ஆட்டநாயகன் 32.1

அவர்கள் போனதும் ஆதினியின் முகம் பார்த்தான் எல்லாளன்.

“கேஸ் இழுப்படப்போகுது.” என்றாள் அவள் சுருக்கமாக. அவனும் ஆம் என்பதுபோல் தலையசைத்தான்.

“வேந்தன் அப்ரூவரா மாறினா எல்லாம் மாறும். அப்பிடி அப்ரூவரா மாறினாலும் அவனுக்குக் கிடைக்கப்போற குறைஞ்ச பட்ச தண்டனையே ஆயுள் தண்டனைதான். அதால கடைசி வந்தாலும் மாறமாட்டான். அவன்ர கூட்டாளிகள் அப்ரூவரா மாறோணும். நீங்க மாத்தோணும். அப்பிடி இருந்தாலுமே கேஸ் முடியிறதுக்குப் பல வருசமாகும்.”

எல்லாளனின் மூளைக்குள்ளும் இவைதான் ஓடிக்கொண்டிருந்தன.

சட்டத்துக்குத் தேவை தெளிவான, துல்லியமான, சந்தேகத்திற்கு இடமற்ற சாட்சிகள். கேதகி யாழ்ப்பாணம் வந்தது, அந்தக் கார் தயாநிதி வீடு வரை வந்தது எல்லாம் ஃபுட்டேஜுகளாக அவர்களிடம் இருந்தாலும், அவள் அந்தச் சம்பவம் நடக்கையில் அங்கே இருந்தாள் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

அதே நேரத்தில் அங்கே சரியாக என்ன நடந்தது என்று சொல்கிற அளவுக்குக் கேதகி எதையும் பார்க்கவும் இல்லை. அவள் தப்பி வருகையில் நடந்தவைதான் இவை. கேதகியின் சாட்சியை குறுக்கு விசாரணையில் எதிர்த்தரப்பு இலகுவாக உடைக்கும்.

மிக்கி மவுஸ், மினி மவுஸ் உடைகள் அணிந்து நடு இரவில் அவர்கள் போவதும், திரும்பி வருவதுமான ஃபுட்டேஜுகளை வைத்து அது அவர்கள்தான் என்று நிரூபிக்கும் அளவிற்கு அதில் இருப்பவர்களை இனம் காண வழியில்லை.

ஆனால், அவன் கூட்டாளிகளில் சிலர் உண்மையைச் சொல்ல முன்வந்து, கடைகளில் கிடைத்த புட்டேஜுகள், அந்த ஐஸ் கஃபேயில் கிடைத்த கிளிப், கேதகி என்று இவர்களை எல்லாம் சாட்சிகளாகவும் ஆதாரமாகவும் வைத்து கேஸ் நடத்தினால் நிச்சயம் வேந்தனுக்குத் தண்டனை கிடைக்கும்.

அது எப்போது? இதுதான் கேள்வி.

காரணம் தயாநிதி பக்கம் நின்று விடாமல் வழக்கு நடத்த யாருமில்லை. ஷோபனா வீட்டினர் சிவநாதரின் சொந்தம் என்கையில் அவரை மீறி ஒன்றைச் செய்ய அவர்கள் துணியப்போவதில்லை. ஆக, கிடைத்த ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றில் சமர்ப்பிப்பது மட்டுமே எல்லாளனின் வேலை.

நீதிமன்றில் வழக்கு இழுபட்டுக்கொண்டு போகும். காலவோட்டத்தில் வேந்தன் பிணையில் வெளியே வருவான். சிவநாதர் அவனை நாடு கடத்தலாம். இதுதான் நடக்கப்போகிறது. என்ன, சில வருடங்களை நிச்சயம் வேந்தன் சிறையில் கழிக்க வேண்டி வரும்.

எத்தனையோ வழக்குகளைப் பார்த்த கணவன் மனைவி இருவருக்கும் இந்த வழக்கு எங்கே போய், எப்படி நிற்கும் என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

ஒன்றுமே செய்யாமல் ஒரேயொரு நாள் ஒற்றை அறையில் அடைபட்டுக் கிடந்ததே பல வருடங்கள் சிறையில் வாழ்ந்ததைப் போல் உணர்ந்தான் எல்லாளன். இன்னும் குறைந்தது ஒரு வாரமாவது வைத்தியசாலையில் இருக்கும்படி சொன்ன வைத்தியரின் பேச்சைத் தட்டி விட்டுவிட்டு, அடுத்த நாள் காலையே ஆதினியோடு வீடு வந்து சேர்ந்துவிட்டான்.

ஒரு நாள் முழுவதும் பெற்றவர்கள் இருவரையும் காணாத ஏக்கத்தில் பிள்ளைகள் அழவே ஆரம்பித்துவிட்டார்கள். ஆதினியாவது பரவாயில்லை. ஓரளவிற்கு அவர்களைச் சமாளித்தாள்.

எல்லாளன் நிலைதான் மகா மோசமாயிற்று. அப்பா என்று ஆசையாக ஓடி வருகிற பிள்ளைகளிடம் தன் உடல் நிலையைக் காட்டித் தள்ளி வைக்க அவனுக்குத் தைரியம் இல்லை.

அவனுக்கு வலிக்காதபடிக்கு அவர்களைத் தூக்கிக் கொஞ்சி, அவர்களின் ஏக்கம் தீர்த்து, சமாதானம் செய்வித்து, தம் நிலையை அவர்களுக்கு விளங்கும்படி சொல்லி, அவன் காயத்தைப் பார்த்து அவர்கள் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் சொல்லி, வலிக்கு மருந்தாக அவர்கள் தந்த பிஞ்சு முத்தங்களை வாங்கி முடித்தபோது மனம் நண்பனிடம் சென்று நின்றது.

