அத்தியாயம் 5
அவளுக்கு நிறைய நாள்களாக ஸ்கூட்டி ஓடுவதற்கு ஆசை. தோழியர் கூட்டம் சர் சர் என்று போய்வருவதைக் காண்கையில் ஏக்கமாக இருக்கும். சிவமூர்த்தியிடம் கேட்ட கணமே ஸ்கூட்டியை வாங்கி நிறுத்தியிருந்தார் மனிதர்.
ஒரு நாள் வீட்டு முற்றத்தில் ஓடிப் பார்க்கையில் விழுந்து, காலில் கொஞ்சம் பெரிய காயம் என்றதும் அந்த ஸ்கூட்டி வீட்டின் பின்புறம் நிரந்தரமாக இளைப்பாறப் போயிற்று.
அதனாலேயே தந்தையும் தமையனும் இல்லாத பொழுதுகளில் அன்னையிடம் கெஞ்சிக் கொஞ்சி வெளியே எடுப்பாள் இவள். அப்படி ஒரு நாள் அவர்கள் வீட்டு வீதியில் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தவள், திடீரென்று யார் வீட்டு நாயோ பெரும் சத்தமாகக் குரைக்கவும் பயந்துபோய் விழுந்திருந்தாள்.
அந்த நேரம் பார்த்தா அவன் வர வேண்டும்? அவளுக்கு வெட்கமாயிற்று. அவனை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாமல் அமர்ந்திருந்தவளை ஓடி வந்து தூங்கிவிட்டான் அவன்.
“ஓடத் தெரியாம என்னத்துக்கு ரோட்டுக்கு வந்தனி? தப்பித்தவறி ஏதாவது வாகனம் வேகமா வந்திருந்தா?” அவன் கடிந்துகொண்டான்.
அதற்கே அவள் விழிகளில் மளுக்கென்று கண்ணீர் திரண்டு போயிற்று. பார்த்தவனின் கோபம் இருந்த இடம் தெரியாமல் கரைந்துபோயிற்று.
“சரி சரி அழுறேல்ல. எழும்பு.” என்று அவள் கரம் பற்றி எழுப்பிவிட்டு ஸ்கூட்டியையும் நிமிர்த்தி நிறுத்தினான்.
அவளுக்கு முகமெல்லாம் கன்றிச் சிவந்திருந்தது. நடக்க முயன்றால் முடியவில்லை. வலியில் உயிர்போக, “அம்மா!” என்றாள் தன்னைமீறி.
“கால்ல என்ன?” என்று ஓடி வந்தான் அவன்.
வெட்கம் கூச்சம் பார்க்கவே இல்லை. அவள் பாதத்தைப் பற்றி ஆராய்ந்தான்.
அவளுக்குத்தான் ஒரு மாதிரி ஆகிப்போயிற்று. “இளங்கோ என்ன செய்றீங்க? விடுங்க!” என்று அவள் பதறியபோது நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான் அவன்.
அவள் இளங்கோ என்று அழைத்தது அவன் உள்ளத்தைத் தொட்டிருக்க வேண்டும். அப்போது வலியில் இருந்தவள் அதை உணரவில்லை. வீடு வந்து, நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தபோதுதான் உணர்ந்தாள். சின்ன வெட்கமும் முளைத்திருந்தது. எத்தனை இயல்பாக, உரிமையாக அவன் பெயரைச் சொன்னாள்!
அப்போது, “ஏன் நான் பாக்கக் கூடாதா?” என்கிற ஒற்றைக் கேள்வியும், அதில் தெரிந்த அவன் மனத்தின் சிணுக்கத்திலும் அவள் கால் தானாய் அவன் கரத்தில் சென்று அமர்ந்தது. தடவி விட்டான். தன்னிடம் இருக்கும் தண்ணீரால் அவள் காலை இலேசாக உருவிவிட்டான். செருப்பையும் அவனே மாட்டிவிட்டபோது அவள் அவள் வசத்தில் இல்லை.
“எதிர்பாராம விழுந்ததில் லேசா அடி பட்டிருக்கு. சுளுக்கு எல்லாம் இல்ல. கொஞ்ச நேரத்தில சரியாகிடும்.” குழந்தைக்குச் சொல்வதுபோல் சொன்னான்.
அவள் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள்.
“இனி ஓடாத. கலியாணத்துக்கு பிறகு நானே சொல்லித் தாறன்.” என்று முதன் முதலாக அவர்களின் திருமணம் பற்றி அவனாகப் பேசியது அப்போதுதான்.
குழப்பமும் வெட்கமுமாக அவள் ஏறிட, “பிடிச்சிருக்குத்தானே?” என்றான் அவன்.
எப்படி இல்லை என்பாள்? அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி ஆம் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
அவர்களின் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. போதும் போதும் என்கிற அளவுக்குச் சீதனம் நகையாகவும், நிலையான வைப்புப் பணமாகவும் கொடுத்து, அவர்களின் பரம்பரை வீடான அந்த வீட்டையும் அவள் பெயருக்கு மாற்றி, அவன் சம்பளத்தையும் இரட்டிப்பாக்கினார் சிவமூர்த்தி.
புதிதாகத் திருமணமான அவர்கள் எந்தத் தொந்தரவும் இல்லாது தனியாக வாழ்வதற்கு ஏற்ப, அந்த வீட்டின் மாடியை முற்றிலுமாக மாற்றியமைத்து, அங்கேயே கிட்டத்தட்ட தனிக்குடித்தனம் போன்று அவர்களைக் குடி வைத்தார்.
