அத்தியாயம் 36
ஆதினி உடைந்து அழ ஆரம்பித்ததுமே சாந்திக்கு அழைத்து பிள்ளைகளைக் கீழே விடவேண்டாம் என்று சொல்லியிருந்தான் அகரன். அந்த வீட்டில் சாந்தி வேலைக்கு என்று இருந்தாலும் அவரும் வீட்டுப் பெண்மணிதான். அந்த உரிமையோடு அவரோடு இருந்த கேதகியிடம் கீழே என்ன நடக்கிறது என்று பார்த்து வரச் சொன்னார்.
அப்படித்தான் மெல்லிய தயக்கத்துடன் வந்து எட்டிப் பார்த்த கேதகி, அங்கே நின்றிருந்த வாசுசேனனைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். அங்கு வந்ததிலிருந்து யாரிடமும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே தேடிக்கொண்டிருந்த ஒருவன். கண் முன்னே நிற்கிறான். அதற்கென்று சென்று பேசிவிட முடியாது. அவன் யாரோ அவள் யாரோ.
இன்னும் சொல்லப்போனால் அவளின் ஆழ்மனம் தேடும் சேனா அவன் இல்லை. ஏன், சேனா என்கிற ஒருவனே இல்லை. அது மாயை. அன்னையை இழந்தபோது உணர்ந்ததற்கு ஒப்பான துக்கமும் வெறுமையும் நெஞ்சில் பரவிற்று. தன்னை மறந்து அவனையே பார்த்து நின்றாள்.
அதுவும் அவளுக்குப் பழக்கமான தோற்றத்தில் அல்லாமல் நல்லாடைகள் அணிந்து, திடகாத்திரமாக நின்றிருந்தவனைக் கண்டு அவள் இதயத்தில் பெரும் இரைச்சல்.
முதல் நாள் இரவு பயந்த கோழிக் குஞ்சாக நடுங்கியபடி வந்தவளை மொத்த வீட்டினரும் எந்தப் பாகுபாடும் காட்டாது அரவணைத்துக்கொண்டனர்.
அகரன் மூலம் அவளின் முதுகுக் காயத்தை அறிந்திருந்த சியாமளா, அவள் உடல் கழுவி, உடை மாற்ற உதவி செய்து, காயத்திற்கு மருந்திட்டு, வயிறு நிறைய உணவும் தந்திருந்தாள்.
அவள் மட்டுமல்லாமல் அந்த வீட்டில் யாருமே அவள் யார், அவளின் பின்னணி என்ன, என்ன நடந்தது என்று எதைப் பற்றியும் கேட்டுக்கொண்டு வரவில்லை. இலகுவாகவே அவர்களுக்குள் ஒருத்தியாகச் சேர்த்துக்கொண்டிருந்தனர். இரவு உறக்கத்துக்குக் கூட அவளைத் தனியாக விடாது சாந்தி அக்கா, சியாமளா, பிள்ளைகள், அவள் என்று எல்லோருமே ஒன்றாகத்தான் உறங்கியதும்.
அன்று காலையில் எல்லாளனும் ஆதினியும் வீட்டுக்கு வந்தபோது அடுத்து என்னவோ என்று மெல்லிய பயத்துடன்தான் அவர்களை எதிர்கொண்டாள். அது அவசியமற்றது என்று சொல்வது போன்று, வீட்டுக்குப் புதிதாக வந்தவள் என்று சிறு பார்வையில் கூட அவர்கள் இருவரும் காட்டிக்கொள்ளவில்லை. என்னவோ காலகாலமாக அவள் அந்த வீட்டிலேயே வசிப்பவள் போன்ற உணர்வைத்தான் தந்தனர்.
எல்லாளன் புறப்பட்ட பிறகு ஆதினி, சியாமளா, சாந்தி அக்கா மூவர் மூலமும் காண்டீபனின் மொத்த வரலாற்றையும் சுருக்கமாக அறிந்துகொண்டவள் அசையக்கூட முடியாதவளாய் அமர்ந்துவிட்டாள்.
