அவளைப் பார்வையால் துளைத்தபடி, “ஒன்றும் செய்யவேண்டாம் என்றால்?” என்று புருவங்களைச் சுருக்கியவர், “அங்கே, ஆஸ்பத்திரியில் நானும் அம்மாவும் பேசிக்கொண்டதைக் கேட்டாயா?” என்று கேட்டார்.
நிலம் நோக்கியிருந்த அவள் தலை ஆமென்பதாக ஆடியது.
“இன்னும் அவனைக் காக்கத்தான் நினைக்கிறாய் இல்லையா?”
“இல்லைப்பா.. அது..” என்றவளின் குரலில் மறுப்புக்கான திடம் குறைவாகவே இருந்தது.
ஒன்றும் சொல்லாது மகளையே பார்த்தார் சந்தானம்.
அவளும் அவரைப் பார்க்க, அவர் தலை மறுப்பாக ஆடியது. “இல்லை சித்து. அது சரிவராது. நீ அவனைத் திருமணம் செய்ய நினைப்பதில் எனக்கும் சம்மதமே. நான் எப்படி என் பிள்ளைக்கு நல்லவன் ஒருவன் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படித்தான் ஒவ்வொரு பெற்றவர்களும் நினைப்பார்கள். அதனால் தான் அவனை மடக்கி என்னிடம் வரவைத்து அவனோடு உனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறேன். நீ பேசி அவனைச் சம்மதிக்க வைத்தாலும் திருமணத்திற்குப் பிறகும் அவன் உன்னிடம் வாலாட்டக் கூடாது. ஒருமுறை ஏமாந்த நான் மறுமுறையும் ஏமாறத் தயாராக இல்லை. அதனால் அவன் கடைகளை நான் வாங்கப் போவது உறுதி.” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் மகளின் விழிகளில் தெரிந்த இரைஞ்சலைக் கண்டு பேச்சை நிறுத்தினார்.
பின்னர் தொடர்ந்து, “வேண்டுமானால் வங்கி லோனிலும், அவன் செருப்புக்களைக் கொள்வனவு செய்யும் இடங்களிலும் கைவைக்காமல் இருக்கிறேன். அதுவும் நீ அவனுடன் கதைத்துவிட்டு உன் முடிவை என்னிடம் சொல்லும் வரைதான். இந்தத் திருமணம் நடந்தால் அவனுக்கு நல்லது. இல்லையானால் அவன் நடுத்தெருவுக்கு வருவது உறுதி.” என்றார் உறுதியான குரலில்.
தந்தை அதுவரை இறங்கி வந்ததே போதுமானதாக இருக்க, “சரிப்பா..” என்றவள், அவரிடம் சொல்லிக்கொண்டு ரஞ்சனின் கடைக்குக் கிளம்பினாள்.
அங்கே கடை வாசலில் இறங்கியவளால் என்ன முயன்றும் அன்று நடந்ததை ஒதுக்கவே முடியவில்லை. அன்று அவள் இங்கு வராமல் இருந்திருக்க, அவனைக் காணாமல் இருந்திருக்க, அந்த அசம்பாவிதம் நடந்திராமல் இருந்திருக்க இன்று அவளுக்கு இந்த நிலைமை வந்திராதே!
ஆனால், கடந்த காலத்தையும் நடந்து முடிந்தவைகளையும் திரும்ப வாங்கும் வல்லமை இந்த உலகத்தில் யாருக்கும் இல்லையே!
வேதனைப்பட்ட மனதை அடக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்தாள் சித்ரா.
அவளைக் கண்டதும், அவளை வாடிக்கையாளர் என்று நினைத்து, “வாங்க அக்கா வாங்க. என்ன மாதிரியான செருப்புப் பார்க்கப் போகிறீர்கள்.” என்று வரவேற்றான் ஒரு இளைஞன்.
அவன் புதிதாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறான் என்று புரிந்தது. ரஞ்சனைத் தேடி விழிகளைச் சுழற்றியவள், அவனைக் காணாது, “ரஞ்சன் எங்கே?” என்று அதட்டலாகக் கேட்டாள் சித்ரா.
அந்த இளைஞனின் முகத்தில் கவனம் தோன்ற, “நீங்கள் யார்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான் அவன்.
“கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்!”
பார்வை வேகமாக கடையின் உட்பக்கமாகச் சென்று மீள, “அவர் இல்லை..” என்றான் அவன்.
அவன் பார்வையிலேயே தன் கேள்விக்கான பதில் தெரிந்துவிட அவனை முறைத்துவிட்டுக் கடையின் உள்ளே விறுவிறு என்று நடந்தாள் சித்ரா.
