என் சோலைப் பூவே 23 – 2

அதே குரலில், “சித்ரா பாவமடா. நான் பார்க்க வளர்ந்த பெண். வாய்த் துடுக்கு இருந்தாலும் எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா அவள். அவளைப் போய் ஏமாற்றி இருக்கிறாயே? எப்படி மனம் வந்தது உனக்கு? உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் தானே. அவளுக்கு யாராவது இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டார் அவர்.

 

பணப் பிரச்சினை அவருக்குத் தெரியாது என்பதில் ஆசுவாசமாக உணர்ந்தபோதும், அவரின் எந்தக் குற்றச் சாட்டுக்குமே பதில் சொல்லாது, விழிகள் இடுங்க, “இதை உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டான் ரஞ்சன்.

 

“யார் சொன்னால் தான் என்ன? நான் சொன்னதில் பொய் இல்லையே. பிறகு என்ன?” என்று சூடாகக் கேட்டவர், “சந்தானம் அண்ணாவின் கடையில் வேலை செய்தாலும் அவரின் சகோதரன் போலத்தான் நான். நான் மட்டுமல்ல, அந்தக் கடையில் வேலை செய்யும் எல்லோரையும் அவர் அப்படித்தான் பார்க்கிறார்.” என்றவரின் பேச்சில், அப்படியான மனிதருக்கு நீ கேடு செய்துவிட்டாய் என்கிற மறைமுகக் குத்தல் இருந்தது.

 

“தனியாக ஒரு கடையை ஆரம்பித்து நீ முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான். ஆனால், சித்ராவின் வாழ்க்கையையே நீ அழிப்பாய் என்று தெரிந்திருக்க அதைச் சொல்லியே இருக்கமாட்டேன்.”

 

அவனுக்கு எப்போதும் நல்லதையே செய்யும் கண்ணன் அண்ணாவா இப்படி எல்லாம் பேசுகிறார் என்று அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தான் ரஞ்சன்.

 

அவரோ, “உன்னை சந்தானம் அண்ணா இப்படியே விட்டுவிடுவார் என்று மட்டும் நீ கனவிலும் நினையாதே.” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, “நீ நடத்தும் கடைகளுக்கு யார் முதலாளி?” என்று கேட்டார்.

 

இதென்ன கேள்வி என்பதாக அவரைப் பார்த்தவன், “நாதன் அண்ணாவும்..” என்று சொல்கையிலேயே கண்ணனின் தலை மறுப்பாக ஆடியது.

 

“இல்லை! உன் கடைகளின் முதலாளி இப்போது சந்தானம் அண்ணா!”

 

அதைக் கேட்டதும் மீண்டும் அதிர்ந்துபோனான் ரஞ்சன்.

 

“என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?” என்கிறார் ஏளனமாக.

 

“நீ இந்த டவுனுக்கு வேலைக்கு வந்து எவ்வளவு காலம் இருக்கும்? ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்கள்? ஆனால் அவர், எனக்குத் தெரிந்தே இருபத்திஐந்து வருடங்களாகக் கடை நடத்துகிறார். அவர் ஆலமரம்டா. சிறு செடி நீ அவரை ஆட்டிப் பார்க்கிறாயா? மரியாதையாக சித்ராவையே கட்டிக்கொள். இல்லையானால் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போவாய்.” என்று கோபமாகச் சொன்னவர், அதற்கு மேலும் அவனோடு நின்று கதைக்காது சென்றுவிட்டார்.

 

அதைக் கேட்டவனுக்கு இப்போது அதிர்ச்சியை விட ஆத்திரமே மேலோங்கி நின்றது.

 

இதுதான் அவளது மிரட்டலா? கடையை அவள் அப்பா வாங்கினால் நான் பயந்து விடுவேனா? பார்க்கலாம், அவளா நானா என்று மனம் ஆவேசம் கொள்ள வீட்டுக்குச் சென்றவனைக் கண்டதும் நித்யா வெறுப்போடு பார்த்தாள்.

 

மனதில் சித்ராவின் மேல் இருந்த கோபத்தில் அதைக் கவனியாது, தன்னறைக்குள் புகுந்து கொண்டான். கூண்டுப் புலியாக அறைக்குள் நடை பழகியவனுக்கு, ஏன் என்று இல்லாமலேயே கோபம் கோபமாக வந்தது.

 

தன்னை உடன்பிறவாத தம்பியாக மதிக்கும் கண்ணனின் பேச்சு அவனைப் பெரிதாகக் காயப் படுத்தியது. அதோடு, அவளா நானா பார்க்கலாம் என்று மனம் சவால் விட்டபோதும், தன்னுடைய முன்னேற்றத்துக்கு மீண்டும் ஏதாவது தடைக்கல் வந்துவிடுமோ என்று ஆழ்மனது தடுமாறியது.

