அடுத்த வீடியோவில், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில், விசாரணைக் கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் சம்மந்தன் காண்டீபன் என்று சிறைக்காவல் அதிகாரியினால் இனம் காணப்பட்டார்.’ என்கிற அறிவிப்பின் கீழ் சிறைச்சாலையின் மண்ணில் வெள்ளைத் துணியினால் மூடப்பட்டிருந்த காண்டீபனின் உடலைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
சட்டென்று கைப்பேசியை அணைத்துத் தூர வைத்துவிட்டுத் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் வாசுசேனன். சும்மாவே அவன் வாழ்க்கை மூடு மந்திரத்தால் நிறைந்துபோய்க் கிடக்கிறது. இதில் புதிதாய்ப் பல மனிதர்களும் காட்சிகளும்.
அவனே சடலமாகக் கிடப்பதை அவனே பார்க்கிறான். அவன் யார்? காண்டீபனா வாசுசேனனா? இறந்தது காண்டீபன் என்றால் அவன் வாசுசேனன். இது அந்த எல்லாளனுக்கும் தெரிந்திருக்குமே. பிறகும் ஏன் காண்டீபன் என்றான்? இல்லை, முதலில் வாசு என்றுதான் சொன்னான். பிறகுதான் காண்டீபா நீயாடா என்று கேட்டான்.
இந்த ஒற்றை நாளில் அவன் தெரிந்துகொண்ட இந்த எல்லாளன் எதையும் சும்மா பேசுகிறவன் போல் தெரியவில்லை. இத்தனை நாள்களும் அவன் அலட்சியமாக எண்ணியவன் போன்றல்லாமல் உண்மையிலேயே நீதியும் நியாயமும் கொண்ட நேர்மையான காவல்துறை அதிகாரி என்று வாசித்தவரை புரிந்துகொள்ள முடிந்தது.
திரும்பவும் கைப்பேசியை எடுத்துத் தன்னைத் தேடத் தொடங்கினான். காண்டீபனைக் கொன்றது சத்தியநாதனின் ஆட்கள். சத்தியநாதனின் மனைவி தமயந்தி காண்டீபனின் மாணவியாக இருந்திருக்கிறாள். விடயம் வெளியே கசியவிடப்படாதபோதும் தமயந்திக்கும் காண்டீபன் போதையைப் பழக்கியிருக்கலாம், அதனால் சத்தியநாதன் ஆத்திரம் கொண்டு ஆட்களை வைத்து இதைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று எட்டு வருடங்களுக்கு முதலே எழுதியிருந்தார்கள்.
அந்தச் சத்தியநாதன் சிவநாதரின் மகன். அப்படியானால் இவன் வாசுசேனனாக இருந்தாலும் சரி, காண்டீபனாக இருந்தாலும் சரி சிவநாதருக்கு இவன் மேல் கோபம்தானே வந்திருக்க வேண்டும்? பிறகு எப்படி இவனை அவரோடு வைத்திருக்கிறார்.
அவன் யார் என்று சிவநாதருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் எல்லாளனைக் கொன்றுவிட்டு வா என்று அவனையே ஏவியிருக்கிறார். இதனால்தான் சிவநாதரை பயன்படுத்தி எப்படியாவது வெளியில் சென்றுவிட்டு என்று கிருபானந்தன் சொன்னாரா?
‘சிவநாதா! நான் நினைக்கிறது எல்லாம் உண்மை எண்டு மட்டும் இருக்கட்டும்… செத்தடா கிழவா!’ இரத்தம் கொதிக்க உறுதிபூண்டான் வாசுசேனன்.
அந்தக் காண்டீபனுக்காக வாதாடிய சட்டத்தரணி அந்தப் பெண். எல்லாளன் ஆதினி. அவளுக்கு அந்தக் காண்டீபன் தாய்க்கு ஒப்பானவனாம். எல்லாளனும் காண்டீபனும் உயிர் நண்பர்கள். அதனால்தான் காண்டீபனின் வழக்கை அவன் நியாயமாக விசாரிக்கமாட்டான் என்று சொல்லி சிஐடிக்கு மாற்றிக் கொலை செய்திருக்கிறார்கள்.
வெட்ட வெட்டக் கிளம்பும் பூதம் போன்று எல்லாளன் என்கிற ஒற்றைச் சொல்லின் பின்னே வந்து விழுந்தது முழுக்க முழுக்க அவன் சரித்திரம்.
‘எல்லாளா! நானும் நீயும் ஆரடா?’
இதை யாரிடம் கேட்பான்? உடனேயே கிருபானந்தத்திற்கு அழைத்தான். “நான் ஆர்?” என்றான் அவர் அழைப்பை ஏற்றதும்.
