எதையுமே நம்ப முடியாமல் அவன் தோள்களை ஆசையுடன் பற்றிக் கொண்டாள் சித்ரா. ரஞ்சன் எதையும் யோசியாது ஸ்கூட்டியை வங்கியை நோக்கிச் செலுத்தினான்.
யார் எவ்வளவு நிதானமாக, சமயோசிதமாக நடப்பவராக இருந்தாலும், அவர்கள் எடுக்கும் நொடி நேர முடிவுகள் அவர்கள் வாழ்க்கையை உச்சத்துக்கும் கொண்டுபோக வல்லது. அதலபாதாளத்துக்கும் கொண்டு போக வல்லது.
காதல் என்பதை உணர்ந்து உண்மையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிலைக்கும். இங்கே காதலை அவன் உணர்ந்திருந்தாலும், யாரோ ஒருத்தியைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது அவனைப் பாதிக்குமா அல்லது சித்ராவைப் பாதிக்குமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்!
ரஞ்சனின் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்த சித்ரா இந்த உலகத்திலேயே இல்லை! வானில், முகில் மூட்டங்களுக்கு நடுவில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தாள்.
அவ்வளவு சந்தோசத்தை, வார்த்தைகளால் வடிக்க முடியாத நிறைவைக் கொடுத்தது அவன் வார்த்தைகள்!
“இதயன்..?” என்று மெல்ல அழைத்தாள்.
“ம்..?”
“ஏதாவது கதையுங்களேன்..”
“ஏன்?”
“இல்லை… இப்படி நீங்கள் என்னுடன் வருவது உண்மைதானா என்று நம்பவே முடியவில்லை. அதுதான்..”
அப்போதும் அவன் அமைதியாக வரவும், “என்னைத் திட்ட மட்டும்தான் வாயைத் திறப்பீர்களா?” என்று கேட்டாள்.
அதற்கும் அவன் மௌனத்தையே பதிலாகக் கொடுக்க, அதை அவள் பொருட் படுத்தவே இல்லை.
“நாளைக்குக் கடைக்கு வரமாட்டீர்களா?” என்று தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
“இல்லை..”
“ஏன்?”
“வேறு ஒரு வேலை இருக்கிறது.”
அது என்ன வேலை என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. அது ஒரு குறையாக அவளுக்குத் தோன்றவே இல்லை. அவன் அவளை ஏற்றுக் கொண்டதே போதுமானதாக இருந்தது.
என்னவென்றே இல்லாது அவனுடன் சலசலத்த படியே வந்தவளிடம் ஒரு சொல் பதில்களையே கொடுத்தான் ரஞ்சன்.
வங்கியின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கியவன், “நீ வீட்டுக்குப் போ..” என்றான் அவளிடம்.
“இல்லை. பணத்தை வைப்புச் செய்துவிட்டு வாருங்கள். ஒன்றாகவே போகலாம்.”
“ப்ச்! நான் என்ன சொன்னாலும் கேட்கவே கூடாது என்று முடிவேதும் எடுத்திருகிறாயா? நம்மை யாராவது இப்படி ஒன்றாகப் பார்த்தால் பிரச்சினை. அதனால் நீ போ.” என்றான் அவன் அதட்டலாக.
ஏன், ஸ்கூட்டியில் ஒன்றாக வரும்போது யாரும் பார்த்திருக்க மாட்டார்களா என்று எதிர்த்துக் கேட்க நினைத்தவள், முதன் முதலாக காதலனாக அவன் சொன்ன ஒன்றை மறுத்துப் பேச விரும்பாது, சரி என்பதாக தலையாட்டிவிட்டு ஸ்கூட்டியை இயக்கினாள்.
சட்டென்று ஏதோ தோன்றியவளாக அவன் சட்டைப் பையில் கிடந்த கைபேசியை எட்டி எடுத்தாள்.
“ஏய்! என்ன செய்கிறாய்…” என்றவனிடம், “என்னை ஏய் என்று கூப்பிடாதீர்கள் என்று உங்களிடம் சொல்லியிருக்கிறேன்..” என்று அவள் வாய் சொன்னபோதும், கையோ அவன் கைபேசியில் இருந்து தன் கைபேசிக்கு அழைப்பு விடுத்தது.
