ஆட்டநாயகன் 26.2

“இப்ப என்ன நடந்துபோச்சு எண்டு உனக்கு இவ்வளவு அழுகை?”

“எங்கட பிள்ளை எல்லாளா…”

“பரவாயில்ல விடு. இது நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல. ஆனா எங்களுக்கு வயசிருக்கு. எங்கட குழந்தை எங்களிட்டயே வரும். சரியா?”

“ஆனா…” என்றவள் இதழ்கள் மீது ஒற்றை விரலை வைத்து அவள் பேச்சை நிறுத்தினான்.

“ஒண்டையும் யோசிக்கக் கூடாது. படுத்து ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு அவன் திரும்ப அவசரமாக அவன் கரம் பற்றி நிறுத்தினாள் அவள்.

திரும்பிப் பார்த்தவனிடம் ஒன்றும் சொல்லாமல், “அண்ணி, எனக்கு இவரோட கொஞ்சம் தனியா கதைக்கோணும்.” என்று சியாமளாவிடம் சொன்னாள் ஆதினி.

அவள் வெளியேறியதும், “அவர்… அவரை அண்ணா எண்டு சொன்னீங்க…” எனும்போதே திரும்பவும் விழிகள் உடைப்பெடுக்க ஆரம்பித்தன அவளுக்கு.

“ஆதினி!”

“இல்ல. நான் அழேல்ல. ஆனா சொல்லுங்க ப்ளீஸ்.”

“அவன் காண்டீபன்தான்.” அதைச் சொல்லும்போதே அவன் குரல் இறுகி வந்தது.

ஆதினியால் நம்பவும் முடியவில்லை. கணவனின் பேச்சை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. “அப்பிடி எப்பிடி அது அவரா இருக்கும்? எங்க எல்லாரின்ர கண்ணும் பொய்யா? அந்த கேஸ விசாரிச்ச உங்கட விசாரணை எப்பிடிப் பிழைக்கும்?” தன் உடல் வலி மறக்கப் பரபரத்தாள் அவள்.

“அதுதான் எனக்கும் விளங்கேல்ல. ஆனா அது அவன்தான்.” என்றவனுக்குச் சிறையில் வைத்துத்தான் என்னவோ நடந்திருக்கிறது என்று புரிந்தது. அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.

“எப்பிடி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?”

“அவன்ர கைலயும் கால்லயும் கம்பி வச்சிருந்தது தெரியும்தானே உனக்கு. அந்தத் தையல் போட்ட அடையாளம் அவன்ர கையின்ர உள் பக்கம் ஒரு விரல் நீட்டுக்கு அப்பிடியே இருக்கு. அதைவிட முக்கியமானது, அந்தத் தையல் முடியிற இடத்தில இருந்த பெரிய மச்சம். ஜெயிலுக்க இருந்து நானும் அவனும் சாப்பிட்ட நேரமும் அதக் கவனிச்சனான். அதைவிட இளம் வயதில இரணைப் பிள்ளைகளுக்கு எல்லாமே ஒரே மாதிரி இருக்கும் எண்டு நினைக்கிறனாங்க தானே? அப்பிடி அந்த மச்சத்தக் காட்டி இதே மாதிரி இதே இடத்தில வாசுக்கும் இருக்கா எண்டு கேட்டிருக்கிறன். இல்லை எண்டு காண்டீபனே சொல்லியிருக்கிறான். எனக்கு நல்லா நினைவிருக்கு.”

அவளும் அவன் சொன்ன அடையாளங்களை எல்லாம் காண்டீபனின் கையில் பார்த்திருக்கிறாள். அப்படியானால் அது அவளின் தாயுமானவனேதானா? ஆனால் அவன் எப்படி இப்படி உயிர் நண்பனையே கொல்ல வந்தான்? அவனுக்காகத்தானே அவளோடே பழக ஆரம்பித்தான்.

கனிவை மட்டுமே கண்களில் தேக்கி, அவள் தலையைக் கலைத்துவிடுகிறவனின் கையில் கத்தியா? கண்ணீர் நிற்காமல் வழிந்தது அவளுக்கு. மாமா… கடவுளே! “பிறகு எப்பிடி மாமா… மாமாவை….” என்றவளுக்கு அதைக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாளனிடமும் பதில் இல்லையே.

“ஆனா அண்ணான்ர கேஸ் ஃபைல்லயும் நீங்க சொன்ன அடையாளம் எல்லாம் இருக்கே.” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் சட்டென்று நிறுத்தி, “எல்லாளா, அண்ணான்ர பொடிக்கு பிரேத பரிசோதனை செய்தவரை இப்பவே விசாரிங்க. அவர்தான் இதுக்கு எல்லாம் காரணம். அவர் தந்த ரிப்போர்ட்ட நாங்க செக் பண்ணேல்ல. பண்ணவேண்டிய அவசியமும் அப்ப எங்களுக்கு இருக்கேல்ல. அதைவிட அந்த டொக்டர் எங்களுக்குச் சார்பாத்தான் சாட்சி சொன்னவர். அதாலயே அவர் எதையும் மறைப்பார் எண்டு நாங்க சந்தேகப்பட இல்ல. முதல் அவரைச் சந்தேகப்பட எங்களிட்ட காரணமும் இல்லையே.” என்றவளுக்கு அந்த வைத்தியரை வயதையும் பார்க்காமல் இழுத்து வைத்து நன்றாக நான்கு போட்டால் என்ன என்று கோபம் வந்தது.

