இல்லாமல் ஒருவனை உயிரோடு கொன்றுவிட்டு இன்னொருவனை மொத்தமாக முடக்க முடியுமா என்ன? ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. எட்டு வருடங்கள். உனக்கு இருக்காடா கிழவா என்று கருவிக்கொண்டு, “சிவநாதரின்ர பேரன் என்னட்டத்தான் இருக்கிறான்.” என்று சோபாவில் அமர்ந்திருந்த காண்டீபனின் எதிரில் அமர்ந்தபடி சொன்னான்.
“பேரனா?”
“பேரன்தான். திரும்பிற பக்கமெல்லாம் எடுப்பும் தொடுப்பும் வச்சிருக்கிற கேடுகெட்ட குடும்பத்திட்ட இத எதிர்பாக்கத்தானே வேணும்.” என்று சொல்லிவிட்டு, அவனை அத்தனை வழக்குகளில் இருந்தும் விடுவித்துவிட்டதைப் பகிர்ந்துகொண்டான்.
ஒன்றுமே சொல்லாமல் அவனையே பார்த்தான் காண்டீபன்.
“என்னடா?” என்றான் அரும்பிய மென் முறுவலோடு.
ஒன்றுமில்லை என்று தலையை அசைத்த காண்டீபனுக்கு அவன் மனநிலையை அவனாலேயே வரையறுக்க இயலவில்லை.
எல்லாளனுக்கும் அவன் மனநிலை புரிந்தது. அது குறித்துப் பேசாமல், “என்ன செய்வம்?” என்று அவனிடமே கேட்டான்.
“எத்தினை வயசு?”
“20 போல”
“குணம்?”
“இவன்ர வாரிசெல்லாம் நல்லவனாவா இருக்கப் போறான்? அதுவும் சிவநாதரின்ர கவனிப்புக்கு கீழ வளர்ற ஒருத்தன் எப்பிடி இருப்பான்? அடுத்த சத்தியநாதன் அவன். அங்க கொழும்பில ஏதோ ஒரு பெட்டைப் பிரச்சினைல ஏற்கனவே மாட்டியிருக்கிறான். கிழவன்தான் வெளில தெரியாம முடிச்சிருக்கிறான். அப்பிடித்தான் என்னட்ட மாட்டினவன்.”
“அப்ப சும்மா விடு, இஞ்சதான் வந்து நிப்பான்.” இலகுவாய்ச் சொன்னான் காண்டீபன்.
ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான் எல்லாளன். அவன் எண்ணமும் அதுதான். இருந்தாலும், “எப்பிடிச் சொல்லுறாய்?” என்று விசாரித்தான்.
“வேந்தனும் இல்லை எண்டேக்க சிவநாதர் கட்டாயம் இஞ்ச கூப்பிடுவார். கூப்பிடட்டும்.” என்றான் அவன்.
எல்லாளனுக்கும் அப்படித்தான் தோன்றிற்று. அதைவிட அவன் தன் நினைவுகளை மறந்திருந்தாலும் அந்தப் புத்திசாலித்தனமும் கெட்டித்தனமும் அப்படியே இருப்பதைப் புரிந்துகொண்டான்.
கொழும்புக்கு அழைத்து அவனை விடச் சொல்லிவிட்டு அந்தத் தகவலைச் சிவநாதரிடமும் தெரிவித்தான்.
கதிரவனை வரவழைத்துக் கேதகியை அழைத்துப்போய் முறையாக அவளிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னான். அப்படியே அவள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு அழைத்து, நடந்தவற்றைச் சொன்னான். இன்னும் இரண்டு நாள்களில் அவள் அங்கே திரும்ப வந்துவிடுவாள் என்றும், வேலையில் சேர்த்துக்கொள்ளும்படியும் காவல் அதிகாரியாகச் சொல்லிவிட்டு வைத்தான்.
நேற்று கவனம் முழுவதும் காண்டீபன் மீதிருந்தாலும் அவளையும் அவன் கவனிக்காமல் இல்லை. காண்டீபன் முன் வருவதையே அவள் தவிர்த்ததும், இன்றும் காண்டீபன் பக்கமே திரும்பாமல் எல்லோரிடமும் சொல்லிவிட்டுக் கதிரவனோடு புறப்பட்டுப் போனதையும் எண்ணி மனம் கனிந்துபோயிற்று.