 

சந்தானத்தால் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கோபம் எழுந்த அதேவேளை ஏதும் செய்து விடுவாரோ என்கிற அச்சமும் சேர்ந்தே வந்தது.

 

ஒரு நிலையில் நிற்க முடியாமல் தடுமாறித் தடதடத்த மனதோடு தனிமையில் இருக்க முடியாது அறையை விட்டு வெளியே வந்தவன், “அம்மா! சாப்பாட்டைப் போடுங்கள்..” என்றபடி மேசையில் சென்று அமர்ந்தான்.

 

எப்போதும் அவன் அழைத்ததும் ஓடிவந்து பரிமாறும் தாய் உடனேயே வராதது கூட இன்னும் எரிச்சலைக் கிளப்ப, “அம்மா!!” என்றான் சத்தமாக.

 

அவனுக்குக் குறையாத கோபத்தை முகத்தில் தேக்கியபடி, “என்னடா?” என்று கேட்டபடி வந்தார் அவர்.

 

அவரின் கேள்வியில் இன்னுமே சினம் உண்டாக, “என்ன என்னடா? ஒரு மனிதன் சாப்பிட வந்தால் சாப்பாடு போடமாட்டீர்களா? உள்ளே இருந்து என்ன செய்கிறீர்கள்?” என்று எரிந்து விழுந்தான்.

 

“கண்டவளோடும் ஊர் சுற்றும் உனக்கு நான் எதற்கு சாப்பாடு போட?” என்றார் அவரும் ஆத்திரத்தோடு.

 

விழிகளால் தாயை உறுத்தவன், “என்ன உளறுகிறீர்கள்?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டான்.

 

“ஆமாடா! இப்போ எல்லாம் நான் கதைப்பது உனக்கு உளறலாகத்தான் தெரியும். இனிக்க இனிக்கப் பேசி மயக்கி வைத்திருக்கிறாளே அவள். அவளைப் பற்றி ஒன்று சொன்னதும் என்னமாதிரி கோபம் வருகிறது உனக்கு? சந்தேகப்பட்டு நான் கடையில் வைத்துக் கேட்டதற்கு மூடி மறைத்தாயே. இப்போதுதானே தெரிகிறது உன் வண்டவாளம்.” என்றார் வெறுப்போடு.

 

கண்ணனின் பேச்சால் விளைந்த கோபத்தில் இருந்தவனுக்கு தாயின் பேச்சு இன்னும் கோபத்தைக் கொடுக்க, “சொல்வதைத் தெளிவாகச் சொல்லித் தொலையுங்கள். யாரைப் பற்றிக் கதைக்கிறீர்கள்?” என்றான் சினத்தோடு.

 

அவன் சொல்லிமுடிக்க முதலே அவன் முன்னாள் வந்து விழுந்தன சில போட்டோக்கள்.

 

அதைப் பார்த்ததும் திகைத்துப்போனான். அது அன்று சித்ராவின் பிறந்தநாளின் போது, அவனோடு சேர்ந்து அவள் எடுத்துக்கொண்ட செல்பிக்கள்.

 

அவன் இடையை அவள் கட்டியபடி, கன்னத்தோடு கன்னம் இழைந்தபடி, அருகருகே அமர்ந்து உண்டபடி, மோட்டார் வண்டியில் இருவரும் அமர்ந்தபடி என்று பலது கிடந்தது.

 

இது எப்படி இங்கே என்று யோசனை ஓடும்போதே எப்படி வந்திருக்கும் என்று தெரியவர பல்லைக் கடித்தான் ரஞ்சன்.

 

“இவ்வளவு நேரமும் துள்ளிய வாய் எங்கே போனது உனக்கு? அன்று உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டதற்கு உன் பழைய முதலாளியின் மகள் என்றாய். முதலாளியின் மகளோடு இப்படித்தான் எல்லோரும் பழகுவார்களா? அவளைப் பற்றி ஒன்று சொன்னதும் என்னையே மிரட்டினாயே, இதை மறைக்கத்தானா?” என்று அவர் கேட்ட எந்தக் கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை.

 

அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் வாயடைத்து நின்றான் ரஞ்சன். சித்ரா இப்படியொரு காரியத்தைச் செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

 

“அப்படியே இதையும் பார்.” என்றபடி ஒரு கடிதத் துண்டையும் அவன் முன் தூக்கிப் போட்டார் அவர்.

 

அதில், ‘உங்கள் மகனுக்கும் எனக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஆசிர்வாதம் செய்வதற்குத் தயாராக இருங்கள். இப்படிக்கு உங்கள் மருமகள், சித்ரயாழி’ என்று எழுதப் பட்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!