என் சோலைப் பூவே 12 – 3

கேள்வியாக ஏறிட்டவனிடம், “நாளைக்குச் செருப்புகள் வந்திறங்கும். அதற்குக் கொடுக்க.” என்றான்.

 

“அது சரிதான்டா.. ஆனால் இவ்வளவு பணம் ஏது உனக்கு?” என்று கேட்டான் சுகந்தன்.

 

அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்லாது, “நாளைக்கு செருப்புகள் எப்போது வந்திறங்கும் என்று தெரியாது. அப்போது நான் நிற்பேனா என்றும் தெரியாது. அதனால் எல்லாவற்றையும் பார்த்து இறக்கு.” என்றவன், என்னென்ன வகையான செருப்புகள் ஆர்டர் கொடுத்தான் என்பதையும் சொன்னான். “அவை எல்லாம் சரியாக வந்திருக்கிறதா என்று கவனித்துக் கொள்.” என்றான்.

 

“எல்லாம் சரிதான். நான் கவனிக்கிறேன். ஆனால்.. இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்று இன்னும் நீ சொல்லவில்லையே ரஞ்சன்..”

 

சற்று நேரம் அவனையே பார்த்துவிட்டு, “ஏன்டா, என் மீது உனக்கும் நம்பிக்கை இல்லையா?” என்றான் கசந்த குரலில்.

 

“நம்பிக்கை இல்லாமல் என்னடா? ஆனால் அன்று நீ சொன்னது..” என்று இழுத்தவனையே பார்த்தான் ரஞ்சன்.

 

“முடிந்தவரை நேர்வழி என்றும் சொன்னேனே சுகந்தன். இது கடனாகத்தான் கிடைத்தது.” என்றவன், அதோடு அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான்.

 

சுகந்தனுக்கும் சற்றே ஆறுதலாக இருந்தது. முடிந்தவரை நேர்வழி என்று சொல்லியிருக்கிறானே.. அவன் தப்பு வழி போகமாட்டான் என்று நிச்சயமாக நம்பினான். இதுவரை அப்படி நடந்து கொண்டது இல்லை என்பது அவனது நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தது.

 

எனவே ரஞ்சன் சொன்னது போலவே நடந்து கொண்டான்.

 

இங்கே சித்ராவோ எப்போதடா சனிக்கிழமை வரும் என்று காத்துக் கிடந்தாள். அதைவிட ரஞ்சன் மீது பெருங் கோபத்தில் இருந்தாள்.

 

அன்று திங்கட்கிழமை அவன் கடைக்குச் சென்று வந்தபிறகு அவனை அவள் காணவும் இல்லை. கைபேசி வழியாகக் கதைக்கவும் முடியவில்லை.

 

கடைக்கு சென்றாவது அவனைப் பார்க்கலாம் என்றால், அப்பாவுக்கு முடியாததில் அம்மாவும் கூடவே கடைக்குச் செல்லத் தொடங்கி இருந்தார். அவர்கள் நிற்கையில் இவளும் போனால், ஏன் வந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது?

 

அப்பா மட்டும் என்றாலாவது எதையாவது சொல்லிச் சமாளிக்கலாம். அம்மாவிடம் எதுவுமே முடியாது. சரி, அவர்கள் இல்லாத நேரத்தில் போகலாம் என்றால், யாராவது அதையும் பெற்றவர்களின் காதில் போட்டுவிட்டால்?

 

அவனது கடைக்குப் போவோம் என்றால், அவள் நடத்திய துப்புத் துலக்கலில் ரஞ்சன் மதியமும் இரவுமே அங்கு செல்கிறான் என்று தெரிய வந்திருந்தது. மதியம் கல்லூரி இருந்தது. இரவில் அவள் வெளியே போகமுடியாது.

 

முழு ரொட்டிக்கு அரை ரொட்டியாவது பரவாயில்லை என்று எண்ணி அவனுக்கு அழைத்தால், அவன் அதை எடுக்கவே காணோம். மெசேஜும் அனுப்பிப் பார்த்துவிட்டாள். அதற்கும் பதிலில்லை.

 

‘சனிக்கிழமை இருக்குடா உனக்கு..’ என்று மனதில் கருவிக் கொண்டாள்.

 

அன்று சனிக்கிழமை காலையிலேயே எழுந்து தயாரானவள், “அப்பா கடைக்குப் போவோமா..?” என்று கேட்டாள்.

 

சாய்மனைக் கதிரையில் ஓய்வாக அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சந்தானம் வியப்போடு மகளைப் பார்த்தார் என்றால், அவருக்குத் தேநீர் கொண்டுவந்த லக்ஷ்மி சந்தேகமாகப் பார்த்தார்.

 

இருவரின் பார்வையையும் உணர்ந்து, “என்ன! ஏதோ என்னை இன்றுதான் பார்ப்பது போல் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவர்களின் அருமைப் புதல்வி.

