ஆட்டநாயகன் 23

அத்தியாயம் 23

காண்டீபனின் வீட்டில் சம்மந்தருக்கும் மாதவனின் மனைவிக்கும் ஏழாம் நாள் காரியங்கள் நடந்தன. எல்லோருமே கனத்துப்போன மனத்துடன்தான் அனைத்தையும் செய்தார்கள்.

அதுவும் அதிரனையும் மாதவனின் பச்சிளம் குழந்தையையும் பார்க்கும் பொழுதிலெல்லாம் உள்ளத்தோடு சேர்த்து கண்களும் கலங்கிப்போயின.

இன்னுமே ஆதினியும் சியாமளாவும் நேரம் கிடைக்கிறபோது வருவார்கள்தான் என்றாலும் அது ஒரு நாளில் சிறு பொழுது மட்டும்தானே. கூடவே இருக்க வேண்டிய தகப்பனின் இடத்தை இத்தனை காலமும் ஓரளவுக்கேனும் சம்மந்தர் நிரப்பினார். இனி அவரும் இல்லை.

அதிரன் இன்னுமின்னும் அமைதியாகிப்போனான். மிதிலா எதையும் தைரியமாக நின்று அணுகுகிறவள் இல்லை. அதில் அப்பாவும் இல்லை அப்பப்பாவும் இல்லை என்கிற உண்மை இன்னும் அதிகமாகத் தாக்கி, அவனுக்குள் பாதுகாப்பற்ற உணர்வை, பயத்தை விதைக்கிறதோ என்று எல்லாளன் பயந்தான்.

அந்தப் பாலகனிடம் எதையும் உடைத்துப் பேசவும் முடியவில்லை. தைரியமாக இருக்க வேண்டும், எதையும் மனத்தில் வைத்திருக்கக் கூடாது, என்ன என்றாலும் தயங்காமல் மாமாவிடம் சொல்ல வேண்டும், உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்று மறைமுகமாகத் தைரியம் கொடுப்பான்.

அதிரன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டான். யார் என்ன சொன்னாலும் செய்தான். ஆனால், மனம் திறந்து கதைக்க மட்டும் மறுத்தான். நாளாக நாளாக அவன் இன்னுமின்னும் அமைதியாகுவது போலொரு தோற்றம் எல்லாளனுக்கு.

நெஞ்சைப் பிசைந்தது. உற்ற நண்பனின் மகனைச் சிறு குறையும் இல்லாமல் கண்ணுக்குள் பொத்தி வைத்து வளர்க்கத்தான் அவனும் ஆசைப்படுகிறான். ஆனால் எப்படி? அவன் வேலை, அதற்குப் பின்னால் இருக்கிற ஆயிரம் சிக்கல்கள், எப்போதும் அலைந்துகொண்டே இருப்பது என்று சொந்தக் குடும்பத்துக்கே நேரம் ஒதுக்க முடியாமல் அல்லாடுகிறவன் அவன். முழுக் கவனம் எடுத்துச் சின்னவனைக் கவனிக்க முடியவில்லை.

தன்னால் முடிந்த பொழுதுகளில் எல்லாம் வந்து பார்த்துக்கொண்டு போவான்தான். என்றாலும் ஒரு குற்ற உணர்ச்சி அவனைப் போட்டுத் தின்ன ஆரம்பித்தது.

ஒரு நேரம் காண்டீபனைத் தவறாகப் புரிந்துகொண்டு பிரிந்து வந்தான். அடுத்த முறை காண்டீபனைக் கைது செய்து, அநியாயமாக அவனையே பறிகொடுத்தான். அது போதாது என்று இன்று அவன் தகப்பனையும் வாரிக் கொடுத்துவிட்டான். இப்போது அவன் மகன் தவித்து நிற்கிறான். ஆனாலும் கூட அவன் குறையைத் துடைக்க முடியாத பாவியாக இவன். என்னதான் பார்த்து பார்த்துக் கவனித்துக்கொண்டாலும் தகப்பனுக்குச் சமனாக வர முடியுமா என்ன?

