ஆட்டநாயகன் 22.2

“அம்மாவோட நான் கோவம்.”

“ஏன் செல்லம்?”

“அவா உங்களைக் கொல்லப் போறாவாம்.” என்றதும் கதிரவன் பக்கென்று சிரித்துவிட்டான் என்றால், திரும்பி மனைவியைக் கண்டிப்புடன் பார்த்தான் எல்லாளன். அதையெல்லாம் அவள் கருத்தில் கொள்ள வேண்டுமே.

“ஊருக்கு மட்டும்தான் நான் நல்லவளாம் எண்டு சொன்னவரெல்லாம் முறைக்கிறார் கதிரவன்.” என்று தலையைச் சிலுப்பிவிட்டு, “வாசலிலேயே நிக்காம உள்ளுக்கு வாங்க கதிரவன்.” என்று அவனை அழைத்தாள்.

“இல்ல இல்ல! நானும் கடிடவன் மாமாவும் கடைக்குப் போகோணும்.” என்று அவனுக்கு முன் பதில் சொன்னாள் தீபனா.

“அப்பாவும் மாமாவும் களைச்சுப் போயிட்டினம் செல்லம். இன்னொரு நாளைக்கு போகலாம்.”

“கடிடவன் மாமாக்கு கைக்கேல்லையாம். இல்லை எல்லா?” என்று தாயிடம் பதில் சொன்னது போதாது என்று கதிரவனின் கன்னம் இரண்டையும் தாங்கி அவள் ஆர்வமாய் வினவியபோது மறுப்பானா கதிரவன்?

எல்லாளன் ஜீப்பில் பிள்ளைகளைச் சும்மாவும் ஏற்ற மாட்டான். அதில் அவன் பைக்கை எடுத்துக்கொண்டு சின்னவர்கள் இருவரோடும் சென்று, அவர்களுக்குப் பிடித்ததாக வாங்கி வந்து, எல்லாளன் ஆதினி இருவரிடமும் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான் கதிரவன்.

இது எப்போதும் நடப்பதால் ஒரு அமைதியான சிரிப்புடன் பேசாமல் இருந்தான் கதிரவன். கடைசியில் அங்கேயே இரவுணவையும் முடித்துக்கொண்டுதான் புறப்பட்டான்.

வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து, சின்னவர்கள் இருவரையும் உறங்க வைத்துவிட்டு ஆதினி வந்தபோதும் பெரிதாக எந்தப் பேச்சும் இல்லாமல் கட்டிலில் சரிந்து கண்களை மூடியிருந்தான் எல்லாளன். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் அவன் மேலேயே தொப்பென்று விழுந்தாள் ஆதினி.

“அம்மா!” என்று சத்தமில்லாமல் அலறி, “என்னடி?” என்று அதட்டினான்.

“நான் கோவமா இருக்கிறன். என்னைச் சமாதானப்படுத்தாம என்ன செய்றீங்க?”

அந்த நொடியில் அவன் சஞ்சலங்கள் எல்லாம் ஓரமாகப் போயின. உடம்பு கழுவி, நைட்டி ஒன்றில் இரவில் பூத்த பூவைப் போன்று மலர்ந்திருந்தவளையே ரசனையுடன் பார்த்தான். கைகள் வேறு அவளைத் தனக்கு வாகாக மாற்ற, “வேற ஏதும் ஐடியா இருந்தா கொலை பண்ணிருவன் ராஸ்கல்! பாக்கிறாராம் பார்வை. நான் எப்ப உங்களுக்குத் தோளை உரிச்சு உப்புக்கண்டம் போட்டனான்? சிவனே எண்டு இருந்தவளை இழுத்து வச்சுத் துவக்கை பறிக்கிறன் எண்டு மனசை கெடுத்தது நீங்க. குறை என்னிலயா?” என்று சீறினாள் அவள்.

“எங்க அந்த கெட்டுப்போன மனசு? காட்டு ஒருக்கா.” என்றதும் ஆதினிக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்துவிடப் பார்த்தன.

“கெட்ட படவா! இன்னும் அந்தக் கள்ளக்குணம் போகேல்ல என்ன. அண்டைக்கு இந்த அறைக்க நீங்களா வந்து என்ன எல்லாம் செய்தனீங்க?”

