ஆட்டநாயகன் 14.1

அத்தியாயம் 14

வாசுசேனனால் என்றைக்குமே ஆழ்ந்து உறங்க முடிந்ததில்லை. அந்தளவில் அவன் மூளை அமைதியடைவதில்லை. ஒருவிதமான விழிப்பு நிலையோடுதான் உறங்குவான். பத்து வருடங்களுக்கும் மேலான சிறை வாழ்க்கை தந்த பழக்கம்.

தற்போது ஒரு வருடமாகத்தான் பிணையில் வெளியே வருகிறான். ஆரம்பத்தில் அவனால் இந்தப் பரந்த உலகத்தில் வாழவே முடியவில்லை. என்னவோ அந்நிய உலகு ஒன்றினுள் புகுந்துவிட்டது போலாயிற்று.

இந்த உலகத்தோடு, இங்கு வாழும் மனிதர்களோடு, இங்கே இருக்கும் நடைமுறைகளோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் உள்ளே போகப்போகிறேன் என்று சிவநாதரிடம் சென்று நின்றிருக்கிறான்.

இப்போதும் இந்த உலகத்தோடும், இந்த உலகத்து மனிதர்களோடும் அவனுக்கு எந்த ஒட்டுதலும் இல்லை, உறவும் இல்லை. அவன் வாழ்க்கை தனி. அடைக்கப்பட்ட ஒற்றை அறையின் நான்கு சுவர்களுக்கு மத்தியிலும், குறித்த எல்லைக்கு உட்பட்ட குறிப்பிட்ட மனிதர்களோடானதும்தான் அது.

ஆனால், இந்தக் கொஞ்ச நாள்களாக அவன் ஆழ் மனது எதற்கோ தவித்துக்கொண்டிருக்கிறது. இன்னதென்று பிரித்தறிய முடியாமல் உழல்கிறது. எதையோ தேடுகிறது. எதற்கோ அழுகிறது.

அது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரு ஒவ்வாத தன்மை. அதே நேரத்தில் தனக்கு என்ன வேண்டும் என்று கண்டுகொள்ள வேண்டும்போலவும் இருந்தது.

இந்த ஒரு வருடமும் சில நேரங்களில் பிணையில் வெளியில் வருவான், சில நேரங்களில் சிவநாதரின் செல்வாக்கில் களவாக வந்துவிட்டுப் போவான். அவரின் தேவையைப் பொறுத்து அது நடக்கும்.

அவர் தருகிற வேலைகள் சாதாரணமானவை இல்லை. பொருள்களைக் கைமாற்றுவது, ஆட்களைக் கடத்துவது, போட்டுத் தள்ளுவது என்று எல்லாமே அதில் அடங்கும். முறுக்கேறித் துடிக்கும் அவன் தேகத்திற்கும், அதற்குள் எப்போதும் சூடாகவே ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்திற்கும், அவனுக்குள் ஓங்கி நிற்கும் கோரமான ஏதோ ஒரு பசிக்கும் ஆபத்து நிறைந்த பரபரப்பான பயங்கரமாக அந்த வேலைகள் தீனி போட்டன.

அதே நேரத்தில் சிவநாதரிடம் எதுவோ தவறாகப் பட்டது. அவன் வாழ்ந்தது, வாழ்வது சிறையில். கள்ளர், காடையர், கொள்ளையர், கொலைகாரர்கள் என்று பலரைப் பார்த்தவன். தன்னைக்கொண்டு பல வேலைகளைச் செய்கிறவர் தனக்கும் சேர்த்துக் குழி பார்க்கிறாரோ என்கிற கோபம் முளைவிட ஆரம்பித்திருந்தது.

அப்போதுதான் வேந்தன் வந்ததும், அவனை இவன் டைகரைக் கொண்டு விரட்டி அடித்ததும் நடந்தன. அப்போதே வேந்தனிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்த்தான். அதனாலேயே அடுத்த நாள் இரவே ஒரு கும்பல் அவனைத் தாக்க வந்தது பெரிய அதிர்ச்சியைத் தரவில்லை.

வாழ்வின் மீது பிடிப்பிருக்கிறவன்தான் உயிர் மீது பயம் கொள்வான். உயிரை வைத்து விளையாடி அதில் இன்பம் காண்கிறவன் எதற்கு யோசிக்கப்போகிறான்? துள்ளி எழுந்துவிட்டான்.

ஆனால், கேதகி கதவைத் திறந்துகொண்டு வந்தது அவன் எதிர்பாராதது. அந்தக் கும்பல் வேந்தனின் ஆட்கள் என்றால் அவர்களின் இலக்கு அவனை மாய்ப்பதும் அவளை மீட்பதும் என்று கண்டுபிடிக்கப் பெரிய யோசனைகள் தேவை இல்லையே.