அவனுக்கு அதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் என்று பரிதாபப்பட்டாள். இன்னுமின்னும் மனத்துக்கு நெருக்கமாக வந்தவன் அவள் தொட்டுவிட முடியாத் தூரத்தில் நின்றான்.
இனி அவனைப் பற்றி நினைக்கவே கூடாது என்றுதான் நினைக்கிறாள். முடியாமல் அவள் எண்ணங்கள் முழுவதும் அவனையே சுற்றி வந்தன.
விழிகளை அவனிடமிருந்து பிரிக்கவே முடியவில்லை. அதுவும் அவளைப் பக்கத்தில் கூட வர விடாதவன், எதேற்சையாய் என்றாலும் அவன் கரம் பற்றக் கூட அனுமதியாதவன், ஆதினி அப்படி அவனைக் கட்டிக்கொண்டு அழுதும் அசையாமல் நிற்பதைக் கண்டு, கண்ணில் நீருடன் வலி நிறைந்த சிறு புன்னகையைச் சிந்தினாள். இனியும் அங்கே நின்று யார் கண்ணிலும் பட விரும்பாமல் திரும்பவும் மொட்டை மாடிக்குச் சென்று, காண்டீபன் வந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு அங்கேயே இருந்துகொண்டாள்.
அப்பா என்கிற ஒருவர் இல்லாத வாழ்க்கையை, அப்பா இன்னொரு பெண்ணை மணந்து குடும்பம் குட்டி என்று வாழ்கிறார் என்கிற உண்மையை, அம்மாவும் அவளும் மட்டுமே என்கிற கசப்பை, அம்மா இனி இல்லை என்கிற அநாதரவான நிலையை எல்லாம் எப்படிக் கடந்து வந்தாளோ அப்படித்தான் சேனா என்கிற ஒருவனும் தன் வாழ்வில் இல்லை என்பதையும் கடந்துவர வேண்டும் என்று புரிந்துகொண்டாள்.
*****
ஆதினியால் இன்னுமே காண்டீபனிடமிருந்து விழிகளை பிரிக்கவே முடியவில்லை. கண்ணை மூடினால் மறைந்துவிடுவானோ என்று ஒரு பயம். தன் அருகிலேயே அவனை அமர வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிதாக அவனிடம் பேசவில்லை. பேச வரவில்லை. வாயைத் திறந்தாலே அழுகைதான் வந்தது. மௌனக் கண்ணீர் உகுத்தபடி அவனைக் கண்களுக்குள் நிரப்பிக்கொண்டிருந்தாள்.
காண்டீபனால் அந்த வீட்டை, அந்த வீட்டு மனிதர்களை, அவர்கள் கொட்டுகிற அந்தப் பேரன்பைக் கையாள முடியவில்லை. முள்ளின் மேல் அமர்ந்திருக்கும் நிலை. அங்கிருந்து ஓடிவிட முயன்றான்.
சற்று நேரத்தில் பிள்ளைகள் கீழிறங்கி வந்தார்கள். அதுவும் தீபன் இவனைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டான். நம்ப முடியா அதிர்ச்சியும் வியப்புமாய் அவன் விழிகள் விரிந்தன. வேகமாய்த் திரும்பி அன்னை தந்தையைப் பார்த்தான். என்ன புரிந்ததோ அன்னையிடம் ஓடி வந்து, “அம்மா, இது காண்டி மாமாவா?” என்றான்.
அவள் கண்ணீரும் புன்னகையுமாக ஆம் என்று தலையை அசைத்தாள்.
“அப்புச் சாமிட்ட போய்ட்டார் எண்டு சொன்னீங்க.”
“அவர் அப்பிடிப் போகேல்லையாம். நாங்க பிழையா நினைச்சிட்டோம். அவர் வேற ஊருக்குப் போயிருக்கிறார்.”
அவனுக்கு அது குறித்து நிறையச் சந்தேகங்கள். கேள்விகளாகக் கேட்டான். அத்தனைக்கும் பொறுமையாகப் பதில் சொன்னாள் ஆதினி.