 

“புதிதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு அக்கறையாகக் கடைக்குப் போவோம் என்று நீ கேட்பது. அங்கே என்ன செய்யப் போகிறாய்?” சந்தேகம் மாறாத குரலில் தாய் கேட்கவும், கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ என்றிருந்தது அவளுக்கு.

 

ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “அங்கு என்ன, உங்களோடு சண்டையா பிடிக்க முடியும்? கணக்குத்தான் பார்க்க முடியும். அப்பா நேற்றுக் கணக்குப் பார்த்துத் தலை வழிக்கிறது என்று சொன்னாரே, அவருக்குக் கொஞ்சம் உதவியாக இருப்போம் என்று பார்த்தால்..” என்றவள் தோள்களைக் குலுக்கி, “எனக்கென்ன வந்தது. நான் வரவில்லை.” என்று முறுக்கிக் கொண்டாள்.

 

பிறகு, “அப்பா, நான் புது வருடத்துக்கு புதுச் சுடிதார் ஒன்று எடுக்கப் போகிறேன். நாதன் மாமாவுக்கு அழைத்துச் சொல்லிவிடுங்கள், அவர் கடைக்கு நான் வருவதாக.” என்றவள், கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

 

“ஏய்! நில்லுடி!” என்று அதட்டல் போட்டார் லக்ஷ்மி.

 

அந்த ஏய் என்ற அழைப்பு ரஞ்சனை நினைவு படுத்த இன்னுமே கடுப்பானாள் அவர் மகள்.

 

“அம்மா! என்னை ஏய் என்று சொல்லாதீர்கள். நான் என்ன ஆடா மாடா?”

 

“இரண்டில் ஒன்றுதான்!” என்றவர் கணவரிடம் திரும்பினார்.

 

“பாருங்கள் அவளை. உடுப்பெடுக்கக் கடைக்குப் போகப் போகிறேன் என்று அனுமதி ஏதும் கேட்டாளா? போகிறேன் என்று அறிவிக்கிறாள். இதையெல்லாம் கண்டிக்க மாட்டீர்களா நீங்கள்.” என்ற மனைவியின் பேச்சைக் கேட்டவர், மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.

 

“என்னப்பா இது? நான் இன்னும் என்ன குழந்தையா? இருபத்தியொரு வயதில் அவரவர் வெளிநாடுகளுக்கே தனியாகப் போகிறார்கள். நான் டவுனுக்குப் போவது ஒரு பிரச்சினையா? அந்த டவுன் எனக்குப் புதிதா? அல்லது நாதன் மாமா கடைதான் புதிதா?” என்று ஆத்திரப் பட்டாள் மகள்.

 

அர்த்தத்தோடு மனைவியைப் பார்த்தார் சந்தானம்.

 

“ஏனப்பா, நான் எப்போதாவது எங்கேயாவது உங்களிடம் சொல்லாமல் போயிருகிறேனா? அல்லது ஏதாவது பிழை செய்து இருக்கிறேனா? வீட்டில் சும்மா இருக்க போரடிக்கிறது. அதுதான் கடைக்குப் போவோம் என்றால், அதற்கும் அம்மா சந்தேகமாகப் பார்க்கிறார். உடுப்பு எடுக்கப் போவோம் என்றால் அதற்கும் இத்தனை விசாரணைகளா?” என்று அவள் அலுக்கவும், லக்ஷ்மிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

ஒற்றைப் பிள்ளையாக நின்றுவிட்டவள் எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருக்க முடியும். அதுதான் நண்பர்களுடன் எப்போதும் வெளியே சுற்றுகிறாள்.. என்று எண்ணியவர், அப்போதுதான் நினைவு வந்தவராக, “எங்கேடி உன் நண்பர்கள் கூட்டம்? ஒருவரையும் காணோமே..” என்று கேட்டார்.

 

“அவர்களோடு நான் கதைப்பதில்லை..”

 

“ஏன்? என்னவாகிற்று? இவ்வளவு நாளும் ஒன்றாகத்தானே சுற்றினீர்கள்..” என்று தன் விசாரணையை மீண்டும் ஆரம்பித்தார் லக்ஷ்மி.

 

“அதை எல்லாம் உங்களிடம் சொல்லமுடியாது.” மகளிடமிருந்து பட்டென்று வந்த பதிலில் மீண்டும் கடுப்பானார் லக்ஷ்மி.

 

“பாருங்கள்..” என்றபடி, எப்போதும் போல் கணவரிடம் முறையிடத் திரும்பியவர், அவர் வந்த புன்னகையை அடக்கியபடி தலையைக் குனியவும் பல்லைக் கடித்தார்.

 

கணவரிடம் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து மகளிடமே திரும்பி, “சரிடி. நான் ஒன்..றுமே கேட்கவில்லை. நீ இரு. அப்பா தேநீர் குடித்ததும் உன்னோடு வருவார். நம் கடைக்கே போ.” என்றவர், ‘அவளோடு போங்கள்!’ என்கிற உத்தரவைக் கணவரிடம் கண்ணால் கட்டிவிட்டு அகன்றார்.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!