அது ஒலி எழுப்பியதும், அவன் கைபேசியை நிறுத்திவிட்டு, “இந்தாருங்கள்..” என்று அவனிடம் கொடுத்துவிட்டு, “பாய் இதயன்..” என்றபடி ஸ்கூட்டியில் சிட்டெனப் பறந்தாள் சித்ரா.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன், அவள் பார்வைக்கு மறைந்ததும் ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு வங்கியின் உள்ளே சென்றான்.
அதன் பிறகு வந்த அவனது நேரம் முழுவதும் அவனுக்குச் சொந்தமாக இல்லாமல் வேலை வெட்டி முறித்தது.
அடுத்த இரண்டு நாட்களும் மிக மிக வேகமாகப் பறந்தது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும். இரவு பகல் பாராது கடுமையாகக் கஷ்டப் பட்டார்கள். அதுவரை வாங்கிய செருப்புகள் போதாமல் இருந்தாலும், அவற்றைப் பரவலாக அந்தக் கடை முழுவதும் அடுக்கினார்கள்.
பெயர்ப் பலகை செய்வது கூட அந்த நேரத்தில் அனாவசியச் செலவாகப் பட, பெயரற்ற கடையாக திங்கட் கிழமை திறப்புவிழா கொண்டாடக் காத்திருந்தது அவர்கள் கடை.
போதுமான செருப்புகள் இன்றி, ஒரு பெயர் இன்றி, சாதாரணம் என்று கூடச் சொல்ல முடியாத அளவுக்கு கடை இருந்தாலும் அவர்களின் மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை.
பின்னே, அது அவர்களின் சொந்தக் கடை அல்லவா! அவர்கள் மூவரினதும் எதிர்காலத்தின் ஒளிக்கீற்று அல்லவா.
மனதில் பெரும் பரவசத்துடன், பரபரப்புடன், பல எதிர்பார்ப்புக்களுடன் அந்த ஞாயிறு இரவு கடந்தது ரஞ்சனுக்கு.
இவ்வளவும் நடந்தபோதும், ஜீவனினதும் சுகந்தனினதும் வீடுகளுக்குச் சென்று எல்லோரையும் திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று அழைத்தபோதும், தன் தாயாரிடம் எதுவுமே சொல்லவில்லை ரஞ்சன். அந்தளவுக்கு கோபமும், பிடிவாதமும் அவனிடம் ஆழப் பதிந்திருந்தது.
திங்கட்கிழமை அன்று காலையில் நேரத்துக்கே எழுந்து தயாரானவன், அப்போதும் தாய் தங்கையிடம் எதுவுமே சொல்லாமல் கிளம்பி கோவிலுக்குச் சென்று மனமாரக் கும்பிட்டான்.
பரபரப்புடன் கடைக்குச் சென்றவனை, மங்களத்தை ஏந்தி நிற்கும் பொன்மஞ்சள் நிறச் சுடிதாரில் புன்னகை நிறைந்த முகத்துடன் எதிர்கொண்டவள் சித்ரா.
அவளைக் கண்டதும், ஆனந்தமாக அதிந்தவனின் உதடுகள், “யா..ழி!” என்று அவள் பெயரைச் சத்தமில்லாமல் உச்சரித்தன தன்னாலே.
இவளுக்கு எப்படித் தெரியும் என்கிற பதட்டமோ, சந்தானத்திடம் சொல்லிவிடுவாளோ என்கிற பயமோ இன்றி அந்த நொடியில் ரஞ்சனின் மனதில் தோன்றிய உணர்வு மகிழ்ச்சியே!
நண்பர்கள் மூவருமாகச் சேர்ந்து அந்தக் கடையை உருவாக்கியபோதும், வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கும் அவனை வாழ்த்தவோ, பாராட்டவோ அல்லது அவனைப் பார்த்து மகிழவோ யாருமே இல்லை என்கிற வேதனை அவன் உள் மனதில் அரித்துக்கொண்டே இருந்தது.
அவளைக் கண்டதும் அந்த வேதனை மறைந்தது.
இனி நன்றாக வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தாலும், நம் கடைக்கு யாராவது வருவார்களா, வியாபாரம் நடக்குமா என்கிற மெல்லிய பயம் கூட இருந்தது அவனுக்கு.
கடையின் திறப்பு விழாவின் ஆரம்பமாக சுவாமிக்கு வைக்கப் பட்டிருந்த குத்துவிளக்கை ஏற்றக் கூட ஒருவர் இல்லாமல் தாங்களே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அவளது வரவு பேரானந்தத்தையே கொடுத்தது.