அவளையும் தான் இனிக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நிமிர்ந்தவன் திகைத்துப்போனான். அங்கே மிதிலாவும் அதிரனும் வந்துகொண்டிருந்தனர்.
நிச்சயமாக இதை அவன் எதிர்பார்க்கவில்லை. வேகமாகத் திரும்பிக் காண்டீபனைப் பார்த்தான். அவன் பார்வையும் அவர்களில்தான். அதிர்ச்சியா, நம்ப முடியா திகைப்பா என்று பிரித்துணர முடியாத ஒரு பார்வை.
*****
சம்மந்தர் இறந்ததிலிருந்து சியாமளாவும் ஆதினியும் மிதிலா வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதனாலேயே அவர்களின் வரவுக்கு மிதிலாவும் அதிரனும் பழகியிருந்தனர். அதுவும் சின்னவர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடும் பொழுதுகள் மனத்துக்கு அத்தனை இதமாய் இருக்கும். எல்லாக் கவலைகளையும் மறந்துவிட்டு அவள் சிரிக்கும் நேரமும் அதுதான்.
அப்படியிருக்க அன்று யாரும் வரவில்லை. நேரமில்லை போலும் என்றெண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். தினமும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாதே. அதைவிட அவளும் மகனும் மட்டும்தானே நிரந்தரம். அதைப் பழகுவதுதானே சரி என்றும் எண்ணிக்கொண்டாள்.
அடுத்த நாளும் வரவில்லை என்றதும்தான் என்னவோ என்று ஆதினிக்கு அழைத்தாள். அப்போதுதான் எல்லாளனுக்குக் கத்திக் குத்து விழுந்த விடயம் தெரிய வந்தது. பயந்துபோனாள். கரு கலைந்த விடயம் அவளுக்குச் சொல்லப்படவில்லை. ஆனாலும் கூட ஆதினியின் குரலில் இருந்த கரகரப்பும் கண்ணீரின் தளுதளுப்பும் அவள் கணவனுக்காக என்று எண்ணி ஆறுதல் சொல்லிவிட்டு வைத்தவளுக்கு மனம் ஒரு நிலையிலேயே இல்லை.
கணவனின் இழப்பு, இடைப்பட்ட காலத்தில் அன்னையின் இழப்பு. அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பிக்கையில் சம்மந்தரையும் மாதவனின் மனைவியையும் இழந்தார்கள். இன்னுமே அந்த இழப்புகளில் இருந்து வெளியே வரமுடியாமல் இருக்க, இது என்ன அடுத்த வேதனை என்று கலங்கிப்போனாள். அதுதான் அடுத்த நாள் காலையிலேயே புறப்பட்டு வந்தாள்.
வந்தவள் பார்வையில் முதலில் பட்டது எல்லாளன்தான். மேலே ஒரு தொளதொளப்பான டீ சேர்ட் போட்டிருந்ததால் காயம் தெரியவில்லை. ஆனால் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் குழம்பிப்போனாள். அவளைக் கண்டு அதிர என்ன இருக்கிறது?
அதே நேரத்தில் அவள் இதயத்தில் ஒருவித அதிர்வு. அன்று காலையில் இருந்தே மனது சரியாய் இல்லைதான். இரவிரவாக எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு படுத்ததுதான் காரணம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இங்கே அவளுக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. என்னவோ நெஞ்செல்லாம் நடுங்கிற்று. ஒரு துடிப்பு. பயம் பதற்றம் என்று என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் கலந்து வந்து ஆட்டிவைத்தன.
என்ன இது, ஏன் இப்படி? ஒன்றும் புரியாமல் மகன் கையைப் பற்றியபடி வீட்டுக்குள் வந்தவள் பார்வையில் அப்போதுதான் பட்டான் அவன்.
உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போன்று அப்படியே நின்றுவிட்டாள். இதோ வெடிக்கிறேன் என்பதுபோல் அவள் இதயம் அடித்துக்கொண்டது. நிற்க முடியவில்லை. கால்கள் தள்ளாடின. சின்ன மகனின் பிஞ்சுக் கையை மூழ்கப்போகும் நேரத்தில் பற்றிக்கொள்ளும் கட்டையாய் இறுக்கிப் பற்றிக்கொண்டாள்.
