சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.
அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி.
அவரவருக்கு அவரவர் நியாயம் என்பது போன்று, அவருக்கு அவரின் மகளின் வாழ்க்கை ஒன்றே அந்த நிமிடத்தில் முக்கியமாகத் தென்பட்டது. அதற்கு எது தேவையோ அதை மிக வேகமாகச் செய்தார்.
செய்யத் தயங்கிய லதாவையும், சித்ராவின் எதிர்காலத்தின் மீதான பயமும், கலங்கும் கண்களைத் துடைத்தபடி நின்ற லக்ஷ்மியின் நிலையும் செய்ய வைத்தது.
எல்லாம் முடிந்து மயக்கத்தில் கட்டிலில் கிடந்த மகளின் கலைந்திருந்த முடிகளை ஒதுக்கியவரின் விழிகளில் கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.
இனியாவது உன் வாழ்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சந்தோசமாக அமையட்டும் கண்ணம்மா.. என்று எண்ணியது அந்தத் தாய்மனம்.
மகள் தாய்மை அடைந்திருக்கிறாள் என்கிற செய்தி ஒரு தாய்க்கு எவ்வளவு உவப்பானது?
மகளுக்குத் திருமணம் நடந்து அதன்பின் இப்படியொரு நிகழ்வு நடந்திருக்க சந்தோசத்தோடு ஊரையே கூட்டிக் கொண்டாடியிருப்பாரே!
எல்லாம் முறை தவறிப் போனதில், இப்படி ஒரு பாவகாரியம் செய்யவேண்டி வந்துவிட்டதே என்று ஊமையாக அழுதது அவர் மனம்!
ஆனாலும், அவள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்யலாம் என்றும் எண்ணிக்கொண்டார்.
அவரது கைபேசி ஒலிக்கவும், அழைப்பது கணவர் என்று அறிந்ததும், நடந்ததைச் சொன்னால் என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பயம் நெஞ்சைக் கவ்வ, மகள் எழுந்துவிடப் போகிறாள் என்று எண்ணி அதை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தார் லக்ஷ்மி.
மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. நன்றாகத் தூங்கிவிட்டோம் போலவே என்று எண்ணிக்கொண்டு எழ முயன்றவள், தன் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள்.
மெல்லிய பதட்டத்தோடு விழிகளைச் சுழற்றியவளுக்கு இருக்கும் இடத்தின் வித்தியாசம் புரிபட, உடல் வேதனையையும் பொருட்படுத்தாது வேகமாக எழுந்தமர்ந்தவள், கலவரம் நிறைந்த குரலில், “அம்மா!” என்று அழைத்தாள்.
அவளின் குரலில் உள்ளே ஓடிவந்த தாயையும் தந்தையையும் பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள் எதுவோ பிசைந்தது. அழுது வீங்கிய முகத்தோடு தாயையும், கடுத்த முகத்தோடு தந்தையையும் கண்டவளுக்கு, ஏதோ விபரீதம் நடந்துவிட்டதும், அது தனக்குத்தான் என்பதும் விளங்க, “என்னம்மா.. எனக்கு என்ன நடந்தது?” என்று பதறிக் கேட்டவளின் கைகள் தன் பாட்டுக்கு வயிற்றைத் தடவின.
துணிவோடு செய்ததை வாய்விட்டுச் சொல்லமுடியாமல் அவள் தாயார் தடுமாறி நிற்க, மனைவியைக் கடுமையாக முறைத்துப் பார்த்த சந்தானம், “கேட்கிறாள் இல்லையா. சொல்லு! நீ செய்த மகா நல்ல காரியத்தை உன் வாயாலேயே சொல்லு!” என்றார் கடுமையான குரலில்.
“என்னப்பா, அம்மா என்ன செய்தார்கள்? நான் ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறேன்?” என்றவளுக்கு, தாய் மதியம் சொன்னது நினைவிலாட, “என்.. என் குழந்தைக்கு ஏதுமா?” என்றாள் குரல் நடுங்க.
