அத்தியாயம் 12 – 2

அப்போதிருந்து கொஞ்ச முதல் வரை அவளைச் சமாதானம்  செய்விக்க அவனால் முடியாது தளர்ந்தே விட்டான்.  கயல் தான் கைக்குள் வைத்திருந்தாள். 

இப்பவும்…

மீண்டும் அவர்களையே  பார்த்திருந்தான். கயலைத் தாம் நிறையவே தொந்தரவு செய்வது விளங்கினாலும் இப்போதிருக்கும் நிலையில் அவளை விட்டால் வேறு யாரும் உதவவும் முடியாதே!  தொற்று நோய் என்று தெரிந்துமே அதைப் பொருட்படுத்தாது வந்தவளாச்சே! வராது இருந்திருந்தால்…அந்த நினைவே மிரட்டலாக இருந்தது. 

“கெதியா வந்திரடி!’ மனைவியிடம் கெஞ்சியது அவனுள்ளம். அவள் இல்லா வீடு கொஞ்சம் கொஞ்சமாக ஒட்சிசன் அற்றுப் போகும் பாதாளக் குகைபோலிருந்தது, அவனுக்கு. 

மனதைத் திடமாக வைத்திருக்க முயன்றான். அதில் வெற்றிகரமாகத் தோல்வியைக் கொடுத்திட்டு,  வைத்தியசாலை போயும் அபாயம் என்று சொல்லும் அளவில் திணறும் காயுவின் நிலை. 

பகல் முழுவதும் அவனோடு இருந்த பிரணவ், மிகவும் தேறுதல் அளித்தபடி இருந்ததில் அதுவரை தாக்காத மனைவியின் நிலை இப்போது கடுமையாகத் தாக்கிற்று.

இப்படியே இந்த நீண்டு செல்லும் இரவைக் கழிக்க முடியும் போலும் தெரியவில்லை. மகளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு போனால், அவள் முகம் பார்த்தபடி சரி இரவைக் கடந்திரலாம் என்று நினைத்தவன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் வந்து நின்றதும் புரியாது குழந்தையின் சிகையைப் பட்டும் படாதும் வருடிவிட்டபடி இருந்தாள், கயல்.

“கயல்…”

சட்டென்று திடுக்கிட்டுப் போய்த் திரும்பினாள். விழிகளில் கசிவோடு அவள் பார்த்த பார்வை முன் பிறப்பில் இவளுக்கும் இந்த வீட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்திருக்குமோ என்றுதான் அவனையும் எண்ண வைத்திட்டு.

“எவ்வளவு நேரத்துக்கு இப்படியே இருப்பீர்? நான் லாதியத்  தூக்கிக்கொண்டு போறன், தூங்கும்.”

“இல்ல இல்ல வேணாம், அவள் எழும்பினா அழத் தொடங்கிருவாள். எனக்குத் துக்கம் வரேல்ல!” சின்னக் குரலில் அவசரமாகத் தடுத்தாள்.

“அதுக்காக இப்பிடியே இருக்கப் போறீரோ!” மகளைத் தூக்க முனைந்தான்.

 

“வேணாம், ப்ளீஸ்! அவள் காயுவ கேட்டு…அழத்தொடங்கிருவாள். கொஞ்ச நேரம் தூங்கட்டும்.  கொஞ்சத்தில்  பெட்டுக்கு  மாத்திப்போட்டுத் தூங்குறன்.” பிடிவாதமாக மறுத்தவள்,  மகளைத் தூக்க முனைந்தவன் கரங்களை அப்பால் விலக்கியும் விட்டாள். 

காயு வைத்தியசாலை சென்றதிலிருந்து பூபாலன் என்ன மனநிலையில்  இருக்கிறான் என்று பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள். கொஞ்சநேரம்  சரி தூங்கட்டும் என்று நினைத்தே லாதியியைத் தூக்க வேண்டாம்  என்று மறுத்தாள்.

அப்போதுதான் அவன் தோற்றமும் கருத்தில் பதிந்தது. 

“உங்களுக்கு… நீங்க  ஓகே தானே?  கண்ணெல்லாம் சிவந்து முகம் ஒரு மாதிரிக்  கிடக்கு. வருத்தம் ஒண்ணும் இல்லையே! உங்களுக்குச் சொல்லத் தேவையில்ல. கொஞ்சம் கவனிச்சுக் கொள்ளுங்க, இப்பத் தான் வருத்தம் வந்து சுகம் வந்திருக்கு. பிறகு திரும்ப உங்களுக்கும் ஏதாவது ஏண்டா நான் இவையோடு…எப்படி…” மெல்லிய குரலில் என்றாலும் படபடவென்று சொன்னவள் கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீர்  வழிந்தது.

