மெல்ல நிமிர்ந்த எல்லாளன், நண்பனைத் தன் கைகளுக்குள்ளேயே வைத்தபடி அவன் முகம் பார்த்தான். ஓடி ஓடிக் களைத்துவிட்டேன் என்றவன் ஓடிக்கொண்டேயிருக்கிறான். தன்னைத் தொலைத்து, குடும்பத்தைத் தொலைத்து, தன் சந்தோசத்தைத் தொலைத்து என்று அவனிடம் ஒன்றுமே இல்லை அவன் உட்பட. அந்த ஓட்டத்தை நிறுத்த வேண்டும். இனியாவது எந்த வெய்யிலும் அண்டாதபடிக்கு நிழலில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை அவனுக்குக் கொடுக்க வேண்டும்.
நெஞ்சில் உறுதி பிறக்க மெல்ல விலகினான். அவனுக்குச் சில விடயங்களைத் தெளிவு செய்ய வேண்டியிருந்தது.
“நீ ஆர் எண்டு உனக்குத் தெரியுமா?”
பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான் வாசுசேனன்.
“நீ காண்டீபன்.”
சட்டென்று வாசுசேனனின் முகத்தில் ஒரு சீற்றம் வந்தமர்ந்தது. “நான் வாசு!” என்றான் பற்களைக் கடித்து.
எல்லாளன் மறுத்துத் தலையசைத்தான். “வாசு உன்ர சகோதரன். உனக்குப் பதிலா அநியாயமா அவனைக் கொன்றுட்டாங்கள்.” என்றவனையே பேச்சற்று வெறித்தான் வாசுசேனன்.
“உன்ர தலைல இவ்வளவு பெரிய காயம் எப்ப, எப்பிடி வந்தது?”
“ஏய் கண்டதையும் கதைக்காத! நான் வாசு!” என்று பாய்ந்தான் அவன்.
அவனையே பார்த்தான் எல்லாளன். அவனுக்கும் ஏதோ ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டும். அதனால்தான் அவனைத் தேடி வந்திருக்கிறான். அதே நேரத்தில் இத்தனை காலமாய் வாசு என்று இருந்தவனால் தான் காண்டீபன் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அல்லது விரும்பவில்லை.
அதற்காக அப்படியே விடவா முடியும்? “நீ காண்டீபன்ரா. என்ர உயிர் நண்பன்!” என்றான் தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி.
அவன் ஏற்க மறுத்தான். “நான் வாசு!” என்றான் பிடிவாதமாக.
“காண்டீபன்!”
“வாசு!”
“உனக்கு ஒரு குடும்பம் இருக்கு. தங்கம் மாதிரி ஒரு மகன் இருக்கிறான்.” என்றதும் நொடியில் அவன் முகம் மாறிப்போயிற்று. அதை அவனும் இணையத்தில் வாசித்தான். அந்தப் பெண்ணின் பெயர் மிதிலா என்பது தொடங்கி காண்டீபன் இறந்த நேரம் அந்தப் பெண் கர்ப்பிணியாக இருந்தாள் என்பது வரை அவனுக்குத் தெரியும்.
ஆனாலும் கூட அதையெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நொடியில் பற்றிக்கொண்ட சினத்தில் பட்டென்று எல்லாளனின் கழுத்தை நெரித்து, “உனக்கு ஒருக்கா சொன்னா விளங்காது? நான் வாசு வாசு வாசு!” என்று பல்லை கடித்தவன், அவன் முகத்திலேயே குத்துகிறவன் போன்று அவன் பின்னால் இருந்த சுவரில் ஓங்கிக் குத்தினான்.
“அந்தக் குத்த என்ர முகத்தில குத்தியிருக்க வேண்டியதுதானே?” என்று கேட்டுவிட்டு, “என்ன இது?” என்று அவன் கையில் தையல் போட்ட அடையாளத்தைக் காட்டிக் கேட்டான்.
அவனை ஒருமுறை விசித்திரமாக நோக்கிவிட்டு, “உடம்பில இருக்கிற எத்தனையோ காயத்தின்ர அடையாளத்தில இதுவும் ஒண்டு.” என்றான் அவன் சர்வசாதாரணமாக.
மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டு, “உனக்கு இந்தக் கைல எந்த வித்தியாசமும் இல்லையா? பலம் இல்லாத மாதிரி, விறைக்கிற மாதிரி?” என்று விசாரித்தான்.
உதட்டோரம் இலேசாக வளைய, “உன்ர கழுத்தை நெரிச்சே கொல்லுற அளவுக்கு இந்தக் கைல பலமிருக்கு.” என்றான் அவன்.
அது உண்மை என்பதைச் சற்று முன்னர் அவனும் உணர்ந்தானே.
“வலி?” என்றான் அப்போதும் எல்லாளன் விடாமல்.
“அது உடம்பு முழுக்க இருக்கு.” அதெல்லாம் ஒரு விடயமா என்று கேட்பது போன்ற தொனியில் சொன்னான் அவன்.
என்ன நிலையில் இருக்கிறான் அவன் நண்பன்? வேதனையுடன் பார்த்தான் எல்லாளன். “உன்ர இடது காலில முழங்காலுக்குக் கீழ பார். இதே மாதிரி தையல் போட்ட அடையாளம் இருக்கும். அங்கயும் கைலயும் உனக்குக் கம்பி வச்சிருக்கு.”
இப்போது வாசுவின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி. அவனையே பார்த்து நின்றான்.
அவன் உடலின் பிரச்சனைகளை இவன் சொல்லி அறிகிறான் அவன். காரணம் அந்தச் சிவநாதர். “என்னவாம் அந்தக் கிழட்டு நாய்?” என்றான் எல்லாளன் பல்லைக் கடித்து.
“அவன்தானே என்னைக் கொல்லச் சொல்லி உன்னை அனுப்பினவன்?”
“அப்பதான் உன்ர கேஸ் எல்லாத்தையும் ஒண்டுமில்லாம ஆக்குவன் எண்டு சொல்லியிருப்பானே?”
“அவனுக்கு இருக்கு!” பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டுச் சிவநாதருக்கு அழைத்தான்.
“என்ர விரலை வச்சு என்ர கண்ணையே குத்தப் பாக்கிறியா சிவநாதா?” என்றான் அவர் அழைப்பை ஏற்றதும்.
சிவநாதருக்கு வாசுசேனன் என்ன செய்தான் என்று தெரியாது. முன்னரானால் அவன் இருக்குமிடம் தெரியும். அங்கிருந்து அவன் புறப்பட்டதும் தகவல் வந்துவிடும். அவரின் ஆள் அவனைப் பின் தொடர்வான். அவன் என்ன செய்கிறான், எங்குப் போகிறான் என்கிற தகவல்கள் சுட சுட வந்துவிடும். இப்போது அவன் எங்கு இருக்கிறான் என்பதே மர்மமாகிப்போனதில் அவரால் தகவல் திரட்ட முடியவில்லை. ஆனால் என்னவோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்துபோயிற்று. அதில் வார்த்தைகளைக் கவனமாக விடவேண்டும் என்று தயாராகிக்கொண்டார்.
“என்ன சொல்லுறீங்க எல்லாளன்?”
“டேய் நடிக்காத்தாயடா! வாசு என்ர காண்டீபன்ர தம்பி எண்டு தெரிஞ்ச நேரமே உசாரானவன் நான். காண்டீபன்தான் வாசு எண்டு தெரிஞ்ச பிறகு சும்மா இருப்பன் எண்டு நினைக்கிறியா நீ?” என்றவனின் எள்ளல் பேச்சில் சற்றுத் தடுமாறித்தான் போனார் சிவநாதர்.
இத்தனை காலமும் எல்லாளன் இப்படி நேரடியாக அவரை எதிர்த்ததில்லை. மரியாதைக்கும் குறைவிருந்ததில்லை. ஆனால் இன்று அத்தனையும் மாறியிருந்தது.
“என்ன சொல்லுறாய் எல்லாளன்?வாசு எண்டுறாய், காண்டீபன் எண்டுறாய். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல.” என்று அப்போதும் நடித்தார்.
