின்னும் அவனுள் புதைந்தாள் அவள். அவன் சத்தமாக நகைத்தான். மெல்ல அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தான். குங்குமம் தோற்றுவிடும்.

“என்னடி இது இப்பிடிச் சிவந்திருக்கிறாய்?” ஆசையாய் அவள் முகம் முழுவதும் முத்திரை பதித்தான். இதழ்களிலும் தன் உதடுகளை ஒற்றி எடுத்தவனின் உள்ளம் நிறைந்து தளும்பிற்று.

காயம் மட்டுமே தந்த காதல் அவர்களது. ஆனால் இன்று, இத்தனை காலத்துக் கண்ணீரும் கவலைகளும் இந்தச் சில நொடிகளில் காணாமலேயே போயிருந்தன. தன்னிலிருந்து தனியாய்ப் பிரித்து இன்னொருத்தியாய் அவளைப் பார்க்க முடியாமல் நின்றான்.

இன்னும் தன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்திருந்தவளின் தலை வருடி, “கடைக்குப் போய் மாற்றுடுப்பு வாங்கிக்கொண்டு வருவமா?” என்று வினவினான்.

அப்போதுதான் அவனுக்கு மாற்றுடைகள் இல்லை என்பது திரும்பவும் நினைவில் வந்தது. மெல்ல விலகியவள் அவனைக் கண்டு திரும்பவும் முறுவலித்தாள்.

“அடிதான் வாங்கப்போறாய்!” என்றான் அவன் பொய் மிரட்டலாக.

அவள் முறுவல் விரிந்தது.

error: Alert: Content selection is disabled!!