ஆட்டநாயகன் 15.1

அத்தியாயம் 15

கதிரவன் கொண்டுவந்த ஃபுட்டேஜில் இலக்கம் மறைக்கப்பட்ட லொறியின் பின் பக்கம்தான் தெரிந்தது. முதலில் மிதமான வேகத்தில் சென்ற லொறி திடீரென்று வேகமெடுத்தது. அவர்கள் இருவரையும் அடித்துத் தூக்கி எறிந்துவிட்டு அது போவதும், இருவரும் திசைக்கு ஒன்றாகச் சென்று தரையில் விழுவதும் அப்படியே பதிவாகியிருந்தன.

எல்லாமே நடந்து முடிந்து போயிற்றுத்தான். என்றாலும் அதைப் பார்க்கையில் இதயம் அடித்துக்கொள்வதையும், இரத்தம் கொதிப்பதையும் எல்லாளனால் தவிர்க்கவே முடியவில்லை.

அங்கே இருந்த மக்கள் கேட்ட பெரும் சத்தத்தில் அதிர்ந்து, என்ன நடந்தது என்று விளங்கி, விழுந்து கிடந்தவர்களை நோக்கி ஓடி வருகையில் அவர்கள் எல்லோரையும் விட உயரமான, திடகாத்திரமான ஒருவன், சம்மந்தரை நெருங்கிச் சென்று பார்ப்பதும், அங்கிருந்தே மாதவனின் மனைவியைத் திரும்பிப் பார்த்துவிட்டு மக்களுக்குள் சென்று மறைவதும் அப்படியே தெரிந்தன.

200 மீட்டருக்கும் தொலைவான ஒரு சிசிடிவியிலிருந்து எடுக்கப்பட்டது என்பதில் அதைத் தாண்டி எதையும் உன்னிப்பாகக் கவனிக்க முடியவில்லை.

ஆனால் யார் அவன்? சேர்ட்டை அணியாமல் முதுகைச் சுற்றிப் போட்டிருந்ததால் அவன் மொட்டையைத் தவிர்த்து வேறு எதையும் குறிப்பாகக் கண்டுகொள்ள முடியவில்லை.

“வேற புட்டேஜ் கிடைக்கவே இல்லையா கதிரவன்?” அந்தளவில் கதிரவன் ஆராயாமல் விட்டிருக்கமாட்டான் என்று தெரிந்திருந்தாலும் எதையும் உருப்படியாகக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்கிற ஏமாற்றம் கேட்க வைத்தது.

“இல்லை சேர். நானும் அந்த ஏரியா முழுக்கத் தேடிப் பாத்திட்டன். அங்க இருந்து போற ரோட் எல்லாத்துலயும் பாத்திட்டன். அந்த இடத்தத் தவிர்த்து வேற எங்கயும் அவனைப் பிடிக்க முடியவே இல்ல.”

“அந்த லொறி?”

“அதையும் கண்டுபிடிக்க முடியல்ல சேர். இதுவும் பக்கா பிளான் சேர். அது மட்டும் நல்லா தெரியுது.”

மிக்கி மவுஸ், மினி மவுஸ் உடைகள் வாங்கிய அந்த நால்வர் அடங்கிய புட்டேஜுகளையும் போட்டுப் பார்த்தார்கள். இவன் அவர்களில் ஒருவன் இல்லை. இவன் வேறு. அதை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

“சம்மந்தன் மாமா குடும்பத்தோட ஆருக்குமே எந்தப் பகையும் இல்ல கதிரவன். அப்பிடியே ஏதும் பகை இருந்தாலும் அது சிவநாதரின்ர குடும்பத்துக்கு மட்டும்தான். என்னில இருக்கிற கோவம் எண்டாலும் என்னால அளவுக்கதிகமா பாதிக்கப்பட்டதும் சிவநாதர்தான். ஏதோ ஒரு வகைல சிவநாதர் இல்லாட்டி வேந்தனா இருக்கோணும்.”

