என் சோலைப் பூவே 8 – 2

வண்டியை விற்பதில் அவனுக்குக் கவலை இல்லைதான். ஆனால், அதை விற்றுவிட்டு எல்லாத் தேவைகளுக்கும் நடந்தோ ‘பஸ்’சிலோ சென்று எப்போது எதை முடிப்பது?

 

பணம் கையில் கிடைத்ததும், நாதனுடன் கதைத்து அடுத்தநாளே செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் அன்று அவன் பெயரில் நாதனின் கடை வாடகைக்கு என்று மாற்றி எழுதப் பட்டது.

 

கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்தவனுக்கு, அப்போதே வென்றுவிட்டதைப் போன்ற சந்தோசம்!

 

இனித்தான் கஷ்டமே என்பது புரிந்தாலும், என்ன வந்தாலும் அதை எதிர்கொள்ளலாம் என்கிற தெம்பும் கூடவே வந்தது.

 

வென்றுவிட்டேன் என்று கத்த வேண்டும் போல், வென்றுவிடுவேன் என்று எல்லோரிடமும் அடித்துச் சொல்லவேண்டும் போல் ஒருவித வேகமே எழுந்தது.

 

தன்னைத் தானே அடக்கிக் கொண்டான். வெளியே சாதுவாக, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல் நின்றவனின் மனதில் பலப்பல கற்பனைகள், திட்டங்கள் எல்லாம் மிக மிக வேகமாக உருவாகின.

 

கண்ணனும் நாதனும் சொன்ன வாழ்த்துக்களை பணிவாகவே பெற்றுக் கொண்டான்.

 

கடையை அவன் பெயரில் எழுதியது அவனது மதிய உணவு நேரத்தில் என்பதால், சந்தானத்துக்கும் எந்தவிதச் சந்தேகமும் தோன்றவில்லை. சொன்னது போலவே கண்ணனும், நாதனும் யாரிடமும் இந்த விசயத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இல்லை. இனியும் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டான் ரஞ்சன்.

 

“அதெப்படி? எப்படியும் தெரிய வரும்தானே?” என்று கண்ணன் கேட்டபோது, “இல்லை, நீங்கள் இருவரும் சொல்லாவிட்டால் தெரிய வராது. நானும் தொடர்ந்து ‘ரிபோக்’க்கு வேலைக்கு வருவேன்.” என்றவனைக் கேள்வியோடு பார்த்தார்கள் இருவரும்.

 

“இப்போதைக்கு என் நண்பர்களை வைத்துக் கடையை நடத்தப் போகிறேன்.” என்றான் ரஞ்சன்.

 

“அதெப்படி? நீ இருந்து பார்ப்பது போல் வருமா? சிறு பிள்ளைத் தனமாக எதையாவது செய்து காசை அநியாயம் ஆக்கிவிடாதே.” என்றார் நாதன், அனுபவம் உள்ள மனிதராய்.

 

“நிச்சயமாக அப்படி விடமாட்டேன் நாதன் அண்ணா.” உறுதியான குரலில் சொன்னவனிடம் அதற்கு மேல் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

 

அவன் அப்படிப் பொறுப்பற்றவன் என்றும் அவர்களுக்குத் தோன்றவில்லை. தங்கள் வாயால் யாரிடமும் சொல்லமாட்டோம் என்று மட்டும் உறுதியளித்தார்கள்.

 

அவரது பான்சிப் பொருட்களை அகற்ற, கடையை ஒதுக்கிக் கொடுக்க என்று நிறைய வேலைகள் இருந்ததால் அடுத்த மாதத் தொடக்கத்தில் இருந்து அவனுக்கு அந்தக் கடையைத் தருவதாகச் சொல்லியிருந்தார் நாதன்.

 

அந்தக் கால அவகாசமும் அவனுக்குத் தேவையாகத்தான் இருந்தது. எனவே சம்மதித்தான்.

 

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை எப்போதும் போல சந்தானாம் கொடுத்த, அந்த வாரத்துக்கான வியாபாரப் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்று கொண்டிருந்தவனின் மனதிலும் மூளையிலும் நிறைந்திருந்தது அவன் திறக்கப் போகும் கடையைப் பற்றிய எண்ணங்களே.