வேகமாக அவளை நெருங்கியவன் முகம் பளீரிட, “ஹேய் யாழி! வாவா..” என்று சந்தோசமாக வரவேற்றான்.
அதைக் கேட்டவளோ இனிதாக அதிர்ந்தாள். விழிவிரிய அவனையே பார்த்தவளின் மனதில் தோன்றிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை!
அதுநாள் வரை அவளைச் ‘சித்ரா’ என்றுகூட அழைத்திடாதவனின் ‘யாழி’ என்கிற அழைப்பு பரவசத்தை கொடுத்தது.
அந்த அழைப்பிலேயே தன்னை மறந்தவள், வரிசைப் பற்கள் தெரிய அவன் சிந்திய பளீரிடும் புன்னகையில் மயங்கியே போனாள்.
அவனது கோபப் பார்வையையே காதலித்தவளை, மலர்ந்த முகமும், அதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியும் சொக்க வைத்தது.
அவன் முகத்தில் இருந்து பார்வையை அகற்ற முடியாது நின்றவளின் மோன நிலையைக் கலைத்தது ஜீவனின் குரல்.
“யாருடா இந்த மாரியாத்தா..” சுகந்தன் சைக்கிளை மிதிக்க முன்பக்கம் அமர்ந்திருந்த ஜீவன் கேட்டான். அவளின் மஞ்சள் நிற உடை, அவனுக்கு அம்மனை நினைவு படுத்தியது போலும்.
நெஞ்சில் நிறைந்தவனின் முகத்தை ரசிக்க விடாது தடுப்பது யார் என்கிற கடுப்பில் திரும்பியவளின் விழிகள் ஜீவனை முறைத்தன.
“பாருடா, மாரியாத்தா முறைப்பதை..” என்றான் மீண்டும்.
கோவிலுக்குச் சென்று வந்ததன் அடையாளமாக நெற்றி முழுவதும் திருநீறும், பெரிய சந்தனப் பொட்டும் தாங்கி நின்ற ஜீவன், கையில் வேறு தட்டு வைத்திருந்தான்.
“இதயன், யார் இந்தப் பிச்சைக்காரன்?”
சித்ரா கேட்ட கேள்வியில் பொங்கிவிட்டான் ஜீவன்.
“என்னது? பிச்சைக்காரனா? நானா? டேய் என்னடா, உன் நண்பனை யாரோ ஒருத்தி அவமானப் படுத்துகிறாள். பார்த்துக் கொண்டிருக்கிறாய்.”
பதில் சொல்லாது புன்னகையோடு ரஞ்சன் நிற்க, ஜீவனை ஏற இறங்கப் பார்த்தாள் சித்ரா. “பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது.”
தன் கையில் இருந்த தட்டைச் சட்டென்று சுகந்தனின் கையில் திணித்துவிட்டு, “அது திருநீறு சந்தனம் வைக்க எடுத்துவந்த தட்டு.” என்றான் ரோசத்துடன்.
“ஓ…!” என்று இழுத்தவளின் இழுவையே அவனைச் சீண்டியது.
“டேய், யாருடா இவள்?” மீண்டும் கேட்டான் ஜீவன்.
“இவள்தான்டா அவள்…” என்றான் ரஞ்சன்.
“எவள்?”
“சித்ரா..” என்றான் ரஞ்சன், ஜீவனின் காதருகில் குனிந்து.
“என்னது?” என்று கேட்டவனின் கை ஒரு கன்னத்தைப் பற்றியது.
அவனின் செய்கையிலேயே ரஞ்சனை அவள் அடித்தது அவனுக்கும் தெரிந்திருகிறது என்பதை ஊகித்தவள், “என்ன? நான் யார் என்று தெரிந்துவிட்டதா?” என்று கேட்டாள்.
ஜீவனின் தலை பூம்பூம் மாடு போன்று ஆடியது.
“அது! அந்தப் பணிவு எப்போதும் இருக்கட்டும்.” என்று அவனிடம் சொன்னவள், “கடையைத் திறவுங்கள் இதயன்..” என்றாள் ரஞ்சனிடம் உரிமையாக.
“என்னது இதயனா?”
அப்போதுதான் அதைக் கவனித்தான் ஜீவன்.
“ஆமாம், என்னுடைய இதயன்..” என்றவளின் பேச்சில், “என்னது?!?” என்று மறுபடியும் அதிர்ந்தான் ஜீவன்.

