“ஒகே ஒகே உம்மட மனுசன் அப்பிடியே சந்தோசக் கடலில மிதப்பார். ஏனெண்டா அவருக்கும் உம்மைப் போலவே என்னில அக்கறை அன்பு சரியோ!” நக்கலாகச் சொல்லி அவள் முறைப்பைக் கூட்டினாள், கயல்.
“சரி அத விடும், அவர் மட்டும் இல்ல இன்னொரு ஆள் தலைகால் புரியாமல் நடப்பார்!” சீண்டலாகத் தொடங்கினாள், காயு.
“எவன் அவன்?” கயல் ஆரம்பிக்க, “வேற ஆர், பிரணவ் தான். என்னதான் நீர் சொன்னதுக்கு மதிப்புக்குடுத்து அமைதியாக விலகினது போல இருந்தாலும் ஆளுக்கு இப்பவும் நீர் சம்மதிக்க மாட்டீரா எண்ட ஆசை கயல். அதுதானே பாலனுக்கு உம்மில கோபம் கூட. என்னமாதிரி இடம் வேணாம் எண்டு சொல்லுறா முட்டாள் எண்டு.” காயு சொல்ல, முறைப்பது கயல் முறையானது. “இதான் சாட்டு எண்டு என்ன முட்டாள் ஆக்கிட்டார் என்ன உம்மட மனுசன்? உமக்காகவும் லாதிக்காவும் பாக்கிறன், இல்லையோ ஒரு நாளைக்கு நல்லா என்னட்ட வாங்குவார்.” முறைப்போடு சொன்னவளைச் சிரிப்போடு பார்த்தாள், காயு.
“அவர் வாங்கிறது இருக்கட்டும், நீர் பிரணவ்வுக்கு ஒகே சொல்லுறீர் தானே? உடனே பார்க்காதேயும், பிரணவ்வும் வந்திருக்கிறார் தெரியுமா? இப்ப இங்க வச்சே ஒகே சொல்லுறம்!” கண்ணடித்தபடி சொல்ல, கயல்விழி முகத்தில் இருந்த விளையாட்டுப் போயிருந்தது. “இதென்னடா வம்பாக் கிடக்கு!” என்றபடி விழிகளைச் சுழற்றியவள் பார்வையில் பட்டான், பிரணவ்.
“காயு, நான் தான் என்ர முடிவ வடிவாச் சொல்லிட்டனே. பிறகு என்னப்பா இதெல்லாம்? உண்மையா எனக்கு அமெரிக்காவில இருக்கிற எண்ணம் சுத்தமா இல்ல. பிறகு எப்பிடி நான் அவரக் கட்டுறது?”
“அடிதான் வாங்குவீர்! அப்ப எங்களோட இருக்கிறதுக்கு உமக்கு விருப்பம் இல்ல என்ன?”
“ஐயோ அப்பிடி இல்ல. இப்பவும் வேலை முடிஞ்சு போயிருவன் எண்டு யோசிச்சா…” என்றபடி, லாதியில் பதிந்தது அவள் பார்வை.
“எப்பிடி லாதியப் பாக்காமல் இருக்கப் போறன் எண்டுதான் கிடக்கு! அதுக்காக அம்மம்மா, தாத்தாவ விட்டுட்டும் இங்கயே இருக்க ஏலாது காயு. அம்மா இல்லாமல் நிண்ட என்ன வளர்த்தவே. வயசு போன நேரத்தில நான்தான் வச்சுப் பார்க்க வேணும் எண்டது என்ர பெரிய ஆசை! அதுக்கு எண்டு மட்டும் இல்ல, எனக்கு நம்மட ஊரில இருக்கத்தான் விருப்பம்.” வலு தீர்மானமாகச் சொன்னவளை என்ன செய்வதாம். முறைப்போடு பார்த்தாள் காயு. “பாலனுக்குக் கோபம் வாறதில உள்ள நியாயம் இப்ப எனக்கு விளங்குது!” கோபமாகச் சொல்லவும் செய்தாள்.
பதில் சொல்லாது சமாதானமாக முறுவலித்தவள், காயுவுக்கு கைபேசியில் அழைப்பு வர மெல்ல எழுந்து நின்று கொண்டாள். கதைத்து முடித்துத் தானும் எழுந்த காயு, “சரி சரி விடும், அதோட பிரணவ் ஒண்டும் உமக்காக வரவும் இல்ல சரியா. அப்பிடி ஏதும் நினைச்சிராதேயும்.” முறைத்தாள்.
