ஆட்டநாயகன் 33.2

அவர்கள் நடத்த நினைத்த சம்பவமே பெரும் குற்றம். இதில் ஆளை மாற்றிச் சுட்டிருக்கிறார்கள். வந்த ஆத்திரத்துக்கு வைரவனையும் அவன் கூட்டாளிகளையும் போட்டு வெளுத்துவிட்டார்கள். இனி எடுக்கப்படப்போகிற சட்ட ஒழுங்கு நடவடிக்கையைக் காட்டிலும் அத்தனை பேருக்கும் சத்தியநாதனை எண்ணி நடுங்கிற்று.

அவனைச் சமாளிப்பதற்காக இன்னொரு கொலை செய்யவா முடியும்? செய்வதறியாது திகைத்து நிற்கையில் அங்கே வந்தான் சத்தியநாதன்.

உயிரற்ற உடலாக மண்ணில் கிடந்தவனைக் கண்டு அகங்காரமாக நகைத்தபடி வந்தவன், அங்கிருந்த மரக்கொப்பை அப்படியே பிடுங்கி, அதே ஆவேசத்துடன் ஓங்கி நெஞ்சில் இறக்கினான். உயிரற்றுக் கிடந்த வாசுசேனனின் நெஞ்சு இரண்டாகப் பிளந்தது.

இதை எதிர்பாராத அங்கே நின்றிருந்த அத்தனை பேருமே ஒரு நொடி விழிகளை இறுக்கி மூடி முகத்தைத் திருப்பினர். சிறைக்காவல் அதிகாரி எச்சில் விழுங்கிவிட்டு பயத்துடன் அவன் அருகே வந்து நின்றார்.

“என்ன?” என்று உறுமியவனிடத்தில் திக்கித் திணறி நடந்ததைச் சொன்னார். பளார் என்று அவருக்கு ஒன்று போட்டுவிட்டு, மகா கெட்ட வார்த்தைகளை அவர் முகத்திலேயே உமிழ்ந்து தள்ளினான் சத்தியநாதன்.

அடுத்து அவன் யோசித்தது ஒரு நொடிதான். அடுத்த நொடியே அந்த மரக்கொப்பிலிருந்து அவன் விரல்களின் அடையாளம் அழிக்கப்பட்டது. அவன் போட்ட திட்டத்தின்படி சிறைச்சாலைக் கலவரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதைக் கண்டுதான் காண்டீபன் திகில் கொண்டான். என்னவோ நடக்கப்போகிறது என்று அவன் உள்ளம் இன்னுமே அடித்துச் சொல்ல ஆரம்பித்தது.

அவன் பயம் சரியே என்று சொல்வது போன்று தடதட என்று பல காலடி சத்தங்கள் மிக வேகமாய் அவன் இருந்த சிறையை அண்மிக்க ஆரம்பித்தன. நெஞ்சமெல்லாம் உலர்ந்து போகக் காத்திருந்தவனின் சிறைக் கதவைத் திறந்துகொண்டு வந்தார்கள்.

வந்தது எத்தனை பேர், எதற்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு முதலே அவன் கண்கள் கட்டப்பட்டன. என்ன என்ன என்று பதறியவனின் கைகளும் பின்னால் இழுத்துக் கட்டப்பட்டன. அப்படியே இழுத்துக்கொண்டு நடந்தார்கள்.

என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது, எங்கே அழைத்துப்போகிறார்கள் எதுவுமே தெரியவில்லை. கண்களும் கைகளும் கட்டப்பட்டிருந்ததால் அவர்கள் இழுத்துக்கொண்டு சென்ற வேகத்திற்கு இணையாக நடக்க முடியாமல் பல இடங்களில் தடுக்கி விழப் பார்த்தான். கடைசியாக ஏதோ ஒன்றுக்குள் தள்ளிவிட்டார்கள்.

சுற்றி வர பலர் நிற்கிறார்கள் என்று காலடி ஓசையில் புரிந்துகொண்டான். அவன் கையின் கட்டு அவிழ்க்கப்பட்டது. அப்படியே கண் கட்டையும் அவிழ்க்கப்போகிறார்கள் என்று எண்ணி முடிக்க முதலே மேலே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு இரும்புச் சங்கிலியில் அவன் கைகள் கட்டப்பட்டன. வாய்க்குள் எதையோ அடைத்து அதையும் துப்ப முடியாதபடிக்கு வாயையும் கட்டினார்கள்.

