அத்தியாயம் – 7 (4)

தம்முடனான மகளின் ஒதுக்கம் அப்பப்ப நெருடலைக் கொடுத்தலும் எல்லாம் சரிவரும் என்றே விட்டேத்தியாக இருந்துவிட்டார். இப்போது, தொடர்ந்து திருமணத்துக்கு மறுக்க மறுக்க நெஞ்சுக்குள் மறுகவே தொடங்கிவிட்டார்.

“சரி சரி எங்களுக்கும் தாங்கோ!” கேக்கில் சிறு துண்டை எடுத்துக் கயல்விழிக்கு ஊட்டினாள், காயு. அவளும் காயுவுக்குக் கொடுத்துவிட்டு அருகில் நின்ற அவள் அன்னைக்கும் கொடுத்தாள்.

“அப்பாக்கு…” லாதி தகப்பனைக் கைகாட்ட, ஒரு துண்டை எடுத்துப் பூபாலன் கையில் கொடுக்க வாங்கியவன், திருப்பி கயல் வாயருகே கொண்டுவர அவர்களின் அன்பில் விழிகள் கலங்க வாங்கிக் கொண்டாள். அவள் தலையில் மெல்லத் தடவி, “பிறந்தநாள் வாழ்த்துகள், சந்தோசமா இரும்!” என்ற பூபாலன், “பிரணவ்வுக்கு?” விழிகளில் அவனையும் மீறி வெளிப்பட்டுவிட்ட சீண்டலோடு சொல்ல, முகம் இறுகிற்று இவளுக்கு.

அதேவேகத்தில் காயுவைப் பார்த்தவள் முகத்தில் மனதைப் படித்த காயு, “நீர் போய் முகத்தைக் கிளின் பண்ணும் நான் எல்லாருக்கும் குடுக்கிறன்.” கயலை மறுபுறமாக நகர்த்த, “அப்பிடியே நில்லுங்க ஒரு க்ரூப் ஃபோட்டோ எடுப்பம்.” எதுவுமே நடவாத பாவனையில் மலர்வாக நின்று செல்ஃபி எடுத்தான், பிரணவ்.

இப்படி, சின்னச் சின்னதாக முறைப்பும் சிடுசிடுப்பும் இடையிட்டாலும் அன்றைய முழுநாளும் இதமாகவே கழிந்திருந்தது, கயலுக்கு. இத்தனை வருடங்களில் இம்முறைதான் மிகவும் கலகலப்பாக அவள் பிறந்தநாள் கழிந்திருந்தது. அவளை, அவளுக்கே விசேசமாக உணர்த்திய நாளாக, அவளுக்கென்றே சில உறவுகள் உள்ளார்கள் என அழுத்தமாகச் சொல்லும் வகையில் அந்நாள் அமைந்திட்டு.

ஒற்றையாளாய் நின்று, தான், தனக்கே தனக்கென்று வாழ்வதை விட, நான்கு பேர்கள் கூட இருப்பதும் அவர்களுக்காகச் சின்ன சின்ன விசயங்கள் செய்வதும் அவர்களோடு இணைந்து மணித்துளிகளை கடப்பதும் பேருவகை தருமென்பதையும் உணர்த்திய தருணமாக இருந்தது.

அதே இதமான மனநிலையில் அடுத்து வந்த மாதங்களும் நகர்ந்திருந்தன. அதோடு, லாதியின் சகோதரன் வரவால் அந்த இதமும் மகிழ்வும் இரட்டிப்பாயிற்று. குறித்த நாளுக்கு நான்கு கிழமைகளுக்கு முன்னரே அவசரப்பட்டு வெளியில் வர முயன்றிருந்தான், அவன். ‘சிசேரியன்’ செய்தே வெளியில் எடுக்கும் நிலையாகிற்று. உயர் இரத்த அழுத்தமும் என்னதான் பார்த்துப் பார்த்துக் கவனித்தாலும் அப்பப்போ எட்டிப் பார்த்த சக்கரை வியாதியும் சேர்ந்து அவனை வெளியில் வர வைத்திருந்தது.

