“என்னாலயும் இன்னுமே நம்பேலாமா இருக்கு கதிரவன். அவனுக்கு ஒண்டுமே நினைவில இல்லை போல.” அவன் பார்வையின் பொருள் புரிந்து கதிரவனிடம் சொன்னான் எல்லாளன்.
“ஹலோ சேர்!” என்றான் கதிரவன் பழைய நினைவில்.
பதிலும் சொல்லாமல் சிறு தலையசைப்பும் கொடுக்காமல் இறுக்கமாகவே நின்றிருந்தான் வாசுசேனன்.
“எனக்கும் ஆதனி மேமுக்கும் முந்தி ஒத்து வராது. ஆனா நீங்கதான் அவாவோட பிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க, நல்ல பிரெண்ட் கிடைப்பா எண்டு சொன்னனீங்க. இப்ப அவா எனக்கு பிரெண்ட் மட்டுமில்ல. நல்ல சகோதரியும்.” என்று சொன்னான் கதிரவன்.
வாசுசேனனைக் கதிரவனோடு போகச் சொன்னான் எல்லாளன். தேவனும் எந்த நேரத்திலும் வரலாம் என்கிற நிலையில் அவனுக்கு ஏனோ இப்போது வாசுசேனன் யார் கண்ணிலும் பாடுவதில் உடன்பாடு இல்லை.
அதே நேரத்தில் அவனை அனுப்பி வைக்கவே மனமில்லை. தன் கைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் போலொரு துடிப்பு. புறப்பட்டவனின் கரம் பற்றி நிறுத்தினான். “போன முறை எல்லாமே என்னை மீறிப் போயிற்று மச்சான். இந்த முறை உன்னை விட்டுட மாட்டன். அப்பிடி விட்டுட்டன் எண்டா நான் உயிரோட இல்லை எண்டு அர்த்தம்.” என்றதும் அப்படியே நின்றுவிட்டான் வாசுசேனன்.
ஒரு கணம் எல்லாளனின் முகத்தையே பார்த்துவிட்டு, “போனமுறை என்ன நடந்தது எண்டு எனக்குத் தெரியாது. ஆனா இந்த முறை அவ்வளவு ஈஸியா எவனாலயும் என்ர உயிரை எடுக்கேலாது.” என்று சொன்னான் வாசுசேனன்.
உண்மைதான். என்னதான் தமயந்திக்கு அவ்வளவு பெரிய அநியாயம் செய்தாலும் அந்தக் காண்டீபன் மென்மையானவன். நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ ஆசைப்பட்ட ஒருவன்.
தந்தையை முடமாக்கி, அவனை ஆசைப்பட்ட கனவை நிறைவேற்ற முடியாத இடத்தில் நிறுத்தி, மிதிலாவை, அவள் அன்னையை, அஞ்சலியை, சாகித்தியன், சாமந்தி, அஜய் என்று எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் விளையாடியவனின் மனைவி கண் முன்னே இருக்கையில் அவனால் பேசாமல் இருக்க முடியாமல்தான் அதைச் செய்தானே தவிர்த்து இயல்பில் நல்லவன்.
ஆனால் இந்தக் காண்டீபன் தன் இயல்பையே தொலைத்து நிற்பவன். மோசமாக மாறிப்போனவன். ஆனாலும், “கவனமா போயிற்று வா.” என்று சொல்லி, தன் கைப்பேசி இலக்கத்தை கொடுத்து அவனுடையதையும் வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தான்.
அங்கே கேதகியை அழைத்துக்கொண்டு மற்ற இருவரும் புறப்பட்டிருந்தார்கள். எங்கோ போகிறார்கள், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதுவுமே தெரியாமல் கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். அவள் வாழ்க்கை ஆளாளுக்கு அடித்து விளையாடும் பந்துபோல் ஆயிற்றே என்று உள்ளுக்குள் அவள் மருகிக்கொண்டிருக்கையில் திரும்பி வரச் சொல்லி சதீஸின் கைப்பேசிக்கு வாசுசேனனிடம் இருந்து தகவல் வந்தது.
உடனேயே காரை திருப்பினான் அவன்.
“இப்ப எங்க போறம்?” என்றாள் கேதகி பயந்துகொண்டு.
“நாங்க இருந்த இடத்துக்கே.”
பளிச்சென்று முகம் மலர, “அவர்… சேனா… வாசுசேனன்?” என்று வினவினாள் அவசரமாக.
அதற்குப் பதில் இல்லை. ஆத்திரம்தான் வந்தது அவளுக்கு. அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்தாள். இவர்கள் அங்கே போய் சேர்ந்து பத்து நிமிடங்களில் வந்தான் வாசுசேனன். “சேனா!” என்று ஓடி வந்த கேதகி, கதிரவனைக் கண்டுவிட்டுத் தேங்கி நின்றாள்.
