அத்தியாயம் 9- 3

கையைக் கழுவிவிட்டு குடுகுடுவென்று வந்து பிள்ளைகள் கன்னத்தில் பச்சுப் பச்சு  என்று முத்தம் வைக்க, தன்  கன்னத்தையும் காட்டினான், பூபாலன். கயல் பார்வையும் அவர்களில்தான். கடந்த இரு கிழமைகளுக்கும் மேலாக  அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட பாடு அறிவாளே! தன்னையும் அறியாது கண்கள் கலங்கப் பார்த்திருந்தாள். ஏனோ அந்தக் கணம், முன்பிறவியில் இவர்களோடு ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற எண்ணமே ஓடியது.

கணவனை முறைத்தாள் காயு. அவன் பார்வை அவள் மனதோடு முகத்தையும் செம்மையுறச் செய்தது. “ஒரு குமர்ப்பிள்ள வீட்டில இருக்க, அதோட நல்ல விபரமான மகளையும் மடியில வச்சுக்கொண்டு பார்வையும் பேச்சும்!” வாய்க்குள் முணுமுணுத்தபடி முழங்கையால் அவன் கன்னத்தில் ஒரு இடி கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

“அம்மா அப்பாக்கும் ஆய் குடுத்திட்டுப் போங்கோ!” கத்தினாள் லாதி. அவளுக்குத் தகப்பன் அந்த அறைக்குள்ளிருந்து வெளியே வந்தது, தாய் தம் அருகில் வந்தது  என்று பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

மகள் அழைத்தது கேளாது போல நகர, ஓடி வந்து இழுத்துப் பிடித்து நிறுத்திய லாதி, “அப்பாக்கு ஆய் குடுத்திட்டே புரியாணியச் சமையுங்கோ!” இழுத்துச் சென்று தகப்பன் கன்னத்தில் முத்தம் கொடுத்த பின்னரே செல்ல அனுமதித்தாள். அவர்களின் பாசப்போராட்டம் பார்த்துவிட்டு மெல்லக் குசினிக்குள் நழுவி விட்டாள் கயல்.

என்னவோ பல வருடங்கள் போன்ற தோற்றம் கொடுத்த கடந்த சில தினங்கள், இந்த வீட்டில் சிரிப்பொலியை யாருமே கேட்கவில்லை; ஒன்றாக இருந்து கதைத்தோ, சிரித்தோ, சாப்பிட்டோ காணவும் இல்லை. அதற்கெல்லாம் ஈடுகட்டும் வகையில் இன்று ஒரே குதூகல மனநிலையில் இருந்தார்கள். இடையிடை தொலைபேசி உரையாடல்களும் இடம் பிடித்து கலகலப்பை அதிகரித்தன.

சமைத்த உணவுகளை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த காயுவின் பார்வை கயலையும் மகனையும் தழுவி தழுவி சென்றது. உதடுகளில் முறுவல். பூபாலன்  லாதியோடு கதைத்து விளையாடிக்கொண்டிருந்தாலும்  அவன் பார்வையும் அவர்களில்தான்.

குழந்தை ஆதித்தை மடியில் அணைத்து இருத்தி உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள், கயல். அவள் கவனம் முழுவதும் குழந்தையில் என்றால், அவனோ, ஒரு கையால் அவள் பின்னலை இழுத்து அவளை ஒரு வழி  பண்ணியபடி சப்புக்கொட்டி உண்டு கொண்டிருந்தான். இடையிடை, “ஸ்ஸ்ஸ்…குட்டியன் விடுங்கோ!” கூந்தலை விலத்தி விடுவதும், உணவு அப்பிய பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி கைகால்களை அடித்தபடி அவன் மீண்டும் எடுத்து இழுத்து விளையாடுவதுமாக இருவரும் வேறு ஒரு உலகில் இருந்தார்கள். 

காயுவின் பார்வை கணவன் பார்வையைத் தொட்டு மீண்டது.