“வாசு?” அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“என்னை மாதிரியே இருக்கிற காண்டீபன் எங்கட ஜெயில்லதான் செத்திருக்கிறான். உங்கட ரெக்கோர்ட்ஸ் சொல்லுறதுபடி பாத்தா நான் அங்கதான் இருந்திருக்கிறன். ஆனா எனக்கு அது தெரியாது. அது எப்பிடி? கலவரம் நடந்து காண்டீபனக் கொன்றதா சொல்லுற காலமும், எனக்கு மண்டை உடஞ்சது எப்ப எண்டு நீங்க சொன்ன காலமும் கிட்டத்தட்ட ஒண்டு. அதுக்கு முதல் நடந்ததுகள்தான் எனக்கு மறந்துபோச்சு எண்டு சொல்லுவீங்க. அப்ப எனக்கு இது தெரிஞ்சிருக்கோணும்தானே? எப்ப என்னைப் பற்றிக் கேட்டாலும் ‘முதல் வெளில போ’ எண்டு சொல்லுவீங்களே, ஏன்? சொல்லுங்க நான் ஆரு? வாசுசேனனா, காண்டீபனா?”
கிருபானந்தத்திற்குக் கைகால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. எல்லாளன் வந்துபோனதில் இருந்து தன்னைத் தனியாக சந்திக்க முயல்வானோ என்று பயந்துகொண்டிருந்தார். அன்று அவனைச் சமாளித்ததே பெரும் சாதனை. அப்படியிருக்க இவன் இப்படிக் கேட்கிறான்.
“வாசு, எட்டு வருசமாத்தான் நான் இஞ்ச இருக்கிறன். உன்ர ரெக்கோர்ட்ஸ்ல இருக்கிறதப் பாத்துத்தான் நான் உனக்குச் சொன்னனான். உன்னட்டயும் அது இருக்கு.” என்றவரை இடையிட்டு, “அது நீங்க தந்தது.” என்றான் அவன் பட்டென்று.
“வாசு?”
“அப்ப உங்களுக்கு உண்மை என்ன எண்டு தெரியாது?”
“வாசு, நான் சொல்லுறதைக் கேளு. நீ நல்லாருக்கோணும் எண்டுறதுதான் என்ர ஆசை. அதுக்காக எல்லா உண்மையையும் என்னால சொல்லேலாது. சொன்னா என்ர உயிருக்கே ஆபத்து. நான் பிள்ளைகுட்டிக்காரன். என்ர குடும்பத்துக்கு நான் வேணும்.”
“அப்ப அந்த எல்லாளனிட்டயே போய்க் கேக்கட்டா? எனக்கு உண்மை தெரியோணும்.”
“வாசு அவசரப்படாத. அவர் நேர்மையானவர். எதுக்காகவும் நீதி நியாயத்தில இருந்து மாற மாட்டார். அவரிட்ட மாட்டினியோ திரும்பவும் ஜெயில்லதான் வந்து இருப்பாய்.”
“பரவாயில்ல. வந்திட்டுப் போறன். எனக்கு என்னைத் தெரியோணும். நான் வெளில வர நினைச்சதே அதுக்குத்தான்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
*****
உடல் வலியும், வெளியேறிய இரத்தமும், உடலில் ஏற்றப்பட்ட மருந்துகளுமாகச் சேர்ந்து எல்லாளனை உறக்கத்திற்கு அழைத்தன. ஆனாலும் அவனால் ஓய்ந்து உறங்க முடியவில்லை. காண்டீபன்தான் கண்களுக்குள் நின்றான்.
இனி இந்த உலகில் இல்லை என்று எண்ணியிருந்த ஒருவன் உயிருடன் வந்து நிற்கிறான். ஓடிப்போய் ஆரத்தழுவிக்கொள்ள முடியாமல் இவன். அன்று கடைசியாக அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கையில் ‘காலத்துக்கும் நீயும் நானும் பிரிஞ்சேதான் இருக்கோணும் எண்டு விதி இருக்குப் போல மச்சான்.’ என்று அவன் சொன்னதுதான் திரும்பவும் நடக்கப்போகிறது போலும்.
அவன் அவனாக இல்லை. தன் சுயத்தையே இழந்து நிற்கிறான். இந்த நிலைக்கு எப்படி வந்தான்? நிச்சயம் மரணத்தைக் காட்டிலும் கொடூரமான நரகத்தை அவன் அனுபவித்திருக்க வேண்டும். இல்லாமல் அவன் இப்படியாகியிருக்கப் போவதில்லை.
ஆளே மாறி, உருவம் வேறாகி, அந்த மண்டையில் இருந்த காயத்தைப் பார்க்கையில் நெஞ்சை என்னவோ செய்தது. அன்று ஆத்திரத்தோடு அவனைக் கைது செய்யச் சென்று நின்றவனிடமே எல்லாளா என்றுகொண்டு வந்தவன் இன்று எப்படி அவனையே கொல்ல வந்தான்? பெற்ற தந்தையையே கொன்றான்?
மூடி இருந்த விழிகளை மீறிக்கொண்டு கண்ணீர் வழிந்தது அவனுக்கு. மனைவி அறியாமல் துடைத்துக்கொண்டான். இந்த நிமிடமே காற்றாய்ப் பறந்துபோய் என்னடா உனக்கு நடந்தது, ஏன் இப்பிடியாகிப்போய் நிக்கிறாய், இந்தப் பாவம் பழியை எல்லாம் எந்தக் காலத்தில தீர்க்கப் போகிறாய் என்று உலுக்க வேண்டும் போலிருந்தது. உடல் ஒத்துழைக்க வேண்டுமே. கதிரவனின் வருகைக்காகக் காத்திருந்தான்.

