என் சோலைப் பூவே 30 – 2

தாயைச் சினத்தோடு பார்த்தான் ரஞ்சன்.

 

“நான் என்னம்மா பிழையாகக் கதைத்தேன்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ஆத்திரத்தோடு இடையிட்டார் சுசீலா.

 

“நீ பிழையாகக் கதைக்காமல் வேறு எப்படிக் கதைத்தாய்? மறைமுகமாக என் மகனை அல்லவா குத்திக் காட்டினாய். உன் குத்தல் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு உன் தங்கையோடு வாழவேண்டிய அவசியம் என் மகனுக்கு இல்லை. அதை நன்றாகப் புரிந்துகொள். உன் வீட்டையும் கடையையும் நான் கேட்டேனா இல்லை என் மகன்தான் கேட்டானா? கேட்டது உன் தங்கை. நீ எது கதைப்பதாக இருந்தாலும் அவளோடு கதை. அதை விட்டுவிட்டு எங்களைக் குத்திக் காட்டும் பேச்செல்லாம் இங்கே வேண்டாம் சொல்லிவிட்டேன்! உனக்கு உன் தங்கைக்கு சீர் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் சொல்லு, நீ தந்ததை எல்லாம் நாங்கள் திருப்பித் தந்துவிடுகிறோம். நாங்கள் ஒன்றும் வக்கில்லாமல் வாழவில்லை. உன்னை விட வசதியாகத்தான் இருக்கிறோம்!”

 

அவரின் சாதுர்யமான பேச்சில் ரஞ்சனே அயர்ந்துபோனான் என்றால், இராசமணிக்கோ அடிவயிறே கலங்க ஆரம்பித்தது.

 

இந்தப் புத்திகெட்ட பெண் என்னிடம் கேட்டிருக்கலாமே. நான் வாங்கிக் கொடுத்திருப்பேனே. எல்லோர் முன்னிலையிலும் தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்கிறாளே என்று மகள் மேல் ஆத்திரம் வந்தாலும் அதை அவளிடம் காட்டிக்கொள்ள முடியாமல் தவித்தார்.

 

இதில் நித்தி வேறு கண் கலங்கியபடி நின்றகோலம் அவரை வாட்டியது.

 

பின்னே, மகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் அவளின் நிலை என்ன என்று நினைத்த மாத்திரத்திலேயே அவரது கோபம் முழுவதும் மகனிடமே திரும்பியது.

 

“என்னடா பார்த்துக்கொண்டு நிற்கிறாய். தங்கைக்குக் கொடுக்காமல் சொத்துக்களைச் சேர்த்து என்ன செய்யப் போகிறாய்? இவ்வளவு பேராசைக்காரனா நீ? திருமண நாள் அதுவுமா அவளைக் கண்ணைக் கசக்க வைக்கிறாயே. இதே இடத்தில் உன் அப்பா இருந்திருந்தால் அவள் கேட்கமுதலே தூக்கிக் கொடுத்திருக்க மாட்டாரா? எப்போது கதைத்தாலும் தங்கை என் பொறுப்பு என்று சொல்வாயே, இதுதான் நீ காட்டிய பொறுப்பின் லட்சணமா? இவ்வளவு சுயநலம் பிடித்தவனாக நீ இருப்பாய் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவேயில்லை.” என்றவரை, நம்ப இயலாமல் பார்த்தான் ரஞ்சன்.

 

சந்தானம் தம்பதியரோ திகைத்துப் போயினர்.

 

சுயநலம் மிக்கவர்களின் பேச்சைக் கேட்டு ஏற்கனவே கசந்துபோய் நின்ற சந்தானம், மகளுக்காக மகனையே தூக்கி எறியும் சம்மந்தியைப் பார்த்து மலைத்தே போனார்.

 

இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமா?

 

ரஞ்சனின் மனமோ தாயின் பேச்சைக் கேட்டுப் பலமாக அடிவாங்கியது. அதுவரை அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பாழாய்ப் போனதே! என்ன செய்து என்ன பலன் என்று விரக்தியாக எண்ணினான்.

 

மகளுக்காக இவ்வளவு பேசும் இந்த அம்மா தன்னைப் பற்றி ஒருநிமிடமாவது சிந்திக்கவே இல்லையா? அவனும் அவர் மகன்தானே! உள்ளே வலித்தது அவனுக்கு.

