ஆட்டநாயகன் 31.1

அறைக்குள் வந்த எல்லாளனைக் கண்டுவிட்டு, “ரெஸ்ட் எடுக்காம எங்க எழும்பித் திரியிறீங்க?” என்றாள் ஆதினி.

“நானும் நித்திரை கொண்டு இப்பதான் எழும்பினனான்.” என்றவன் வந்து அவள் தலையை வருடி விட்டான்.

“உங்களுக்கு எப்பிடி இருக்கு?” அவனின் அந்தக் கரத்தைப் பற்றித் தன் கன்னத்துடன் வைத்துக் கேட்கப்போனவள் அதிர்ந்து, “என்ன இது உடம்பு இப்பிடிச் சுடுது.” என்று அவன் தேகத்திலும் தொட்டுப் பார்த்தாள்.

“குளுசை போட்டனான். சரியாகிடும். உனக்கு எப்பிடி இருக்கு?”

பரவாயில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “பாத்ரூம் போகோணும்.” என்று சொன்னாள்

“எழும்பு, கூட்டிக்கொண்டு போறன்.”

“உங்களால ஏலுமா?”

“வலி இருக்குத்தான். அதுக்கெண்டு உடம்பில பலம் இல்லாம போயிடுமா? நீ வா!” என்று அவள் எழுந்துகொள்ள உதவினான்.

அவளுக்கு அடி வயிற்றில் மெல்லிய வலி. பலகீனமாக உணர்ந்தாள். அவன் தோளைப் பற்றி நின்று கால்களைத் தரையில் ஊன்றினாள். அவன் அவசரப்படுத்தவில்லை. அவள் தன்னை நிலைப்படுத்தும்வரை பிடித்து நின்றான்.

முதலில் இலேசாகத் தலை சுற்றினாலும் மெல்ல மெல்லச் சரியாயிற்று. அதன் பிறகே அவன் கைப்பிடியில் குளியலறை சென்று வந்தாள். முகத்தைத் தண்ணீரில் அடித்துக் கழுவியதில் மனத்திலும் மெல்லிய தெளிவு. வெளியே வந்து கணவனை நிதானமாகப் பார்த்தவள் தானாக வந்து அவனை அணைத்துக்கொண்டு தோளில் சாய்ந்துகொண்டாள்.

“என்னம்மா?” என்றபடி அவளுக்கு வலிக்காததுபோல் மிக மிக மென்மையாய்த் தானும் அவளை அணைத்துக்கொண்டான் எல்லாளன்.

ஒன்றும் சொல்லவில்லை அவள். அவன் அண்மை வேண்டும் என்று சொல்கிறவளாக அவன் மார்பில் முகம் புரட்டினாள். “ஏய்!” என்று இலேசாகச் சிரித்துவிட்டு, “கதவு திறந்திருக்கு.” என்று அறிவுறுத்தினான.

“நான் என்ன எவனையோவா கட்டிப்பிடிக்கிறன். இது என்ர சொந்தச் சரக்கு. கட்டிப்பிடிப்பன். தூக்கிப் போட்டு மிதிக்கவும் செய்வன். எவனும் கேக்கேலாது.” என்றவள் பேச்சைக் கேட்டு அவன் சிரித்தான்.

“நான் சரக்காடி உனக்கு?”

“சாதாரண சரக்கில்ல. போதையேத்திற சரக்கு.”

“அது நானா நீயா?” என்று கேட்டு அவன் சிரிக்கவும் தலையை மாத்திரம் நிமிர்த்தி அவன் முகத்தையே இமைக்காது பார்த்தாள்.

“என்னம்மா?” என்றான் மீண்டும்.

“பயந்தே போயிற்றன்.” எனும்போதே அவள் விழிகளில் கண்ணீர் அரும்பிற்று.

அவனுக்கும் புரிந்தது. மேலே பேசி அவளை இன்னும் அழவைக்க விரும்பாமல் அவள் இடையை வளைத்து நெற்றியை முட்டியவன் ஒன்றும் சொல்லவில்லை. கரு கலைந்தது ஒரு வேதனை என்றால் அவள் மயங்கித் தரையில் கிடக்க, அவன் கத்திக் குத்து வாங்கி நின்ற அந்த நிமிடத்தில் ஏதும் நடக்கக் கூடாதது நடந்துவிடுமோ என்று அவனும்தானே பயந்தான். ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் வேறு அவர்களை நம்பி இருக்கிறார்களே.

மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்து முறுவலித்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“எங்களுக்கு ஒண்டும் இல்ல. நாங்க நல்லாருக்கிறம். சும்மா சும்மா கவலைப்படக் கூடாது ஓகே.” என்றான் கனிவையும் கண்டிப்பையும் கலந்து.

கண்ணீர்ப் படலத்துடன் புன்னகைத்தாள் அவள். “நீங்க இருக்கேக்க நான் ஏன் கவலைப்படப்போறன்?” என்று கேட்டுவிட்டு விலகி, “கொஞ்ச நேரம் படுத்து எழும்புங்கோவன். உங்களை இப்பிடிப் பாக்கேலாம இருக்கு.” என்று தழுதழுத்தாள், கத்திக் குத்துப் பட்ட இடத்தை வருடிவிட்டபடி.

“நித்திரை வருதில்ல ஆதி. எனக்கு இந்த நிமிசமே எல்லாத்தையும் முடிக்கோணும் மாதிரி இருக்கு. எங்க?” என்றான் சலிப்புடன்.

