என் சோலைப் பூவே 17 – 2

போகும் அவளையே பார்த்திருந்த ஜீவன், “இவளென்னடா இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் அவன் மேல்..” என்றான்.

 

“அது எனக்கும் உனக்கும் தெரிந்து என்ன பிரயோசனம். அந்த விசரனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு சொல்லியும் கேக்காமல், அந்தப் பணத்தாசை பிடித்த பிசாசைக் கட்டப் போகிறேன் என்கிறான்..” என்றான் சுகந்தன் எரிச்சலோடு.

 

“எவ்வளவு நல்ல பெண். பாவம்டா. எல்லாம் தெரிந்தால் என்ன செய்யப் போகிறாளோ தெரியவில்லை.” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், அப்படியே தங்கள் வேலைகளையும் பார்க்கத் தொடங்கினர்.

 

இங்கே ரஞ்சனின் அடுத்த கடைக்குச் சென்றுகொண்டிருந்த சித்ராவின் மனம் மீண்டும் ஆர்வத்தில் துடிக்கத் தொடங்கியிருந்தது.

 

முதலில் அவனைத் தேடி வருகையில், ஒன்றரை மாதத்துக்குப் பிறகு காணப்போகும் ஆர்வத்தில் வந்தவளுக்கு இப்போது அவன் புதுக்கடை திறக்கப்போகும் சந்தோசமும் சேர்ந்து கொண்டது.

 

சாதித்துக்கொண்டிருப்பது என்னவன் என்கிற பெருமிதத்தோடு முகத்தில் சந்தோசம் மின்ன சென்று கொண்டிருந்தவளின் உடலும் மனமும் அவனைக் காணப் பரபரத்தது.

 

அதுவரை அவள் மனதில் இருந்த கோபம், அவளை அவன் தவிர்த்ததினால் உண்டான குழப்பம் எல்லாமே பின்னுக்குத் தள்ளப் பட்டிருந்தது.

 

அந்த நிமிடம் அவள் மனதில் இருந்ததெல்லாம் அவனைக் காணவேண்டும், கண்டதும் இந்த சந்தோசத்தை அவனைக் கட்டிக்கொண்டு கொண்டாடவேண்டும் என்பது மட்டுமே!

 

அடுத்த வீதியில், சுகந்தன் சொன்ன கடை பூட்டப் பட்டிருந்தது. உள்ளே வேலை நடக்கிறது போலும் என்று எண்ணியபடி, ஸ்கூட்டியை அங்கே நிறுத்திவிட்டு கடையின் கதவருகே சென்று கதவை இழுத்துப் பார்த்தாள்.

 

அது பூட்டப் பட்டிருந்தது.

 

உட்பக்கமாக பூட்டிவிட்டு வேலை செய்கிறான் போலும் என்று எண்ணியபடி, அவன் கைபேசிக்கு அழைத்தாள்.

 

ம்ஹூம்! அவன் அப்போதும் அதை எடுக்கவில்லை.

 

என்ன இவன், வேலையாக இருந்தால் என்ன, அவளுடன் கைபேசியில் ஒருவார்த்தை பேசினால் குறைந்து போவானா என்று மனம் புகையக் கதவில் தட்டினாள்.

 

அலறிக்கொண்டிருந்த கைபேசியை ஒரு கையில் பிடித்தபடி மற்றக் கையால் கடையின் கதவைத் திறந்த ரஞ்சன் வெளியே நின்ற சித்ராவை எதிர்பார்க்கவில்லை என்று அவன் முகத்தைப் பார்க்கையிலே தெரிந்தது.

 

“என்ன? என்னை எதிர்பார்க்கவில்லையா?” என்று அதட்டலாகக் கேட்டபடி அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் சித்ரா.

