யார் என்று நிமிர்ந்து பார்த்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. எல்லாம் தெரிந்த எல்லாளனுக்கே அவனைக் கண்டதும் சமாளிக்க முடியாமல் போயிற்று என்றால் ஆதினியின் நிலை?
“ஐயோ அம்மா!” என்று நெஞ்சில் கையை வைத்து நின்றுவிட்டவளுக்குச் சில கணங்களுக்கு இதயத்தின் துடிப்பே நின்றுபோயிற்று. கண் முன்னே காணும் உருவத்தை நம்ப முடியாமல் பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டாள்.
கடுமையான உடற்பயிற்சியில் உடம்பை இரும்பாக்கியது மட்டுமல்லாமல் கடுமை நிறைந்த முகமும், கொலைவெறி தாண்டவமாடும் விழிகளுமாக நின்றாலும் அவளின் தாயுமானவனை அவளுக்குத் தெரியாதா என்ன?
ஆனால், இது எப்படிச் சாத்தியமாகும்? எப்படியோ சாத்தியமாகியிருக்கிறது என்று கண் முன்னே நிற்கும் உருவம் சொல்கிறதே. பயம், பதற்றம் எல்லாம் நொடியில் தொற்றிக்கொண்டதில் அவள் உடலில் உதறல் எடுத்தது.
எல்லாளனுக்குமே பார்வையை அவனிடமிருந்து அகற்ற முடியவில்லை. ஆனால், அவன் பார்வையும் நிற்கும் நிலையும் ஏதோ ஒரு ஆபத்தை அறிவுறுத்திற்று. அந்த நொடியில் வாசுசேனனைக் கவனிப்பதைக் காட்டிலும் தாய்மையுற்றிருக்கும் மனைவியைக் காப்பதே பிரதானமாயிற்று.
அவள் புறம் திரும்பாமலே அவள் கரம் பற்றி, அவளைத் தன் பின்னால் கொண்டுவந்து விட்டுவிட்டு இரண்டடி எடுத்து முன்னே வந்து நின்றான்.
“எல்லாளன்தானே நீ?” அந்தக் குரலில் ஆதினியின் உடல் வெடவெடவென்று ஆடிற்று. கலங்கிவிட்ட விழிகளோடும் நடுங்கும் நெஞ்சத்தோடும் அவன்தானா என்று உற்றுப் பார்க்க முயன்றாள். முடியவேயில்லை. ஆம், இல்லை என்று இரண்டு விதமாயும் அவள் அறிவு வாதிட்டது.
“நீ ஆரு?” என்று திருப்பிக் கேட்டான் எல்லாளன்.
“நான் ஆர் எண்டு ஜெயில் வரைக்கும் போய் விசாரிச்சவனுக்குத் தெரியாது?” சினத்துடன் சீறிவிட்டுக் கண்ணிமைக்கும் நொடியில் அவன் மேல் பாய்ந்தவனைக் கண்டு, “ஐயோ அண்ணா!” என்று பதறி ஓடிவந்தாள் ஆதினி.
“ஆதி வராத! இவன் உன்ர அண்ணா இல்ல. வாசு. வாசுசேனன். தள்ளிப் போ!” கவனம் முற்றிலுமாக வாசுசேனனிடம் இருந்தாலும் மனைவியை எச்சரித்தான் அவன்.
“ஐயோ இல்ல. இது அண்ணாதான். அப்பிடியே இருக்கிறார்.” என்று அழுதாள் ஆதினி.
அவளால் அவர்கள் இருவரும் சராமாரியாக ஒருவர் மற்றவரைத் தாக்குவதைப் பார்க்க முடியவில்லை.
“எங்கட காண்டீபன் உயிரோட இல்ல ஆதினி. இவன் வாசு. அவன்ர சகோதரம். மாமாவைக் கொன்டதும் இவன்தான்.” என்றதும், “என்ன?” என்றவளுக்குக் கிரகிக்கும் சக்தியே இல்லாமல் போயிற்று. சொற்ப நேரத்தில் இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் தாங்குவாள்?
“நீ கிட்ட வராத. கதிரவனைக் கூப்பிடு.” எல்லாளனால் வாசுசேனனைச் சமாளிக்க முடியவில்லை.
அவனுக்குள் உணர்வுகளின் பெரும் போராட்டம். உயிர் நண்பனின் உருவத்தில் இருக்கிறவனைக் கைதிகளையோ காடையர்களையோ கையாள்வது போன்று கையாள முடியவில்லை. எதிர்த்துத் தாக்காமல் அவனைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினான்.
“வாசு சொல்லுறதக் கேளு. எனக்கு உன்னோட கதைக்கோணும். இல்லையோ ஷூட் பண்ணவும் யோசிக்க மாட்டன்.”
“ஷூட் பண்ணடா. அதுக்கு முதல் நீ உயிரோட இருக்கோணுமே.” என்றவன் மூர்க்கத்தனமாய் அவனைத் தள்ளி விழுத்தினான்.
இரண்டுமே சம பலம் கொண்ட சிங்கங்கள். இருவராலும் மற்றவரைக் கட்டுப்படுத்தவோ அடக்கவோ முடியவில்லை. அவன் இவனைத் தாக்கியழிக்க முயல, இவன் தன்னோடு சேர்த்து அவனையும் காக்கும் முயற்சியில் இருந்தான்.