இப்படித்தானே அவன் வாழ்க்கையும் இருந்திருக்க வேண்டும். உடனேயே தனியாகச் சென்று அவனுக்கு அழைத்தான்.

*****

மழை மேகங்களைப் போல் உடைந்து அழத் தெரியாத மலைகள் பார்வைக்குத் திமிராகத் தெரிந்தாலும், அதன் அடியாழத்தில் கண்ணீரூற்று ஒன்று சத்தமில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படி ஒரு நிலையில் இருந்தான் வாசுசேனன்.

முதல் நாள் இரவு அந்த மொட்டை மாடியின் கொன்கிரீட் தரையில் தலைக்குக் கைகளைக் கொடுத்து மல்லாந்து படுத்தவன்தான். விடிந்தும் அசையவேயில்லை. இரவு முழுக்க உறங்கவும் இல்லை. எல்லாளனே எண்ணம் முழுக்க நிறைந்திருந்தான். அவன் அருகிலேயே இருக்க ஆசைப்பட்டான். அவனைப் பிரிந்து வர விருப்பமேயில்லை.

இணையத்தில் அத்தனையையும் தேடி வாசித்திருந்தாலும் நான் வாசுசேனன்தான் என்கிற முசுட்டுப் பிடிவாதத்துடன்தான் எல்லாளனைப் பார்க்கப் போனான். அவனானால் காணவே முடியாத ஒருவனைக் கண்டுவிட்ட பரவசத்தைக் கண்களில் காட்டுகிறான்.

யாரடா நீ என்று கேட்டால் இவன் நெஞ்சைக் கேட்கட்டுமாம். அதுதான் அவனைப் பார்த்த நிமிடத்திலிருந்து இவன் கட்டுப்பாட்டிலேயே இல்லையே. இல்லாமல் கத்தியால் குத்திவிட்டு வந்தவன் திரும்பவும் அவன் முன்னேயே போய் நிற்பானா?

அவனும் இவன் கத்தியால் குத்தியதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? வசமாக வந்து மாட்டியவனின் கைகளில் விலங்கு மாட்டி, கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டுக் கட்டியணைத்துக் கண்ணீர் விடுகிறான். நடந்த கத்திக் குத்துக்கு எந்த விதமான காத்திரமான விசாரணையும் நடப்பது போல் தெரியவும் இல்லை. அதற்கும் அவன்தான் காரணமாக இருக்க வேண்டும்.

அந்தளவில் இவன் மேல் அப்படி என்ன பாசம்?

கையிலும் காலிலும் கம்பி வைத்திருக்கிறார்கள் என்று எல்லாளன் சொல்லித்தான் அவனுக்கே தெரிய வந்தது. அதன் பிறகுதான் உண்மையில் நான் காண்டீபன்தானா என்கிற கேள்வி அவனுக்குள் எழ ஆரம்பித்தது.

அவனுக்குள் எழுகிற மூர்க்கத்தனமான வெறிக்கு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே ஆசுவாசமாவான். அதனாலேயே காட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்வான். தன்னுடன் இருப்பவர்களோடு மோதுவான். அதன்போது உண்டாகிற உடல் வலிகளைப் பொருட்டில் கொண்டதேயில்லை. இன்னும் சொல்லப்போனால் எதற்கோ உறுமிக்கொண்டு நிற்கும் அவன் தேகத்திற்கு அந்த வலி தேவையாய் இருந்திருக்கிறது.

அப்படித்தான் அந்தக் கையிலும் காலிலும் கம்பி வைத்த இடத்தில் தெரிகிற வலிகளையும் பெரிதுபடுத்தியதில்லை.

ஆனால், சிறைச்சாலையில் அவர்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் கூட இதைப் பற்றிச் சொல்லவேயில்லையே. நேற்று இரவே கிருபானந்தருக்கு அழைத்துக் கோபப்பட்டிருந்தான்.

“என்னை ஒண்டும் கேக்காத வாசு. எதையும் சொல்லுற இடத்தில நான் இல்ல. ஆனா, நானா உனக்கு ஒரு தீங்கும் செய்யேல்ல.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.

மூடு பணிக்குள் மறைக்கப்பட்டிருக்கும் தன் இறந்தகாலம் எப்போது வெளிச்சத்துக்கு வரும் என்று அவனுக்குப் புரியவேயில்லை. இதில் அவனுக்கு ஒரு மனைவியும் மகனும் இருக்கிறார்களாம்.

விடிந்ததும் மறுபடியும் எல்லாளனிடம் போகவே மனம் உந்திற்று. திரும்ப திரும்ப அவனிடம் போய் நின்று என்ன செய்ய என்றும் தெரியவில்லை. காவல்நிலையம் செல்ல வேண்டும், கையொப்பமிட வேண்டும், சிவநாதர் எதையாவது செய்யக் காத்திருக்கிறாரா தெரியாது என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் எல்லாளன் அழைத்தான்.

“என்னடா செய்றாய்?” என்றான் இவன் அழைப்பை ஏற்றதும்.

“…”

“டேய்!”

“…”

“காண்டீ!”

“என்ன கதைக்கோணும் உனக்கு?”

எதுவுமே இல்லை. அவன் நினைவு வந்ததும் அழைத்துவிட்டான். இப்போது என்ன சொல்வது என்று யோசித்துவிட்டு, “போலீஸ் ஸ்டேஷன் போகேல்லையா?” என்று கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!