“அந்த நேரம் அண்ணாவக் கொலை செய்திருக்கிறாங்கள் எண்டுறதை நிருபிக்கிறதிலதான் எங்கட கவனம் முழுக்க முழுக்க இருந்தது. செத்தது அவர்தானா எண்டு நாங்க ஏன் சந்தேகப்படப் போறம்? நான் சொல்லுறது விளங்குதா உங்களுக்கு.” என்று உள்ளம் தவிக்க வினவியவளிடம் கனத்த மனத்துடன் ஆம் என்று தலையை அசைத்தான் எல்லாளன்.

“உங்களுக்கு நினைவிருக்கா அண்ணான்ர கேஸ் பைல்ல அண்ணான்ர நெஞ்சு, ரெண்டு கையின்ர மணிக்கட்டுலயும் கயித்தால கட்டின அடையாளம், வலக்கையில நீங்க சொன்ன அந்தத் தையல் போட்ட அடையாளம், கால்ல கம்பி வச்ச அடையாளம் எண்டு எல்லா போட்டோஸும் இருந்தது. நான் நினைக்கிறது சரியா இருந்தா எங்களை நம்ப வைக்க அந்தக் கம்பி வச்ச இடங்களை மட்டும் உண்மையான காண்டீபன் அண்ணான்ர உடம்பில இருந்து எடுத்து இதுல சேர்த்திருப்பாங்கள். நீங்க பழைய ஜெயிலர், அந்த நேரம் ஜெயில்ல வேலை செய்த ஆக்கள் எண்டு ஒருத்தரையும் விடாம விசாரிக்கச் சொல்லுங்க.” என்று படபடத்தவளுக்கு நெஞ்சு பொறுக்கவே இல்லை.

சம்மந்தன், மிதிலா, அதிரன் என்று அவர்கள் எல்லோரும் தம் உயிரானவனை இழந்துவிட்டு அனுபவித்த துன்ப துயரங்கள் கொஞ்சமா நஞ்சமா?

இதற்குள் இழந்த இரத்தம், நடந்த வைத்தியம், அவ்வளவு நேரமாக மனத்தளவில் அனுபவித்த பயம், பதற்றம், நடுக்கம், துன்ப துயரங்கள் எல்லாமாகச் சேர்ந்து எல்லாளனின் உடலைச் சோர வைத்தன.

அதைக் கவனித்த ஆதினி அவனையும் தன்னருகில் படுக்கச் சொன்னாள். அவனுக்கும் ஓய்வு தேவை என்று புரிந்தது. என்றாலும் இருவரினதும் உடல் நிலைக்கு அந்தக் கட்டில் காணாது. அதைச் சொல்லி அவன் மறுக்கையிலேயே இரண்டு தாதிகள் ஒரு கட்டிலைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள்.

பின்னால் சியாமளாவும் இளந்திரையனும். எப்படியும் கணவனும் மனைவியும் பிரிந்திருக்க விரும்ப மாட்டார்கள் என்று தெரிந்து, இந்த ஏற்பாட்டை இளந்திரையன்தான் செய்திருந்தார். அதில் எல்லாளனை ஓய்வாகப் படுக்க வைத்து, இன்னொரு முறை அவன் காயத்தைப் பரிசோதித்துவிட்டுப் பல கவனங்கள் சொல்லிவிட்டுப் போனார் வைத்தியர்.

அகரன் விடயம் அறிந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தான். பிள்ளைகள் நால்வரையும் சாந்தி அக்கா ஒருவராகச் சமாளிக்க மாட்டார் என்பதில் இளந்திரையனை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இவர்களுக்குத் துணையாகச் சியாமளா இங்கே இருந்தாள்.

“கதிரவன் வந்தவனா சியாமளா?”

“வந்தவர் அண்ணா. அவர் வரேக்க நீங்க ரெண்டு பேருமே மயக்கமா இருந்தனீங்க. நீங்க கண் முழிச்சதும் சொல்லச் சொன்னவர். நானும் எடுத்துச் சொல்லிட்டன். வருவார் எண்டு நினைக்கிறன்.” என்று சொன்னாள் அவள்.

இதற்குள் அகரன் அவளுக்கு அழைத்தான். அவனோடு கதைக்க அவள் வெளியே சென்றதும் திரும்பிக் கணவனைப் பார்த்தாள் ஆதினி.

“என்னம்மா?” அவன் குரலே சோர்ந்து வந்தது.

“இந்த பெட்டுலயே நீங்களும் படுத்திருக்கலாம்.” என்றாள் அவள் ஏக்கமாக.

அவனுக்கும் மனத்தின் வேதனைகளுக்கு மருந்தாக மனைவியின் அண்மை மட்டுமே வேண்டுமாய் இருந்தது. “வீட்டை போனதும் எங்கட பெட்டுல சேர்ந்து படுக்கலாம் சரியா.” என்றான் ஆறுதலாக.

சிறு குழந்தையாய் வேக வேகமாகத் தலையை ஆட்டினாள் ஆதினி.

error: Alert: Content selection is disabled!!