வேந்தனையும் அவன் கூட்டாளிகளையும் சிறைக்காவலில் வைத்து முறையாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கதிரவன். சிவநாதர் என்ன முயன்றும் அவர்களைப் பார்க்க விடவில்லை. அப்போதுதான் ஆதினி அழைத்தாள். அடுத்த நொடியே விசாரணை அறையை விட்டு வெளியே வந்து அழைப்பை ஏற்ற கதிரவன், சத்தியமாக அவளிடமிருந்து அப்படி ஒரு அழுகையை எதிர்பார்க்கவில்லை.
ஒரு வினாடி ஆடிப்போனான். ஆதினி எத்தனை தைரியமானவள் என்று அவனுக்குத் தெரியும். வயதும் கிடைத்த அனுபவங்களும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவளைப் பக்குவமானவளாக மாற்றியிருந்தாலும் எதற்கும் அசையாதவள். அதுவும் நேர்மையும் நியாயமும் துணிச்சலும் கொண்ட எல்லாளனின் மனைவியான பிற்பாடு, அவளின் தைரியமும் திடமும் இரண்டு மடங்காகிற்று என்று நினைப்பான் கதிரவன்.
அப்படியான அவள் உடைந்து பதறுகிறாள் என்றால் பெரும் பிரச்சனை என்று புரிந்துவிட, “மேம், எங்க நிக்கிறீங்க?” என்றுதான் உடனேயே கேட்டான்.
“முருகன் கோவிலடி கதிரவன். ஓடி வாங்க. இவரும் அந்த வாசுசேனன் அண்ணாவும் சண்டை பிடிச்சுக்கொண்டு இருக்கினம்.” என்று அவள் சொன்ன அடுத்த நொடியே, ஜீப்பை கோயிலை நோக்கிச் சீற விட்டிருந்தான்.
வேந்தனைக் கைது செய்துவிட்டபடியால் அடுத்த கட்டமாகக் காவல் நிலையத்திற்குப் பிணைக் கையொப்பம் இட வருகிற வாசுசேனனை வளைத்துப் பிடிக்கத்தான் அவர்களே திட்டமிட்டிருந்தனர். இப்போது அவனாக வந்து மாட்டிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்.
வாசுசேனனைச் சமாளிப்பதெல்லாம் எல்லாளனுக்கு ஒரு விடயமே இல்லை என்று கதிரவனுக்குத் தெரியும். ஆதினியும் அங்கே நிற்கிறாள் என்பதுதான் அவனையும் பதற வைத்தது.
கோயில் வாசலடியில் ஜீப்பை நிறுத்திவிட்டுப் பாய்ந்து ஓடி வந்த கதிரவன், தரையில் மயங்கிக் கிடந்த ஆதினியையும், இடுப்புப் பக்கத்தில் இரத்தம் வழிய நின்ற எல்லாளனையும் கண்டு உறைந்தேபோனான்.
எல்லாளனின் கட்டளைக்கு ஏற்ப வாசுசேனனைத் துரத்திக்கொண்டு ஓடினாலும், அவனோடு வந்த காவல்துறை ஆட்களிடம் எல்லாளனையும் ஆதினியையும் பார்க்கச் சொல்லிவிட்டுத்தான் போனான்.
*****
எல்லாளனுக்குத் தன் உடலிலிருந்து வெளியேறும் குருதியைப் பற்றிய எண்ணமே இல்லை. கண் முன்னே அசைவற்றுக் கிடக்கிறவளைக் கண்டு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று.
வாசுசேனன் மூர்க்கமாகத் தள்ளிவிட்டான்தான் என்றாலும் இப்படி மயங்குவாளா என்ன? அவளை எப்படித் தட்டி எழுப்பியும் எழும்பவேயில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் அவன் வந்து பக்கத்தில் அமர்ந்தால் போதும். இதழோரம் வழியும் குட்டிப் புன்னகையோடு அவனுக்குள் வாகாகச் சுருண்டுகொள்கிறவள் இன்று அவன் எழுந்துகொள்ளச் சொல்லித் துடியாய்த் துடித்தும் கண்டுகொள்கிறாள் இல்லையே.
உதவிக்கு வந்தவர்களைத் தவிர்த்துவிட்டுத் தன் முழுப் பலத்தையும் கொடுத்து அவளை அள்ளிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான்.
வருகிற வழியிலேயே அழைத்துச் சொல்லிவிட்டபடியால் வைத்தியசாலைக்குள் சென்றதுமே அவளை ஒரு பக்கம், அவனை ஒரு பக்கம் என்று கொண்டு ஓடினார்கள்.
“அவள்… அவள் பிரெக்னன்டா இருக்கிறாள்.” அந்த நிலையிலும் அவளைக் கொண்டு ஓடுகிறவர்களின் புறம் திரும்பிச் சத்தமாகச் சொன்னான்.
இதற்குள் அவனுக்கு நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது. ஆனாலும் சோர்வடையவுமில்லை, மயக்கமுறவுமில்லை. ஒரு வித இறுக்கத்துடன் பிடிவாதமாய் விழித்தேயிருந்தான். இரட்டை உயிராக இருக்கும் மனைவியின் நிலை என்ன என்று அறிவதிலே அவன் கவனம் முழுவதும் இருந்தது. திருப்பி திருப்பி அவன் அதையே கேட்க, கடைசியில் அவனை முழுவதுமாக மயக்கித்தான் வைத்தியம் பார்த்தார்கள்.
விழித்ததுமே, “நான் ஆதினிட்டப் போகோணும்.” என்று நின்றான்.
“நோ சேர். உங்களுக்கு ரெஸ்ட் வேணும்.” என்று அறிவுறுத்தினார் வைத்தியர்.
