ஆட்டநாயகன் 17.2

“ப்ளீஸ்! எனக்கு என்ர வேலை சரியான முக்கியம். நாளைக்கு ஒரு கஷ்ட துன்பம் வந்தா என்னைப் பாக்கிறதுக்கும் ஆக்கள் இல்ல, உதவி கேட்டு நான் போய் நிக்கிற அளவுக்கும் ஒருத்தரும் இல்ல. அந்தத் தயாநிதிக்கு மகளா பிறந்ததத் தவிர வேற எந்தப் பாவமும் நான் செய்யேல்ல. என்ன விட்டுடுங்க ப்ளீஸ்!”

கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் மன்றாடித்தான் பார்க்கிறாள். அவன் அசைய வேண்டுமே.

அவள் இப்போதெல்லாம் அவளைப் போன்று இருவர் புகுந்துகொள்ளக் கூடிய உடைகளைத்தான் அணிகிறாள். அப்போதுதான் காயத்தின் மீது ஓரளவுக்காவது உடை உரசல் இருக்கிறது. அதற்கு மேலும் நல்ல தடிமனான(மொத்தமான) சால்வை ஒன்றைப் போர்த்திவிட்டு, “வா!” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு போனான்.

அவனை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஈவிரக்கம் இல்லாதவனாக இருக்கிறான். அவள் கண்ணீருக்கோ, கெஞ்சலுக்கோ இரங்குகிறானும் இல்லை. ஆனால், அவள் நிலை அறிந்து நடந்துகொள்கிறான்.

காயம் பட்டதிலிருந்து அவளைக் கவனித்துக்கொள்வது அவன்தான். ஆனால், சிறு தொடுகையோ பார்வையோ பிழைக்காது. இவனின் உண்மையான குணம் என்ன என்று அவள் யோசிக்கையிலேயே அவளை அழைத்துச் சென்று காரின் பின்னிருக்கையில் ஏற்றினான். விறுவிறுவென்று அங்கிருந்த அவர்களின் உடைமைகளை எல்லாம் பின் டிக்கியில் மூவருமாக ஏற்றினார்கள்.

கடைசியாக அவன் வந்து அவளருகில் அமர்ந்து கொள்ள மற்ற இருவரில் ஒருவன் காரை எடுத்தான். அடுத்தவன் அவனருகில் அமர்ந்துகொண்டான். கார் வீதியில் இறங்கிற்று.

கேதகிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அன்றொருநாள் தான் தப்பிக்கப் பார்த்ததும், ஒற்றைக் கையால் அவன் தன்னை அடங்கியதும் நினைவில் வந்தன. மெல்லிய நடுக்கம் உடலில் ஓட அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அதே நேரத்தில் அவனும் அவளைத்தான் பார்த்தான். சாம்பலும் ஒரு வகையான அழுக்குப் படிந்தது போன்ற சிவப்பும் நிறைந்த கடுமையான அந்தக் கண்கள் அவள் நெஞ்சையே ஊடுருவிவிடவும் அவளுக்கு நெஞ்சுக்குள் ஒரு முறை பகீர் என்றது. வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மூடப்பட்டிருந்த காரினுள் ஏசி வேலை செய்துகொண்டிருந்தாலும் அவளுக்கு வியர்த்தது. “எங்க போறம்?” என்று மெல்ல முணுமுணுத்தாள்.

பதில் இல்லை. கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். இப்போது அவன் பார்வை நேரே வீதியில் இருந்தது.

இருப்பது நிமிடப் பயணத்தின் பின்னே ஒரு வெள்ளை நிற நான்கு மாடி விடுதி ஒன்றின் முன்னே சென்று நின்றது கார்.

இங்கே எதற்கு? திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

அவள் பார்வையைக் கவனிக்காது, அல்லது பொருட்டில் கொள்ளாது அவன் மட்டும் இறங்கி உள்ளே போனான். சற்று நேரத்தில் திரும்பி வந்தான். “இறங்கு!” என்று அவளை அழைத்துக்கொண்டு அந்தக் கட்டடத்தின் பின் பக்கம் சென்றான். அங்கேதான் படிக்கட்டு இருந்தது. “ஏறு!” என்றான் அவளைத் தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டே

“ஏன் இஞ்ச?” ஏறாமல் நின்று வினவினாள்.

