அவன் முகத்தையே பார்த்தவள் கைகள் தானாகவே அவன் கழுத்தில் மாலையாகின. அவன் புருவங்களை உயர்த்தினான். அவனுக்குள் அவள் செயலில் உற்சாகம் பொங்கிற்று. “ஆரும்மா!” வியப்பும் ஆவலுமாக அவன் கரங்கள் அவள் இடையை வளைத்தன.
அவள் விழிகளில் இலேசான கலங்கள். “மொத்தமா உடைஞ்சுபோயிருந்தனான் சகாயன். இனி நீங்க எனக்கு இல்லையோ எண்டு நினைச்ச நேரம்தான் நீங்க எனக்கு எவ்வளவு முக்கியமானவர் எண்டு விளங்கினது. அவ்வளவு காலமும் பெருசா தெரிஞ்ச கோபதாபம் எல்லாம் ஒண்டுமே இல்லை எண்டுறமாதிரி ஆயிற்றுது. விட்டுட்டியே அவரை விட்டுட்டியே எண்டு மனம் அழுதது சகாயன்.” என்று கலங்கிவிட்ட விழிகளோடு அவள் சொல்லவும் அவனும் நெகிழ்ந்துபோனான்.
அவளைத் தன் மார்புடன் சேர்த்தணைத்து, “ஆரும்மா. அப்பிடி எப்பிடியடி விடுவன்? பிறகு நான் வாழுறேல்லையா?” என்று அவள் முகம் பார்த்துக் கேட்டான் அவன்.
கண்ணீருடன் முறுவலித்தாள் ஆரபி.
ஆசையாக அவள் நெற்றி முட்டிவிட்டு, “வாழுவமா?” என்றான் கண் சிமிட்டி. “இல்ல நைட்டி போடவா?” என்றதும் அவன் தோளில் ஒரு அடியைப் போட்டாள் ஆரபி.
“சேட்டை உங்களுக்கு!” என்றவள் அவனையும் இழுத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் விழுந்தாள்.
இதை எதிர்பாராதவன் அவளுக்கு அடிபட்டுவிடாமல் அவளைத் தாங்கியபடி கட்டிலில் விழுந்தான். “இதெல்லாம் நான் செய்யோணுமடி!” என்றான் சிரித்துக்கொண்டு.
“அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வருவீங்க மாதிரி இல்ல.”
“அப்பிடியா?” என்று ஒற்றைக் கேள்விதான் கேட்டான் அவன். விழிகள் சிரிக்க, புருவங்களை உயர்த்தி, உதட்டில் மென் முறுவலை அடக்கி அவன் கேட்ட விதத்தில் இதழ் கடித்து முகம் திருப்ப போனவளை அவன் விடவில்லை.
இதமான அணைப்பில் கொண்டுவந்து, நெற்றி முத்தம் பதித்து, மெல்ல மெல்ல நகர்ந்த அவன் உதடுகள் அகப்பட்ட இடங்களெங்கும் தன் முத்திரைகளை இட்டு, கடைசியில் அவள் இதழ்களைக் கொய்தன.
அன்று இடை பற்றியவனின் சிறு தீண்டலிலேயே மொத்தமாய் நடுங்கிப்போனவள் ஆரபி. இன்று கணவனாய் நின்று உரிமையுடன் தன் கரங்களாலும் உதடுகளாலும் அவள் மேனி தீண்டியவனின் நெருக்கத்தில் அவளுள் உணர்வுகளின் பெரும் கலவரம்.
தொடக்கத்தில் வெட்கத்தில் அவளிட்ட தடைகளை அகற்றி, கூச்சம் போக்கி, அச்சம் விலக்கி, தான் அறியாதவற்றை அவளிடம் தேடினான். தனக்குத் தெரிந்தவற்றை அவளுக்கு அறிமுகம் செய்தான்.
அவளால் அவளுள் அவன் அறிமுகம் செய்யும் இந்தச் சுக வேதனைகளைக் கையாள முடியவில்லை. உணர்வுகள் பொங்கியெழ ஆரம்பித்தன. அவன் கைகளில் தன்னைக் கொடுத்துவிட்டுக் கண் மூடிக் களிப்பில் திகைத்தவளுக்கு உலகமே மறந்துபோயிற்று.
மண்ணோடு கலந்த மழைநீராய், காற்றோடு கலந்த வாசமாய் அவள் உணர்வுகளோடு கலந்துவிட்டிருந்தான் அவன். உணர்வுகளின் உச்சியைத் தொட்டுவிட்டு வந்தவர்களிடம் சோ என்று அடித்து ஓய்ந்த மழை போல் பேரமைதி.
அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு தோள் வளைவில் முகம் வைத்திருந்தாள் அவள். திரும்பிப் பார்த்தான். கலைந்த ஓவியமாய்க் கிடந்தவளைக் கண்டு கண் சிமிட்டினான். வெட்கம் தாளாமல் இன்னும் அவன் மார்பினில் அவள் ஒளிந்துகொள்ள, விரிந்த முறுவலோடு அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு, என் நிறைவாய் இருந்தாய் நீ என்று சொல்கிறவனாக அவள் நெற்றியில் தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி எடுத்தான்.
