அத்தியாயம்-30
தங்கையின் பேச்சைக் கேட்ட ரஞ்சனின் மனம் கொதித்தது. சுசீலா அத்தை கேட்ட சீதனமே மிக மிக அதிகம். அப்படியிருந்தும் ஒன்றும் சொல்லாமல் சம்மதித்ததற்கு காரணம், அப்பாவின் ஆசை மற்றும் நித்தியின் விருப்பம்.
இதில் சித்ரா போட்டோக்களைக் காட்டிச் செய்த குளறுபடிகளால் உண்டான கறுப்புப் புள்ளி வேறு அவன் மீது இருப்பதால், தாங்கள் கேட்பதை நிச்சயம் தருவான் என்று எண்ணித்தான் அவர்கள் அந்தளவு சீர் கேட்டார்கள் என்பதையும் அறிவான்!
இருந்தாலும், தங்கையின் திருமணத்தில் எந்தத் தடங்கலும் வரக்கூடாது என்று எண்ணி, தன் சக்தியையும் மீறிப் படாத பாடு பட்டுத்தான் அந்தத் திருமணத்தையே நடத்தி முடித்தான்.
வங்கியில், முதலில் அந்தக் கடை திறப்பதற்கும் பிறகு இந்தத் திருமணத்திற்கும் என்று அவன் வாங்கிய லோன் இன்னும் பத்து வருடங்களுக்கு இருக்கும். அதை இந்தக் கடைகளில் உழைத்துக் கட்டலாம் என்று எண்ணித்தான் வாங்கினான். அப்படியிருக்க நித்தி அந்தக் கடையையே கேட்டால் என்ன சொல்வது?
ஆத்திரத்தில் முகம் இறுக அவன் தாயைப் பார்க்க, “என்ன நித்தி இதெல்லாம்? உனக்கு என்ன குறை? சீரும் சிறப்புமாக சீதனமும் தந்துதானே இந்தக் கல்யாணத்தை முடித்து வைத்தான் உன் அண்ணா. பிறகும் ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்? வீடு ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது தான் வழமை. கடை.. அது அவன் உழைப்பில் உருவானது.” என்றார் இராசமணி.
அவராலும் அனைவருக்கும் முன்னிலையில் மகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. அதோடு அன்றுதான் திருமணம் முடித்த மகளிடம் கடுமையைக் காட்டவும் முடியவில்லை. முடிந்தவரை தன்மையாக ரஞ்சனின் நிலையை அவளுக்கு விளக்கினார்.
நித்தியின் முகத்தில் பிடிவாதம் இன்னுமே வலுத்தது.
“ஏன், வீட்டை ஆண்பிள்ளைகளுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா? நானும் அப்பாவின் மகள்தானே. எனக்கு அந்த வீடு வேண்டும்! அதோடு அந்தக் கடை அவரின் உழைப்பு என்றால் என்ன? யாருக்காக அண்ணா உழைக்கிறார், எனக்காகத்தானே. அந்தக் கடையையும் எனக்குத் தரச் சொல்லுங்கள். அவர்தான் பெரிய பணக்காரியைக் கட்டியிருக்கிறார். அவர்களிடம் எவ்வளவு கடைகள் இருக்கிறது. அது எல்லாம் அண்ணாக்குத்தனே வரப்போகிறது. இதை எனக்குத் தரட்டும்!” என்று அவள் ஆணித்தரமாகப் பிடிவாதக் குரலில் சொன்னபோது, இராசமணியே வாயடைத்துப் போனார் என்றால் ரஞ்சனின் மனமோ எரிமலையின் வெடிப்புக்களாய் வெடித்துக் கொண்டிருந்தது.
அதைவிட, இதென்ன கேவலம்?
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அவனது மாமனாரும் மாமியாரும் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஏதோ அவர்களின் சொத்துக்காகத்தான் அவன் சித்ராவை மணந்தது போன்றல்லவா இருக்கிறது நித்தியின் பேச்சு!
சித்ராவுக்கோ நித்தியை இழுத்துவைத்து அறைந்தால் என்ன என்கிற அளவுக்கு ஆத்திரம் வந்தது.
இவ்வளவு பேருக்கும் முன்னால் கூடப் பிறந்த சகோதரனைப் பற்றி இப்படிச் சொல்கிறாளே. தன் கணவன் இதை எப்படித் தாங்கக் போகிறான் என்று நெஞ்சம் பதற அவள் அவனைப் பார்க்க அவனும் அவளைத்தான் அப்போது பார்த்தான்.