அதற்கு அவன் விடுவதா? அவனிடமிருந்து ஒருவன் அவளைப் போராடி வென்று போவதா? அவனின் அகங்காரமும் ஆக்ரோசமும் துடித்துக்கொண்டு நின்று வேந்தனை மொத்தமாக முடித்துவிட உறுமின.

இவர்கள் மூவர். அவர்கள் தோராயமாகப் பத்துப் பேர் இருக்கலாம். கடினமான போர்தான். ஆனால், வெற்றி தோல்வி ஆட்களின் எண்ணிக்கையை வைத்து முடிவாவதில்லையே. நெஞ்சின் உரமும், சீரான திட்டமிடலும், சரியான நேரத்தில் பொருத்தமான தாக்குதலும்தானே தீர்மானிக்கின்றன.

இருட்டுக்குக் கண்கள் பழகுகிற வரைதான் சிரமமாகக்கூட இருந்தது. அதன் பிறகு அவர்களைப் போட்டுத் தாக்க ஆரம்பித்தான். அப்போதுதான் கேதகி அவர்களில் ஒருவனின் கையில் மாட்டுப்பட்டாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் மீது பெரும் கோபம் உண்டாயிற்று. அப்போதுதான் அவன் கவனம் இலேசாகச் சிதறியது. அவளைப் பாதுகாத்துவிட்டு அவர்களைத் தாக்குவதற்குள் அவன் மீதும் சிலபல வெட்டுகள் விழுந்திருந்தன.

அதற்கெல்லாம் அவன் துவண்டுவிடவில்லை. அந்தக் காயங்கள் உண்டாக்கிய உக்கிரமும் சேர்ந்துகொள்ள அந்தக் கும்பலை ஒட்டு மொத்தமாக விரட்டியடித்த பிறகே ஓய்ந்தான். வேந்தனை மொத்தமாகப் போட்டுத் தள்ளியிருப்பான். அது அவன் இடம் என்பதும், சிவநாதரிடம் அவனுடைய காரியம் ஆகவேண்டி இருந்ததும் பொறுமை காக்க வைத்தன.

மூவருக்கும் நல்ல காயங்கள். மற்ற இருவரும் டைகரை காண விரைய இவன் கேதகியின் அறையினுள் வந்தான்.

அவன் எப்படி உள்ளே இழுத்துத் தள்ளிவிட்டுப் போனானோ அப்படியே கிடந்தாள். குப்புறக் கிடந்தவள் அணிந்திருந்த உடை முதுகுப்பக்கத்தில் வலப்பக்கத் தோளிலிருந்து இடப்பக்க இடை வரை வெட்டப்பட்டிருக்க, அதிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

ஒரு கணம் அவளையே பார்த்து நின்றுவிட்டுப் போய் முதலுதவிப் பெட்டியையும் கத்தரிக்கோலையும் எடுத்துக்கொண்டு வந்தான். அவள் மயங்கியிருக்கவில்லை. ஆனால், உயிர் போகும் வலியும், வெளியேறிய இரத்தமும் ஒருவிதமான மயக்க நிலையைக் கொடுத்திருந்தன.

அவன் வந்தது, நின்று பார்த்தது, போனது, இப்போது வந்து பக்கத்தில் அமர்ந்தது எல்லாம் தெரிந்தன. ஆனால், எதையும் பேசும் நிலையில் அவள் இல்லை. கண்ணீர் உகுத்தபடி அப்படியே கிடந்தாள். இதெல்லாம் அவள் சந்தித்திராத சூழ்நிலைகள். அனுபவித்திராத வலிகள்.

வெட்டுப்பட்டிருந்த ஆடையினுள் கத்தரிக்கோலினை நுழைத்து இன்னும் நன்றாக வெட்டினான். அதைப் பிரித்துவிட்டு வெட்டுக் காயத்தை ஆராய்ந்தான். உள்ளாடைப் பாட்டியைக் கழற்றிவிட்டான். எதையோ வைத்துக் காயத்தின் மீது ஒற்றி ஒற்றி எடுத்தான். எரிவோடு சேர்த்து உயிர் போகுமளவுக்கு வலித்தது. அந்த வலி தந்த சுரணையில் படக்கென்று எழுந்து அமர்ந்தாள். அதற்கே முதுகில் சுளீர் என்று வலி. ஒரு முறை, “அம்மா!” என்று கத்திவிட்டு, “என்ன செய்றீங்க?” என்று சீறினாள்.

“காயத்துக்கு மருந்து போடோணும்.” என்றான் எந்த உணர்வுமற்ற குரலில்.

“அதுக்கு நீங்களே போடுவீங்களா? டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போங்க!”

error: Alert: Content selection is disabled!!