அத்தியாயம் 13 – 2

அதுவும் கையில் குழந்தையும். குழந்தை பயந்து போனான் போலும் வீரிட்டு அழுதான். ஒரே பாய்ச்சலில் வந்து கயல் தலை நிலத்தில் படமுதல் தாங்கிக் கொண்ட பிரணவ் பார்வை, அருகில் இருந்தும் மரம் போலிருக்கும் பூபாலன் முதுகை கோபத்தோடு தொட்டுத் திரும்பியது. 

அவன் முன்னால் ஐபாட் இருப்பது இலேசாகத் தெரிய, காயுவோடு கதைக்கிறான் என்று புரிந்திட்டு.

 

“இவன! மனிசியோட கதைக்கேக்க மற்றவை கண்ணுக்க தெரியாயினம் என்னடா உனக்கு? அப்பவும் இவை பேஸ்மென்ட்டுக்க இருக்கட்டும் எண்டு எத்தின தரம் சொன்னன். நீதான் கேட்கேல்ல. இப்ப கயலுக்கும் வந்திட்டுப் போல! கடவுளே!” தன் பாட்டில் அரட்டியபடி கயல் தலையை மெதுவாக நிலத்தில் கிடத்தினான்.

“பூபாலன் இங்க பார், கயல் மயங்கிட்டா, பிள்ளைகள் கத்தி அழுகினம். உனக்குக் காதும் கேட்காமல் போய்ட்டா?” குழந்தையோடு எழுந்தோடினான். சற்றே தள்ளியிருந்த ‘பிளேபென்’னில் குழந்தையை விட்டுவிட்டு தண்ணீரோடு திரும்பி வந்து கயலை எழுப்ப முனைய முதல், தகப்பன் மடியிலிருந்து கயலுக்கு அருகில் பாய்ந்திருந்தாள், லாதி.

“ஸ்வீட்டி…நோ…நோ…அம்மா…ஸ்வீட்டி!” சத்தமாக அழுதபடி தன் சின்னச்சிறு கரத்தால் கயல் கன்னத்தைப் பட்டுப் பட்டென்று தட்டினாள். சிறுமியின் நெஞ்சம் கிடந்து நடுங்கியது.

“லாதிம்மா ஏனடா அழுகிறீங்க? அது ஒண்டும் இல்ல, உங்கட ஸ்வீட்டி கடைசியா எப்ப ஒழுங்கா சாப்பிட்டாவோ தெரியா. சொல்லுறதும் கேட்கிறேல்ல” எரிச்சலையும் கோபத்தையும் மறைக்க முடியவில்லை. 

‘சரி, அன்பில ஒருவர் மற்றவருக்கு உதவுறதுதான். அதுக்காக ஒரு வரைமுறை இல்லையா என்ன? தன்னையே கவனிக்க முடியாதளவுக்கு எல்லாப் பொறுப்பையும் தன்ர தலையில தூக்கிப் போட்டுக் கொள்ளவா வேணும்?’ கயலில் உண்டான எரிச்சல் நண்பன் புறம் கோபமாகப் பாய்ந்தது. 

‘இவையளுக்கும் அறிவு வேணாம். இவ்வளவு களேபரம் நடக்குது அசையிறான் இல்லையே’ சினந்தவனுக்கு அப்போதுதான் சுற்றத்தில் வேறுபாடு உறைத்தது. வைத்தியசாலையில் காயுவுக்கு ஏதாவது கடுமையோ என்றளவுக்கு எண்ணம் ஓடினாலும், ‘முதல் இவள எழுப்ப வேணும்.’ கழுத்தில் தொட்டுப் பார்த்தான். ‘காச்சல் எல்லாம் இல்ல, கொரோனாவா இராது.’ மனம் ஆறுதல் கொண்டது.

“கயல்… கயல்… எழும்பும்.” சற்றே பலமாகத் தட்டிவிட்டானோ! முகம் சுழித்தபடி மெல்ல விழிகளை மலர்த்த முயன்றவள் முயற்சியில்  முந்திக்கொண்டு குபுக்கென்று வழிந்திட்டு, கண்ணீர்.

விசுக்கென்று  எழுந்தமர்ந்தவள் பிரணவ் பிடியில் இருந்த லாதியை இழுத்து இறுக அணைத்தபடி, “பிரணவ்!” கேவியவள் வார்த்தைகள் வராது தடுமாறினாள்.

முதல் முதல், அவனை, அவள் இப்படி விளித்திருக்கிறாள். அதில் ஒரு சொந்தமுள்ளதாக மனதில் பட்டு அவள் மீது விருப்பம் வளர்த்து வைத்திருந்த உள்ளம் மகிழ்ந்து போயிற்று. என்றாலும் தாமதியாது, “என்ன நடந்திட்டுக் கயல்? சாப்பிடேல்லையா? நல்ல காலம் தலை அடிபடேல்ல. அதும் கையில் பிள்ளையோட…”

அவன் சொல்லிக் கொண்டிருக்கவே விருட்டென்று எழுந்துகொண்டாள், கயல். அப்போதும் தலை கனத்தது. உடல் பஞ்சுபோல மிக மிக இலேசாகவிருந்தது. அதையெல்லாம் யோசிக்க முடியவில்லை. லாதியையும் இழுத்துக்கொண்டு ஓடினாள்.