அதிரனின் முன்னே அவனால் அவன் பிள்ளைகளைக் கூடத் தூக்க முடிவதில்லை. என் அப்பா இருந்திருந்தால் அவரும் இப்படித்தானே என்னை வளர்த்திருப்பார் என்று சின்னவன் நினைத்துவிடுவானோ என்று பயம்.

நிச்சயமாய் மிதிலா இன்னொரு திருமணம் செய்ய வேண்டும். அதுதான் இதற்கு நல்ல தீர்வாக அமையும். அதற்கு அவளுக்கு ஏற்ற ஒருவனைக் கண்டுபிடிக்க வேண்டும். வருகிறவனுக்கும் மிதிலாவுக்கும் ஒத்துப்போக வேண்டும். அதை விடவும் முக்கியம் அதிரன் அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயின் மறு திருமணமே அவனின் உள்ளத்தைப் பாதிக்கும் இன்னொரு விடயமாக மாறிவிடக் கூடாது. இவன் வேறு வாயைத் திறந்து எதையும் சொல்கிற பிள்ளை இல்லை.

திடீரென்று மாதவனின் குழந்தை வீறிட்டு அழுதாள். அதுவரை நேரமும் மனைவியின் இழப்பில் மூழ்கிக்கிடந்த மாதவன் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்துவிட்டு, அன்னையிடம் இருந்த மகளிடம் ஓடினான்.

அங்கே சின்னவளுக்கு என்னவோ கடித்திருந்தது. மாதவனின் பின்னே சென்ற அதிரன்தான் அதைக் கவனித்துக் காட்டினான்.

அதைக் கவனித்து முடித்த பிற்பாடும் அவள் அழுகை மட்டுப்படுவதாக இல்லை. “பால் எங்கயம்மா?” என்று அன்னையிடம் கேட்டான் மாதவன்.

அந்தப் பெண்மணி முற்றிலுமாக உடைந்திருந்தார். அஞ்சலி, அவளால் உண்டான பிரச்சனைகள், அதன்போது சிறை சென்ற மாதவன், அவன் இல்லாமல் அவர்கள் அனுபவித்த சிரமங்கள், அதன் பிறகு கணவரை இழந்தது, இப்போது மருமகளைப் பறிகொடுத்துவிட்டுப் பச்சிளம் குழந்தையோடு ஒற்றையாக நிற்கும் மகன் என்று, வாழ்க்கை நெடுகிலும் துன்ப துயரங்களைத் தொடர்ந்து அனுபவித்த பெண்மணி மிகவும் மூத்துத் தெரிந்தார்.

தரையில் பேத்தியின் அருகில் அமர்ந்திருந்தவர், “பொறுங்கோப்பு, பால் கரைச்சுக்கொண்டு வாறன்.” என்று சிரமப்பட்டு எழுந்துகொள்வதற்குள் பால் போத்தலைக் கொண்டுவந்து நீட்டினாள் மிதிலா.

முகத்தில் நிம்மதி பரவ, நன்றிப்பெருக்குடன் அவளை நோக்கிவிட்டு அதை வாங்கி மகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் அருகிலேயே அமர்ந்திருந்து சின்னவளின் விரல்களுக்குள் தன் ஒற்றை விரலைக் கொடுத்திருந்தான் அதிரன்.

உண்மையில் மிதிலாவும் அதிரனும் இல்லையானால் எந்த நேரமும் கண்ணீரைக் கசிய விட்டபடி இருக்கும் அன்னையை வைத்துக்கொண்டு நிச்சயம் மாதவனால் சமாளித்திருக்கவே முடியாது. அங்கிருப்பவர்களை நடந்த மரணங்களில் இருந்து ஓரளவிற்கேனும் திசை திருப்பிவிடுவது சின்னவள்தான்.

பால் அருந்தி, ஏவறை எடுத்து முடித்த சில நிமிடங்களிலேயே உறங்கியிருந்தாள் குழந்தை. அவளைத் தன் அன்னையின் அருகில் கிடத்திவிட்டு, அதிரனையும் அவர்களுக்குத் துணைக்கு இருத்திவிட்டு வெளியே வந்தான் மாதவன்.

