அத்தியாயம் 8 – 2

அவள் தான் செய்வதறியாது அதிர்ந்து போனாள். பேசு பொருளாக இருக்கையில் மிரட்டாத ‘கொள்ளை நோய்’ இப்போது மிகையாகவே மிரட்டிப் பார்த்தது.  ஒரு கணமும் ஓய்ந்திராது சுறுசுறுவென்று வேலையாக இருக்கும் கணவன், இன்று, இப்படி, கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்தவள் நெஞ்சம் பயத்தில் நெரிபட்டுப் போனது. சக்தி வடிந்தவள் போலுணர்ந்தாள், அவள். நெஞ்சாழத்தில் எழுந்த பயத்தை, நடுக்கத்தை  வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. மனதில் தோன்றும் எதையும் பட்டுப் பட்டென்று கணவனிடம் கொட்டிப் பழகியவள் நாவை அடக்கப் பெரும் பாடுபட்டுப் போனாள். எக்குத் தப்பாக பாதகங்களை உரச முயன்ற மனதையும் தான். 

‘பாலன்’ உள்ளிருந்து விடாது எழும்பி கொண்டிருக்கும் ஏக்கக் குரல் அவனை எட்டாது பார்க்க முடிந்தவளால், அவன் தோள் சாய வேண்டும் என்று துடித்த இதயத்தை அடக்குவது பெரும்பாடாக இருந்தது. “அப்பா!” என்று அருகே செல்ல முயன்ற லாதியையும்தான். 

இந்த நோய் பற்றிய  உள்ளூர் செய்திகளை விட வெளியூரிலிருந்து கதை கதையாக சொல்லப்பட்ட ஒவ்வொரு செய்தியும் கலக்கத்தில் தான் தள்ளிற்று! அதை மிஞ்சிய ஊகங்கள் திகில் கொள்ள வைத்தன. நோயின் அதீத பரவலால் நாடுகளிடையேயான போக்குவரத்தில் தடைவிழ, அமெரிக்கா வரவிருந்த பூபாலன் தாயாலும் வர முடியவில்லை. அதுவும் வயசானவர்கள் அதிகளவு பாதிப்புறவே இப்போதைக்கு வராதிருப்பதே புத்திசாலித்தனம் என்றே முடிவெடுத்துவிட்டார்கள். 

“என்ர  மகனப் பத்திரமாப்  பாத்து எழுப்பி விட்டிரன!” தினமும் கலக்கத்தோடு கதைப்பார், பூபாலனின் அன்னை.  நிறையவே கைவைத்தியங்கள் சொல்வார். காயுவும்  சளைக்கவில்லை. தாயும் மாமியும் சொன்ன எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சளைக்காது செய்தாள்.

“பிள்ளைகள் ரெண்டு பேரோட நானும் உனக்குக் கரைச்சல் தாறன் என்னடி?” சொன்ன பூபாலனுக்குமே மனதுள் கலக்கம் தான். ஒரே வீட்டினுள் இருந்தாலும் கண்முன்னே நடமாடினாலும் இடையில் பெரும் பள்ளத்தாக்கு இருப்பது போன்றதொரு உணர்வு! 

அறைக்குள் வராது வாயிலில் நின்றவளோ, கணவனை முறைத்தாள். “ஐயே! நடிக்காதேயும். கள்ளன், இதுதான் சாட்டெண்டு நல்லா ரெஸ்ட் எடும் என்ன?” அப்போதைக்குச் சீண்டியவள் சுர்ரென்று சுரந்த விழிகளை, “லாதிம்மா, தம்பிக்குக் கிட்டவே இருக்க வேணும்.” என்று, மறுபுறம் பார்த்துச் சொல்லிவிட்டு, “இந்தா வாறன்  பா, மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க.” நகர்ந்து சென்று மறைந்துவிட்டாள். சிறு பொழுது கூட, மனதின் பயத்தையோ கலக்கத்தையோ அவனிடம் காட்டவில்லை. ஆனாலும் எத்தனை நாட்களுக்கு?

பூபாலனுக்கோ, தனக்கு வந்த நோய் பற்றிய பயம் ஒரு பக்கம் என்றால் மனைவியை நினைத்துப் பெரிதும் கவலை கொண்டான். “எனக்கு ஒண்ணும் இல்ல காயு; நாலு நாளில சரியாகிரும், நீ உன்னக் கவனி! பிள்ளைக்குப் பால் குடுக்கிறனி இங்க இங்க வந்து நில்லாத. பாத்ரூம் எல்லாம் நான் பார்த்துக் கொள்வன், நீ கிளின் செய்யாத, விடு!” தொடக்கத்தில் தன்மையாகச் சொன்னவன் பிறகு பிறகு கோபத்தோடு சொல்லவும் செய்தான். பலன்தான் பூச்சியமாகவிருந்தது.

“அப்ப எனக்கு வந்தா அப்பிடியே விட்டிருவீங்களா என்ன?” கேட்டபடி, வேது பிடிக்க(ஆவி பிடிக்க) ஆயத்தம் செய்து வைத்தாள், காயு.