முதல் இரவன்று பயத்தோடு சேர்த்துக் கொஞ்சமே கொஞ்சம் அவளிடம் ஆசையும் இருந்தது. அவனுக்கு அந்த ஆசையை விடவும் அவள் பயம்தான் பெரிதாகத் தெரிந்திருக்க வேண்டும்.
“ஏன் அங்கேயே நிக்கிறாய்? கிட்ட வா!” என்று அழைத்தான்.
சொல் பேச்சுக் கேட்கும் குழந்தையாக அவனருகில் வந்து நின்றாள் அவள்.
மெல்ல அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வந்து, “ஏன் இவ்வளவு பயம்?” என்று கேட்டான்.
பதில் சொல்லக் கூச்சப்பட்டாள் வாணி. அவனும் அதைப் பற்றி மேலே பேசவில்லை. மாறாக, அவளைத் தன்னருகில் அமர்த்தி, என்ன படித்தால், என்ன பிடிக்கும், நண்பர்கள் யார், எங்கே எல்லாம் போயிருக்கிறாள், பிடித்த நடிகர் நடிகையர் யார் என்றெல்லாம் பேச்சுக் கொடுத்தான்.
மெல்ல மெல்லப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் ஏதோ ஒரு கணத்தில் அவன் கையில் உருகும் மெழுகாய் மாறியிருந்ததைக் கண்டு திகைத்துப்போனாள்.
இது எப்போது நடந்தது? நம்ப முடியா வியப்பும் வெட்கமுமாக அவள் ஏறிட, அவன் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான். வெட்கி அவனுக்குள்ளேயே தன்னை மறைத்துக்கொண்டாள் வாணி.
அன்று மட்டுமா அதன் பிறகு வந்த நாள்களில் எல்லாம் அவன் அன்பிலும் அரவணைப்பிலும் ஒரு குறை கண்டதில்லை அவள். திருமணமாகிற வரைக்கும் அவள் உலகம் மிக மிக அழகானது. துன்பம், சோகம், துயர் என்று எதன் நிழலும் அவள் மீது இலேசாகக் கூடப் படித்ததில்லை.
திருமணத்தின் பின்னான வாழ்க்கையை எப்படி விவரிப்பது என்றுகூட இன்று வரையில் அவளுக்குத் தெரியாது. அப்படி ஒரு வாழ்க்கை. ஸ்கூட்டி பழக்கித் தந்து, அவளை லைசென்ஸ் எடுக்க வைத்ததும் அந்த நாள்களில்தான்.
அவள் பார்க்க ஆசைப்பட்ட இடங்களுக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போயிருக்கிறான். மகள் முகத்தில் தெரிந்த பூரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்த்த சிவமூர்த்தி வேறு வார இறுதிகளில் அவனை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட, ஒவ்வொரு வார இறுதியும் அவள் வாழ்வின் பொன்னான நாள்களாயிற்று.
நாம் எத்தனை சந்தோசமாக வாழ்கிறோம் என்று வாழும்போது தெரியாதாம். அந்த வாழ்க்கை நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட பிறகுதான் தெரியுமாம். அது எத்தனை பெரிய உண்மை என்பதை இன்று உணர்ந்து தனக்குள் அழுதாள்.
அன்று ஒரு நாள், ஒரேயொரு நாள் அவளுக்கு ஏன் தைரியம் வராமல் போனது? எனக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு ஏன் இல்லாமல் போனது? இருந்திருக்க அவள் வசந்தம் அவளிடமே இருந்திருக்கும்.
பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் என்பது எத்தனை அவசியம் என்று அன்று உணர்ந்தாள். அப்படிப் பேசாமல் இருந்தால் அது எவ்வளவு பெரிய அனர்த்தத்தில் கொண்டுவந்து நிறுத்தும் என்று இன்றைய நாள்களில் உணர்கிறாள்.
சிவமூர்த்திக்கு மகள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து மிகுந்த நிறைவு. அவரின் நம்பிக்கை பொய்க்கவில்லையே!
அவர்களுக்கு மருமகனாக அல்லாமல் மகனாகத்தான் இளங்கோ இருந்தான்.
அதுவரையில் கொழும்பில் இருந்த மகனை இங்கே வந்துவிடு என்று நச்சரித்துக்கொண்டிந்த குணவதி கூட, மகன் தனக்குப் பிடித்ததுபோல் கொழும்பிலேயே இருக்கட்டும், எங்களுக்குத்தான் இளங்கோ இருக்கிறானே என்று நினைக்கிற அளவிற்கு மகனின் இடத்தை நிரப்பினான் இளங்கோ.
“உங்களுக்கு என்னை முதலே பிடிக்குமா?” என்று அடிக்கடி வாணி கேட்கிற அளவில் நேசம் காட்டுவான் இளங்கோ. ஒரு பேச்சுத் திருமணம் இத்தனை அந்நியோன்யத்தையும் மகிழ்ச்சியையும் தருமா என்கிற கேள்வி அவளுக்கு.
இப்படி இருக்கையில்தான் அவன் பக்க உறவில் ஒரு திருமணம் வந்தது. முதல் நாளே அவன் வீட்டில் போய் நின்று, எல்லோருமாகத் திருமணத்திற்குப் போய்விட்டு வந்தார்கள்.
அந்த நாள் முழுக்க கனமான பட்டுச்சேலை அணிந்திருந்தவள் களைத்தே போனாள். அவன் வீட்டுக்கு வந்ததும் நகைகள், புடவை என்று எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டுப் போய்க் குளித்துவிட்டு வந்து பார்த்தால் அவளின் கைச்செயினைக் காணவில்லை.