அங்கே காண்டீபனின் வீட்டு முற்றத்தில்தான் ஆதினியும் எல்லாளனும் அமர்ந்திருந்தனர். சின்னவர்களைச் சியாமளா கூட்டிக்கொண்டு புறப்பட்டிருந்தாள்.

“ஏதாவது தெரிய வந்ததா சேர்?” அங்கிருந்த நாற்காலிகளில் ஒன்றில் வந்து அமர்ந்துகொண்டு வினவினான் மாதவன்.

மிதிலாவுக்கும் அன்று சம்மந்தமே இல்லாமல் வாசுசேனனைப் பற்றி விசாரித்துவிட்டு வைத்தவன் அதன் பிறகு எதைப் பற்றியும் ஒன்றுமே சொல்லவில்லையே என்கிற கேள்வி இருந்ததில் அவனையே பார்த்தாள்.

“விசாரணை போய்க்கொண்டு இருக்கு மாதவன்.” பிடிகொடுக்காமல் பதில் சொன்னான் எல்லாளன்.

அவனை நம்பாமல் பார்த்தான் மாதவன். எல்லாளனின் விசாரணை எப்படி இருக்கும் என்று மாதவனுக்குத் தெரியாதா என்ன? அப்படி இருக்க இன்னுமே விசாரணை போய்க்கொண்டிருக்கிறது என்றால்?

“இன்னும் நீங்க கண்டுபிடிக்கேல்லையா?” மாதவன் கேட்கத் தயங்கியதை மிதிலா கேட்டாள்.

“கண்டுபிடிச்சா சொல்லுவன்தானே. நான் ஏன் மறைச்சு வைக்கப்போறன்?” என்றவனின் பேச்சில் இலேசான அனலடித்தது.

அதிலேயே மிதிலா வாயை மூடிக்கொண்டாள்.

“என்ன காரணம் எண்டு நினைக்கிறீங்க சேர்? அநியாயமா போனது ரெண்டு அப்பாவி உயிர். யோசிக்க யோசிக்க இன்னும் எத்தினை இழப்பத்தான் பாக்கிறது எண்டு மனம் கொதிக்குது. அந்த மொட்டையன் ஆர் எண்டு ஏதும் தெரிஞ்சதா?”

மாதவனின் வார்த்தைகள் மனத்தை அசைத்துப் பார்த்தாலும், “இன்னும் இல்ல மாதவன். ஆனா கெதியில எல்லாம் முடியும்.” என்று, அப்போதுமே உருப்படியாக எந்தப் பதிலும் சொல்லாமல் மழுப்பிவிட்டு ஆதினியோடு புறப்பட்டிருந்தான்.

ஆதினிக்குக் கணவன் எதையோ மறைக்கிறான் என்று அவன் பூநகரிக்கு வெளிக்கிட்டுச் சென்ற நாளில் இருந்தே தெரியும். அது இன்று உறுதியாயிற்று. ஆனாலும் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எதுவும் கேட்கவில்லை.

வீட்டு வாசலில் வந்து அவளை இறக்கி விட்டுவிட்டு அவன் அப்படியே போக முயல, “மேல வந்திட்டுப் போங்க!” என்றுவிட்டு இறங்கி நடந்தாள் அவள்.

“எனக்கு நேரமில்லை ஆதினி.” என்றவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள் அவள்.

அவனால் அந்தப் பார்வையைத் தட்டிவிட்டுப் போக முடியவில்லை.

அது கொடுத்த சினத்தில், ‘இவளின்ர இந்தத் திமிர் அடங்கவே அடங்காது!’ என்று அவளை வறுத்தெடுத்தபடி தானும் மேலே சென்று, “என்ன ஆதினி?” என்றான் கோபத்தோடு.

ஒன்றுமே சொல்லாமல் அறையின் கதவை இலேசாகச் சாற்றிவிட்டு, அதன் பின்னே அவனை இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. எதைக் குறித்தும் சஞ்சலமுறுகிறாளோ என்று எண்ணிக் கவலை கொண்டு, “டேய் ஆதிம்மா என்னடா?” என்றான் கனிவுடன்.

