என் சோலைப் பூவே 7 – 2

“விற்கத்தான் பார்க்கிறாராம். வாடகைக்கு என்றாலும் இப்போதைக்குப் பரவாயில்லை என்றார்..” என்றவர் தொடர்ந்து, “ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.

 

“அதை நான் எடுத்து நடத்தினால் என்ன என்று யோசித்தேன்..” என்றான் ரஞ்சன்.

 

“நீயா?” என்று ஆச்சர்யப் பட்டவர், உடனேயே முகம் மலர்ந்தார். “நீயே எடு ரஞ்சன். என் பிழைப்புத்தான் இப்படியே போகிறது. நீயாவது முன்னுக்கு வா. உன் கையில் கிடைத்தால் மிகவும் நன்றாக நடத்துவாயடா. உனக்கு வயதும் இருக்கிறது. கெட்டித்தனமும் இருக்கிறது. .” என்றார் அவனை ஊக்கப்படுத்தும் விதமாக.

 

கடை கிடைத்தால் நன்றாக நடத்தலாம் தான் என்று உள்ளே எண்ணியபோதும், “வயதும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதுமா. காசு வேண்டாமா?” என்றான் ஒருவித இயலாமையுடன்.

 

“ப்ச் போடா! இந்தக் காசைக் கண்டுபிடித்தவனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.”

 

“நான் கண்டுபிடித்தால் உங்களிடம் கூட்டி வருகிறேன்..”

 

“யாரை?” என்று புருவம் சுருக்கிக் கண்ணன் கேட்க,

 

“அதுதான், காசைக் கண்டு பிடித்தவனை.” என்றான் அப்போதும் வெகு தீவிரமாக.

 

அவனை முறைத்துப் பார்த்தவருக்கு அது முடியாமல் சிரிப்புத்தான் வந்தது. “போடா! என் பேச்சு உனக்கு விளையாட்டாக இருக்கிறது!” என்று உரிமையோடு சலித்துக் கொண்டார். அதைக் கேட்டவனின் முகத்திலும் சின்னப் புன்னகை மலர்ந்தும் மலராமல் நின்றது.

 

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன்,“வாடகை என்றால் எவ்வளவு எதிர்பார்க்கிறாராம்?” என்று கேட்டான்.

 

“நான் அதைப் பற்றி ஒன்றும் விளக்கமாகக் கேட்கவில்லை. அவர் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டேன். ஆனால் பொறு கேட்டுச் சொல்கிறேன்..” என்றுவிட்டுத் தன் கைபேசியை உயிர்ப்பித்து நாதனுக்கு அழைக்க முயன்றவரை இடைமறித்தான் ரஞ்சன்.

 

“அண்ணா, இதை முதலாளியிடம் சொல்லிவிட வேண்டாம்..” என்றான். நெடுங்காலமாக வேலை செய்யும் கண்ணன் சந்தானத்தின் விசுவாசி என்பது அவன் அறிந்ததே. அதனால் அப்படிச் சொன்னான்.

 

“ரஞ்சன், நீ அவருக்கு என்ன தீங்கு செய்கிறாய் என்று நான் அவரிடம் இதைப் போய்ச் சொல்ல? ஒருவனுக்கு முன்னேற வழி கிடைத்தால் அந்த வழியில்தான் போகவேண்டும். அதனால் அவரிடம் மட்டும் இல்லை, இதை நான் வேறு யாரிடமும் சொல்லமாட்டேன்..” என்றவர் நாதனுக்கு அழைத்தார்.

 

அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே அவரைக் கவனிக்கச் சென்றான் ரஞ்சன்.

 

நாதனுடன் கதைத்த கண்ணன், ரஞ்சனிடம் விரைந்தார். “ரஞ்சன், அட்வான்ஸ் ஆறு லட்சமாம். இன்னும் ஒரு மூன்று லட்சம் இருந்தால் போதும், ஓரளவுக்குச் செருப்புக்களை வாங்கிப் போட்டு ஆரம்பிக்கலாம்.” என்றார் பரபரப்பாக.

 

அதைக் கேட்டவனின் முகம் சோர்ந்தது. அந்த வாடிக்கையாளர் வாங்கிய செருப்பைப் பையில் போட்டுக் கொடுத்தவாறே, “அவ்வளவா?” என்று கேட்டான்.

 

“என்ன அவ்வளவா என்று கேட்கிறாய்? அது கொஞ்சம் சின்னக் கடை என்ற படியால்தான் இவ்வளவே. இல்லை என்றால் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் இதை எடுக்கக் கட்டாயம் முயற்சி செய் ரஞ்சன். இது நல்ல சந்தர்ப்பம். விட்டுவிடாதே..” என்றவர், அப்போதும் அமைதியாக நின்றவனின் நிலை அறிந்து, “உன் சொந்தம் யாரும் உதவி செய்ய மாட்டார்களா?” என்று கேட்டார்.

 

“அப்படி அவர்கள் உதவினாலும் எனக்கு வேண்டாம்.” என்றான் முகம் இறுக.

 

அதைக் கேட்டவருக்கு ஆத்திரம்தான் வந்தது. “இப்படி எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு நின்றாயானால் ஒன்றும் சரிவராது ரஞ்சன். எதையாவது செய். செய்து கடையை எடு.” என்றவர், கடைக்கு ஆட்கள் வர அவர்களைக் கவனிக்கச் சென்றார்.

 

ரஞ்சனும் வேலையில் ஆழ்ந்தாலும், அவன் மனது அதையே அசை போட்டுக் கொண்டிருந்தது. கடையை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்றே அவனும் ஆசைப் பட்டான். என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்தவனுக்கு, ஒரு எண்ணம் பளிச்சிட்டதும் தாய்க்கு அழைத்தான்.