அவர்களின் முதல் முத்தம். அவள் மிரண்டதும் அவனிடம் துவண்டதும் என்று என்றும் மறக்கமுடியாத நெருக்கம் அது. அதன் நினைவே அவன் உள்ளத்திலும் உடலிலும் பற்பல மாற்றங்களை நிகழ்த்திவிட, முற்றிலுமாக ஆதினியின் அடிமையாகிப்போனான் காவல்காரன்.

“என்ர சிலுக்கிட்ட சில்லறைத்தனமாத்தான்டி நடக்கோணும். இல்லாட்டி அடங்கிற ஆளா நீ? அந்த நேரம் இஞ்ச வந்தும் என்னைப் பாக்காம இருந்தவள்தானே நீ? ஆனா இப்ப வரை அந்த வாய் அடங்கேல்ல.” என்றவன் அவள் இதழ்களை அடக்கும் வேளையில் மூழ்கி, அவளைச் சமாதானப்படுத்த, அவன் துணைவி அவனைச் சாந்தப்படுத்தினாள்.

*****

இந்த ஒரு வாரத்தில் காயம் முற்றிலுமாக மாறிவிடவில்லைதான். ஆனால் ஆழமாகக் கத்தி கீறிய பகுதி தவிர்த்து மிகுதி இடங்கள் கேதகிக்குக் காய்ந்திருந்தன. ஓரளவிற்குத் திரும்பிப் படுக்கவும், கைகளை அசைக்கவும் இயலுமாய் இருந்தன.

இன்னுமே கைக்குப் பலம் கொடுத்து வேலைகள் செய்ய முடியாதுபோனாலும் மெல்ல மெல்லச் சமைக்க ஆரம்பித்திருந்தாள். முதலில் ஆண்கள் மூவரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. சும்மா இருந்தே பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது என்று ஒரு நாள் அவள் அழுத பிறகு சமையல் பகுதிக்கு அவளையும் சேர்த்துக்கொண்டனர்.

பேச்சு என்று வந்தால் இன்னுமே இறுக்கம்தான். தேவையற்று ஒரு கேள்வி கேட்டுவிட முடியாது. வாயை இறுக்கி மூடிக்கொள்வார்கள். அதைத் தாண்டி அவள் சமையல் பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் மூவரில் ஒருவர் நிச்சயம் அவளுக்கு உதவிக்கு நிற்பார்கள்.

டைகர் ஆரம்ப நாள்களில் அவளை முறைத்துக்கொண்டுதான் திரிந்தான். இப்போதும் அவளுடன் நட்புப் பாராட்ட அவன் தயாராயில்லை. என்றாலும் தன் எஜமானர்கள் அவளோடு இலேசாக இணக்கமாகியிருப்பதில் அவளைக் கண்டால் குரைப்பதை நிறுத்தியிருந்தான்.

முன்னரெல்லாம் அவளின் நடமாட்டம் தெரிந்தாலே பாய்வதற்குத் தயார் நிலையில் நிற்பவன் இப்போது சாவகாசமாகப் படுத்தே இருக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தான்.

அவள் கூப்பிட்டு உணவு கொடுத்தால் சாப்பிடுவான். சில நேரங்களில் வெய்யில் இறங்கிய பிறகு மொட்டை மாடித் தரையில் அவள் அமர்ந்திருந்தால் தானும் சென்று முன்னால் அமர்ந்துகொள்வான். அவ்வளவுதான். மற்றும்படி அவளோடு பேசிச் சிரித்து நல்லுறவு பேண அவன் தயாராயில்லை.

அன்று மாலை வாசுசேனனுக்குச் சிவநாதர் அழைத்தார். “வேலை எல்லாம் வேகமா நடக்கிறது உனக்கே தெரிஞ்சிருக்கும் வாசு. இனியாவது கேதகியக் கொண்டுவந்து தந்திட்டுப் போ.” என்று சொன்னார் அவர்.

“கதைக்க வேற ஏதாவது முக்கிய அலுவல் இருக்கா?” என்றான் அவன்.

“வாசு!”

அவன் அமைதியாக இருந்தான். அவனிடம் அதட்டல் உருட்டல் எடுபடாது என்பதை மறந்துவிட்ட தன்னையே நொந்தபடி, “அந்த எல்லாளன் கொஞ்சம் கொஞ்சமா நெருங்கி வாறான் வாசு. எனக்கு என்ர மகன்ர வாழ்க்கை முக்கியம். இல்லையா அவளை நீயே முடிச்சிவிடு.” என்றார் தன்மையாக.

