நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே 5.2

மூன்று பவுன். அதுவும் அவளுக்கு மிக மிகப் பிடித்த கைச்செயின். திருமண மண்டபம், அவர்கள் வந்த வீதி, வீடு என்று எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. திருமண வீட்டில் அல்லது வருகிற வழியில் கழன்று விழுந்துவிட்டது என்றுதான் நினைத்தார்கள்.

அடுத்த மாதமே அவள் தாய்மையுற்றாள். அவன் அன்னை மங்கை, அவ்வப்போது வாய்க்கு ருசியாக ஏதாவது சமைத்து எடுத்துக்கொண்டு வருவார். இந்து இடைப்பட்ட நாள்களில் கணவனிடம் போயிருந்தாள்.

மங்கைக்கு அவர்கள் நல்ல வசதியானவர்கள் என்று தெரியும். அந்த வீட்டுக்கு முதலும் வந்துபோய் இருக்கிறார்தான். ஆனால் இப்படி வாணியின் மாமியாராக வந்திருந்து, வீட்டில் ஒருத்திபோல் இதற்கு முதல் புழங்கியதில்லை.

அப்படி அங்கே ஒருத்தியாக நடமாட ஆரம்பிக்கையில்தான் அந்த வீட்டையும், அங்கிருக்கும் விலையுயர்ந்த பொருள்களையும், வசதிகளையும் கவனித்து மலைத்துப்போனார்.

முதலில் மகன் நன்றாக வாழ்கிறான் என்று ஒரு சந்தோசம். அதுவே நாளடைவில் இப்படி ஒரு வாழ்க்கை எங்களுக்கு ஏன் இல்லை என்று ஏக்கமாக உருமாற ஆரம்பித்தது.

கூடவே, “இளங்கோ இருக்கிறார் எண்டுற நம்பிக்கைலதான் நான் இப்ப நிம்மதியா இருக்கிறன். அவ்வளவு கெட்டிக்காரன். கடையை அவரின்ர பொறுப்பிலேயே விட்டுட்டன்.” என்று சிவமூர்த்தி புகழ்ந்து தள்ளுகையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு கோபமும் வர ஆரம்பித்தது.

அவர்கள் சும்மா சொல்லவில்லை என்பதை அவரும் அறிந்தே இருந்தார். பெற்ற மகனுக்கு ஒப்பாக அவனையும் கரிசனையுடன் அவர்கள் கவனித்துக்கொள்வதைப் பார்க்கையில் நிறைவாக இருக்கும்.

அதே நேரம் இந்தளவில் ஒரு மகனாகப் பார்க்கிறவர்கள் கடையில் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஒருவனாகத்தானே வைத்திருக்கிறார்கள் என்று தனக்குள் குறைபட்டுக்கொள்வார்.

பவனுக்குக் கொழும்பில் நல்ல சம்பளத்தில் வேலை. சொத்துப்பத்தும் அவனுக்கென்று தனியாக நிறைய உண்டு. அப்படி இருக்க இந்தக் கடையைத் தன் மகனுக்கே அவர்கள் கொடுக்கலாமே என்கிற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போக, சாடை மாடையாக அதை வாணியிடம் சொல்ல ஆரம்பித்தார் மங்கை.

அது அவளுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. ஆனாலும், “அது அப்பப்பான்ர காலத்தில இருந்து இருக்கிற கடை மாமி. அப்பா அண்ணாக்குத்தான் குடுப்பார். இப்ப அவரின்ர ஆசைக்குத்தான் அண்ணா கொழும்பில வேலை செய்றார். பிறகு ஒரு காலம் அவரின்ர பொறுப்பிலயே கடை போயிடும்.” என்று விளக்கினாள்.

“அப்ப தம்பின்ர நிலைமை?`”

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. எப்போதும்போல் கடையில் வேலை செய்வான் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறாள்.

முதலில் உழைப்பு, சேமிப்பு, எதிர்காலம் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அவள் யோசித்ததில்லை. யோசிக்கும் அவசியம் வந்ததில்லை. பெற்றவர்கள் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தார்கள் என்றால் கணவன் நெஞ்சில் தங்கினான். பிறகு எதற்கு யோசிக்க?

ஆயினும் மனத்தில் சின்னதாக ஒரு சலனம். அதில் கணவனிடம் கேட்டாள்.

“அம்மா ஆனதும் பெரிய மனுசி மாதிரி யோசிக்கிறாளே என்ர மனுசி!” என்று அவன் அவளைத் தன் கையணைப்புக்குள் கொண்டுவந்து, “உனக்காக, எங்கட பிள்ளைக்காக, எங்களுக்காக எல்லாம் செய்ய நான் இருக்க உனக்கு என்னத்துக்கு இந்த யோசனை எல்லாம்? எந்தக் கவலையும் இல்லாமச் சந்தோசமா இரு!” என்று கொஞ்ச ஆரம்பிக்க, அந்தக் கேள்வியை மட்டுமில்லை அவளையே அவள் மறந்துபோனாள்.

அவள் வயிற்றுக் குழந்தைக்கு ஐந்து மாதங்கள் முடிந்த நிலையில் ஒரு நாள் அவளின் செயின் ஒன்றைக் காணவில்லை. அது ஐந்து பவுன். அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

கவனம் இல்லாமல் போடமாட்டாளே தவிர்த்து அவர்கள் வீட்டில் யார் எடுப்பார்கள் என்கிற அசட்டையில் அவர்களின் அறையின் மேசையில்தான் அவள் நகைகள் எல்லாம் இருக்கும். இன்று பார்த்தால் அதில் அந்தச் செயினை மட்டும் காணவில்லை. அன்று மாலை அவள் மாமியார்தான் வந்துவிட்டுப் போனார்.