 

“அம்மா, அப்பாவின் பென்ஷன் காசு எவ்வளவு சேர்ந்திருக்கிறது?”

 

“தெரியாது ரஞ்சன். நான் வங்கியில் பார்க்கவில்லை. எப்படியும் ஐந்து அல்லது ஆறு லட்சம் வந்திருக்கும். ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.

 

அவன் வேலைக்குச் செல்லத் தொடங்கியபிறகு எவ்வளவோ கஷ்டம் வந்தபோதும் அந்தப் பணத்தைத் தொடாதவன், ஏன், இதுவரை அதைப் பற்றியே பேசாதவன் இன்று ஏன் கேட்கிறான்? என்று யோசித்தார்.

 

ஒருதடவை அவன் வண்டி என்னவோ பெரிய பழுது, அதற்கு ஐம்பதாயிரம் தேவை என்று வந்தபோது கூட, அதைத் திருத்தும் வரை ‘பஸ்’சில் வேலைக்குச் சென்றானே தவிர அந்தப் பணத்தைத் தொடவே இல்லை.

 

“ஐம்பதாயிரம் தானே. வங்கியில் இருந்து எடு.” என்று இராசமணி சொன்னபோது கூட, “அப்பாவும் நீங்களும் செய்த அதே பிழையை நானும் செய்யக் கூடாது. என்ன கஷ்டப் பட்டாலும் சேமிப்பு என்று கொஞ்சமாவது இருக்கவேண்டும்.” என்றவன், இப்போது எதற்குக் கேட்கிறான் என்று ஓடியது அவர் சிந்தனை.

 

“அதம்மா, இங்கே ஒரு கடை வாடைக்கு வருகிறதாம். ஒரு பத்து லட்சம் இருந்தால் எடுத்து நடத்தலாம். அதுதான் கேட்டேன்.” என்றவனிடம்,

 

“சரிதான். ஆனால், ஏதாவது நஷ்டத்தில் போய்விட்டால் நித்திக்கு என்ன செய்வது? அவளுக்கு என்று சேர்வது அந்தப் பணம் மட்டும் தானே.” என்று தன் கருத்தைச் சொன்னார் இராசமணி.

 

கடையை ஆரம்பிக்க முதலே நஷ்டத்தைப் பற்றிய பேச்சா என்று தோன்றியபோதும், தங்கையை நினைத்தவனுக்கு அவரின் பேச்சில் பெரும் பிழை இருப்பதாகவும் தோன்றவில்லை.

 

“அப்படி என்றால் வீட்டை அடவு வைத்துப் பணம் எடுக்கவா?” என்று கேட்டவன், தாய் பதில் சொல்ல முதலே, “நல்ல இடம் அம்மா. அங்கே தொடங்கினால் எண்ணி ஆறு மாதத்தில் வீட்டை மீட்டுவிடுவேன்.” என்றான், நம்பிக்கையும் உறுதியும் நிறைந்த குரலில். அதற்குச் சம்மதியுங்கள் என்கிற வேண்டுதலும் தூண்டுதலும் இருந்தது அவன் கூற்றில்.

 

“இல்லை. வீட்டை அடவு வைக்க நான் சம்மதிக்க மாட்டேன்!” முடிவான குரலில் உடனேயே சொன்னார் இராசமணி.

 

“அம்மா?” தாயின் பேச்சையும் அது காட்டிய தொனியையும் அவனால் நம்ப முடியவில்லை.

 

“ஏன்மா? அதுதான் ஆறு மாதத்தில் மீட்டுவிடுவேன் என்கிறேனே. என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” கோபமும் மனத்தாங்கலுமாகக் கேட்டான்.

 

“ரஞ்சன்! உன் மேல் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்கிற பேச்சுக்கே நான் வரவில்லை. என் பிள்ளையை நான் நம்பாமல் இல்லை. இது உன் அப்பாவின் வீடு. அவர் நினைவாக நம்மிடம் எஞ்சி இருப்பது. நம்மிடம் இருக்கும் ஒரே சொத்தும் இதுதான். அதற்கு ஒன்று என்றால் பிறகு நீ உன் அம்மாவையும் உயிருடன் பார்க்க மாட்டாய். சரி.. வேண்டுமானால் அப்பாவின் பென்ஷன் காசை எடுத்து என்னவாவது செய். வீட்டின் மேல் கடன்வாங்க நான் சம்மதிக்கவே மாட்டேன்.” என்றவரின் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றான் ரஞ்சன்.

 

என்ன சொல்கிறார் அம்மா. அவன் அப்பா மீது அவனுக்குப் பாசம் இல்லையா? அவரின் நினைவாக எஞ்சியிருப்பது அந்த வீடு மட்டும்தான் என்று அவனுக்கு மட்டும் தெரியாதா. அந்த வீட்டை அவ்வளவு இலகுவாகப் போனால் போகிறது என்று அவன் கையைக் கழுவி விட்டுவிடுவானா? தங்கை மீது அவனுக்குப் பாசம் இல்லையா? அல்லது அவளது எதிர்காலத்தின் மீது அக்கறைதான் இல்லையா? அவள் வாழ்க்கையோடு அவன் விளையாடுவனா?

 

இதற்கு முதல் இப்படி அவரிடம் அவன் பணம் கேட்டிருக்கிறானா? அல்லது எதையாவது நாசமாக்கித்தான் இருக்கிறானா?

error: Alert: Content selection is disabled!!