“எனக்கு ஒண்ணும் இல்ல கயல், குருவி தலையில பனங்காய் வைத்தது போல உமக்கு நிறையவே பொறுப்புத் தந்திட்டம் என்ன? அதும் பழக்கமே இல்லாத பொறுப்பு! ஒண்டுக்கும் யோசியாதேயும். எப்பிடியும் ரெண்டு நாளில காயு வந்திருவா. எங்கள விட்டுட்டு அவளால இருக்கேலாது.” அவளுக்கு ஆறுதல் சொன்ன அதே கையோடு, 

“எனக்கு…பிள்ள சரி  பக்கத்தில இருந்தா…” தடுமாறினான். “கொஞ்சம் பரவாயில்லாமல்  இருக்கும் கயல்.” இறங்கிவிட்ட குரலில் சொல்லி முடித்துவிட்டான். தன் நெஞ்சத்துள் ஓடும் நடுக்கம் பற்றி, அது கொடுக்கும் அழுத்தம் பற்றி எல்லாம் அவளிடம் சொல்ல வாய் வரவில்லை. பிரணவ்விடம் கூட முழுமையாகப் பகிர முடியவில்லை. மனதில் என்ன நினைத்தாலும் அப்படியே கொட்டிவிட அவனுக்கு அவன் மனைவி காயுதான் வேண்டும். இப்போதோ, மகள் முகம் பார்த்தாகினும் அதைக் கட்டுப்படுத்தலாம் என்றெண்ணினான்.

கயல் அமைதியாக இருந்துவிட்டாள். மெல்ல அலுங்காது மகளைத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டான், பூபாலன். “அம்மா…” சிணுங்கினாள், லாதி.

“ச்சு ச்சு… ச்சு ச்சு ” தன்னையும் மீறி கயல் வாய் சொல்ல, “தூங்கும் கயல். பிரணவ் திரும்ப திரும்ப சொல்லிட்டு போறான், உமக்கு ஏதாவது எண்டா என்ன துலச்சிப்  போடுவான்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு மகளோடு நகர்ந்தான், அவன்.

அவர்கள் மறையும் வரை பார்வை தொடர இருந்தவள் மனதில் பூபாலன் சொல்லிச் சென்றது மீண்டும் எதிரொலித்தது. அவளையும் அறியாது மென் முறுவல் இதழ்களைத் தொட்டுச் சென்றது. 

இவர்கள் மேலே வந்ததில் அவனுக்கு அதிருப்தி என்பதும் அதன் பின்னால், தனக்கும் கொரோனா வந்துவிட்டால் என்ற பதற்றம் இருந்ததையும் பூபாலன் போலவே இவளும் அறிவாள்.

 ‘பிழை சொல்ல முடியாத குணம், அன்பான அக்கறையான நல்ல மனிசன் தான்’ அவன் மீதான எண்ணம் இவள் மனதில் சத்தமேயில்லாது  பதிந்துவிட்டது.

மறுநாளிலிருந்து வேலை வேறு ஆரம்பிக்கின்றது. வீட்டிலிருந்தபடியே செய்வதென்றாலும் குழந்தையையும் கவனித்துக்கொண்டு, என்னதான் லாதி  வளர்ந்த பிள்ளை, பூபாலன் வேறு இருக்கிறான் என்றாலும்… அவளுள் மலைப்பே ஓடியது. 

‘காயு வரும் வரை எப்படியும் சமாளிக்கத்தானே வேணும்?’ என்ற எண்ணத்தோடு மெல்ல எழுந்து ரெஸ்ட் ரூம் போய்விட்டு வந்தாள். சத்தமேயில்லாது வெளியில் எட்டிப் பார்க்க, பூபாலன் அறை வெளிச்சம் உறக்கத்திலிருந்தது. 

‘லாதி பிரச்சினையில்லாது தூங்கிட்டாள்’ நிச்சயம் செய்தபடி வந்து குழந்தையினருகில் தலை சாய்த்தவள் பார்வை, அங்கிருந்த அவள் கைபேசியில்.

 

 

error: Alert: Content selection is disabled!!