“ஓ, உனக்கு வாசுதான் காண்டீபன் எண்டு தெரியாது. அது சரி வாசு, காண்டீபனையே தெரியாத உனக்கு வாசுதான் காண்டீபன் எண்டு எப்பிடித் தெரிஞ்சிருக்கும். ஆனா பத்தொன்பது வயசில உனக்கு ஒரு பேரன் இருக்கிறானே. அவனைத் தெரியும்தானே?” என்றதும் மின்சாரக் கம்பியில் காலை வைத்தவர் போன்று அதிர்ந்துபோனார் மனிதர்.
“எல்லாளா!” என்று தன்னை மறந்து கர்ஜித்தார்.
இடுப்பில் உண்டான வலியையும் மீறிக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தான் எல்லாளன். “என்னடா கிழவா, வலிக்குதா? வலிக்கோணும் உனக்கு. வலிக்க வைக்காட்டி நான் என்ன போலீஸ்காரன்? என்னைப் பற்றித் தெரிஞ்சும் வாலாட்டின உன்னைச் சும்மா விடச் சொல்லுறியா?”
“தேவை இல்லாம கதைக்காத எல்லாளன். எனக்கு எந்தப் பேரனும் இல்லை.” அவர் குரல் நடுங்கியது.
அதைக் கண்டு எல்லாளனின் உள்ளம் துள்ளிற்று. “மார்ச்சுவரில லைனுக்கு அடுக்கி வச்சிருக்கிற பிணம் மாதிரி சத்தியநாதன் என்னட்ட கதைச்ச ஒவ்வொண்டும் அப்பிடியே என்ர மூளைல இருக்கு சிவநாதா. நீ வேற சின்ன வீட்டுப் பரம்பரை. யோசிக்காம இருப்பனா, இல்லை கண்டு பிடிக்காமத்தான் இருப்பனா? ஆனா கட்டின பிறகு பிடிக்கிறதுக்குப் பெயர்தான் சின்ன வீடு. கட்டுறதுக்கு முதலே பிடிச்சதுக்கு என்ன பெயர்? எடுப்பா இல்ல தொடுப்பா?”
சிவநாதருக்கு நெஞ்செல்லாம் உலர்ந்து போயிற்று. “விளையாடாத எல்லாளா!” என்று எச்சரித்தார்.
“கொழும்பு யுனிவர்சிட்டில படிக்கிற உன்ர பேரனுக்கு ஃபோன போடு. எல்லாத்தையும் விவரமா சொல்லுவான். பிறகு எனக்கு எடு!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்
அவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. நடக்கச் சிரமமாய் இருந்தாலும் மெல்ல மெல்ல அங்குமிங்குமாக நடந்தான். அவனையே பார்த்து நின்றான் வாசுசேனன். அவனால் இவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. இன்னுமே தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற முழுமையான தெளிவு அவனுக்கில்லை.
இரண்டு நிமிடங்கள் கூடக் கடந்திராது. பதறியடித்துக்கொண்டு அழைத்தார் சிவநாதர்.
“அவனை விடு எல்லாளன். அவன் சின்ன பிள்ளை. அவனை ஒண்டும் செய்து போடாத. என்ர குடும்பத்துக்கு எண்டு மிஞ்சி இருக்கிறவன் அவன் மட்டும்தான்.” என்று பதறினார் மனிதர்.
“அப்ப வேந்தன்?”
அவரிடம் சத்தமே இல்லாது போயிற்று.
“அவன் வளந்து வாறவரைக்கும் இவனை ஒப்புக்குச் சப்பானியா வச்சிருந்திருக்கிறாய் என்ன? அதுதான்டா நீ செய்த பிழையே.” என்று சிரித்தான் எல்லாளன்.
மனிதருக்கு இரத்த அழுத்தம் எகிறிற்று. “உனக்கு என்ன வேணும்?” என்றார் ஆத்திரத்தை அடக்கி.
“வாசு எண்டுற பெயர்ல இருக்கிற காண்டீபன்ர கேஸ் எல்லாம் ஒண்டுமில்லாம ஆகோணும். அவனுக்கு எதிரா நீ துரும்பைக் கூட அசைக்கக் கூடாது. அசச்சியோ உன்ர பேரன்ர உடம்பு சும்மா வராது. பங்கு போட்டு தனித்தனியா வரும்.” என்றுவிட்டு அவருக்கு மேலே பேச இடம் கொடாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டான் எல்லாளன்.