“எனக்கு ஒண்டும் இல்ல. நான் ஓகேயாத்தான் இருக்கிறன்.” அவன் வார்த்தைகளுக்குக் கொடுத்த அழுத்தத்தில் அடுத்துப் பேச வைத்தியர் மிகவுமே தயங்கினார்.
ஆனாலும் விடாமல், “சேர் ப்ளீஸ்!” என்றார் கெஞ்சலாக.
மேலே பேசாமல் கட்டிலைப் பிடித்துக்கொண்டு எழுந்தான் எல்லாளன். உயிரையே உருவி எடுத்தாற்போல் சுருக்கென்று ஒரு வலி இடுப்பு முழுவதையும் கிழித்துக்கொண்டு போயிற்று. பல்லைக் கடித்து அதை அடக்கினான்.
அதைக் கவனித்துவிட்டு, “சேர் ப்ளீஸ், நீங்க ரிஸ்க் எடுக்கிறீங்க.” என்றார் வைத்தியர்.
அவரைப் பொருட்படுத்தாமல் அவள் இருக்கும் இடத்தைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தான். அங்கே அமர்ந்திருந்த இளந்திரையன் அதிர்ந்துபோனார். கண் விழிக்க குறைந்தது இன்னும் இரண்டு மணி நேரங்களாவது ஆகும் என்று வைத்தியர் சொல்லியிருக்க, அவன் நடந்து வந்தால் எப்படி இருக்கும்?
“எல்லாளா! என்ன இது?” என்றபடி அவனை வேகமாக நெருங்கினார்.
“எவ்வளவு சொன்னாலும் கேக்கிறார் இல்ல சேர்.” தன்னில் பிழை வந்துவிடுமோ என்று பயந்து ஓடி வந்து சொன்னார் வைத்தியர்.
“எனக்கு ஆதினியப் பாக்கோணும் மாமா.” என்றுவிட்டு நடந்தான் அவன். அறை நெருங்க நெருங்க கால்களை அவனால் தூக்கி வைக்க முடியவில்லை. அவள் விழுந்தது, மயங்கிக் கிடந்தது, வைத்தியசாலை வரும் வரையில் விழிக்காதது என்று எல்லாம் கண் முன்னே வந்து பயமுறுத்தின.
மெல்ல அந்த அறையினுள் உள்ளிட்டான். சியாமளாவுக்கும் தமையனைக் கண்டு அதிர்ச்சி. இடுப்பு முழுவதையும் சுற்றிக் கட்டியதுபோல் இருந்த கட்டைக் கண்டுவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
அவளைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. வெய்யிலில் பிடுங்கி எறியப்பட்ட கொடி போன்று துவண்டுபோய்க் கிடந்த ஆதினியிடம் விரைந்தான். இந்த முறை இவன் அழைக்கும் அவசியமே வரவில்லை. அவன் வரவைத் தாறுமாறாகத் துடிக்கும் அவன் இதயம் சொன்னது போலும். கலங்கி வழியும் கண்ணீருடன் அவன் புறம் திரும்பினாள்.
அவள் பார்வை அவசரமாய் அவனை ஆராய்ந்தது. கட்டுப் போடப்பட்டிருந்த இடுப்புப் பகுதியைக் கண்டதும் கண்ணீர் பெருகிற்று.
“ஆதிம்மா, எனக்கு ஒண்டுமில்லையடி.” என்றான் அவசரமாக.
அவளுக்கு அவன் வார்த்தைகள் சமாதானத்தைத் தரவில்லை. அவனைத் தொட்டுணர வேண்டும். அவன் கதகதப்பு அவள் தேகம் முழுவதும் பரவிப் படர வேண்டும். தன் விரல்களை அவன் புறமாக நீட்டினாள்.
உடனேயே தன் கரத்தை அவளிடம் கொடுத்தான் எல்லாளன். நடுங்கும் மென் விரல்கள் அவன் கரத்தை அவள் அழுத்திப் பற்றிய நொடியில் அடி நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்பிற்று. உதட்டைக் கடித்து அதை அடக்கிக்கொண்டான்.
“ஆதிம்மா…”
“வலி…க்கு…தா எல்லாளா?”
“இல்லடாம்மா.” என்றவனின் விழிகள் நிறைந்துபோயின. “உனக்கு உனக்கு… எங்கட…” என்றவனுக்கு மேலே கேட்க முடியவில்லை. மெல்ல அவள் வயிற்றை வருடினான்.
ஆதினிக்கு நொடியில் முகம் சிவந்து, மூக்கு விடைத்து, இதழ்கள் அழுகையில் துடித்தன. “இப்ப… அங்க… ஒண்டும் இல்லையாம்.” எனும்போதே உடைந்து விம்மினாள். அவன் கையின் அசைவு அப்படியே நின்றுபோயிற்று. அதிர்வுடன் அவளையே பார்த்தான்.
ஏற்கனவே இது குறித்த பயம் அவனுக்குள் வந்திருந்தது. ஆனாலும் இல்லை என்று சொல்லிவிட மாட்டாளா என்றுதான் கேட்டான். அப்போதும் நம்ப முடியாமல் திரும்பி அங்கிருந்த தங்கையைப் பார்த்தான். அவளும் மிகுந்த வருத்தத்துடன் மேலும் கீழுமாகத் தலையை அசைத்து ஆமோதித்தாள்.
வெடித்துக் கிளம்பிய தன் துக்கத்தை எல்லாம் அப்படியே விழுங்கிக்கொண்டு, “ஆதிம்மா, என்னைப் பார்!” என்றான் தெளிவான குரலில்.