தடுமாறியபடி அவள் போகும் வேகம் பார்த்து, “ஏய் கயல் திரும்ப  விழவா?” அவள் பின்னால் ஓரடி வைத்தவன் நின்றான். நெஞ்சம் உணர்ந்த அதிர்வோடு நண்பனை நெருங்கியவன் பார்வை ‘ஐபாட்’டைத் தொட்டது. அது உயிரிழந்திருந்தது. 

இப்போ அவனுள் நடுக்கமோடியது. தீதாக எதுவுமே நடந்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு, பாசமும் உரிமையுமாக, “பிரணவ் அண்ணா!” என்றழைப்பவள் குரல் உள்ளத்தில் ஒலிக்க, நண்பன் தோள் பற்றி உலுக்கியபடி அவன் முகம் பார்த்த பிரணவ் இதயம், நின்று தடுமாறி எக்குத்தப்பாகத் துடித்தது.

“என்…ன?” அவனால் அதற்கு மேல் எதையும் கேட்க முடியவில்லை. தொண்டை உலர்ந்து போயிற்று. இரத்தச் சிவப்பாக்கியிருந்த விழிகளும் புடைத்த நெற்றியுமாகப் பார்த்தான், பூபாலன். அவன் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. கைகள் இரண்டையும் இறுக்கப் பொத்தி இருந்ததில் நரம்புகள் புடைத்து நின்றன. 

“பூபாலன்…” மீண்டும் அவன் தோள்களில் அழுத்தத்தோடு பற்றி உலுக்கினான் பிரணவ். மறுநொடி, விசுக்கென்று எழுந்தவன் அதேவேகத்தில் நகர்ந்து சென்று சுவரில் மாட்டியிருந்த பெரிய எல் இ டி திரையில் ஓங்கிக் குத்தினான்.

கலீரென்ற சத்தத்தோடு அது உடைந்து விழ, அதேவேகத்தில் திரும்பி அருகில் இருந்த கண்ணாடி அலுமாரியில் குத்த முனைந்தவனை பின்னால் இருந்து பிடித்திழுத்து நிறுத்தப் பார்த்து, அவனோடு சேர்ந்து நிலத்தில் விழுந்தான், பிரணவ்.

“டேய் டேய்! இங்க, பார் பூபாலன்…” அதைவிட்டு வேறெந்த  வார்த்தையும் வரவில்லை, பிரணவுக்கு. தன் பலம் கொண்ட மட்டும் நண்பனை அடக்கப் போராடினான். 

“காயுயூயூ…ஓஓஓ!” பூபாலனின் கதறல் அந்தச் சுற்றத்தையே நிறைந்திட்டு, விடாது கதறினான்; அழகிய வாழ்வை அந்தரத்தில் விட்டுவிட்டு அவசரமாகச் சென்றுவிட்ட உயிர், அவன் வலி பார்த்து வந்துவிடாதா என்ற நப்பாசை போலும். 

ஓடிச் சென்ற வேகத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கி ஒருகையால் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அங்கேயே மடிந்தமர்ந்த கயல், மறுகையால் இறுக லாதியைப் பிடித்துத் தன்னோடு சேர்ந்தணைத்துக் கொண்டாள். சிறுமியின் உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. அதிலும் பூபாலன் ஆவேசம் பார்த்து அவன் குரலோடு அவள் குரலும் சேர்ந்து கொண்டது.

 

“இல்ல செல்லம் இல்ல.” 

வேதனையில் மூர்க்கமாகக் கதறும் தகப்பனைப் பார்க்கவிடாது தன்னுள் அவள் முகத்தை மறைக்க முயன்று தோற்றாள், கயல்விழி. அவள் இதயம் வெடித்து விடும் போல் வலித்தது.  அந்தப் பெரிய வரவேற்பறையில் மூச்சு முட்டியது. முழுப்பலத்தையும் சேர்த்து எழுந்தாள். அதேவேகத்தில், தகப்பனிடம் செல்ல முயன்ற லாதியையும் இழுத்துக்கொண்டு வெளியில் இறங்கி விரைந்தாள். அவர்களின் தோட்டத்தின் கடைசியில் ஒரு சிறு தோட்டவீடு அமைத்திருந்தார்கள், தோட்டச்  சாமான்கள் வைத்திருக்கவென்று. ஓடிய வேகத்தில் அதனுள் புகுந்தவள் அதன் மூலையில் கிடந்த பழைய இருக்கையில் அப்படியே புதைந்து விட்டாள். அவள் மடியில் சுருண்டு விட்டாள் லாதி. நெஞ்சோடு குழந்தை. குளிரெடுத்தது கயலுக்கு. நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. பூபாலனின் கதறல் கேட்காது செவிகளைப் பொத்த முயன்றாலும் முடியாது கட்டுப்பாடில்லா வழியும் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள், அவள்.

error: Alert: Content selection is disabled!!