 

ஒரு பெண் பூட்டியிருக்கும் கடைக்குள் நுழைவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று பதறிக் கதவை அடைத்தான் ரஞ்சன்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளைக் கண்டத்திலேயே நிலை தடுமாறியவன், அவனைத் தொட்டுத் தள்ளியவளின் தொடுகையிலும், மயிலிறகாய் வருடிய அவளது அருகாமையிலும் நிலை குலைந்து கொண்டிருந்தான்.

 

அவளை அங்கிருந்து வேகமாக அகற்றச் சொல்லி மூளை சொல்ல, மனமும் உடலும் அவளை அணைத்துக்கொள்ளத் துடித்தது.

 

அவளைக் காணாத வரை அவன் எடுத்த முடிவுகளில், செயல்களில், எண்ணங்களில் எல்லாம் உறுதியாக நின்றவனின் உறுதியை, அவளின் காதல் கொண்ட ஒற்றைப் பார்வை ஒன்றுமில்லாமல் ஆக்கியது.

 

அவனது கட்டுப்பாட்டையும் மீறி விழிகள் அவள் விழிகளோடு கலக்க, வேகமாக அவனை நெருங்கிய சித்ரா, “ஏன்டா என்னோடு இவ்வளவு நாளும் கதைக்கவில்லை. நான் என்ன செய்தேன்? ஏன் இப்படி என்னைத் தவிக்க விடுகிறாய். என்னைப் பார்க்காமல், என்னோடு கதைக்காமல் உன்னால் இருக்க முடிந்ததா?” என்று கேட்டபடி, அதுநாள் வரை அனுபவித்த பிரிவின் வலியைக் குறைக்க எண்ணி அவன் முகத்தைத் தன்னருகே இழுத்து, ஆவேசம் கொண்டவளாக அவன் முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.

 

கட்டுப்பாடுகள் நிறைந்த அவனை முத்தங்களால் மொத்தமாகக் கட்டியிழுத்தாள் சித்ரா. சும்மாவே தடுமாறிக் கொண்டிருந்த ரஞ்சன், அவள் பதித்த வேக முத்தங்களால் மொத்தமாக நிலை குலைந்தான். அவனும் மனிதன்தானே. அதுவும் அவள் மேல் அவனே அறியாத அளவுக்குக் காதல் கொண்ட மனிதன்!

 

அவன் கைகளும் மிக வேகமாக அவளை அணைத்துக்கொள்ள, வேக மூச்சுக்களோடு முத்தங்களை அவனும் அவள் முகமெங்கும் பதிக்கத் தொடங்கினான். அணைப்பு இறுகி இறுகி ஒருகட்டத்தில் அவனது கைகளின் தேடல் வேறாகிப் போனபோது, அதுவரை ஒருவித மயக்கத்தில் மூழ்கி நெகிழ்ந்து நின்றவள் சட்டென்று விழிகளைத் திறந்து கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

அவனோ மிக வேகமாக அவளில் மூழ்கிக் கொண்டிருந்தான்.

 

அதை ஏற்க முடியாமல் உடல் கூச அவனிடமிருந்து அவள் விலக நினைக்க அதைத் தாங்க முடியாது இழுத்து அணைத்தவனின் வேகத்தில் அவள் திக்குமுக்காட, அவனோ மிக வேகமாக அவளுக்குள் முன்னேறிக் கொண்டிருந்தான்.

 

அவனைத் தடுக்கவும் முடியாமல் அனுமதிக்கவும் முடியாமல் தடுமாறி நின்றவளின் மேனி, அவனின் ஆக்கிரமிப்பில் அவளையும் மீறி இளகத் தொடங்கியது.

 

ஆனாலும், இது தவறு என்று மூளை உணர்த்த அவனிடமிருந்து விடுபட அவள் போராடத் தொடங்கவும், “யாழி ப்ளீஸ்..” என்று ஆழ்ந்த குரலில் ஒலித்த அவனது வேண்டுதல், அவளின் மொத்த எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கியது.

 

அவனுக்கு இல்லாதது என்று அவளிடம் ஒன்றுமே இல்லையே!