ஊமையாக நின்ற பெற்றவர்களின் நிலையைப் பார்த்து நடந்தது அதுதான் என்று உள்ளம் அடித்துச் சொல்ல, ஐயோ அப்படி இருக்கக் கூடாது என்று மனம் பதற, கண்களில் கண்ணீர் வடியப் பெற்றவர்களை பார்த்தவளுக்கு நடந்த விபரீதம் மிக நன்றாகவே புரிந்தது.
புரிந்த நொடி அவளை விட்டு அவள் உயிரே பிரிந்தது போன்று வலித்தது. “ஏன்மா இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டுமுடிக்க முதலே பெரும் கேவல் வெடிக்க, முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
அவள் செய்த தப்புக்குக் குழந்தைக்குத் தண்டனையா? அவள் வயிற்றுக்குள் பத்திரமாக இருந்த பூச்செண்டு பிடுங்கி எறியப்பட்டு விட்டதா?
இந்தக் குழந்தை உருவாகாமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தாளே, அதில் கோபம் கொண்டுவிட்டதா அவள் செல்வம்?
குழந்தை உருவானதை எண்ணி ஒரு நிமிடம் தன்னும் அவள் மகிழவில்லையே, அதனால் ஆத்திரமோ?
கற்பிழந்த தாயின் முகத்தைப் பார்க்க என் பிள்ளைக்குப் பிடிக்காமல் போய்விட்டதோ? அதுதான் என் முகம் பாராமல், என் கைகளில் தவழாமல், என் உதிரத்தைப் பாலாக அருந்தாமல் சென்றுவிட்டானோ? அல்லது சென்று விட்டாளோ?
நினைக்க நினைக்க நெஞ்சு வெடிக்கும்போல் வலித்தது. கதறியவளின் நிலை பொறுக்கமுடியாமல், “சித்து, அழாதேம்மா.. நீ இப்போது இருக்கும் நிலையில் அழக்கூடாது..” என்ற தாயின் குரலில் ஆவேசமாக எழுந்தாள் சித்ரா.
“ஏன் அழக்கூடாது? அழுதால் என்ன செத்துவிடுவேனா? செத்தே போகிறேன். என்னையும் சேர்த்துக் கொன்றிருக்க வேண்டியதுதானே. எதற்கு என் பிள்ளையை அழித்தீர்கள்?”
மகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார் லக்ஷ்மி. அதைச் செய்யும் வரை ஒருவித ஆவேசத்தோடு செய்து முடித்தவரை இப்போது அவர் மனதே குத்தியது. போதாக்குறைக்கு நடந்ததை அறிந்த கணவர் காட்டிய கோபத்தில் நடுங்கிப் போனார்.
அதே கோபத்தோடு மகளும் கதற, “உன் நல்லதுக்குத்தான் சித்து..” என்றார் மெல்ல.
“என்ன என் நல்லதுக்கு? நான் கேட்டேனா உங்களிடம்? என் குழந்தை உங்களுக்கு என்ன பாவம் செய்தது? கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் எப்படிச் செய்ய முடிந்தது உங்களால்?”
“ஏய்! என்னடி? அம்மாவிடம் என்ன பேச்சுப் பேசுகிறாய்? இரக்கம் இருக்கப் போய்த்தான் இப்படிச் செய்தேன். உன் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டாமா? எனக்கு என் பிள்ளையின் வாழ்க்கை முக்கியம்!” தான் செய்தது பிழை என்பது புரிந்தாலும் மகளின் கேள்விகள் அவருக்குக் கோபத்தை வரவழைத்தன.
“உங்களுக்கு உங்கள் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கியம்! என் பிள்ளையைக் கொல்ல நீங்கள் யார்? நீங்கள் அதன் அம்மம்மா அம்மா. தன்னைக் கொன்றது தன் அம்மம்மா என்று அந்தக் குழந்தை எவ்வளவு அழுதிருக்கும். உங்கள் பேரக்குழந்தையை நீங்கள் அழித்திருக்கிறீர்கள்!” என்றதைக் கேட்டதும் லக்ஷ்மிக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
என் பேரக்குழந்தையா? அதற்கு மேல் அவரால் சிந்திக்க முடியவில்லை.
அதுவரை ‘கரு’வாக மட்டுமே இருந்த அது, அவர் மகளின் வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் என்பது மட்டுமே அவர் கருத்தில் இருந்தது.