 

அம்மா தங்கை மேல் சற்று அதிகமாகவே பாசம் காட்டுவார் என்பதை அவன் அறிவான். வீட்டின் கடைக்குட்டி என்பதாலும் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகும் பெண் பிள்ளை என்பதாலும் அப்படிச் செய்கிறார் என்று எண்ணியவன் அதுநாள் வரை அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை.

 

ஆனால் இன்று?

 

அவர்கள் இருவருக்குமாகத்தானே அவன் மனசாட்சியை அடகுவைத்து, தன்னுடைய மனதின் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, என்னென்னவோ செய்தான். இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்ய இருந்தான்.

 

அவனா சுயநலம் பிடித்தவன்? அவனா பேராசைக்காரன்?

 

அப்படி சுயநலமாகவும் பேராசைக்காரனாகவும் இருந்திருக்க மனதுக்குப் பிடித்தவளை சந்தோசமாகக் கைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பானே!

 

மனக்கொதிப்பை அடக்கவும் முடியாமல் வாயைத் திறந்து கொட்டவும் முடியாமல் தயை வெறித்தபடி நின்றவனைச் சந்தானம் நெருங்கினார்.

 

“ரஞ்சன், அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடு. உன் தங்கையின் வாழ்க்கை தான் முக்கியம். அதோடு உன்னிடம் உன் உழைப்பு இருக்கேப்பா. அதை யாரால் பிடுங்கமுடியும் சொல்லு? அதைவிட உன் மனைவியின் சொத்துக்கள் எல்லாமே உனக்குத்தானே சொந்தம்.” என்று சொன்னவரின் பேச்சில் ரஞ்சன் வெட்கிப் போனான்.

 

அப்போதும், அந்த நிலையிலும் என் சொத்துக்கள் என்று சொல்லாமல் உன் மனைவியின் சொத்துக்கள் என்று சொன்ன அந்தப் பெரியமனிதர், மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை மீண்டும் மிக அழகாக அவனுக்கு உணர்த்தினார்.

 

அவன்தான் அவர் முகம் பார்க்கமுடியாமல் கூனிக் குறுகிப் போனான்.

 

பின்னே, அவருக்கு அவன் செய்த காரியங்கள் அனைத்தும் தெரியவந்தால்?

 

அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல், மணப்பெண் வீட்டாருக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்குள் வேகமாகச் சென்று கதவை அறைந்து சாத்தினான் ரஞ்சன்.

 

கணவனின் நிலையை எண்ணிக் கண்களில் கசிந்த கண்ணீரோடு நின்ற மகளின் அருகே சென்று அவளுக்கு ஆதரவாக நின்றுகொண்டார் லக்ஷ்மி.

 

சந்தானத்துக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ரஞ்சன் கடையையோ வீட்டையோ அவர்களுக்குக் கொடுப்பதில் அவருக்கு எதுவுமே இல்லை. அவரிடம் இல்லாத சொத்தா என்ன?

 

ஆனால், வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து எழுந்து மெல்ல மெல்ல முன்னுக்கு வந்தவன் அனைத்தையும் மீண்டும் இழப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு அவனது கடின உழைப்பையும் கஷ்டத்தையும் அதே துறையில் இருக்கும் அவரையன்றி வேறு யாரால் மிகத் துல்லியமாக உணரமுடியும்?

 

அந்தக் கஷ்டத்தையும் உழைப்பையும் இன்னொருவர் நோகாமல் வந்து பிடுங்கிக் கொள்வதா? எண்ணங்கள் பல இப்படி ஓட, கலங்கி நின்ற மகளின் அருகில் சென்று துணையாக நின்றுகொண்டார் அவர்.

 

“அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன் அப்பா…” என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு கணவனிடம் செல்லக் காலடி எடுத்து வைத்தவளை சாதனாவின் பேச்சு நிறுத்தியது.

 

“பார்த்தீர்களா அத்தை, இவ்வளவு நடந்தும் உங்கள் மருமகள் வாயைத் திறக்கவே இல்லையே! நம்மிடம் இல்லாத பணமா காசா, அவர்கள் கேட்பதைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டாமா? இதுவே நானாக இருந்திருக்க ரஞ்சன் மச்சான் இப்படிக் கவலைப் படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பேனா? அவர் கேட்க முதலே அனைத்தையும் கொடுத்திருப்பேன்.” என்றவளைப் பொசுக்கி விடுபவள் போல் பார்த்த சித்ராவால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!