அவன் இடையை இறுக்கிக்கட்டிக்கொண்டு அவன் முகத்தைச் சில கணங்களுக்குப் பார்த்தாள் ஆதினி. என்னாயிற்று இவளுக்கு என்று அவன் யோசிக்கையிலேயே எம்பி, பூவில் அமரும் வண்ணத்துப்பூச்சியின் இதத்துடன் அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தாள்.

வியப்பில் மின்னிய விழிகளும் உதட்டினில் தானாய் மலர்ந்த முறுவலுமாக அவளைப் பார்த்தான் அவன்.

அவன் கன்னங்கள் பற்றி, “நீங்க எப்பவுமே நேர்மையா, நியாயமா, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமத்தான் நடப்பீங்க. அதாலதான் இந்த எல்லாளன்ர கெடுபிடி பிடிக்காத காலத்தில கூட உங்களை எனக்குப் பிடிச்சது. உங்களச் சேர்ந்த மனுசருக்கு ஒண்டு எண்டா எப்பவும் நீங்க அவேக்காக நிண்டிருக்கிறீங்க. அதையும் தாண்டி நடக்கிற எதுவும் எங்கட கட்டுப்பாட்டில இல்ல எல்லாளா.” என்று சொன்னாள் அவள்.

அவள் முகத்தையே சில கணங்களுக்குப் பார்த்தான் எல்லாளன். புருவங்கள் இரண்டையும் இலேசாக மேலே உயர்த்தி சிறு முறுவலுடன் என்னவென்று அவள் விசாரிக்க, சட்டென்று அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அந்த நொடியில் அவன் உள்ளத்தில் எந்த அலைப்புறுதல்களும் இல்லை. அவள் முத்தத்திலும், சொன்ன வார்த்தைகளிலும் உள்ளம் தளும்பி நின்றது. ஆதினியும் கணவனின் முதுகை இதமாக வருடிக்கொடுத்தாள்.

மனைவி தந்த ஆறுதலில் தெளிந்து நிமிர்ந்து அவளைப் பார்த்து நிறைவாய் முறுவலித்தான்.

“இப்ப ஓகேயா நீங்க?”

இந்த ஆறுதலைத் தரத்தான் அழைத்திருக்கிறாள். அவள் பால் நெஞ்சம் கரைய, “செல்லமடி நீ!” என்று அவள் கன்னங்களில் கொஞ்சிவிட்டு, கீழே வந்து பிள்ளைகளோடும் கொஞ்ச நேரத்தைச் செலவழித்துவிட்டுப் புறப்பட்டவனின் உள்ளம் தெளிந்திருந்தது.

அதற்காகவே காத்திருந்தவர் போன்று திருகோணமலையிலிருந்து அவனுக்கு அழைத்தார் அருந்தவராஜா.

“நீ கேட்ட ஆக்களப் பிடிச்சாச்சு எல்லாளா. அந்த ஐஸ் கஃபேல இருந்த மூண்டு பேர் விவரம் என்னட்ட இருக்கு. இஞ்ச எந்தக் கிரிமினல் வேலையும் செய்த மாதிரி இல்ல. அல்லது இன்னும் எங்களிட்ட மாட்டுப்படேல்லயா இருக்கலாம். எங்கட டிப்பார்ட்மெண்ட்லயும் கறுப்பாடுகளுக்குப் பஞ்சமா சொல்லு. சரி சொல்லு, அடுத்ததா நான் என்ன செய்யோணும் உனக்கு?” என்று கேட்டாரா அவர்.

அதைக் கேட்டு அவனை ஒருவித உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவரை அழைப்பில் வைத்துக்கொண்டே அவர் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தான். அதே முகங்கள்.

“அங்கிள், இவங்களேதான். ஆனா இப்ப இவங்களை அரெஸ்ட் பண்ணினா சிவநாதர் அலர்ட் ஆயிடுவான். கேதகிய எதுவும் செய்ய சான்ஸ் இருக்கு. எங்களுக்கு முதல் அந்தப் பிள்ளை கிடைக்கோணும் அங்கிள். அரெஸ்ட் செய்யாதீங்க. ஆனா உங்கட கண் பார்வையிலயே மூண்டு பேரும் இருக்கட்டும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

error: Alert: Content selection is disabled!!