ஆட்டநாயகன் 20.2

“சேட்டை என்ன?”

“அது சும்மா சேர்.” என்றான் கதிரவன் விரிந்த சிரிப்புடன்.

“பூனைக்கு விளையாட்டு எலிக்கு மரணம் கதிரவன்.” என்றான் அவனும் சிரித்துக்கொண்டு.

“திரும்ப மேமுக்கு ஃபோன் போடவா சேர்?”

“அடுத்த கொலை நீங்கதான்!” என்ற இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மனிதர் கதிகலங்கிப்போனார்.

தன் நடுக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஐஸ் பவுல்களை கொண்டுவந்து மிகுந்த பணிவுடன் அவர்கள் முன்னே வைத்தார். ஒற்றைப் பார்வையிலேயே அனைத்தையும் அளந்துவிட்டு, “இஞ்ச ஆரும் புது முகங்கள் வாறவையா? அடிக்கடி வந்தாலும் வேற ஊர் ஆக்களா இருந்தா சொல்லுங்க.” என்றான் எல்லாளன்.

ஏதோ நடந்திருக்கிறது, அதனால்தான் விசாரிக்கிறார்கள் என்கிற விடயமே அவரின் சிந்திக்கும் திறனை மந்தமாக்கியிருக்க அவருக்கு அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வரவில்லை.

“இஞ்சயே இருக்கிற ஆக்களைப் பெரும்பாலும் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே. அப்பிடி இல்லாமல் திருகோணமலை மாதிரி ஊர்ல இருந்து வாற ஆக்கள், இல்ல அவேன்ர பேச்சுல திருகோணமலை எண்டு அடிபட்டிருக்கா? இல்ல வேற ஊரா இருந்தாலும் சரிதான்.” என்றதும் சட்டென்று பிடித்தார் அவர்.

“ஓமோம் சேர். திருகோணமலைப் பெடியள் சிலர் அப்பப்ப வாறவேதான். எங்க இருக்கினம் எண்டு தெரியாது. அதுவும் இப்ப கொஞ்ச நாளா காணேல்ல.”

“கடைசியா எப்ப வந்தவே எண்டு தெரியுமா?”

அவர் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியாமல் தடுமாறினார். பெரும் சம்பவங்களை நிகழ்த்திவிட்டு இங்கே நிற்கமாட்டார்கள் என்பது எல்லாளனின் ஊகம். நடுவில் வாசுசேனனுக்கும் வேந்தனுக்குமிடையில் நடந்த வாள் வெட்டுச் சண்டை எல்லாளனின் காதிற்கு வந்திராத காரணத்தினால் தயாநிதி குடும்பம் கொலை செய்யப்பட்ட நாள்களுக்கு முந்தைய நாள்களைச் சிசிடிவியில் பார்க்க முடிவு செய்தார்கள்.

அதற்கு முதல் மிக்கி மவுஸ், மினி மவுஸ் உடைகள் வாங்கிய நாளில் எடுத்த ஃபுட்டேஜை அவரிடம் காட்டினான் எல்லாளன்.

அதை பார்த்த மனிதர் பரபரப்புற்று, “இவேதான் சேர்.” என்றார் அவசரமாக.

“நாலுபேரும் ஹெல்மெட் போட்டிருக்கினம். பிறகும் எப்பிடி அடையாளம் தெரியுது உங்களுக்கு?”

“அதுல ஒரு பெடியன் கட்டியிருக்கிற அந்த மணிக்கூட்டை பாருங்க சேர். அந்தத் தம்பிக்கு கோல் வரவும் அவர் அந்த மணிக்கூட்டிலயே ஓன் பண்ணிட்டு கதைச்சவர். எனக்கு அது வரைக்கும் மணிக்கூட்டில ஃபோன் கதைக்கலாம் எண்டுற விசயம் தெரியாது. அதால விசாரிச்சனான். அது ஆப்பிள் மணிக்கூடு, அதில கதைக்கலாம் எண்டு சொன்னவர்.”

“ஆனா வேற ஆக்களும் இதைக் கட்டி இருக்கலாம்தானே?”

“ஓம் சேர். ஆனா அதுல சிவப்பு நிறத்தில ரெண்டு ஹார்ட் ஸ்டிக்கர் இருக்கே. அது அந்தத் தம்பின்ர மணிக்கூட்டில இருந்தது.” என்றதும் எல்லாளனும் கதிரவனும் பரபரப்புடன் தமக்குள் பார்வையைப் பரிமாறிக்கொண்டார்கள்.

அவருக்கு அதைத் தவிர்த்து வேறு எந்த விபரமும் அவர்கள் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எல்லாளனுக்கு அதுவே போதுமே. அதுவரை அவனா என்று இருந்த சந்தேகம் அவன்தான் என்று உறுதியாயிற்றே. அப்படியானால் கேதகியும் அவனிடம்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டிலோ?

“அப்ப நீங்க இஞ்ச இருந்து செக் பண்ணுங்க கதிரவன். நீங்க அவே எப்ப திரும்ப வந்தாலும் எங்களுக்குச் சொல்லோணும். எதையாவது மறைக்க நினைச்சீங்களோ தெரியும்!” என்று இருவருக்கும் உத்தரவு போட்டுவிட்டு வெளியே வந்தவன் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

இதற்கு முதல் அவன் திருகோணமலையில்தானே பணியில் இருந்தான். உடனேயே ஏஎஸ்பி அருந்தவராஜாவிற்கு அழைத்து உதவி கேட்டான்.

தயாநிதி குடும்பக் கொலை, கேதகி காணாமல் போயிருப்பது, தான் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்த துப்புகள், கடைசியாக மிக்கி மவுஸ், மினி மவுஸ் உடைகள் வாங்கிய அந்த நால்வர், இன்று நடந்தது எல்லாவற்றையும் சொன்னான்.

