அத்தியாயம் 25
கடந்த இரண்டு வாரங்களாகவே ஆதினியின் உடலில் சிலபல மாற்றங்கள். மாதவிடாய் தள்ளிப்போயிருந்தது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இது எதன் அறிகுறியாக இருக்கும் என்று தெரியாமல் இருக்குமா என்ன?
“ஆதிம்மா! நான் திரும்பவும் அப்பா ஆகிட்டனாடி?” என்று தினமும் இரவில் அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தபடி கேட்பான் எல்லாளன்.
வாலிபப் பருவத்திலேயே பெற்றவர்களை இழந்து, தானும் தங்கையும் மட்டுமாகவே வாழ்ந்தவனுக்குப் பிள்ளைகள் என்றால் மிகுந்த விருப்பம். குறை என்று சொல்வதற்கு இல்லாமல் ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், அதே போதும் என்று ஆதினி நினைத்தாள்.
அவனுக்கு அதில் உடன்பாடில்லை. கட்டாயம் நான்கு வேண்டும் என்று நின்று, கடைசியில் அவர்களின் பேரம் மூன்றில் வந்து முடிந்திருந்தது. யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்ததிலும், தீபனாவிற்கு மூன்று வயதாகிவிட்டதிலும் கணவனும் மனைவியும் அடுத்த குழந்தைக்குத் தயாராகியிருந்தனர்.
அப்படி இருக்க மாதவிடாய் தள்ளிப்போனது, அதற்கு ஏற்றாற்போல் அவள் முகத்தில் தெரியும் களைப்பு, உணவில் நாட்டமில்லாமல் இருப்பது எல்லாம் அவனுக்கு பச்சைக் கொடியைக் காட்டினாலும் அவள் பதில் சொல்ல வேண்டுமே. கொஞ்ச நாள்களாக அவனை அவள் சமாதானத்திற்கும் விடவில்லை.
அதனாலேயே தன் உழைப்பின் பலன் என்ன என்று தினமும் கேட்பான்.
“அவ்வளவு ஆசையோ காவல்துறைக்கு?” என்று சீண்டுவாள் அவள்.
“இல்லாம இருக்குமா?”
“திரும்ப உங்களுக்கு டிரான்ஸபர் வந்தா?” உண்மையில் அவளுக்கு அந்தக் கலக்கம் உள்ளூர இருந்ததில் வினவினாள்.
“நீ இஞ்சயே இரு. நான் மட்டும் போறன்.” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “என்னையும் பிள்ளைகளயும் விட்டுப்போட்டுப் போவீங்களா? உங்கட இந்த வாய்க்கே உங்களுக்கு அடுத்த பிள்ளை இல்லை.” என்று முறுக்கிக்கொண்டிருந்தாள் ஆதினி.
ஆனால், மூன்றாவது வாரத்தையும் எட்டியபோது அவளுக்கே தெளிவாகத் தெரிந்துபோயிற்று. இனியும் அவனோடு விளையாட விருப்பமில்லை. கருவை உறுதி செய்யும் எந்தக் கருவியையும் அவள் பயன்படுத்தவில்லை. முதல் பிள்ளைகளுக்கும் அவனோடு மருத்துவரைப் பார்க்கச் சென்று, இருவருமாகத்தான் அறிந்து வந்தார்கள்.
அப்படியே இந்தமுறையும் ஆசைப்பட்டாள் ஆதினி.
அன்று எல்லாளனைப் பாதி நாள் விடுமுறை எடுக்கச் சொல்லிவிட்டு, பிள்ளைகளையும் தயார் செய்துகொண்டு கணவனும் மனைவியுமாகத்தான் காலையிலேயே புறப்பட்டார்கள். இப்படி அம்மாவும் அப்பாவுமாக அவர்களை நேசரிக்கும் பள்ளிக்கூடத்துக்கும் விட வருவது என்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வு என்பதில் பிள்ளைகள் இருவருக்கும் கொண்டாடடமோ கொண்டாட்டம்.
அவர்களை விட்டுவிட்டு மகப்பேறு மருத்துவரிடம் சென்றார்கள். வைத்தியரும் ஏமாற்றவில்லை. அத்தனை பரிசோதனைகளையும் செய்து பார்த்துவிட்டு அவர்கள் மூன்றாம் முறையாகப் பெற்றோராகியிருப்பதைச் சிரித்த முகத்துடன் உறுதி செய்தார்.