அவள் செய்யப்போவதை நொடியில் கணித்து ஓடிவந்து கையை நீட்டி மறித்தான் அவன். “முதலாளி இல்லாத நேரத்தில் அந்நியர்களைக் கடைக்குள் விடமுடியாது.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ‘பளார்’ என்று அறை விழுந்தது அவன் கன்னத்தில்.
ஆட்காட்டி விரலை நீட்டிப் பத்திரம் காட்டியவள், “கையைக் காலை நீட்டி மறித்தாய் என்று வை உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன் ராஸ்கல்!” என்றவள், கன்னத்தைப் பற்றியபடி அதிர்ந்து நின்றவனைக் கடந்து உள்ளே சென்றாள்.
அங்கே உள்ளறையில், அன்று வெறுமையாக இருந்த மேசையில் இன்று ஒரு மடிக்கணணி வீற்றிருக்க அதிலே மூழ்கியிருந்தான் ரஞ்சன்.
யாரோ வந்த அரவம் உணர்ந்து, “என்ன சதீஸ்..” என்றபடி நிமிர்ந்தவன் அங்கே சித்ராவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“யாழி..!” உதடுகள் உச்சரித்தாலும் வாடி வதங்கி, கோலம் கெட்டு நின்றவளைக் கண்டு அதிர்ந்தான்.
ஒவ்வொரு அங்க அசைவிலும் துள்ளும் உற்சாகமின்றி, இதழ்களில் மிளிரும் புன்னகை இன்றி, எப்போதும் பளிச்சிடும் அந்த விழிகளில் வெறுமை நிறைந்து வழிய, உடல் மெலிந்து, உருக்குலைந்து நின்றவளைப் பார்க்க முடியவில்லை அவனால்.
ஆனாலும், கடைத் திறப்புவிழா அன்று நடந்தவைகள் நினைவிலாட அவன் முகம் இறுகியது. “இங்கே எதற்கு வந்தாய்?”
“என்னைக் காதலித்து ஏமாற்றிய கயவனைப் பார்க்க வந்தேன்.” என்றாள் அவளும் மரியாதையைக் காற்றில் பறக்கவிட்டு.
“இங்கே யாரும் உன்னை ஏமாற்றவும் இல்லை. அப்படியான பழக்கமும் இல்லை!” என்றான் அவன் அலட்சியமாக.
“ஓ..! நீங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை? அந்தப் பழக்கம் உங்களுக்கு இல்லை! எங்கே இதை என் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள் பார்ப்போம்!” என்று அவள் ஏளனமாகக் கேட்டபோது, அந்தக் கேள்வியில் இருந்த உண்மையில் அவன் முகம் கன்றிக் கருத்தது.
பதில் சொல்ல முடியாமல் நின்றவனிடம், “என்னிடம் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வேறொருத்தியைக் கட்டப் போகிறேன் என்று சொன்னவனுக்கு வேறு என்ன பெயர்?” என்று அவள் கேட்டபோதும் சட்டெனப் பதில் சொல்ல முடியவில்லை அவனால்.
“நானா உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னேன்? அல்லது உன் பின்னால் சுற்றினேனா? நீ விரும்புவதாகச் சொன்னாய், நான் மறுத்தேன். நீ விடாமல் தொந்தரவு தந்தாய் அதனால் சம்மதித்தேன்.” என்றான் அவன் வெகு அலட்சியமாக.
“இதயரஞ்சன் என்று பெயரை வைத்துக்கொண்டு இதயமே இல்லாமல் கதைக்கும் உங்கள் நாக்கு அழுகித்தான் போகும்!” என்றாள் ஆத்திரத்தில் உடல் நடுங்க.
“உன் சாபம் பலிக்கிறபோது அதைப் பார்த்துக்கொள்ளலாம்.” என்றான் அவன் அப்போதும் அலட்சியமாக.
விழிகள் அவனை வெறிக்க, “அப்போ நீங்கள் என்னைக் காதலிக்கவே இல்லையா?” என்று கேட்டாள் சித்ரா.
அவளைப் பாராமல், “இல்லை!” என்றான் ரஞ்சன் பிசிரற்ற குரலில்.
“பிறகு எதற்கு என்னோடு பழகினீர்கள்? அன்று.. அன்று அப்படியெல்லாம் நடந்தீர்கள்.” என்று கேட்டவளுக்குத் தன்னை நினைத்தே அசிங்கமாக இருந்தது.
அன்று இதே அறையில் வைத்து நிறைவாக உணர்ந்த ஒன்றை, அவர்களின் காதலின் சங்கமமாக நினைத்த ஒன்றை இன்று அசிங்கமாக அருவருப்போடு உணர்ந்தாள்.