ஆரபிக்கு வெட்கம் தீர்ந்தபாடாய் இல்லை. அந்தளவில் அவள் உணர்வுகளைத் தீண்டி, கொஞ்ச நேரத்துக்குள் அவளைக் கலவர பூமியாகவே மாற்றிவிட்டிருந்தான் அவன். அவளுக்கு மூச்சு இன்னுமே சீராகவில்லை. மெல்லிய சிரிப்புடன் அவள் புறம் திரும்பி, “பிடிச்சிருக்காடி?” என்றான் அவள் காதோரம்.
படக்கென்று விழிகளைத் திறந்தவள் அவன் கண்களில் தெறித்த மின்னல் சிரிப்பைக் கண்டு, வெட்கச் சிரிப்புடன் அவன் முகத்தைப் பற்றி அந்தப் பக்கமாகத் திருப்பிவிட்டாள்.
சத்தமாக நகைத்தான் சகாயன். மனம் சந்தோசத்தில் திளைத்தது. வாலிப வயது தொட்டு மனத்தில் பதிந்துபோன பெண் அவள். சண்டை சச்சரவு என்று இருந்தாலுமே நெஞ்சின் உள்வரை சென்று நிலைத்தவள். என்ன நடந்தபோதும் அவளைத் தாண்டி அவனை யோசிக்க விடாதவள்.
அவளைப் போன்று இன்னொரு பெண் அவனைச் சலனப்படுத்தியதும் இல்லை. உயிரின் அடி வேர் வரை ஊடுவியதும் இல்லை. அவள் இல்லை என்றால் வாழ்வில் எதுவுமில்லை என்று அவனை நினைக்க வைத்தவள். இன்று அவன் உயிரோடும் உணர்வுகளோடும் இரண்டறக் கலந்துபோனாள்.
அவளைத் தன்னிடம் கொண்டுவந்து, கலைந்திருந்த கேசத்தை எல்லாம் காதோரம் ஒதுக்கி, முகத்தையும் துடைத்துவிட்டான்.
கணவனின் கனிவும் காதலும் அவளைக் கட்டியிழுத்தன. அவன் தாடையில் தன் உதடுகளைப் பதித்துத் தன் சந்தோசத்தையும் சொன்னாள் ஆரபி.
இரண்டு நாள்கள் கடந்திருந்தன. அன்று மாலை முகத்தை முழு நீளத்துக்கு நீட்டிக்கொண்டு வந்தான் கிரி.
“என்னடா?”
“உன்ர மனுசி என்னத்துக்கடா தேவை இல்லாத வேலை எல்லாம் பாக்கிறாள்?” சினத்தில் சீறினான் கிரி.
சகாயனுக்கு திக் என்று இருந்தது. “என்ன செய்தவள்?” என்று விசாரித்தான்.
“என்ன செய்தவளா? சிவன்யாட்டா என்னைப் போட்டுக் குடுத்திருக்கிறாள். எனக்குக் கதைக்கப் பேசத் தெரியாதாம். அவளை நான் டீ போட்டுக் கதைச்சனானாம் எண்டெல்லாம் சொல்லியிருக்கிறாள்.” என்றதும் சகாயனுமே கொஞ்சம் அதிர்ந்துபோனான்.
அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்தவளை முறைத்தான்.
“என்ன முறைப்பு? செய்யாத பிழைக்குத் தண்டனை அனுபவிச்சவள் நான். சும்மா விடமாட்டன். நான் என்ன இல்லாததையா சொன்னனான்? நீங்க எறிஞ்ச கல்லுல விழுந்த மாங்காயா நான் அவருக்கு?” என்றவள் சீற்றத்தில் நண்பர்கள் இருவரும் மிரண்டு போனார்கள்.
“அதுக்குத்தான் மன்னிப்புக் கேட்டேனே?” பம்மிக்கொண்டு சொன்னான் கிரி. அந்தளவில் சிவன்யாவை அவனுக்குப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
“நானும் செய்ற எல்லாத்தையும் செய்துபோட்டு மன்னிப்புக் கேக்கிறன். இப்ப போயிட்டு வாங்க!” என்றாள் ஆரபி.
“ஆரு…” என்று சகாயன் ஆரம்பிக்கும்போதே, “மூச்!” என்றாள் ஆரபி.
கப்பென்று வாயை மூடிக்கொண்டான் சகாயன். அதிர்ந்துபோய் நண்பனைப் பார்த்தான் கிரி. சிங்கம் போல் உறுமிக்கொண்டு திரிந்த தன் நண்பனா இவன் என்கிற அதிர்ச்சி அவனுக்கு நீங்குவதாக இல்லை.
“இஞ்ச வந்திருந்து கத்துறத விட்டுப்போட்டு சிவன்யாவை சமாதானப்படுத்தச் சொல்லுங்க. இல்லையோ இன்னொருக்கா அவளுக்கு ஃபோனை போடுவன்.” என்றதும் எழுந்து ஓடியிருந்தான் கிரி.
அவன் போன வேகத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் ஆரபி. சும்மா மிரட்டு என்றுதான் சொல்லியிருந்தாள். சிவன்யாவும் சீனியரின் பேச்சைத் தட்டாதவளாக கணவனாகப் போகிறவனோடு நன்றாகவே விளையாடுகிறாள் என்று விளங்கிற்று. அவள் சிரிப்பு நிற்கவேயில்லை. சகாயனின் முகத்திலும் முறுவல். அவள் விளையாடுவது அவனுக்குத் தெரியும். ஆசையோடு அவளை இழுத்து, சிரிக்கும் இதழ்களில் ஆழப்புதைந்தான் அவன்.
முற்றும்.