“அண்டைக்குச் சொன்னதுதான். ஒழுங்கா எனக்கான விடுதலையை வாங்கித் தந்தா அவளைக் கொண்டுவந்து உன்னட்ட தந்திட்டு போறன். அவளைக் கொல்லுவியா, கொஞ்சுவியா அது உன்ர பிரச்சினை. இதுக்கு நடுவில சைன் வைக்க இவன் போலீஸ் ஸ்டேஷன் வருவான், அப்ப ஏதாவது செய்யலாம் எண்டு சின்ன பிள்ளைத்தனமா பிளான் போடாத. அதுக்குப் பிறகு எதைப்பற்றியும் யோசிக்க மாட்டன்.” என்றவனின் பேச்சில் அங்கே சிவநாதர் பல்லைக் கடித்தார் என்றால் கேதகி நடுங்கியேபோனாள்.

கொல்லுவியா கொஞ்சுவியா என்றால் என்ன அர்த்தம்? யோசிக்க கூட முடியாமல் நெஞ்சு பதறியது அவளுக்கு. ரவுடி என்றாலும் கண்ணியமானவன் நல்லவன் என்று நினைத்தாளே.

அவள் இங்கே அந்த விடுதி மொட்டை மாடியில் அவர்களோடு வாசம் செய்ய வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், ஒற்றை அறை மட்டுமே இருப்பதை எண்ணி அவள் சங்கடப்பட்டபோது அவளுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்பினை அன்றே வரவழைத்து, அந்த அறையையே இரண்டாகப் பிரித்துத் தந்திருந்தான்.

அது மட்டுமில்லாமல் காய்ச்சலில் சுருண்டு கிடந்தவளை இரவிரவாகக் கவனித்துக்கொண்டது, பிறகு வியர்த்து வழிந்தவளை நிமிர்ந்தே பாராம்கள் உடல் துடைக்க உதவியது, அவள் காயத்தைக் கவனித்துக்கொண்டது, வேளா வேளைக்கு மருந்து மாத்திரைகள் தந்தது என்று அவன் தன்னைக்கூட இந்தளவில் கவனித்துக்கொள்ளவில்லை.

அதனாலோ என்னவோ அவன் கெட்டவன் என்று தெரிந்திருந்தும் ஒரு நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் அவளுள் உண்டாகியிருந்தன. அதையெல்லாம் மொத்தமாக நொறுக்கிவிடுகிறவன் போன்று என்ன சொல்லிவிட்டான்?

அவன் அழைப்பைத் துண்டித்ததுமே ஓடிப்போய் அவன் கையைப் பற்றிக்கொண்டு, “ப்ளீஸ் ப்ளீஸ் என்னை எங்கயும் கொண்டுபோய் விட்டுடாதீங்க. அந்த வேந்தனிட்ட விடப்போறீங்களா? சிவநாதன் எண்டுறது ஆர்? அவருக்கு என்னத்துக்கு நான்? ப்ளீஸ் என்னை எங்கயும் விடாதீங்க. என்னை வச்சு என்னவோ நடக்குது எண்டு தெரியுது. ஆனா ப்ளீஸ் இதுக்கும் மேல எதையும் தாங்கிற சக்தி எனக்கில்லை. என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கண்ணீருடன் துடித்தாள்.

முதல் வேலையாக அவன் கையைப் பற்றியிருந்த அவளின் இரண்டு கைகளையும் சுட்டிக்காட்டி எடு என்று மற்றக் கையால் சைகை செய்தான் வாசுசேனன்.

அவளும் அவன் கரம் பற்றியதை எண்ணி பதறித்தான் போனாள். அது அவலறியாமலேயே நடந்த ஒன்று. ஆனாலும் எப்படி? உள்ளம் பதறினாலும் வேகமாகத் தள்ளி நின்றுகொண்டு, “சொறி சேனா! ஆனா ப்ளீஸ்…” என்றவளை நோக்கித் தன் உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து உஷ் என்றான் அவன்.

இப்படியே அவளை அடக்கினால் எப்படி? கண்களில் திரண்டுவிட்ட நீருடன் இயலாமையுமாக அவனை நோக்கினாள் அவள்.

“ப்ளீஸ் சேனா. உங்களோடயாவது என்னை வச்சிருங்க ப்ளீஸ். வேற எங்கயும் விட்டுடாதீங்க. உயிர் போனா கூட பரவாயில்ல. வேற ஏதும் களங்கம் வந்திடுமோ எண்டு பயமா இருக்கு.” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுத்தவளைக் கடந்து போயிருந்தான் அவன்.

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!