கேள்வி அவளிடம் என்றாலும் பார்வை முழுக்க முழுக்க காண்டீபனிலேயே இருந்தது. அவ்வளவு நேரமாக அன்னையும் தமையனும் பேசிக்கொள்வதை உன்னிப்பாகக் கேட்டபடி காண்டீபனையே கவனித்திருந்த குட்டித் தீபனா, அவன் முன்னே சென்று நின்று, “நீங்க காந்தி மாமாவா?” என்றாள் தன் மழலையில்.
“அப்பிடித்தான் உங்கட அப்பா சொல்லுறான்.” என்று சொன்னான் அவன்.
அதைக் கண்டு எல்லாளன் பல்லைக் கடித்தான். “அறிவு கெட்டவனே, பிள்ளைகளுக்கு ஏற்ற மாதிரிக் கதைக்க மாட்டியா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கடிந்துவிட்டு, “அது உங்கட மாமாக்கு அப்பா அவனைத் தேடிக்கொண்டு போகேல்லையாம் எண்டு கோவமாம்.” என்று மகளைச் சமாதானம் செய்தான்.
அதன் பிறகும் கூட அவளைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொள்ளவோ, கொஞ்சவோ இல்லை. தன் முன் நின்றிருந்தவளின் இரு பிஞ்சுக் கரங்களையும் பற்றி வருடிக் கொடுக்க மட்டுமே செய்தான் காண்டீபன்.
அதில் எல்லாளனுக்குச் சின்னதாய் மனத்தில் சிணுக்கம். என் மகளைத் தூக்கிக் கொஞ்ச மாட்டானா என்று பார்த்தான். ஆனால் தீபனா அப்படி இருக்கவில்லை. தானாகவே ஏறி அவன் மடியில் அமர்ந்துகொண்டாள்.
காண்டீபனால் அதை இயல்பாக ஏற்க முடியாது போயிற்று. என்னவோ மடியில் குண்டை வைத்திருப்பவன் போன்று ஒட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தான். சின்னவள் சிறிது நேரத்தில் இறங்கி விடுவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ ஆதினியின் அடுத்த வடிவமாய் அவன் மார்பில் வசதியாகச் சாய்ந்துகொண்டு, அவன் ஒரு கரத்தை இரு கரங்களினாலும் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
கொஞ்ச நேரம் சமாளித்துப் பார்த்துவிட்டு, “உன்ர மகளைத் தூக்கு!” என்று மெல்லிய குரலில் எல்லாளனிடம் சொன்னான்.
எல்லாளனுக்கு மெல்லிய அதிர்ச்சி. கூடவே வருத்தமும். “அவள் என்ர மகள். அவளை நீ மடியில வச்சிருக்க மாட்டியா?” என்று சீறினான்.
“வச்சிருக்க மாட்டன், தூக்கு!” என்றதும் அவனை முறைத்துவிட்டு மகளைத் தூக்கிக்கொண்டான் எல்லாளன்.
சின்னவள் முகம் சுருங்கிப் போயிற்று. “அது மாமாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லையாம். அதான். பிறகு பிள்ளையோட விளையாடுவான் என்ன?” என்று சமாளித்துவிட்டு, முதல் வேலையாகச் சின்னவர்களைச் சியாமளாவோடு அனுப்பி வைத்தான்.
“நான் வெளிக்கிடப்போறன்!” அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் எழுந்துவிட்டான் காண்டீபன். ஒவ்வொரு முறையும் தன் வாழ்வின் இருண்ட பக்கம் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வருவான். ஆனால், அவற்றை அவனால் அவனிடம் கேட்க முடிந்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் ஆழ் துளைக்குள் அகப்பட்டுக்கொண்டவன் போன்று அவர்கள் காட்டுகிற இணக்கத்திலும் அன்பிலும் திணறிப்போவான்.
இப்போதும் அங்கிருந்து தப்பிக்க அவன் நினைக்க, “போப்போறியோ? இனி நீ இஞ்சதான்.” என்றான் எல்லாளன் முறைப்புடன்.
“எரிச்சலக் கிளப்பாத எல்லாளன்.”
“என்ன எரிச்சல் உனக்கு?” என்று பாய்ந்தவனைத் தடுத்துவிட்டு, “சாப்பிட வாங்க அண்ணா!” என்று அவன் கரம் பற்றி அழைத்துப்போனாள் ஆதினி.