அந்த நொடியிலிருந்து அவனுக்கான நரகத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள். எதை வைத்து அடித்தார்கள், எங்கெல்லாம் அடித்தார்கள், எத்தனை பேர் அடித்தார்கள், எவ்வளவு நாள்களாக வைத்து அடித்தார்கள் என்றெல்லாம் தெரியாது. உடலில் இருந்து வியர்வைக்குப் பதிலாக இரத்தமே வழிந்தது. துருப்பிடித்த கம்பிகள், துப்பாக்கிப் பிடிகள் என்று எந்த வித்தியாசமும் இல்லை.

மயங்கி, தலை தொங்கி விழுந்தபோதும் விடவில்லை. கால்களையும் கைகளையும் கட்டிப்போட்டு புழுவைப்போல் பாவித்து சப்பாத்துக் கால்களால் மிதித்துத் தள்ளினார்கள். ஒருவனைக் கொன்றாயிற்று. அதற்கான வழக்கு அங்கே வெளியுலகில் நடக்க நடக்க இங்கே இவன் கொடூரத்தை அனுபவித்தான்.

முழு நேரப் போதையிலேயே வைத்திருந்தார்கள். அவன் உடல் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்ட பல கைதிகளுக்கு ஓரினச் சேர்க்கைக்காக வழங்கப்பட்டது. வாழ்வில் அனுபவிக்கவே கூடாத அருவருப்பை அசிங்கங்களை எல்லாம் அனுபவித்தான். இதற்கு அவனைக் கொன்றிருக்கலாம். உண்மையில் அது தண்டனை இல்லை. அவனுக்கான விடுதலையாக இருந்திருக்கும்.

கொடுமை, கொடூரம், நரகம் என்பதெல்லாம் சின்ன வார்த்தைகள். நம்மருகில் இருக்கிற சக மனித மனங்களுக்குள் இத்தனை வன்மமும் வக்கிரமும் உண்டா என்று நம்பவே முடியாத அளவில் அட்டூழியங்களைச் செய்தார்கள்.

அவனைக் கொல்ல முடியாது. வெளியே விடவும் முடியாது. இதற்கு இருக்கும் ஒரே வழி அவனை உயிருடன் வைத்துக் கொல்ல வேண்டும். அவன் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சினார்கள். முக்கியமானது தலைக்கு. அவன் நினைவுகளை மொத்தமாகப் போதையாலும் மின்சார தாக்குதலாலும் சிதைக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் தன் தலைக்குள் ஓடும் அந்த மின்சாரத்தின் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் எதிரில் இருந்த சத்தியநாதன் மீது பாய்ந்துவிட்டான்.

சும்மாவே வெறிகொண்டு நின்றவன் விடுவானா? இரும்புக் கேடர் போன்ற ஒன்றைத் தூக்கி, ஆத்திரம் தீருகிற வரை அவன் மண்டையிலேயே ஓங்கி ஓங்கி அடித்தான். அதுதான் கடைசி. அன்று மொத்தமாய் நினைவிழந்தவன்தான்.

அதன் பிறகு விழித்தவனுக்கு இறந்தகாலத்தின் சுவடுகள் அவன் நினைவடுக்கில் எங்குமே இல்லை. அப்போது சத்தியநாதனும் இறந்திருந்தான்.

சிறைக்காவல் அதிகாரி கைது செய்யப்பட்ட பிறகு, அந்த இடத்திற்குக் கிருபானந்தன் வருகிற வரையில் அவனைக் கவனிப்பார் யாருமில்லை. பார்க்க வேண்டுமே என்பதற்காக மட்டும் வைத்தியம் நடந்தது. அதன் பிறகு கிருபானந்தன்தான் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு அவனை ஓரளவிற்குத் தேற்றிக்கொண்டு வந்தார்.

இத்தனையையும் திருகோணமலைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழைய சிறைக்காவல் அதிகாரியிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட எல்லாளனால் மூச்சுக்கூட விட முடியவில்லை.

முகம் சிவந்து, கண்கள் சிவந்து, தேகமெல்லாம் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் நடுங்க அப்படியே அமர்ந்திருந்தவனின் உள்ளம் மட்டும் காண்டீபா என்று கதறிக்கொண்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!