ஒரு படியில் ஏறி நின்றுகொண்டு பற்றியிருந்த கரத்தில் இலேசான அழுத்தம் கொடுத்து அவளையும் ஏற வைத்தான். வேறு வழியில்லை. மெல்ல மெல்ல ஏறியபடி, “ஏன் இஞ்ச வந்திருக்கிறம்?” என்று திரும்பவும் வினவினாள்.

“இனி இஞ்சதான்.”

“ஏன்?”

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான் அவன். அவளுக்கு அழுகை வந்தது. அடிமை போன்ற இந்த வாழ்க்கை ஏன் என்கிற கேள்வி உண்டாயிற்று. கண்ணை மறைத்த கண்ணீருடன் ஏறினாள். மெல்ல மெல்ல என்றாலும் அவளால் ஒரு மாடிதான் ஏற முடிந்தது.

ஒவ்வொரு முறையும் காலைத் தூக்கி வைத்து, உடலுக்குப் பலம் கொடுத்து ஏறுகையில் மொத்த முதுகும் சுண்டி இழுத்தது. காய்ந்துகொண்டிருந்த வெட்டுப்பட்ட இடத்தில் வெடிப்புக் கண்டது. அது வேறு நெருப்புச் சுட்டது போன்று எரிந்தது.

அதை எல்லாம் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டு அடுத்த மாடியின் பாதிப் படிகளை ஏறியவளால் அதற்குமேல் முடியவில்லை. அங்கேயே நின்று, “ஏன் இப்பிடிக் கொடுமை செய்றீங்க? இதுக்கு ஒரேயடியா என்னை கொன்றுபோடுங்க. கேட்டுக்கொண்டு வரக்கூட ஒருத்தரும் இல்ல. உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.” என்று அழுதாள்.

ஒரு கணம் அவளையே பார்த்தான் வாசுசேனன். என்ன செய்யப்போகிறான் என்று அவள் ஊகிக்கும் முன்னர் குனிந்து, அவளின் இடுப்புக்கு கீழே பற்றித் தூக்கியிருந்தான்.

“ஐயோ என்ன செய்றீங்க?” என்று பதறி, அவனைப் பற்றித் தன்னை நிலைநிறுத்துவதற்குள் படிகளை ஏற ஆரம்பித்திருந்தான் அவன்.

கேதகி ஒருவிதமான அதிர்ச்சியினுள் ஆட்பட்டு நம்ப முடியாமல் அவனையே பார்த்திருந்தாள்.

மொட்டை மாடிக்குச் சென்ற பிறகுதான் இறக்கிவிட்டான். அவனுக்கு மூச்சு வாங்கியதோ இல்லையோ அவளுக்கு மூச்சு வாங்கியது. இப்போதும் அவனையேதான் பார்த்திருந்தாள் கேதகி. அவனுக்கும்தான் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள். ஒற்றை வெட்டுக்கே அவள் இந்தப் பாடு படுகிறாள். அப்படி இருக்க அவன்?

இதற்குள் மற்றவர்கள் மின்னல் விரைவில் அவர்களின் பொருள்களை எல்லாம் மேலே கொண்டுவந்து சேர்த்திருந்தனர். அவன் அவளை அப்படித் தூக்கி வந்தது இந்த இருவருக்கும் ஒன்றுமில்லையா என்று அவர்கள் முகங்களை ஆராய்ந்தாள். ஒன்றையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு பெருமூச்சுடன் அந்த இடத்தைச் சுற்றி விழிகளைச் சுழற்றினாள். முழுவதும் மொட்டை மாடி. அதன் நடுவில் ஒரு அறை. அதன் பக்கத்திலேயே குளியலறை இருக்க அதற்கு மேலே தண்ணீர் டாங்க் வைத்திருந்தார்கள்.

அவர்கள் எல்லாவற்றையும் அங்கே ஒதுக்கி வைப்பதைப் பார்க்கையில் அவன் சொன்னதுபோல் இங்கேதான் இருக்கப்போகிறார்கள் என்று புரிந்தது.

ஆனால் ஏன்? கேட்டால் சொல்லிவிட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பான். அந்த வேந்தன் காரணமோ? மெல்ல நடந்து அந்த வீட்டினுள் பார்த்தாள். ஒற்றை அறைதான். ஒரு பக்கமாகச் சமைப்பதற்கும் வசதி இருந்தது. எல்லோரும் ஒன்றாகத்தான் தங்க வேண்டுமா? திகைப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

error: Alert: Content selection is disabled!!