அவன் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்துத் துடித்துப் போனவள், ஓடிச்சென்று அவனை ஆறுதலாக அணைத்துக்கொள்ளத் துடித்த மனதை அடக்கியபடி, வருந்தாதீர்கள் என்று விழிகளாலேயே அவனிடம் இறைஞ்சினாள்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் தங்கையிடம் திரும்பி, “அந்தக் கடையை வாடகைக்குத்தான் நான் நடத்துகிறேன். அதை எப்படி உனக்குத் தரமுடியும்?” என்று கேட்டான்.
“அப்படியே அதை எங்களுக்குத் தாருங்கள். இனி அதை இவர் நடத்திக்கொள்வார்!” என்றாள் அவன் அன்புத் தங்கை.
“உளறாதே! அவனுக்கு கடையைப் பற்றி என்ன தெரியும்? அதென்ன விளையாட்டுப் பொருளா எல்லோரும் எடுத்து விளையாட? ஒரு தொழில் நுணுக்கம் தெரியாமல், வியாபார யுக்தி தெரியாமல் அவன் எப்படி நடத்துவான்?”
“ஏன், நீங்கள் மட்டும் அதற்கு என்று தனியாகப் படித்துப் பட்டம் ஏதும் வாங்கினீர்களோ? வைத்தியருக்குப் படித்துவிட்டுக் கடையை நடத்தவில்லையா? அப்படி அவரும் நடத்துவார்.“ அப்போதும் கட்டியவனுக்காக வாதாடினாள் ரஞ்சனின் தங்கை.
“நித்தி சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது தானே. தங்கை ஆசையாகக் கேட்கும் கடையை கொடுக்கமாட்டேன் என்று ஏன் நீ இந்தப் பிடிவாதம் பிடிக்கிறாய். நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி ரஞ்சனைக் கட்டிக்கொண்ட மகராசி தன் சொத்துக்களை கணவனுக்குக் கொடுக்க மாட்டாளா என்ன? உனக்கு இனி ஒரு பொறுப்பும் இல்லைத்தானே. அவள் கேட்பதைச் செய்!” என்றார், அதுவரை அமைதியாக நின்ற மல்லிகா- சாதனாவின் தாயார்.
பணம் காய்க்கும் மரமான ரஞ்சனை தன் மகளிடம் இருந்து சித்ரா பறித்துக்கொண்ட ஆத்திரத்தை இதில் காட்டினார் அவர்.
மல்லிகாவின் பேச்சு ரஞ்சனின் தன்மானத்தைச் சுரண்டிப் பார்த்தது.
“என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அத்தை. மாமனார் வீட்டில் உட்கார்ந்து உண்ண ஆசைப்படும் பெட்டைப்பயல் என்றா? அல்லது அடுத்தவரின் சொத்துக்கு அலையும் பேராசைக்காரன் என்றா?” சினம் மிகுந்த குரலில் கேட்டான் ரஞ்சன்.
“அப்படி என்றால் என் மகன் உன் வீட்டுச் சொத்துக்கு அலைகிறான் என்கிறாயா நீ? நன்றாக இருக்கிறது உன் பேச்சு. என்ன அண்ணி இதெல்லாம்? நாங்கள் என்ன காசு பணம் இல்லாமல் உங்கள் மகளைப் பெண் எடுத்தோம் என்று நினைத்தீர்களா? என் அண்ணாவின் மகள், சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று பார்த்தால் உங்கள் மகன் இப்படிச் சொல்கிறான். அதைக் கேட்டுக்கொண்டு நீங்களும் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று, ரஞ்சனிடம் ஆரம்பித்து இராசமணியையும் உசுப்பிவிட்டார் சுசீலா.
“அதுதானே அத்தை, நான் உங்களிடம் வந்து நித்தியைக் கட்டிக்கொள்வதற்கு நகை நட்டுத் தாருங்கள் என்று கேட்டேனா? எதற்கு உங்கள் மகன் என்னை இதில் இழுக்கிறார்?” என்று நவீனும் தன் பக்க நியாயத்தைக் கேட்டு, தான் ஒன்றும் தன் தாய்க்குச் சளைத்தவன் இல்லை என்று காட்டினான்.
நாலாபுறமும் இருந்துவந்த தாக்குதலில் ரஞ்சன் வெறுத்துப்போய் நிற்க, இராசமணியோ பதறிப்போனார். மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று சந்தோசப் படமுடியாமல் ஏதும் பிரச்சினை ஆகிவிடுமோ என்று பதறியவர், “ரஞ்சன் கதைப்பதைக் கொஞ்சம் நிதானமாகக் கதை. இது உன் தங்கையின் வாழ்
க்கைப் பிரச்சினை.” என்றார் கண்டிப்பான குரலில்.

