அதைப் பார்த்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வர, அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தவன், அமர்ந்திருந்த கதிரை சடார் என்று பின்னால் விழ வேகமாக எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான்.
“நில்லுடா! எங்கே போகிறாய்? நான் கேட்..”
அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அலற, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றார் இராசமணி.
“அண்ணி, நான் மல்லி கதைக்கிறேன். சாதனாவுக்கும் ரஞ்சனுக்கும் செய்ய இருந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம்.” என்று எடுத்ததுமே அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனார் இராசமணி.
அவரைப் புருவங்கள் சுருங்கப் பார்த்தவனை முறைத்தபடி, “என்ன மல்லி இப்படிச் சொல்கிறாய். இந்தத் திருமணம் உங்கள் அண்ணாவின் விருப்பம். அதோடு நீங்கள் எல்லோரும் விரும்பிச் சம்மதித்துத்தானே இருந்தீர்கள். இப்போது திடீர் என்று வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டார் இராசமணி.
“நாங்கள் விரும்பித்தான் சம்மதித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அண்ணாவின் விருப்பத்துக்காகவோ, நாங்கள் சம்மதம் சொன்னோம் என்பதற்காகவோ இப்போது கட்டி வைத்துவிட்டுப் பிறகு என் பெண் காலம் பூராக கண்ணீர் வடிப்பதைப் பார்க்க என்னால் முடியாது. அதற்குக் கல்யாணத்தை நிறுத்துவதே நல்லது.”
“உன் மகள் எதற்குக் கண்ணீர் வடிக்க வேண்டும். நான் அவளை இன்னொரு மகளாகப் பார்க்க மாட்டேனா? அல்லது என் மகன்தான் அவளை நன்றாக வைத்திருக்க மாட்டானா? இப்போது அவன் இரண்டு கடைகளுக்கு முதலாளி. இன்னும் இன்னும் நன்றாக வருவான்..” என்றவரை இடைமறித்தார் மல்லிகா.
“என்ன அண்ணி, பேச்சு ஒரு மாதிரி இருக்கிறது. சாதனா காசுக்காக உங்கள் மகனைக் கட்ட ஆசைப்பட்டதாக நினைத்துவிட்டீர்களோ? என் அண்ணாவின் ஆசை என்பதாலும், அண்ணாவின் மகன் ரஞ்சன் என்பதாலும் தான் இந்தத் திருமணத்தைச் செய்ய நினைத்தோம். ஆனால், உங்கள் மகனானால் ஒழுக்கம் கெட்டவனாக இருக்கிறானே..” என்றார் அவர் ஒருவிதக் குரூரத்துடன்.
அதில் சட்டென மூண்ட கோபத்தோடு, “மல்லி! கதைப்பதை யோசித்துக் கதை. நரம்பில்லா நாக்கால் கண்டதையும் சொல்லாதே. என் மகனின் ஒழுக்கத்தில் என்ன குறை கண்டாய் நீ?” என்றவருக்கு, ஆத்திரத்தில் குரல் படபடத்தது.
“சும்மா கத்தாதீர்கள் அண்ணி. நீங்கள் குரலை உயர்த்துவதால் உண்மை பொய்யாகாது. அன்றைக்கு கடைக்கு வந்தாளே அந்தப் பெண், அவளோடு உங்கள் மகன் கூடிக் குலாவியபடி இருக்கும் போட்டோக்கள் எங்களுக்கு வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டும் சாதனாவை அவனுக்குக் கட்டிவைக்கச் சொல்கிறீர்களா? அன்றே பார்த்தேனே அவளை. நாங்கள் அவ்வளவு பேரும் நின்றபோதும் கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல், பயம் என்பதே இல்லாமல் விளக்கை ஏற்றியவள் அவள். அதை ரஞ்சனும் வேடிக்கை தானே பார்த்தான். அவளை எதிர்த்து ஒன்று சொல்லவில்லையே! அப்படியான உங்கள் மகனுக்கு என் மகளைக் கொடுத்துவிட்டு, எப்போது என் பெண்ணின் வாழ்க்கையில் அவள் நுழைவாளோ என்று பயந்து கொண்டிருக்க என்னால் முடியாது. அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்!” என்றார் அவர் உறுதியான குரலில் முடிவாக.
அதைக் கேட்டதும் இராசமணியால் சில வினாடிகளுக்கு வாயையே திறக்க முடியவில்லை.