“நம்பேல்லையா நீர்? அவையும் நாங்களும் பொதுவா ஒண்டாத் தான் இங்க வாறனாங்க. இந்த முறை தங்கச்சி, தம்பி ஆக்கள் வர, அவே தனியா அங்கால கொஞ்சம் தள்ளி வந்து இருக்கினம். இவரக் கண்டுட்டு வந்திருக்கிறார், அவ்வளவும்தான். ஒகே!” சிடுசிடுப்போடுதான் சொல்லி முடித்தாள். கயல்விழி எதுவும் சொல்லவில்லை.
“வாரும் பிள்ளைகளக் கூட்டிக்கொண்டு வருவம், சாப்பிட ஏதாவது குடுத்திட்டு விடுவம். இப்பிடியே விட்டா துள்ளிக்கொண்டே இருப்பினம்.” அவள் கரத்தைப் பற்றியபடி நடக்க, பூபாலனும் பிரணவும் நிழற்குடை பக்கமாக எழுந்து சென்றுவிட்டதை அவதானித்துவிட்டு அவளோடு நடந்தாள், கயல்விழி.
அடுத்த பத்தாவது நிமிடம், விளையாடிக்கொண்டிருந்தவர்களை ஒருவாறு ஒன்றுசேர்த்து அழைத்துக்கொண்டு நிழற்குடை நோக்கிச் செல்ல, லாதி முன்னால் ஓடிவிட்டாள். நமுட்டுச் சிரிப்போடு சேர்ந்து நடந்த காயு, நிழற்குடையை அண்மித்ததும், “கா…யு!” வியப்போடு கரம் பற்றிய கயல்விழியை “எப்பிடி?” கண்ணடித்தவாறே பார்த்தாள்.
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” கேட்ட கயலுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. முதல், தாயின் இறப்புக்குப் பின் பிறந்தநாளென்றால் வெள்ளைக்காரர் போல் கேக் வெட்டி எல்லாம் கொண்டாடியதில்லை. அதுவும் சேர்ப்பரைஸ்! அதெல்லாம் அவளுக்குப் பரீட்சயமே இல்லாத விசயமாச்சே! பிறந்தநாளென்றால் கோவிலுக்குப் போவது தான் வழமை. வளர வளர ஆகக் கூடியதாக வடை சுடுவார், அம்மம்மா. அப்போதும் இவள் பிறந்தநாளும் அவள் தாயின் பிறந்தநாளும் ஒரே தினமாச்சே! அன்று முழுவதும் அம்மம்மா, தாத்தா அதிகமாகக் கதைத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவளுமே, தாயும் தானுமாகக் கொண்டாடிய பிறந்தாட்களின் இனிய நினைவுகள் பிடியிலேயே வளைய வருவாள். வாழ்த்த எடுக்கும் தந்தையோடு கதைக்கவும் மனம் வராது. வெறுப்பாகக் கூட இருப்பதுண்டு. பிறகென்ன? வளர்ந்த பின்னர் சுடரின் வாழ்த்தை மட்டும் சிறு முறுவலோடு ஏற்றுக்கொள்வாள்.
அந்நினைவுகள் பிடியில் நின்றவளை, “எங்கள ஆர் எண்டு நினைச்சுக் கொண்டீர்?” என்றபடி அன்போடு கட்டிப்பிடித்து வாழ்த்திய காயு, “வாரும் வாரும்.” கூடி நின்றவர்கள் நோக்கி நகர்த்திச் செல்ல முனைய, “ஸ்வீட்டி!” கூவிக் கொண்டு வந்து கட்டிக் கொண்டிருந்தாள், லாதி.
“ஹப்பி ஹாப்பி ஹாப்பி பெர்த் டே ஸ்வீட்டி!” தொடர்ந்து சொன்னவளை, குனிந்து அணைத்து அப்படியே தூக்கிக் கொண்டாள், கயல்விழி. லாதிக்கும் இலேசான வெட்கம்தான். இருந்தாலும் கயலின் கழுத்தைக் கட்டிப் பிடித்து இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் கொடுத்து, அவள் விழிகளையே பார்த்தபடி மீண்டும் ஒரு முறை கிசுகிசுப்பாக வாழ்த்துச் சொன்னாள்.