இதற்குள் அகரனும் சியாமளாவும் வந்தனர். அகரனுக்கு நண்பனைப் பார்த்ததும் தொண்டை அடைத்துப்போயிற்று. “எப்பிடி மச்சான் இப்பிடிக் கவனமில்லாம விட்டனி?” என்று கடிந்தபடி பிடிவாதமாக அவனைப் படுக்க வைத்தான்.

சற்று நேரத்தில் தேவன் வந்தான். முதலில் சம்பிரதாயத்திற்கு எல்லாளனின் நலனை விசாரித்துக்கொண்டான். விசாரணைக்குத்தான் வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டு மற்ற மூவரையும் வெளியே இருக்கச் சொன்னான் எல்லாளன். அப்போதும், “ஆதினி கவனம் அகரன். இன்னொரு பெட் எடுத்துக் குடு அவளுக்கு.” என்று சொல்லியே விட்டான்.

“ஆர் எண்டு கவனிக்கேல்லையா நீங்க?” அவர்கள் போனதும் விசாரணையை ஆரம்பித்தான் தேவன்.

“கவனிக்கிறதுக்கிடைல ஓடிட்டான் தேவன்.”

அவனை நம்பாமல் பார்த்தான் தேவன். வேறு யாரும் சொல்லியிருந்தால் நம்புவதற்கு நூலளவேனும் சாத்தியம் உண்டு. எல்லாளனுக்கு முதுகிலும் கண் என்பார்கள். அவன், தன்னைக் கத்தியால் குத்திவிட்டு ஓடியவனைக் கவனிக்கவில்லையாம் என்றால் எப்படி நம்புவது?

“சந்தேகமா பாக்காதீங்க தேவன். எனக்கு வலிக்கிற வலிக்கு அவனைப் பிடிச்சு நல்லா கவனிக்கோணும் மாதிரி இருக்கு. வைஃப் பக்கத்தில இருந்தவா. என்ர கவனம் முழுக்க அவாவுக்கு ஒண்டும் நடக்காமக் காப்பாத்துறதுலதான் இருந்தது. அதாலதான் அவனைக் கவனிக்கேல்ல. நான் பயந்த மாதிரியே அவனும் அவாவைப் பிடிச்சுத் தள்ளி விட்டுட்டான்.” என்று உண்மை போலவே சொன்னான்.

இந்த முறை தேவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
கரு கலைந்ததை பற்றி அவனும் அறிந்திருந்தான். “சொறி!” என்றான் மெல்லிய சங்கடத்தோடு.

சிறிய தலையசைப்பில் அவனின் அனுதாபத்தை ஏற்றுக்கொண்டான் எல்லாளன்.

“எந்த க்ளுவுமே இல்லையா சேர்?”

“இல்ல தேவன்.” என்றுவிட்டு, “சிசிடிவி ஃபுட்டேஜ் ஒண்டும் கிடைக்கேல்லையா?” என்று அவனே விசாரித்தான்.

“கோயில்ல கமரா இருந்திருக்கு. ஆனா ரெக்கோடர் உடஞ்சிட்டுதாம்.”

“ஓ!”

“ஆனா கதிரவன் ஜீப்ல போன நேரத்த வச்சு வேற ரெண்டு சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணினனான். கதிரவனும் பாத்தவராம். ஒண்டும் உருப்படியா கிடைக்கேல்ல. நீங்களும் ஒருக்கா அந்த ஃபுட்டேஜுகளை பாத்து அவனைத் தெரியுதா எண்டு சொல்லுங்க.”

“ஓம், எனக்கு அனுப்பி விடுங்க.”

“ஆர் செய்திருப்பினம் எண்டு நினைக்கிறீங்க? இல்ல என்ன மோட்டிவா இருக்கும்?”

“என்னைக் கொல்லுறதைத் தவிர வேற என்ன மோட்டிவ் இருக்கப் போகுது தேவன்? நான் என்ன நல்லவனோடயும் தியாகியோடயுமா பழகிறன். பாக்கிறவன் பழகிறவன் முழுக்க கொலைகாரனும் கொள்ளைக்காரனும். இதுல எவன் குத்தினான் எண்டு என்ன தெரியும்?”

“நீங்க பொய் சொல்ல அவசியம் இல்லை எண்டு விளங்கினாலும் இன்னுமே நம்பேலாமா இருக்கு சேர்.”

“ஆணைக்கும் அடி சறுக்கும் தேவன்.” என்று புன்னகைத்தான் எல்லாளன்.

“உங்கட வைஃபையும் விசாரிக்கோணும் சேர்.”

“தாராளமா!” என்றான் எல்லாளன் தயங்காது.

அவனாவது காவல்துறை. அவள் குற்றவியல் சட்டத்தரணி. சாதாரணமாகவே பிடி கொடுக்க மாட்டாள். இதில் காண்டீபனுக்கு எதிராக அவள் கழுத்தை நெரித்தால் கூட ஒரு வார்த்தை வராது. இவன் என்ன கேட்பானோ, அவள் என்ன சொல்வானோ என்கிற கவலை சிறிதும் இல்லாமல் அகரனோடு பேசிக்கொண்டிருந்தான் எல்லாளன்.

கேதகியை வைத்தியசாலைக்கே அழைத்து வந்தான் கதிரவன். தான் பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டோம் என்றெண்ணி நிம்மதியற முடியாமல் தவித்தாள் கேதகி. வருகிற வழி முழுக்க எதையோ இழந்தது போல் உணர்ந்தாள். என்ன என்று அவளுக்குத் தெளிவில்லை. வாசுசேனன் மட்டுமே நினைவில் நின்றான்.

error: Alert: Content selection is disabled!!