ஒருவழியாகத் தன்னை மீட்டவர், “மல்லி..” என்று ஆரம்பிக்க, “அண்ணி, இதற்கு மேல் இதைப்பற்றி நாம் கதைக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும் என் பெண்ணை உங்கள் மகனுக்குத் தரமாட்டேன். நீங்கள் வேறு பெண்ணைப் பாருங்கள்.” என்று இடையிட்டுச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார் மல்லிகா.
தானும் பட்டென்று தொலைபேசியை வைத்தவர், “இப்போது சந்தோசமாடா உனக்கு? சாதனாவை உனக்குத் தரமாட்டார்களாம். அவள் அங்கேயும் இந்தப் போட்டோக்களை அனுப்பியிருக்கிறாள். இப்படிக் கேவலமான வேலைகளைச் செய்பவளோடு பழகி உன் அப்பாவின் ஆசையை மண்ணோடு மண்ணாகப் புதைத்து விட்டாயே. இப்போது திருப்தியா?” என்று கத்தியவருக்கு ஆக்ரோசத்தில் உடல் நடுங்கியது.
அவன் அவளை மறுக்க, அவளானாள் சாதனாவை அவனை வேண்டாம் என்று சொல்ல வைத்துவிட்டாளே! பழிக்குப் பழி வாங்குகிறாளா?
ஆத்திரத்தில் விழிகள் சிவக்க, பதில் சொல்ல முடியாமல் நின்றவனின் முழுக் கோபமும் சித்ராவின் மீது திரும்ப, அப்போது வெளியே செல்லத் தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தாள் நித்யா.
அங்கே நின்ற ரஞ்சனை ஒரு பொருட்டாகவே மதியாமல், “அம்மா! நான் படத்துக்குப் போகிறேன். பின்னேரம் தான் வருவேன்..” என்றாள், செருப்பை மாட்டியபடி.
அதைக் கேட்ட ரஞ்சனுக்கு இருந்த கோபத்தில் இன்னும் ஏற, “அவள் தியேட்டருக்குப் போகிறேன் என்கிறாள். நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள். இதென்னம்மா பழக்கம்? நீங்கள் ஒன்றும் சொல்வதில்லையா?” என்று தாயிடம் பாய்ந்தவன், தங்கையிடம் திரும்பி, “ஒரு இடமும் நீ போகத் தேவையில்லை. உள்ளே போ!” என்றான் கடுமையான குரலில்.
அவனை அலட்சியமாகப் பார்த்து, “அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை.” என்று எடுத்தெறிந்து பேசினாள். “அவரே பெண்களோடு ஊர் மேய்கிறார். ஒழுங்காக இருக்கத் துப்பில்லை. இதில் என்னைச் சொல்ல வந்துவிட்டார்..” என்று முணுமுணுத்தாள், அவனுக்குக் கேட்கும் விதமாகவே.
தங்கையே அவனைக் குத்திக் காட்டியதில் உண்டான கோபம், தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத இயலாமை, சித்ராவின் மீதிருந்த ஆத்திரம் என்று எல்லாமாகச் சேர்ந்து அவனை நிதானம் இழக்க வைக்க, நித்தியின் கன்னத்தில் ‘பளார்!’ என்று அறைந்தான் ரஞ்சன். “முளைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் எதிர்த்தா பேசுகிறாய்? ராஸ்கல்! மரியாதையாக உள்ளே போ!” என்றான் கடுமையான குரலில்.
எதிர்பாராமல் அறை விழுந்ததில் தடுமாறி, “அம்மா!” என்று கத்தியபடி சுழன்று விழப்போன மகளை ஓடிவந்து தாங்கித் தன்னோடு அணைத்த இராசமணி, “அவளை எதற்கு அடிக்கிறாய். அவள் கேட்டதில் என்ன தப்பு? மூத்தது நீ ஒழுங்காக இருந்தால் தான் உனக்குப் பின்னால் வருவதும் ஒழுங்காக இருக்கும். முதலில் நீ உன்னைத் திருத்து.” என்றவர், மகளையும் இழுத்துக்கொண்டு தன்னறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினார்.
ஆத்திரத்தோடு திரும்பியவனின் பார்வையில், அவனோடு சேர்ந்து சிரித்தபடி நின்ற சித்ராவின் படம் கண்ணில் பட்டது.
‘எல்லாம் இவளால் வந்தது..’ என்று எண்ணியபடி கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