“வேந்தன்தான் செய்திருக்கிறான் எண்டு இப்ப உறுதியா தெரிஞ்சிட்டுது அங்கிள். ஆனா எனக்கு அதுக்குச் சாட்சி வேணும். அவன் பிறந்து வளந்தது எல்லாம் அங்க திருகோணமலைதான். எனக்கு ஒருக்கா அவன்ர ஊர்ல அவனைப் பற்றி, அவன்ர பிரெண்ட்ஸ் பற்றி விசாரிச்சுச் சொல்லோணும் அங்கிள். எங்கட நல்ல காலத்துக்கு இஞ்ச ஏதாவது ஃபுட்டேஜ் கிடைச்சா, அதுல முகம் தெரிஞ்சா அதையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறன். அவன்ர ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல எப்பவோ விசாரிச்சுச் சொல்லச் சொல்லிச் சொல்லியாச்சு. ஆனாலும் ஒரு நியுஸும் வரேல்ல.” என்று தன் நிலையைச் சொன்னான்.

“விசாரிக்கிறதுக்கு நானே ஏற்பாடு செய்றன் எல்லாளா. நீயும் அந்த புட்டேஜ் கிடைச்சா அனுப்பி வை.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

அந்த ஐஸ் கஃபே கடையில் மிக்கி, மினி மவுஸ் உடைகள் வாங்கிய நால்வரோடு இன்னும் இருவரும் வந்திருந்து ஐஸ் சாப்பிட்டுப் போவது பதிவாகியிருந்தது. இவர்கள்தான் அவர்கள் என்று கண்டுபிடிக்க உதவியது கடைக்காரர் சொன்ன அந்த ஆப்பிள் மணிக்கூடும், அதன் மீது ஒட்டப்பட்டிருந்த சிவப்பு நிற இரண்டு இதய ஸ்டிக்கர். நன்றாக உற்றுப் பார்த்தான் எல்லாளன். அவனுக்கு இவர்களைத் திருகோணமலையில் பார்த்த நினைவு இல்லை. உடனேயே அருந்தவராஜாவிற்கு அதை அனுப்பிவைத்தான்.

ஆனால் நல்ல பதில் கிடைத்த பாடாக இல்லை. ஒன்று அவர்கள் அங்கு வேறு எந்தக் குற்றங்களும் செய்யவில்லை. இல்லையா அவருடைய தேடல் இன்னும் முழுமையடையவில்லை.

ஒரு வாரம் கடந்திருந்தது. சிறைக்காவல் அதிகாரி கிருபானந்தத்திற்கு மனத்தில் பெரும் பரபரப்பும் மகிழ்ச்சியும். அவ்வளவு வேகமாக வாசுசேனனின் வழக்குகளை ஒன்றுமில்லாமலாக்குகிற வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன.

உண்மையில் எப்போதோ வெளியில் சென்றிருக்க வேண்டியவன் அவன். அவனுக்காக எடுத்துச் செய்ய யாரும் இல்லாதது, அவனும் அதற்கான அக்கறையைக் காட்டாமல் அங்கு இருப்பதே போதும் என்பது போல் இருந்தது, அவனுடைய முரட்டுத்தனங்களால் சிறைச்சாலைக்குள்ளேயே நடக்கிற அடிதடிகள், சிவநாதருக்காக களவாக வெளியில் சென்றபோது பிடிபட்ட கேஸ், சிவநாதரின் சதி என்று சிறையே கதி என்று இருந்துவிட்டான் வாசுசேனன்.

அவன் பற்றிய அத்தனையும் அவருக்குத் தெரியும். ஆனால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாது. சொன்னால் அவர் உயிர் பறிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் குடும்பத்தின் நிலை?

அதே நேரத்தில் மனச்சாட்சியை மொத்தமாக மாடு மேய விட்டுவிட்டு இருக்கவும் முடியவில்லை. அவனுக்கு இழைக்கப்பட்டது அநீதியிலும் அநீதி. அநீதி என்பதை விடவும் பெரும் பாவம் இழைக்கப்பட்டிருக்கிறது. அது தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் அவன் மீது ஒரு பரிதாபம்.

இப்போது அது எல்லாவற்றுக்கும் பதில் போன்று அவன் நிரந்தரமாக வெளியே போகப்போகிறான்.

அதே நேரத்தில் இது நல்லதற்கான அறிகுறியாகவும் அவருக்குத் தெரியவில்லை. அவர் அறிந்த சிவநாதர் இதற்கும் சேர்த்து வாசுசேனனுக்கு ஆபத்தை விளைவிப்பார் என்று மனம் சொல்ல வாசுசேனனுக்கு அழைத்தார்.

“வாசு, வேலை நடக்குது. ஆனா இனித்தான் நீ கவனமா இருக்கோணும். நீ சொன்னதும் செய்துபோட்டுப் போற ஆள் இல்ல அவர். அந்தப் பிள்ளையை உன்னட்ட இருந்து வாங்கின கையோட உனக்கு என்னவும் நடக்கலாம். திரும்ப திரும்பச் சொல்லுறன் அலட்சியமா இருக்காத. உனக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய். ஆனா அவரால உன்னைப் போல எத்தினை பேரையும் உருவாக்கலாம். இந்தப் பக்கம் இதைச் செய்துகொண்டே அந்தப் பக்கம் உன்னை விழுத்திறது எப்பிடி எண்டு கட்டாயம் பாப்பார்.” என்று தனியாகச் சென்று சொல்லிவிட்டு வந்தவர் அதிர்ந்து நின்றுவிட்டார்.

அங்கே எல்லாளனும் கதிரவனும் வந்துகொண்டிருந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!