“சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது உன் பெறாமகளின் விஷயம் சொல்லு. நாம் எப்போது போவது?” என்று மனைவியைத் திசை திருப்பினார் அவர்.
“பாரு இப்போதே வரச் சொல்கிறாள். போவதுதான் நன்றாக இருக்கும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எல்லோரும் போனால் கடைகளை யார் பார்ப்பது?”
சற்று யோசித்த சந்தானம், “நீயும் சித்துவும் இப்போதே போங்கள். நான் வேண்டுமானால் பிறகு வருகிறேன்..” என்றார்.
“அது சரிவராது.” கணவரின் உடல்நிலையையும், தான் இல்லாவிடில் உணவை அவர் கவனிக்க மாட்டார் என்பதையும் நன்கு அறிந்திருந்தவர் மறுத்தார்.
“உங்களை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போய் அங்கே என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. ஒன்று செய்வோம். சித்துவை இப்போதே அனுப்புவோம். நீங்களும் நானும் பிறகு போவோம். எப்படியும் இரண்டு வாரத்துக்கு முதலாவது போகவேண்டும். இல்லை என்றால் அவள் கோபிப்பாள்.” என்றவரின் பேச்சைச் சந்தானமும் ஏற்றுக் கொண்டார்.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ராதான் தவித்துப் போனாள்.
நாளையே வவுனியா போனால் திருமணம் முடிந்து அவள் திரும்பி வர எப்படியும் ஒரு மாதம் தாண்டிவிடும். அவ்வளவு நாட்களும் ரஞ்சனைப் பாராமல் அவளால் இருக்கமுடியாதே.
ஆனால், மறுக்கவும் வழி இல்லையே! சற்றுமுன் தானே அபி அழைத்து ‘நீ வந்தே ஆகவேண்டும்!’ என்றுவிட்டு வைத்தாள்.
அக்கா அக்கா என்று அவளையே சுற்றும் அபியின் முகமும், அவள் மேல் அன்பைப் பொழியும் சித்தியின் முகமும் கண் முன்னால் வந்து நின்றது. அவர்களிடம் அவளால் மறுக்கவே முடியாது.
ஆக, அவள் போவது உறுதி.
அதை நினைத்ததுமே நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ரஞ்சனை உடனேயே பார்த்து, சற்று நேரமாவது அவன் தோளில் சாயவேண்டும் போலிருந்தது. அதோடு, அவனிடம் நடந்த திருமணப் பேச்சைப் பற்றியும் வரப்போகும் பிரிவைப் பற்றியும் சொல்லவேண்டும்.
அதற்கு அவன் என்ன சொல்வானோ தெரியவில்லை..
அப்பா வேறு மாப்பிள்ளை பார்க்க முதல் அவனை வீட்டில் வந்து கதைக்கச் சொல்ல வேண்டுமே. அவளின் சம்மதம் இன்றி அப்பா யாரிடமும் வாக்குக் கொடுக்க மாட்டார் தான். என்றாலும் அவர் ஒன்றை முடிவு செய்ய முதல் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடுவது நல்லதல்லவா.
எனவே, அபிக்குச் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
ரஞ்சனின் கடைக்குள் நுழைந்ததுமே, “சீவன் அண்ணா, எங்கே உங்கள் நண்பர்..” என்று அங்கே நின்ற ஜீவனிடம் கேட்டாள்.
“என் சீவனை வாங்கவென்றே வந்தாயா நீ? ‘ஜீவன்’ எவ்வளவு அழகானா பெயர். அதன் ஜீவனைக் கொலை செய்கிறாயே.” என்றான் அவன்.
“எனக்கு ‘ஜி’ வராது சீவன் அண்ணா..” என்றவள், “உங்களோடு வெட்டிப் பேச்சுப் பேச எனக்கு இப்போது நேரம் இல்லை. எங்கே உங்கள் அருமை நண்பர்?” என்று அதட்டினாள்.
“ம்க்கும்! இதற்கு ஒரு குறைச்சலும் இல்லை. அவன் வெளியே போய்விட்டான்.”
“வெளியே என்றால் எங்கே?” என்று அவனிடம் விசாரணை நடந்தபோதும், அவள் கை கைபேசியில் ரஞ்சனின் இலக்கங்களைத் தட்டிக் கொண்டிருந்தது.
“தெரியாது சித்ரா. காலையிலேயே போய்விட்டான். வியாபாரம் நடந்து கொண்டிருந்ததில் நான் கேட்கவில்லை.” என்றவன், “டேய் சுகந்தா, ரஞ்சன் எங்கே போனான் என்று உனக்கேதும் தெரியுமா?” என்று, அங்கே ஒரு வாடிக்கையாளரைக் கவனித்துக் கொண்டிருந்த சுகந்தனிடம் கேட்டான்.
“சரியாகத் தெரியாதுடா. வங்கிக்கும் போகவேண்டும் என்றான்.” என்றான் அவன்.