மறுக்க முடியாமல் அவனும் இழுப்பட்டான். கேதகியையும் அழைத்தாள் ஆதினி. அவள் பிறகு சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டு காண்டீபனின் முன்னே வருவதைத் தவிர்த்துக்கொண்டாள். கடைசியில் ஆண்கள் நால்வரும் உணவை முடித்தனர். கீழேயே காண்டீபனுக்கு ஒரு அறையைக் காட்டினான் எல்லாளன்.
“எனக்குப் போகோணும் எல்லாளன்.”
“எனக்கு உன்னோட நிறையக் கதைக்கோணும். அதுக்கு நீ இஞ்சயே இருக்கோணும். உன்னைச் சுத்தி இருக்கிற பிரச்சினை எல்லாம் முடியட்டும். பிறகு எங்க போறது எண்டு யோசிப்பம்.” என்று பேச்சை முடித்துக்கொண்டு அவனுக்கு மாற்றுடைகளைக் கொண்டு வந்து கொடுத்தான் எல்லாளன்.
அவன் சென்று பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, அவர்களோடு கொஞ்ச நேரம் இருந்து, ஆதினியிடமும் சொல்லிக்கொண்டு திரும்பவும் காண்டீபனிடம் வந்தபோது, அணிந்திருந்த உடையை மாற்றாமல் கூண்டுப் புலி போன்று நடை போட்டுக்கொண்டிருந்தான் காண்டீபன்.
இவனைக் கண்டதும் சினத்துடன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து, “எனக்கு என்ன நடந்தது? நான் ஏன் இப்பிடி எல்லாத்தையும் மறந்து நிக்கிறன்? நான் காண்டீ எண்டா வாசு எங்க? அம்மா அப்பா இல்லையா? எனக்கு அவே ஆரும் இல்லை எண்டுதான் இருந்தது. நீ வேற மனுசி பிள்ளை எண்டு ஒரு கதை சொல்லுறாய். எல்லாரும் என்னை மாதிரி உயிரோட இருக்கினமா, இல்ல… இந்தக் கேள்விக்கு எல்லாம் பதிலைச் சொல்லு. நான் போறன்.” என்றான் பல்லைக் கடித்து
சில கணங்களுக்கு அவனையே பார்த்துவிட்டு, “நீ ஜெயிலுக்கு போன நேரம் வாசுவும் அங்க இருந்திருக்கிறான். உன்னை கொல்ல பிளான் பண்ணி, தெரியாம வாசுவச் சுட்டுட்டாங்கள். நடந்ததே பெரிய கிரைம். அதுல திரும்ப உன்னையும் கொல்லேலாது. சோ உனக்குப் பழைய நினைவை எல்லாம் மறக்க வச்சு வாசுவாவே வச்சிருந்திருக்கிறாங்கள். உன்னை வெளில விட்டு வைக்கிறது ஆபத்து. என் மூலம் உன்னை கொன்றாலும் சரிதான், இல்ல உன் மூலம் என்னை போட்டுத் தள்ளினாலும் சரிதான் எண்டுதான் என்னையும் உன்னையும் மோத விட நினைச்சிருக்கிறாங்கள். அது பிழைச்சுப்போய் உன்னை நான் கண்டு பிடிச்சிட்டன்.” என்று வேகமாகச் சொல்லி முடித்தான் எல்லாளன்.
“இவ்வளவுதானா நடந்தது?”
அதற்குப் பதில் சொல்லாது அவன் கையை இழுத்துத் தன் கழுத்தில் வைத்தான். “எப்பிடிக் கொதிக்குது எண்டு பார். எனக்கு ரெஸ்ட் எடுக்கோணும். நாளைக்கும் நிறைய வேலை இருக்கு. படுக்கவா இல்லை இப்பவே உனக்கு விளக்கம் சொல்லுறதா?” என்றான் முறைப்புடன்.
அவனையே இமைக்காது பார்த்துவிட்டு, “போய்ப் படு!” என்றான் காண்டீபன்.