“உனக்கு அடிதான் போடப் போறன். பகிடிக்கும் அப்பிடியெல்லாம் கதைக்காத!” என்றவனால் மனைவியின் முகத்திலிருந்த கலகக்கத்தைப் படிக்க முடிந்தது. 

“பயப்படாதடி! அவ்வளவு கெதியா உன்ன விட்டுட்டுப் போயிற மாட்டன். தொண்டுக் கிழவனா வருமட்டும் உன்னோட இருப்பன்.” பகிடியாகச் சொல்லி அவளைத் தேற்றிட முனைந்தான்.  

பூபாலனுக்கு இப்படி என்று ரூயிடம் மூச்சும் விடவில்லை, கயல். அதேநேரம், விழித்துக் கிடந்த மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் வீட்டினுள் போகாது, கடைகண்ணிளுக்குச் சென்று தேவையானவற்றை வாங்கி வாசலில் வைத்துவிட்டுத் தள்ளி நின்றே காயுவோடு கதைத்துவிட்டு வந்துவிடுவாள். இருப்பினும், “ஸ்வீட்டிக்கு கொஞ்சம் வேலை செல்லம், அதான் வரேல்ல!” பேஸ் டைமில் லாதியைச் சமாதானம் செய்கையிலும் மிகவும் களைத்துத் தெரியும் காயுவைக் காண்கையிலும் தன்னால் உதவ முடியவில்லையே என்று மிகவும் வருந்தினாள். அப்படியிருக்கையில், பூபாலனுக்கு கொரோனா வந்து நான்கைந்து  நாட்கள் தான் சென்றிருக்கும், கயல்விழியின் அலுவலகத்தில்  வீட்டில் இருந்தே வேலையைத் தொடரலாம் என்று விட்டார்கள்.

யோசித்தாள் கயல்விழி. உறவு, நட்பு, குடும்பம் என அனைத்தினதும் தேவையை அவளுக்கு உணர்த்தியது மட்டுமா? அன்பு செய்வதும் செய்யப்படுவதும் வாழ்வில் எத்தகையை மகத்தான விசயம், மகிழ்வு தரும் செயல் என்றும் உணர்த்தியது பூபாலன் குடும்பம் தானே? இந்த இக்கட்டான நேரத்தில் தான் அவர்களோடு தங்குவதே சரியாகும் என்று முடிவெடுத்தாள், கயல்.

அதற்குள், “இங்கயே வந்திருமன் கயல்; எனக்கும் மிகப்பெரிய உதவியா இருக்கும்.” காயுவே கேட்டுவிட்டாள். “மாட்டன் எண்டு சொல்லிப் போடாதேயும் கயல், ப்ளீஸ்!” கைபேசிக்கு அழைத்த பூபாலன் இருமல்களிடையே சொல்லியிருந்தான். மறுபேச்சின்றி வந்துவிட்டாள், கயல்விழி.

அறையிலிருந்து புறப்படுகையில், “நீயும் என்னோடு இருக்கப் பயப்பட்டுப் போறியோ!” கலங்கிய கண்ணோடு கேட்டாள், ரூயி. அவள் அப்படி வெளிப்படையாகக் கேட்டதும், கேட்கையில் பார்த்த பார்வையும் சுருக்கென்று மனதைத் தைத்தது, இவளுக்கு. முறைப்போடு பார்த்தபடி கட்டியணைத்து, “விசரா உனக்கு?” கோபப்பட்டாள். 

“இல்ல கயல், நல்லாப் பழகின எல்லோருமே என்னவோ நான் தான் கொரோனாவ உருவாக்கிப் பரப்பினது, பரப்பிக் கொண்டிருக்கிறது போலவே  பாக்கினம்; ஒதுக்கினம்; சரியான ஹேர்டிங்கா இருக்குத் தெரியுமா?” விழிநீரோடு சொன்னாள், ரூயி. அவள் அப்படி வேதனை கொள்ளும் வகையில் சில பலரின் நடத்தை இருப்பதை இவளும் கண்கூடாகவே கண்டுள்ளாளே! பரவும் கொள்ளை நோய் தரும் பீதி மட்டுமன்றி, இப்படியான சமயங்களில் தான் சிலரின் மனதின் வக்கிரங்களும் வெளிப்படும். அதுவே, ‘சப்பட்ட’  பட்டப்பெயர் சொல்லி ரூயியை ஒதுக்கத் தொடங்கியிருந்தார்கள்.  

“விசரா ரூயி, அப்பிடியெல்லாம் நான் ஒருக்காலும் நினைச்சும் பார்க்கேல்ல. இப்ப ஸ்ரீலங்கால இருந்து இப்பிடி ஒரு நோய் பரவியிருக்க நீ என்னை ஒதுக்கி இருப்பியா?” நட்போடு கோபித்துக் கொண்டாள்.

“காயுவுக்கு உதவியாக இருக்கும் எண்டு தான் அங்க போறன். அவாட மாமி இலங்கையில இருந்து வந்திருக்க நான் போறது பற்றி எல்லாம் யோசிச்சு இருக்க மாட்டன். இப்பத் தனியா சின்னப் பிள்ளைகள் ரெண்டு பேரோட திண்டாடுறா!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!