சற்று யோசித்துவிட்டுச் சட்டென்று எழுந்து கோவளம் கடற்கரைக்குச் சென்று அந்த இருவரையும் பிடித்தான். முதலில் இருவருமே பிடிகொடுக்க மறுத்தனர். அவர்கள் எதிர்பாரா நொடியொன்றில் மொட்டைத் தலைக்காரன் இருக்கும் அந்த கிளிப்பைக் காட்டியதும் அவர்களிடத்தில் ஒரு அதிர்வு. அது போதுமே எல்லாளனுக்கு.

மிரட்டிய மிரட்டில் எப்போதாவது இருந்துவிட்டு அவன் இந்தக் கடற்கரைக்கு வருவான் என்று தெரியவந்தது. எல்லாளனும் கதிரவனும் பரபரத்துப்போனார்கள். மேலும் விசாரித்ததில் அன்று அவர்களின் படகை எடுத்துக்கொண்டு நடுக்கடலுக்கு வரச் சொல்லியிருக்கிறான். விடியல் பொழுதில் படகு பிரண்டு கடலில் விழுவதுபோல் விழுந்து, தத்தளித்து, படகில் ஏறச் சொல்லியிருக்கிறான். கடற்படை வந்து விசாரித்தால் மீன் பிடிக்கப் போனோம், படகு பிரட்டிவிட்டது, ஒரு வழியாகத் தப்பித்துவிட்டோம் என்று சொல்லச் சொல்லியிருக்கிறான்.

ஆக, இந்த முறையும் கடற்படையின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பிவிட்டு அந்தப் பக்கம் அவன் தப்பித்திருக்கிறான். நிச்சயமாக ஏதோ ஒரு கடத்தல் நிகழ்ந்திருக்கிறது. வேறு எதற்கும் இத்தனை பிரயத்தனம் செய்யத் தேவையில்லை.

அந்த ஊர் மக்களிடமும் அவனைக் காட்டி விசாரித்தார்கள். கறுப்பு நிற ஆர்ம் கட் அணிந்த, மொட்டைத் தலையுடன் ஒருவனை ஒரு சிலர் பார்த்திருந்தனர். ஆனாலும் மொட்டைத் தலையை வைத்து அவர்களால் அவன்தான் இவன் என்று உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த புட்டேஜ் தூரத்தில் தெரிவதும் ஒரு காரணமாயிற்று.

ஆனாலும் எல்லாளன் சோரவில்லை. அந்த ஊரில் சாதாரண மனிதர்கள் போன்று இரண்டு காவலர்களை நிறுத்த ஏற்பாடு செய்தான்.

தயாநிதி குடும்பத்தின் இறப்பு, தான் யாழ்ப்பாணத்துக்கு திடீரென்று மாற்றப்பட்டது, அதன் பின்னே சிவநாதர் இருந்தது, காணாமல் போன கேதகி, சம்மந்தர் மறைவு, கடலில் நடக்கும் புதிரான நிகழ்வுகள், புதிதாக ஒரு மொட்டையன். இவை எல்லாவற்றையும் எப்படி இணைப்பது என்று தெரியாது நின்றான் எல்லாளன்.

இதில் மாதவனின் மனைவிக்குத் தெரிந்த முகம் அந்த மொட்டையன். இல்லாமல் தான் தப்ப மாட்டோம் என்று தெரிந்த அந்த நேரத்திலும் அதைத் தன்னிடம் சொல்லிவிட்டுப் போகப்போவதில்லை அந்தப் பெண். அப்படி யார்?