எதிர்பாராததோ தெரியாததோ அல்ல. ஆனாலும் இருவர் முகங்களும் தானாய் மலர்ந்து விகசித்துப்போயின.
வைத்தியரின் அறையை விட்டு வெளியே வந்ததும் தாமரையாய் தன் முகம் பார்த்து நின்றவளை ஒற்றைக் கையால் அணைத்து, அவள் நெற்றியில் இதழ் பதித்து மீட்டான் எல்லாளன்.
“உனக்கு முதலே தெரியும்தானே?” காரினுள் ஏறியதும் கேட்டான் எல்லாளன்.
“ஏன், உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்தான்…”
“பின்ன என்ன?”
“என்னடி இப்ப?” முகம் முழுக்கப் புன்னகையால் நிறைந்திருந்தாலும் அவனின் இயல்பான அதட்டல் தலைதூக்கிற்று.
“ஒண்டும் இல்லையே.” என்றாள் அவளும் சிரிப்புடன்.
“இல்லையே. இருக்காமே.”
“என்ன இருக்காம்?”
“என்ர சிலுக்கின்ர வயித்துக்க குட்டி சில்வண்டு இருக்காம்.” என்றவனை ஆசையாய் நோக்கியவள் அவனைத் தன்னிடம் இழுத்து முகம் முழுக்க முத்தமிட்டாள்.
தானும் தன் சந்தோசத்தை முத்தங்களாக அவளுக்கு மொழி பெயர்த்துவிட்டு, அவளை வசதியாக அமர வைத்துவிட்டு விலகி அமர்ந்தான் எல்லாளன். “என்ர வேலைய உனக்குத் தெரியும்தானே. என்னையும் எங்கட மூண்டு பிள்ளைகளையும் சேர்த்து நீதான் பாக்கோணும் ஆதிம்மா.” என்றான் ஒரு விதமான பரிதவிப்புடன்.
இப்படிச் சொல்கிறவன்தான் எங்கு நின்றாலும் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் வீட்டில் இருக்கிற அத்தனை பேருக்கும் அழைத்து அவளைக் கவனிக்கச் சொல்லுவான்.
அதில் கனிவாய்ப் புன்னகைத்து, “நீங்க எந்தக் கவலையும் இல்லாமல் வேலையப் பாருங்க. முந்தியாவது தனியா இருந்தம். இப்ப அப்பா, அண்ணா, அண்ணி, சாந்தி அக்கா எல்லாரும் இருக்கினம். எனக்கு என்ன குறை வரப்போகுது?” என்று கேட்டு அவனை ஆறுதல் படுத்தினாள் அவள்.
உண்மைதான். அவன் மனம்தான் காரணமற்றுக் கலக்கமுற்றிருந்தது. வேந்தன், அவன் கூட்டாளிகள் என்று எல்லோரையும் மொத்தமாகக் கைது செய்து, நன்றாகக் கவனித்திருந்தான். அதையறிந்த சிவநாதர் எடுத்து, இவனைச் சும்மா விடமாட்டேன் என்று எச்சரித்திருந்தார். அடுத்த பக்கம் வாசுசேனன். அவனையும் பிடிக்க வேண்டும். பெற்ற தகப்பனையே கொன்றவன் எப்படியானவனாக இருப்பான் என்று அவனால் கணிக்கவே முடியவில்லை.
இருவரும் நேராகக் கோயிலுக்கு வந்திருந்தார்கள். அது, ஆதினி சின்ன வயதில் இருந்தே வந்துபோகும் முருகன் கோவில். எந்த அவசரமும் இல்லாது சுவாமி கும்பிட்டுவிட்டு வந்தபோது இருவர் மனங்களும் நிறைந்திருந்தன.
“கொஞ்ச நாளைக்கு சியாமளாவே பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் கூட்டிக்கொண்டு வரட்டும். நீ ஓய்வா இரு. அடிக்கடி மாடி ஏறி இறங்காத.” என்றபடி கோயிலை விட்டு வெளியே வந்தவர்களின் முன்னால் திடீரென்று ஒருவன் வந்து நிற்கவும் கொஞ்சம் பயந்துபோனார்கள்.