“நீ இவரோட போ!” என்றான் வாசுசேனன்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி இன்னும் எத்தனை கைகளுக்கு அவளை மாற்றப்போகிறார்களாம் என்று நெஞ்சை ஒரு வகை துக்கம் பிடிக்க, “ஏன்? முதல் இவர் ஆர்?” என்றாள் உள்ளடங்கிய குரலில்.
கதிரவன் சாதாரண உடையில் இருந்ததில் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அணிந்திருந்த சப்பாத்துகளும், தலை வெட்டும் ஊன்றிக் கவனித்திருக்கக் காட்டிக் கொடுத்திருக்கும். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
“நான் போலீஸ்.” என்று தன் ஐடி கார்டை எடுத்துக் காட்டினான் கதிரவன்.
பகீர் என்றது அவளுக்கு. காவல்துறை கூடவா என்னைத் தேடவில்லை என்று அழுதவள்தான் அவள். இன்று அவர்களே வந்தபோது ஆசுவாசம் கொள்ள முடியவில்லை. வாசுசேனனுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்றுதான் பதறினாள். பயமும் பதற்றமுமாக வாசுசேனனைப் பார்த்தாள்.
“கூட்டிக்கொண்டு போங்க!” என்று கதிரவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
எதையும் வெளிப்படையாககே கேட்க முடியாமல், “நீங்க?” என்று தடுமாறினாள்.
“நீ வெளிக்கிடு!” என்றான் அவன் வேறு பேசாமல்.
அவள் வெளிக்கிட என்ன இருக்கிறது? ஏற்கனவே தயாராகிப் போனவள்தானே திரும்பி வந்து நிற்கிறாள். எடுத்து வைத்த பையும் தயாராகத்தான் இருக்கிறது. பலியாடு போன்று அதை எடுத்துக்கொண்டு இரண்டடி நடந்தவளால் வாசுசேனனைக் கடந்து போக முடியவில்லை. “உங்களோட தனியா கதைக்கோணும்.” என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
அவன் முகம் இன்னும் கடினப்பட்டது. வாயின் மீது ஆட்காட்டி விரலை வைத்துக் காட்டியவன் அப்படியே கதிரவனோடு நட என்றான் சைகையிலேயே.
முகம் கன்றிக் கண்ணீர் திரண்டது அவளுக்கு. ஒரு முறை அவனை நிதானமாகப் பார்த்துவிட்டுப் புறப்பட்டாள். அதுவரை என்ன நடக்கிறது என்று உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த டைகர் குரைத்துக்கொண்டு பின்னால் ஓடி வந்தது.
சட்டென்று உடைந்துவிட்டாள் கேதகி. பையை கீழே போட்டுவிட்டு அதனருகில் அமர்ந்து அதை மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அன்னையும் போன பிறகு அவளிடம் அன்பு காட்ட யாருமே இருந்ததில்லை. அவளும் யாரையும் அனுமதித்ததில்லை. ஒரு பயம். யாருமே எனக்கு வேண்டாம் என்று கோபம். அப்படி இருக்கையில்தான் அவள் வாழ்வில் என்னென்னவோ எல்லாம் நடந்துபோயின.
இந்த டைகரும்தானே முதலில் அவளை வெறுத்தது. இன்று அவள் போகிறாள் என்று புரிந்துகொண்டு ஓடிவருகிறதே. இந்தப் பாசம் அவளோடு கூட இருந்த அவனுக்கு இல்லாது போயிற்றே.
“நீயும் என்னோட வாறியா?” என்றாள் அதன் முகத்தை வருடிக்கொடுத்தபடி.
அதுவும் ஆம் என்று சொன்னது போலும். ஏதோ சத்தமிட்டபடி தன் முகத்தால் அவளை உரசியது.
கண்ணீர் கன்னத்தில் இறங்கிற்று அவளுக்கு. கொஞ்ச நேரம் அதன் தலையை வருடிக்கொடுத்துவிட்டு, “இல்லை வேண்டாம். நீ இஞ்சயே நல்லா இரு. நான் இந்த வாழ்க்கைல இன்னும் என்ன எல்லாத்தையும் பாக்கப் போறனோ தெரியா. அதையெல்லாம் நீயும் அனுபவிக்க வேண்டாம். எங்க இருந்தாலும் என்னை மறந்திடாத!” என்று அதை இன்னொரு முறை அணைத்து விடுவித்துவிட்டுக் கதிரவனோடு புறப்பட்டுவிட்டாள்.