இங்கே கைபேசியிலும் அழைப்பை அவன் எடுக்கவில்லை.
சற்றுநேரம் அவனுக்காகக் காத்திருந்தவள், “நான் கடைகளுக்குப் போய்விட்டு வருகிறேன். அவர் வந்தால் எனக்கு எடுக்கச் சொல்லுங்கள் சீவன் அண்ணா. ஒரு முக்கியமான விஷயம் அவரிடம் சொல்லவேண்டும்.” என்றுவிட்டு, அபிக்குத் தேவையானவைகளை வாங்கச் சென்றாள்.
“போகும் போதும் என் சீவனை வாங்கிவிட்டுத்தான் போகிறாள்.” என்ற ஜீவனும் தன் வேலைகளைப் பார்த்தான்.
ஆனால் ரஞ்சன் வரவும் இல்லை. சித்ராவின் அழைப்பை ஏற்கவும் இல்லை.
வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவளின் விழிகள் அந்தச் சின்னக் கடைக்குள் ரஞ்சனைத் தேடி அலைபாய்ந்தன.
“இன்னும் இதயன் வரவில்லையாண்ணா?” என்றாள் கவலையோடு.
இந்தப் பெண் இவ்வளவு தவிப்போடு அவனைத் தேடுகிறாள். இவன் எங்கே போய்த் தொலைந்தான் என்று மனதில் ரஞ்சனைத் திட்டியபடி, “இன்னும் இல்லை சித்ரா.” என்றான் ஜீவன்.
அவளுக்கோ பெரும் தவிப்பாக இருந்தது.
எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கிறாள். அதோடு இனி அவனைப் பார்க்க இன்னும் ஒருமாதம் காத்திருக்க வேண்டும். வருகிறானா என்று வீதியையும், அழைப்பை எடுக்கிறானா என்று கைபேசியையும் பார்த்துப் பார்த்தே அவள் விழிகள் சோர்ந்தன.
நேரம் செல்லச் செல்ல அவனைக் காணாத ஏமாற்றம் இன்னுமின்னும் அவளைச் சூழ நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
அவன் முகத்தை ஒருதடவை பார்த்துவிட்டு, போய்வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனால் நிம்மதியாக இருக்கும் என்று காத்திருந்தவளுக்கு ரஞ்சன் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கவே இல்லை.
இதில் அவள் தாயார் வேறு பலமுறை அழைத்துவிட்டார். இதோ வருகிறேன் என்று சொல்லிச் சொல்லியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தவளுக்கு அந்தக் கடையைவிட்டு வெளியேறவே மனம் வர மறுத்தது.
இதில் திருமணத்துக்கு கட்டவேண்டிய சேலைகள், வவுனியாவில் நிற்கும் நாட்களுக்கான உடைகளை எடுத்துவைக்க என்று அவளுக்கும் நிறைய வேலைகள் இருந்தன.
ஆனாலும் அவனைக் காணாமல் போகமுடியாமல் அங்கேயே காத்திருந்தாள்.
மெல்ல மெல்லக் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தவளுக்கு விழிகள் கலங்கி அழுகை வந்துவிடும் போலிருந்தது.
“இதயன் வந்தால் கட்டாயம் எனக்கு எடுக்கச் சொல்லுங்கண்ணா. அல்லது நான் எடுக்கும் போதாவது கதைக்கச் சொல்லுங்கள். மிக முக்கியமான விஷயம் ஒன்று அவருடன் கதைக்க வேண்டும். நாளைக்கே நான் வவுனியாவுக்குப் போகிறேன். சொல்லிவிட்டுப் போகலாம் என்றால் அவரைக் காணவில்லை.” என்றவளின் குரல் எவ்வளவு தடுக்க முயன்றும் கடைசியில் தழுதழுத்தது.
செல்லும் அவளையே பார்த்திருந்த ஜீவனும் உள்ளம் கனத்துப்போக நின்றான்.
வரும்போது எவ்வளவு உற்சாகமாக வந்தபெண் போகும்போது இப்படி வாடி வதங்கிக் போகிறாளே என்று நினைக்க ரஞ்சன் மீது இன்னுமின்னும் கோபம்தான் வந்தது. ஆனால், அவனாலும் செய்வதற்கு ஒன்றுமில்லையே!
வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சித்ராவின் விழிகளோ எங்காவது ரஞ்சன் தென்படுகிறானா என்று போகிற வழியெங்கும் அவனைத் தேடியலைந்தன.
மனமும் முகமும் சோர வீடு சென்றவளின் அதன் பிறகான நேரத்தை லக்ஷ்மி பறித்துக் கொண்டார்.
அதை எடுத்தாயா இதை எடுத்தாயா, வீட்டுக்கு இந்த நகைகளைப் போட்டுக்கொள், யாரும் வந்தால் இப்படி நடந்துகொள், அப்படி நடந்துகொள், அதைச் செய், இதைச் செய் என்று ஒரு வாங்கு வாங்கிவிட்டார்.