சாப்பாட்டைக் கொடுத்து முடித்துவிட்டு, “எங்கட ஆதித் கெட்டிக்காரக் குட்டியன், வாங்கோ வாய் கழுவிட்டு வருவம்.” எழுந்தவள்,  அப்போதுதான் அவர்கள் பார்வையைக்  கண்டாள்.

கலங்கிய விழிகளை மறைத்துச் சமாளித்தாள், காயு. அதோடு, “நீர் எத்தின பிள்ளைகள் வேணும் எண்டாலும் பெறும்; பெத்து என்னட்டத் தாரும், நான் வளர்த்துத் தருவன் கயல்.” ஓடிவந்து இறுக அணைத்துக்கொண்டாள்.

“என்ன காயு இதெல்லாம்…” என்றபடி, அவள் கலங்கிய விழிகளை பார்த்தவள், “அப்ப நீங்க இங்க இருந்து இலங்கைக்கே நிறைந்தரமா வரப்போறிங்களோ!” கேலியாகக் கேட்டவள் பார்வை, அதே கேலியோடு பூபாலனை நாடியது.  அவனோ, “உம்மை இங்க எப்பிடிப் பிடிச்சு வைக்கிறது எண்டு எங்களுக்குத் தெரியும் என்ன காயு?” என்று ஆரம்பித்தவன், கயல் முறைக்கவும் கைகைளை மேலே உயர்த்திக் கும்பிட்டான்.

 “தவறி வாயில வந்திட்டு; நீங்க கதைக்கிறதுக்கும் எனக்கு ஒருவிதமான சம்பந்தமுமே இல்ல.” பயந்தவன் போன்ற பாவனையில் சொன்னவன் விழிகளில் ஏகப்பட்ட சீண்டல்.

“நானே செத்துப் பிழைச்சு வந்திருக்கிறன், ஒரு வாய் புரியாணிய தந்தா சாப்பிட்டுப் போட்டுப் போகப் போறன். பே பசியா இருக்கு காயு!” அப்பாவியாய் சொல்லி அவர்களைச்  சிரிக்க வைத்தான்.

“நான் பகிடிக்கு இல்ல கயல், நீர் மட்டும் இல்லையோ இந்த ரெண்டு கிழமைக்கு எனக்கு மேல தட்டி இருக்கும்.” மீண்டும் இறுக அணைத்துவிட்டே, “சாப்பிட வாங்க!” நகர்ந்தாள் காயு. 

“கயல் இலங்கை போகவிட்டு நிச்சயம் உம்ம நாங்க மிஸ் பண்ணுவம்.” பூபாலன் வந்தமர, “நோ நோ ஸ்வீட்டி எங்கயும் போக மாட்டா!” ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள்  லாதி. கயல் வாய் திறக்கவில்லை.  அவள் கண்கள் நிறைந்திருந்தன. அவர்கள் காட்டும் அன்பின் கசிவு அது. அதை அவர்களுக்குக் காட்டவும் விரும்பவில்லை. குழந்தையை ‘பிளே பென்’னில் விட்டு விட்டு அவன் விளையாட்டுச் சாமான்களை அருகில் எடுத்து வைத்தாள். 

“அதைப்பற்றி எல்லாம் இப்ப என்னத்துக்கு? ஆனால் ஒண்டு…” என்று ஆரம்பித்த காயு, ” இங்க இருக்கிற வரைக்கும் எங்களோடதான் கயல். ஓகே? ரூமுக்குப் போகப்போறன் எண்டு மட்டும் வெளிக்கிட்டுப் பாரும்  அப்ப இருக்கு!” மிரட்டலாகச் சொல்லிட்டே உணவைப் பரிமாறினாள்.

சின்னச் சிரிப்போடு வந்து லாதியும் அவளும் அருகருகில் அமர்ந்து கொண்டார்கள். 