 

அவன் கேட்டு ஒன்றை அவளால் மறுக்க முடியுமா?

 

அவளது பெண்மையையே அவனுக்குப் பரிசளித்தது அவளது காதல் கொண்ட நெஞ்சம்!

 

 

அயர்ந்த உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் சித்ரா. இப்படித் தூங்கி எத்தனை நாட்களாயிற்று என்று எண்ணியபடி விழிகளைத் திறந்தவளின் பார்வையில் பட்டான் ரஞ்சன்.

 

அங்கிருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்தவன் கைகளை மேசையிலே ஊன்றி, அதிலே தன் தலையைத் தாங்கியிருந்தான்.

 

தான் செய்துவிட்ட மடத்தனத்தை நினைத்து ஒற்றைக் கையால் நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

அவன் இருந்த விதமும், அந்தச் செயலும் சித்ராவின் மனதைத் தாக்க, இவன் ஏன் எதையோ பறிகொடுத்தவன் போலிருக்கிறான் என்று எண்ணியபடி வேகமாக எழுந்தவள், அப்போதுதான் தன் அந்தரங்க நிலையை உணர்ந்தாள்.

 

சட்டென்று மீண்டும் படுத்துக்கொண்டவள் தன் மேல் போர்த்தப்பட்டிருந்த போர்வையைப் பார்த்தாள்.

 

அது அவனது சாரம்(கைலி) என்று பார்த்ததுமே தெரிந்தது.

 

சாரத்தினை இறுகப் பற்றிக் கொண்டவளுக்கு நடந்தவை அனைத்தும் கண் முன்னால் வந்துபோக அவளுமே சற்று நேரம் உறைந்துதான் போனாள்.

 

எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்று தவித்தவளுக்கு உடலும் மனமும் கூசிப்போனது.

 

ஏன் இப்படிக் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொண்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு, அதன் காரணம் புரிய மறுத்தது.

 

அதுநாள் வரையிலான பிரிவும், நெடு நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டதும், இரண்டாவது கடை திறக்கப் போகிறான் என்கிற சந்தோசமும் அவளைத் தடுமாற வைத்துவிட்டதா?

 

அல்லது சுகந்தன் சொன்ன, ‘ரஞ்சன் உன்னைத் திருமணம் செய்யமாட்டான்’ என்கிற வசனம் அவளை நிலைகுலைய வைத்ததா?

 

எதுவானாலும், தன் கைப்பொருள் களவு போய்விடுமோ என்று உள்மனதில் பதறிக்கொண்டிருந்தவளின் மனதுக்கு நடந்த நிகழ்வு ஒருவித சாந்தியைக் கொடுத்தது என்பதுதான் உண்மை!

 

அதோடு, கற்பு உயிரை விட மேலானதாக அவளுக்கு இருந்தாலும், ரஞ்சனுக்கு முன்னால் அதுகூட ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது! அவன் விரும்பிக் கேட்ட ஒன்றை அவளால் கொடுக்காமல் இருக்க முடியாதே!

 

செய்தது தவறு என்கிற உறுத்தல் இருந்தாலும், அவனுடனான திருமணம் அதை நிவர்த்தி செய்துவிடுமே என்று எண்ணியவளின் விழிகள், அவள் மனதை மட்டுமல்லாது உடலையும் சொந்தமாக்கிக் கொண்டவனைக் காதலுடன் தழுவியது.

 

அவள்தான் எதிலும் அவசரப் படுகிறவள் என்றால், அவனுக்கும் இன்று என்னவாகிற்று? எப்போதும் நிதானமாக இருக்கும் அவன் எதற்காக நிதானத்தை இழந்தான்? அவனையும் அவளது பிரிவு தாக்கியிருக்குமோ? அதுதான் காரணமோ? என்று எண்ணியவளுக்கு ஒருவித மகிழ்ச்சி உள்ளே ஊற்றெடுத்தது.

error: Alert: Content selection is disabled!!