ஆனால், ஒரு கட்டத்தில் எல்லாளனால் அது முடியவில்லை.
ஆதினி வேறு கதிரவனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு இதைக் கண்கொண்டு காண முடியாமல் கதறிக்கொண்டிருந்தாள்.
அவன் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அவள் தமையனின் உருவில் இருக்கிற ஒருவனால் இத்தனை கொடூரத்தனமாகத் தாக்க முடியுமா? தன்னை அறியாது, “ஐயோ அண்ணா, அவரை விடுங்கோ!” என்று கதறினாள்.
வாசுசேனனை இலகுவில் யாராலுமே சமாளிக்க முடியாது. ஏன், இவனோடு சேர்ந்து ஒன்றாகப் பயிற்சி எடுக்கும் அந்த மற்ற இருவராலும் கூட முடியவே முடியாது. ஆனால, எல்லாளன் தன் முழு பலத்தையும் பிரயோகிக்காமலேயே சமாளித்தான். அது வாசுசேனனின் ஆத்திரத்தையும் அரக்கத்தனத்தையும் இன்னுமே சீண்டிவிட்டது. எல்லாளனைக் கொன்றுபோடும் வெறியோடு அவன் மீது ஏறி அமர்ந்துகொண்டு அவன் முகத்தை நோக்கிக் குத்தினான்.
அவை தன் முகத்தில் விழுந்துவிடாதபடிக்கு அவனைத் தடுத்தபடியே முகத்தை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்கொண்டிருந்த எல்லாளனுக்கு இனியும் இப்படியே விட்டால் ஆகாது என்று புரிந்துபோயிற்று. அவனைத் தள்ளி விழுத்திவிட்டு, தான் அவன் மீது ஏறி அமர்ந்துகொண்டு, அவன் கைகள் இரண்டையும் பற்றித் தரையோடு தரையாகச் சாய்த்தவன், கண்ட ஏதோ ஒன்றில் அப்படியே சிலையாகிப்போனான்.
“டேய் காண்டீபா, நீயாடா?” என்றான் உச்சபட்ச அதிர்ச்சியும் திகைப்புமாக.
“என்ன?” அதுவரை கதறிக்கொண்டிருந்த ஆதினி விழுக்கென்று நிமிர்ந்தாள். அவள் இதயம் வெளியே வந்து துடித்தது. கணவனையும் அவன் கீழிருந்து விடுபடப் போராடிக்கொண்டிருந்தவனையும் மாறி மாறி பார்த்தாள்
அண்ணாவா? அவளின் காண்டீபன் அண்ணாவா? எப்படி இது முடியும்?
எல்லாளனுக்கும் ஒன்றும் புரியமாட்டேன் என்றது. அவன் கைகளால்தானே உயிரற்றுக் கிடந்த நண்பனைத் தூக்கினான். அவன்தானே கொள்ளி வைத்தான். பிறகு எப்படி அவன் இங்கே வந்தான்?
அவனின் நொடி நேர அந்த அதிர்ச்சி போதும் என்பதுபோல் அவனைப் புரட்டிக் கீழே தள்ளிவிட்டு எழுந்து, கீழே விழுந்திருந்த தன் கத்தியை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தான் வாசுசேனன்.
ஒரு நொடி ஆதினியின் உயிர்க்கூடே ஆடிப்போயிற்று.
“ஐயோ அண்ணா! வேண்டாம்!” என்று நடுவில் புகுந்தவளை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு, எல்லாளனின் நெஞ்சிலேயே குத்த வந்தவனைக் கால்கள் இரண்டையும் தூக்கி உதைத்துத் தள்ளினான் எல்லாளன்.
அவன் துள்ளி எழுந்து ஆதினியைத் திரும்பிப் பார்த்த இடைவெளியில் வாசுசேனனின் கத்தி அவன் இடுப்பில் இறங்கிற்று. அடுத்த குத்து விழுவதற்குள் வேகமாய் வந்து நின்ற ஜீப்பிலிருந்து கதிரவன் இன்னும் மூன்று காவல்துறையினரோடு ஓடி வந்தான்.
அதற்குள் அங்கிருந்து தப்பித்து ஓடினான் வாசுசேனன்.
மற்றவர்களை அவனைத் துரத்த, எல்லாளனின் இடுப்பு பக்கத்திலிருந்து பீறிட்டு வழிந்த இரத்தத்தைக் கண்டு, “ஐயோ சேர்!” என்று பதறியவனைத் தடுத்து நிறுத்தி, “எனக்கு ஒண்டும் இல்ல. போறது காண்டீபன். அவனை விட்டுடாதீங்க. போங்க போய்ப் பிடிங்க.” என்றான் எல்லாளன்.
“என்ன?” என்று கதிரவனும் அதிர்ந்தான்.
“அதான் எனக்கும் ஒண்டும் விளங்கேல்ல கதிரவன். ஆனா அவனை விட்டுடாதீங்க.” என்றவனால் மேலே பேசவே முடியவில்லை. அங்கே அவன் உயிரானவளிடம் மூச்சுப் பேச்சே இல்லை.
“ஆதிம்மா. டேய் ஆதி, எனக்கு பயம் காட்டாத. ஆதினி எழும்பு!” என்று அவள் கன்னம் கன்னமாய்த் தட்டினான்.