காயுதான் நன்றாகவே சிரமப்பட்டுவிட்டாள். உடலாலும் மனதாலும் தானும் வருந்தி அவள் அன்புக்குரியவர்களையும் பதற்றத்திலேயே பிடித்து வைத்திருந்தாள். இருந்தபோதும் ஐந்து நாட்களின் பின்னர் எல்லாம் சுபம் என்று குழந்தையோடு வீடு வந்தவளை சிறுமியின் சந்தோசத்தோடு வரவேற்றாள், கயல்விழி. வாசலில் வைத்தே குழந்தையைத் தனதாக்கிப் பொத்திப் பிடித்துப் பார்த்திருந்தவள் மனம் குதூகலத்தில் நிறைந்திருந்தது.

“சுடருக்குப் பிறகு நான் தூக்கிற குழந்தப் பிள்ள இவர் தான்! அப்படியே உம்மப் போலவே இருக்கிறார் பாரும்.” கன்னத்தில் கன்னம் வைத்து உரசும் ஆவலில் ஆடிப்போனாள்.

“உண்மைதான், லாதி கண்ணைத் தவிர மிச்சம் தேப்பன் போல. இவன் அப்பிடியே தாய் தான்!” என்ற காயுவின் அன்னை, “கைச் சூட்டுக்குப் பழக்கினா பிறகு தூக்குக் காவடியாத்தான் இருக்கும்.” குழந்தையைத் தொட்டிலில் போடும் அவசியம் பற்றிச் சொன்னார்.

“அதுதான், இல்லையோ நீரே வந்திருந்து அவனைப் பாரும்.” என்றுவிட்டு, களைப்போடு அமர்ந்தாள் காயு.

“ஆர் மாட்டன் எண்டது, எங்கட செல்லக்குட்டிய ஆராவது பார்க்க மாட்டன் எண்டு சொல்லுவினமே!” கயல் செல்லமாகச் சொல்ல, “ஸ்வீட்டி எனக்கு…எனக்கு மட்டும்!” முறுக்கினாள், கயலோடு ஒட்டிக்கொண்டு நின்றிருந்த லாதி.
சட்டென்று பெரியவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். தம்பி என்று ஆவலும் பாசமுமாக நெருங்கினாலும் தன்னை மட்டுமே சீராட்டியவர்கள் செல்லம் கொஞ்சுகையில் முகம் சுருங்கிப் போனாள், லாதி.

“வாங்கோ நாம ஒருக்கா சூப்பர் மார்க்கட் போயிட்டு வருவம்.” லாதியின் கரத்தைப் பற்றினான், பூபாலன்.

“நோ அப்பா நான் வரேல்ல!” கயல்விழியை நன்றாக ஒட்டி நின்றுகொண்டாள்.

“லாதிம்மா வாங்கோ தம்பியத் தொட்டிலில போடுவம். முதல் முதல் எங்கட லாதிம்மா கையால கிடத்தட்டும். லாதிம்மாட தம்பிக்கு அதுதான் விருப்பம்.” அவளோடு கதைத்தபடி படியேறி அறைக்குள் நுழைந்து, சொன்னதுபோலவே லாதியின் கரம் பற்றிப் பிடித்திருக்க தொட்டிலில் கிடத்த, பெரிய மனிசியாக, பொறுப்பாக, கவனமாக அவனை தொட்டில் போட்டுவிட்டுப் பெரிய விசயம் செய்த மாதிரி நின்றாள், லாதி.

குழந்தை மெல்ல ஒற்றைக் கண்ணைத் திறந்து மூடினான். குவிந்த சொண்டுகளை ஒரு பக்கமிழுத்துச் சிரிப்பது போல் சுழித்தான்.

“அக்காவப் பாத்துச் சிரிச்சிட்டார்!”

லாதியின் அளவுக்கு முழங்காலில் அமர்ந்து அவளை வளைத்துப் பிடித்தபடி சொன்னாள், கயல்விழி.

“ஸ்வீட்டி உங்கள பார்த்தும் தான்!” தன் இடது கையால் கயலின் கன்னத்தைப் பிடித்துத் தன் கன்னத்தோடு வைத்தபடி குழந்தையின் பொத்தியிருந்த கையை மெல்லத் தொட்டாள், லாதி. தொடர்ந்து, சுற்றம் மறந்து இருவரும் குழந்தையோடு கதை பேசிக் கொண்டிருக்க, பின்னாலே வந்திருந்த பூபாலன் கரத்திலிருந்த வீடியோக் கருவி அனைத்தையும் தன்னுள் பத்திரப்படுத்த, கணவன் கரத்தைப் பிடித்தபடி முறுவலோடு பார்த்திருந்தாள், காயு.

error: Alert: Content selection is disabled!!