 

அந்த யோசனைகளுடன் சென்று கொண்டிருந்தவனில் பிழையா அல்லது அவனைக் கவனியாமல் வீதியைக் கடக்க முயன்ற அந்த வயதானவரில் பிழையா, அதை ரஞ்சன் அறியான். ஆனால் அவன் வண்டி அந்த நபரை மோதிவிட்டிருந்தது.

 

பதறியடித்து வண்டியை நிறுத்திவிட்டு ஓடிப்போய் விழுந்துவிட்ட அவரைத் தூக்கினான். “ஐயோ அங்கிள் சாரி. நான் உங்களைக் கவனிக்கவில்லை. எங்காவது வலிக்கிறதா?” என்று பதட்டத்தோடு கேட்டான்.

 

“காலில் லேசாக வலிக்கிறது. ஆனால், நான்தானப்பா உன்னைக் கவனியாமல் வந்துவிட்டேன்..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கவே மக்கள் அவர்களைச் சுற்றிச் சூழ்ந்துவிட்டனர்.

 

அவன் வண்டியின் முன் சில்லு ஏறியதில் அவர் காலில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்டுவிட்டு எல்லோரும் அவனைத் திட்டத் தொடங்க, “இல்லை. அந்தப் பிள்ளையின் மேல் தவறில்லை. என் மேல்தான் பிழை..” என்று அவர்களிடம் சொன்னவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது ரஞ்சனுக்கு.

 

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பணம் பறிக்க முயலும் இந்தக் காலத்தில் அவரது நேர்மை அவன் மனதைத் தொட்டது. அதோடு அவரில் பிழையோ அவனில் பிழையோ, ஆனால் காயப்பட்டு நிற்பது அவரல்லவா.

 

அதனால், “வாருங்கள் அங்கிள் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்..” என்று அழைத்தான்.

 

“உனக்கு எதற்கப்பா சிரமம்.” என்று, அப்போதும் அவர் தயங்க, “சிரமம் ஒன்றுமில்லை. வாருங்கள்!” என்று பிடிவாதமாக அவரை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றான்.

 

அங்கே அவரைப் பரிசோதித்து, பெரிதாக ஒன்றுமில்லை என்றபிறகு, வலி மாத்திரைகளும் வாங்கிக்கொண்டு அவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு அவன் வந்தபோது வங்கி மூடி விட்டிருந்தது.

 

சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து நடந்ததைச் சொல்லலாம் என்று போனால், கடையில் அவரும் இல்லை.

 

விசாரித்தால் அவருக்கும் ஏதோ மாரடைப்பு என்றும், வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்றார்கள்.

 

‘என்னடா இது!’ என்றிருந்தது ரஞ்சனுக்கு. பெரும் தொகைப் பணம் வேறு கையில். அது வேறு பயமாக இருந்தது.

 

கோழி குஞ்சை அடை காப்பதுபோல அந்தப் பணத்தைத் திங்கள் வரை பாதுகாத்தவன், அன்று பணத்துடனே வேலைக்கு வந்து, வங்கி திறந்ததும் ஓடிப்போய்ப் அதை வைப்புச் செய்துவிட்டு வந்தான்.

 

மதியம் போல முகத்தில் சோர்வு தெரிய சோர்ந்த நடையில் வந்த சந்தானத்திடம், “எப்படி இருக்கிறீர்கள் அங்கிள்? வைத்தியர் என்ன சொல்கிறார்.” என்று மெய்யான அன்போடு நலத்தை விசாரித்தான்.

 

“பரவாயில்லை. சாதாரண நெஞ்சு வலிதானாம். எனக்கு வயதென்ன திரும்பிக் கொண்டா இருக்கிறது சொல்லு. அதோடு இந்தக் கடைகளை எடுத்துப் பார்க்க ஆண்பிள்ளையும் இல்லையே. சித்தும்மாவும் இன்னும் குழந்தை.” என்றவரின் பேச்சைக் கேட்டவனுக்கு, ‘அவளா குழந்தை. பிசாசு!’ என்றுதான் தோன்றியது.

 

அதை வாய்விட்டா சொல்லமுடியும்? அமைதியாக நின்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டான்.

 

பிறகு வெள்ளிக்கிழமை நடந்ததைச் சொல்லி, அன்று காலையில் வைப்புச் செய்த ரசீதை நீட்டியபடி, “சாரி அங்கிள். வெள்ளி என்னால் பணத்தைப் போட முடியவில்லை. அதனால், ஏதும் பில் திரும்பிவிடுமா?” என்று கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!