“மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு கிழமைகளுக்குத்தானே இதுகளிலேயே சமாளிக்கலாம்.” என்று கயல் சொன்னாலும் பூபாலன் கேட்கவில்லை. “சின்னப்பிள்ளைகள் உருண்டு விழுந்திருவினம், கட்டில் ஒண்டைப் போடுவம்.” என்றவன், பிரணவ் உதவியை நாடினான். அடுத்த சிலமணிநேரங்களிலேயே லாதியின் அறையில் இருந்த ரெட்டைக் கட்டில் அங்கு குடிவந்திருந்தது. அதோடு சேர்ந்து லாதி, குட்டியனின் அவசியமான பொருள்களும் வந்திருந்தன.
“உங்களுக்கு மட்டும் சிம்பிளா எதையாவது செய்து கொள்ளும் கயல். நிறையவே கரைச்சல் தாறம் என்ன?” நடப்பதை ஒரு திகைப்போடு பார்த்திருந்த கயல் கரத்திலிருந்த கைபேசித் திரையில் பூபாலனும் காயுவும் அரையரைவாசி இடங்களைப் பிடித்தபடியிருந்தார்கள். கயலால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. ஒரே வீட்டில் தான் இருக்கப் போகிறார்கள். இருந்தாலும் தாம் மூவரும் தனிமைப்பட்டுவிட்ட உணர்வு. கடந்த இரு கிழமைகளாக பிள்ளைகள் அவள் பொறுப்பிலிருந்தாலும் காயுவின் கண்பார்வை அவர்களில் இருந்துள்ளது. அதுவே, கயலை வெகு இயல்பாக வைத்திருந்தது எனலாம்.
‘இப்போ?’ இரு பிள்ளைகளுக்கும் அவள் மட்டுமே பொறுப்பு என்ற நிலை உண்மையில் மிகவுமே பயமுறுத்தியது. அதுவும் குட்டியன் கைக்குழந்தை. அவளால் சமாளிக்க முடியுமா? அதுவும் வேலையோடு! அவள் விழிகளில் நிறைந்திருந்த மிரட்சியைப் பார்த்தான், சற்றே தள்ளி நின்று கட்டிலைப் பொருத்திக்கொண்டிருந்த, பிரணவ். உரிமையோடு அவளுக்கு ஆறுதல் சொல்ல மனதுள் பரபரப்புத் தோன்றினாலும் அதை அவள் ஏற்றுக்கொள்வாளா என்ன? இப்படித் தன்னாலியன்ற உதவிகளைத்தான் செய்யவியலும். பெருமூச்செறிந்தான் அவன்.
“கயல்…என்ன சத்தமே …இல்ல? என்ர பிள்ளைகள… நான் சுகமாகி வாற வரைக்கும் பாத்துக் கொள்வீர் எல்லா? நான் பாலன நம்புறத விட உம்ம நம்புறன், என்னைப் போலவே அவையளப் பாப்பீர்…இல்ல இல்ல அதையும் விடக் கவனமா!” காயுவிடவிருந்தது நலிந்த குரல் இருமல்களிடையே வந்தது. கண்களில் கண்ணீர். சட்டென்று சுதாகரித்த கயல் முறைத்தாள். ஓய்ந்திருக்க மாட்டாள், அதேநேரம் கலகலப்புக்கும் குறை வைக்க மாட்டாளே! அவளை அப்படிப் பார்க்கையில், அதுவும் குழந்தைகளை நெருங்க முடியவில்லையே என்ற வலியோடும் தவிப்போடும் பார்கையில் மனதைப் பிசைந்தது. அதுவே கோபத்தையும் கொண்டு வந்திட்டு. “எத்தின தரம் சொல்லியிருப்பன், கேட்டிருந்தா இப்ப…” தன்னையும் மீறிச் சொல்லிவிட்டவள், காயுவின் முகம் வேதனையில் சுருங்கவும் நிறுத்திவிட்டாள்.
“பச்! இதென்ன கேள்வி காயு? பதில் உங்களுக்கே தெரியும்.” என்றவள் பார்வை பூபாலனிடம் நகர்ந்தது. “நானே எல்லாருக்குமே இங்க சமைக்கிறன். அதெல்லாம் பெரிய வேலை இல்ல.” என்றவள், “திரும்பவும் நீங்க வருத்தத்தை வர வச்சிராதீங்க! எப்படா பழையபடி இந்த வீடு ஆகும் எண்டு கிடக்கு.” தன்னையும் மீறியே சொன்னவள், கண்ணீரோடு லாதி கட்டிப் பிடித்ததும்தான் முழுதாகச் சுதாகரித்தாள்.