புரியாணியின் வாசம் அவ்விடமெல்லாம் சூழ்ந்திருந்தது. நாவில் எச்சில் சுரந்தது. எல்லோருக்குமே  நல்ல பசியும். “பரவாயில்லயே! என்ர  மனிசி சமைச்ச புரியாணியும் நல்லாத்தான் இருக்கு!” இரசித்து ருசித்து உண்டான் பூபாலன். அவனையே பார்த்தபடி உணவைக் கொறித்தபடியிருந்தாள், காயு. பசிப்பதுபோல் இருந்தாலும் உணவு உள்ளே இறங்கேன் என்றது. இத்தனை வருடங்களில் எப்போதுமே புரியாணி என்றால் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் பரிமாறும் கணவன், இன்று, தான் செய்ததை ஆசையாக உண்பதைப் பார்ப்பதே அவள் மனதையும் வயிற்றையும் நிறைத்திட்டோ என்னவோ!

“என்னப்பா!” அவள்  பார்வையுணர்ந்து கேட்ட பூபாலன் விழிகள் மனைவியைச் சீண்டின, இரகசியமாக. தனக்குச் சுகயீனம் என்றதும் அவள் துடித்த துடிப்பில் இதுநாள் இருந்ததை விடவும் அவள் மீதான நேசம் அதிகரித்திருந்தது. அவளோ,  பட்டென்று முன்னால் அமர்ந்திருக்கும் கயலையும் மகளையும் பார்த்துவிட்டுக் கணவனை முறைத்தாள்.

தோள்களைக் குலுக்கியபடி பட்டென்று கண்ணடித்துவிட்டு முறுவலித்தான், அவன். தற்செயலாக அதைக் கண்டுவிட்ட கயல் பட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள். அதைக் கண்ணுற்ற காயு இதழ்களிலும் முறுவல். “உங்களை…” அருகில் இருந்த கணவனுக்கு முழங்கையால் ஒரு இடி கொடுத்தபடி,  சீண்டலாகப் பதில் சொல்ல முயன்றாள். 

 

“ஓமோம் சொல்லுவீர்! ரெண்டு கிழமையா மனுசர பதை பதைக்க வச்சிப்போட்டு, பாரும் கயல் சப்புக் கொட்டிச் சாப்பிடுற வடிவ!” அவனிடம் தொடங்கி அமைதியாக உண்ணும் கயலையும் உள்ளே இழுத்தாள்.

கயலுக்கு உண்மையில்  அந்தரமாகவிருந்தது. அவர்கள் நடுவில் தான் இடைஞ்சலாக இருக்கிறோமோ என்ற எண்ணம் வந்திருந்தது. அந்த உணர்வை காயுவின் இயல்பான பேச்சு துடைத்தெறிந்திட்டு.  இருவரையும் பார்த்து முறுவலித்தவள், “இனிச் சரி நீர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேணும் காயு.” என்றாள்  அக்கறையோடு. 

“நீரும் தானே…” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, “கயல்  சொல்லுறது சரிதான். நீ சரியா சோர்ந்து இருக்கிற! பார், சாப்பாட்டையும் வச்சு அளஞ்சு கொண்டு. எனக்கு இப்பப் பழையமாதிரி ஆகிட்டு காயு. நீ ரெஸ்ட் எடு! கவனிச்சுச் சாப்பிடு! கயலும் தான். நான் பிள்ளைகளைப்  பார்ப்பன்.” என்றான்  பூபாலன்.

தன் சோர்வு மறைத்துச் சொன்ன பூபாலன், அடுத்து வந்த நாட்களில் பார்த்துப் பார்த்துச் சொல்லி, சோர்ந்திருந்த மனைவிக்கு ஓய்வு கொடுத்தான். கவனித்தும் கொண்டான். என்னவோ அவன் மனதுள் நெருடல்.  காயு  அந்தளவு சோர்வாக இருந்தாள். அதை உண்மையாக்கும் வகையில் அந்தக் கிழமையே தனிமைப்படுத்தப்பட்டாள்,  காயு.

error: Alert: Content selection is disabled!!