தீபன்… அவளின் தீபன். தன் கண்களை நம்ப முடியாது உற்று உற்றுப் பார்த்தாள். ஒன்றுமே தெளிவாய்த் தெரிய மாட்டேன் என்றது. ஐயோ என்ன கொடுமை இது? வேக வேகமாய்க் கண்களைச் சிமிட்டிவிட்டு நன்றாகப் பார்த்தாள். அவளின் தீபனேதான்.
உருவம் மாறிப்போயிருக்கலாம். முகம் மாறியிருக்கலாம். அதற்காக அவள் ஊனோடும் உயிரோடும் கலந்தவனை அவளுக்குத் தெரியாமல் போகுமா? அவள் சுவாசத்தின் வாசமாகிப்போனவனை அவள் கண்டுபிடிக்க மாட்டாளா?
இனிய நினைவுகளை இனாமாகத் தந்துவிட்டு, மண்புழுவாய் அவளைத் துடிக்க விட்டுவிட்டுப் பிரிந்து போனானே, அவளின் உயிரானவன். அவனா இவன்?
வந்துவிடுவேன் காத்திரு என்று சொல்லிவிட்டுப் போனவன் சடலமாக வந்து படுத்திருந்தானே. அவனா இவன்?
இமைக்கவும் பயந்தாள். அந்த நேரத்தில் காணாமல் போய்விட்டான் என்றால்?
ஆனால் அவன் எப்படி இப்படி இங்கே? எப்படி வர முடியும்?
அதுதான் அவன் உயிரைத் துடிக்க துடிக்க எடுத்தார்களே. அவள் குடியிருந்த நெஞ்சை இரண்டாகப் பிளந்து போட்டார்களே. வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட வீரனாகத் தரையில் கிடந்தானே. அவள் கண் முன்னேதானே உயிரற்ற உடலாகக் கொண்டுவந்து கிடத்தினார்கள்? அவனின் ஆறடி தேகத்தை ஒரு பிடி சாம்பலில் திரட்டித் தந்தார்களே. பிறகும் எப்படி வந்தான் அவளின் தீபன்?
கைகால்கள் எல்லாம் வெடவெடவென்று நடுங்கின. மகனின் பிஞ்சுக் கரத்தை இன்னும் இறுக்கிப் பற்றினாள். நெஞ்சை உடைத்துக்கொண்டு கிளம்பி வந்த அழுகையை அடக்க முடியாமல் அல்லாடினாள்.
துக்கம் மேலெழுந்து வந்து அவளைத் துண்டாட முயன்றது. ஹோ என்று கத்தி அழவேண்டும் போலொரு ஆவேசம். ஓடிப்போய் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு இத்தனை காலமும் எங்கே போனாய், என்னைத் துடிக்க வைத்துப் பார்க்க நினைக்கிறாயா என்று உலுக்க வேண்டும் போலிருந்தது.
ஆனால் அவன் வர வாய்ப்பில்லையே. வாய்ப்பே இல்லையே. அவள் உள்ளம் கதறி அழுதது. அவள் அறிவும் உணர்வுகளும் எதிரெதிர் திசையில் நின்று போராடின. கண் முன்னே காணும் உருவமும் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளுமாகச் சென்று அவளைக் கல்லில் போட்டு அடித்தன. அவளால் நிதானமாகச் சிந்திக்கவே முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. தலை சுற்றியது. கால்கள் தள்ளாடின. நெஞ்செல்லாம் பதறியது. உதடு, தொண்டை, நெஞ்சு எல்லாம் வறண்டுபோயிற்று.
இல்லை, இவன் யாரோ, அவளின் தீபன் இல்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அவளின் உயிர் அவளுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.
நம்ப முடியா அதிர்ச்சியும் திகைப்புமாய் எல்லாளனைப் பார்த்தாள். அவளுக்கு ஆத்திரம் வந்தது. அழுகை வந்தது. எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு என்னை என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று கத்த வேண்டும் போலிருந்தது. வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரும்போல் இல்லை என்றதும் வந்ததை விடவும் வேகமாய்த் திரும்பிப் போக முயன்றவள் உயர் அழுத்த இரத்தவோட்டத்தில் மயங்கி விழுந்தாள்.
“மிதிலா!” என்று கூவிக்கொண்டு எல்லாளன் ஓடுவதற்கிடையில் இரண்டே எட்டில் சென்று அவளைத் தாங்கியிருந்தான் அவளின் தீபன்.