அவளும் குழந்தை தானே! உண்மையில் மிகவும் மிரண்டு போயிருந்தாள். தந்தையின் சுகயீனத்தையும் தனிமைப்படுத்தலையும் ஒருவாறு ஏற்றிருந்தவள், பூபாலன் சுகமாகி வெளியில் வரவும் குதியோ குதியென்று குதித்துச் சந்தோசமிகுதியில் அவனை ஒரு வழி பண்ணிவிட்டாள். அவனோடே ஒட்டிக் கொண்டு திரிந்தாள். அதற்கு, இப்படிச் சட்டென்று முடிவு வந்ததை ஏற்க மறுத்தது, அச்சிறு உள்ளம். அதுமட்டுமா? தாயும் தனிமைப்படுத்தப்பட்டதும், தம்மை பேஸ்மென்ட் அனுப்புவதையும் பார்த்தவள் மிரண்டே போனாள்.
“அப்பா எனக்கு… எனக்கு இப்பிடி இங்க இருக்க விருப்பம் இல்ல. அம்மா மட்டும் அறைக்க இருக்க நாம மேலயே இருக்கலாம் எல்லா? ப்ளீஸ்!” ஆயிரமாம் முறையாகக் கேட்டதையே கேட்டாள்.
“செல்லம், என்ர குஞ்சுக்கு சொன்னா விளங்கும் எல்லா? அப்பிடி இருந்தா அம்மாக்கு வருத்தம் வந்தது போல உங்கட ஸ்வீட்டிக்கும் வரலாம். பிள்ளைக்கு, குட்டியனுக்குக் கூட வரலாம். அதான் …” மகளின் கண்ணீர் பார்த்துத் துடித்துவிட்ட காயு, படபடவென்று சொன்னாள்.
“செல்லம்மா, அப்பா இங்கதான் இருக்கிறன். அம்மாவும் அப்பாவும் எப்பவும் உங்களையே பாத்துக் கொண்டு இருப்பம். தள்ளித் தள்ளி நிண்டு கதைக்கலாம். நீங்க கார்டன் வந்து விளையாடலாம். உங்கட ஸ்வீட்டி கவனமாய் பாப்பா…” மகளைத் தேற்றுவதில் இறங்கினான்.
அவளோ, கயலோடு நன்றாகவே அணைந்து கொண்டு கண்ணீர் விட்டாள்.
“லாதிக்குட்டி…கண்ணைத் துடையுங்கோ! இண்டைக்கு நாம உங்களுக்கு விருப்பமான ‘பீ நட் பட்டர் பிரவுணி’ செய்வமே?” பேச்சைத் திசை திருப்ப முயன்றாள் கயல்.
“அப்ப நானும் போயிட்டு வரப் போறன். என்ன உதவி எப்ப தேவை எண்டாலும் எனக்கு அடிக்கலாம் கயல்விழி. இதில என்ர ஃபோன் நம்பர் இருக்கு, சேவ் செய்து வையும் என்ன?” என்றபடி விடைபெற்றான் பிரணவ்.
“அண்ணா…” காயுவின் குரல், நகர்ந்தவனை கயல் கையிலிருந்த பேசியில் பார்க்க வைத்தது.
“ஹேய் காயு…இதெல்லாம் ஒண்ணுமே இல்ல சரியோ. இன்னும் ஒரு கிழமை வேணும் எண்டா தரலாம், கெதியா எழும்பி வந்து அண்டைக்குச் சமைச்ச அந்த புரியாணியை செய்யும்; நானும் சாப்பிட வேணும் .” சீண்டினான். மற்றைய நாட்கள் என்றால், “என்ன பாராட்டிற மாதிரிச் சொல்லிப்போட்டுக் கடிக்கிறது போல இருக்கே!” என்று சண்டைக்குத் தயாராகும் காயு, இன்றோ கண்ணீரோடு பேச்சற்று இருந்தாள்.
“கண்டதையும் யோசியாதேயும் சரியோ?” மீண்டும் அவன் தான்.
“இல்ல, அப்பிடி ஒண்ணும் யோசிக்கேல்ல. நீங்களும் கயலும் இல்லாட்டி நாங்க என்ன பாடுபட்டிருப்பமோ தெரியா அண்ணா.” என்றவள் பார்வை கயல் முகத்தில்.
“கயல் இப்பவும் காலம் போகேல்லப்பா. இப்ப உமக்கு எங்கட அண்ணாவ இன்னும் நல்லாத் தெரியும். நல்ல முடிவா கெதியா எடும் சரியோ!” சொல்லிக்கொண்டு வரவே பிரணவ் பார்வை முறுவலோடு கயலில் பதிந்தது. அதுமட்டுமில்லை அவன் பார்வையில் நம்பிக்கையும். ‘முதல் தான் ஆர் எவர் எண்டே தெரியாது. இப்ப அப்பிடியா என்ன?’ அதுவும் இந்த கொரோனா வந்தபின்னர் அருகிலேயே காண்கிறாள். சரி என்று சொல்லுவாள் என்ற நம்பிக்கை அவனுள்.