முதல் கைச்செயின் காணாமல் போனபோது கூட அவர்களின் வீட்டில் அதையும் மற்ற நகைகளோடு கழற்றி வைத்துவிட்டு போன நினைவுதான் அவளுக்கு.

எல்லோருமாகச் சேர்ந்து திருமண வீட்டில் விழுந்திருக்குமோ, வருகிற வழியில் தொலைந்திருக்குமோ என்று பேசிக்கொள்ளவும் அவளும் அப்படித்தான் போலும் என்று எண்ணியிருந்தாள்.

இந்தமுறை சந்தேகம் பெரிதாகவே விழுந்துவிட, கணவனிடம் சொல்லப் பயந்து அன்னையிடம் சொன்னாள்.

குணவதிக்கு எரிச்சலும் சினமும் பொங்கிற்று. ஆரம்பத்தில் மங்கை வந்துபோகையில் அவரும் நன்றாகத்தான் கவனித்துக்கொண்டார்.

ஒருவரின் இயல்பு எங்கும் எப்படியும் மாறாது என்பதற்கு ஏற்ப, மங்கையின் பேச்சில் தெரியும் ஏதோ ஒன்று, தம்மைப் பார்த்து அவருக்குப் பொறாமையோ என்று இவரை நினைக்க வைத்திருந்தது. அதன் பிறகு அவரிடம் எதையும் காட்டிக்கொள்ளாதபோதும் என்ன பேசுகிறோம் என்பதைக் கவனித்துப் பேச ஆரம்பித்திருந்தார்.

செயின் எங்கேயும் விழுந்துவிட்டது என்று நினைக்க முடியாதபடிக்கு அவள் அந்த வாரம் முழுவதும் வெளியே போகவில்லை. இதுவரை காலத்தில் இப்படி அவர்களுக்கு நகைகள் தொலைந்ததும் இல்லை.

வீட்டையே உரட்டிப் பிரட்டித் தேடினார்கள். கிடைக்கவில்லை. இது என்ன ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பொருளா, போனால் போகிறது என்று விட?

விடயத்தைக் கணவரிடம் கொண்டுபோனார் குணவதி. இது என்ன புதுத் தலையிடி என்று இருந்தது சிவமூர்த்திக்கு.

கேட்காமல் இருக்க முடியாது. கேட்டால் பிரச்சனையாகும்.

சிவமூர்த்திக்கு மிகவும் தர்மசங்கடமான நிலை. நடுவில் இருப்பது மகள் வாழ்க்கை. மருமகன் வேறு அருமையானவன். அவர்கள் இருவரும் காயப்படாமல், அவர்களுக்கு நடுவில் பிரச்சனை வராமல் இதைக் கையாள வேண்டும்.

நிறைய யோசித்துவிட்டு வாணியை அழைத்துச் சாதாரணமாக விசாரிக்கச் சொன்னார்.

அவளுக்கு அதற்கே கைகால்கள் உதறிற்று. சிவமூர்த்தியோ குணவதியோ இதைப் பேசப்போனால் அது பெரிதாகிவிடச் சாத்தியம் உண்டே.

தகப்பன் பலமுறை சொல்லிக்கொடுத்ததை மனத்தில் ஏற்றிக்கொண்டு மங்கைக்கு அழைத்து, “மாமி, மேசைல செயின் இருந்தது மாமி. நீங்க பாத்தீங்களா?” என்று நடுங்கும் குரலில் வினவினாள் வாணி.

மாதங்கி பொங்கிவிட்டார்.

“என்னைப் பாத்தா எப்பிடி இருக்கு உங்களுக்கு வாணி? கள்ளி மாதிரியா? நாங்க ஏழைபாழைதான். அதுக்காக அடுத்தவேன்ர உப்புக்கட்டிக்கும் ஆசைப்படாத மனுசர். அதாலதான் உங்கட அப்பா உங்களுக்குத் தம்பிய கட்டி வச்சதே.” என்று சீறினார்.

அதற்கே அழுதுவிட்டாள் வாணி. “ஐயோ இல்லை மாமி. நான் பிழையா நினச்சுக் கேக்கேல்லை. தப்பித்தவறி நிலத்தில விழுந்துகிடந்து நீங்க எங்கயும் கவனமா எடுத்து வச்சீங்களோ எண்டுதான் மாமி கேட்டனான்.” என்று அவசரமாக இடையிட்டுச் சொன்னாள்.

“அப்பிடியே எடுத்து வச்சிருந்தாலும் சொல்லிப்போட்டுத்தான் வந்திருப்பன். கேவலமான வேலை எல்லாம் பாக்க மாட்டன். நான் வாறது பிடிக்காட்டி நேராச் சொல்லுங்கோ பிள்ளை. எனக்கு விளங்கும். அத விட்டுப்போட்டு வீண் பழி போட்டு எங்களைக் கேவலப்படுத்தாதீங்கோ!” என்றுவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்துவிட, நடுங்கிப்போனாள் அவள்.

இப்படியான சூழ்நிலைகளை எல்லாம் அவள் எதிர்கொண்டதே இல்லை. கடைசியில் போனது போகட்டும் மகளைப் பார்ப்போம் என்று சிவமூர்த்தியும் குணவதியுமாகச் சேர்ந்து அவளைத் தேற்றும்படியாயிற்று.

error: Alert: Content selection is disabled!!