“எனக்கு மனம் திரும்ப திரும்ப சிவநாதரிலயும் வேந்தனிலயும்தான் நிக்குது கதிரவன். வேந்தனுக்கு கேதகியத் தெரியாம இருக்க சான்ஸ் இல்ல. அப்பிடியிருக்க அவன் ஏன் தெரியாது எண்டு பொய் சொல்லோணும்? கேதகிய அந்த குரூப் ஏன் கூட்டிக்கொண்டு போனது? அந்தப் பிள்ளையின்ர பெயர்ல சொத்துப்பத்துகள் கூட இல்லை.” என்றவனின் கேள்விக்குக் கதிரவனிடமும் பதில் இல்லை.

“தயாநிதிக்குப் பதிலா இப்ப இந்த மொட்டையன் சிவநாதருக்குப் பொருளைக் கொண்டுவந்து குடுக்கலாம். அந்தளவுக்குச் சிவநாதர் அந்த மொட்டையனை நம்புறார் எண்டா அவனை அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கோணும். அதுவும் சும்மா இல்ல. இதை அவன் முடிப்பான் எண்டு நம்பிற அளவுக்கு நம்பிக்கையானவனா கெட்டிக்காரனா இருக்கோணும். அந்தளவுக்கு ஆர் அது?” இந்தக் கேள்விக்கும் பதிலற்று நின்றான் கதிரவன்.

“வேந்தன்ர சொந்த இடம் திருகோணமலை எல்லா. அங்க அவன் வளந்த இடம், இப்ப இருக்கிற இடம் எல்லாம் விசாரிக்கச் சொல்லுங்க. அவன்ர பிரண்ட்ஸ் அத்தனை பேரின்ர விபரமும் எடுங்க.” என்று கடகடவென்று உத்தரவுகளை இட்டான்.

கூடவே, “வேந்தன் இஞ்ச எங்க போறான், என்ன செய்றான் எண்டு கவனிக்கவும் ஏற்பாடு செய்ங்க. முடிஞ்சா அவன்ர ஃபோன் நம்பரையும் எடுக்கோணும் கதிரவன். ஒரு நம்பர் மட்டுமே அவன் வச்சிருக்கப்போறேல்ல. எண்டாலும் சும்மா இருக்கேலாது. சிவநாதரின்ர வீட்டையும் கவனிச்சா நல்லம்.” என்றுவிட்டு மிதிலா வீட்டுக்குப் புறப்பட்டான்.

*****

விடிந்தும் விடியாத பொழுதில் சிவநாதரின் முன்னே நின்றான் வாசுசேனன்.

“என்ன வாசு?” என்று வந்தவருக்கு அவன் தோற்றத்தைக் கண்டதும் திகைப்பாயிற்று. அதுவும் அவன் முகத்தில் தெரிந்த கடினமும், விழிகளில் தெரிந்த பயங்கரமும் அவர் நெஞ்சையே ஒரு கணம் சில்லிட வைத்தன.

“இது என்ன உடம்பு முழுக்கக் காயம். என்ன நடந்தது?” என்று விசாரித்தார்.

“எங்க வேந்தன்?” ஆத்திரத்தை அடக்கி உறுமினான் அவன்.

“ஏன் அவனைக் கேக்கிறாய்?” புத்திசாலித்தனமாக அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது வினவியவருக்கு அவன் காயங்களுக்கும் வேந்தனுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை ஊகித்துக்கொள்ள முடிந்தது.

“கேதகி ஆர்?” அவரைப் போலவே அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாது இன்னொரு கேள்வி கேட்டான் அவன்.

சிவநாதர் நிதானித்தார். பதில் சொல்லாது அவனையே பார்த்தார்.

“அவளை என்னத்துக்கு மறைச்சு வச்சிருக்கிறீங்க?”

அப்போதும் அவனையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “இப்பிடி நீ கேள்வி கேக்கிறதும் காரணம் கேக்கிறதும் புதுசா இருக்கு வாசு.” என்று சொன்னார்.

“அண்டைக்கே சொன்னனான். அதுக்கு நீங்க எனக்கு உண்மையச் சொல்லோணும்.”

“என்ன மறச்சனான்?”

error: Alert: Content selection is disabled!!