என் சோலைப் பூவே 31 – 1

அத்தியாயம்-31

 

ஒரு கம்பீரமான ஆண்மகனை, வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஒரு போர்வீரனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்று இப்படி ஓய்ந்து ஒடிந்துபோனவனாகப் பார்க்கவே முடியவில்லை அவளால்.

 

தாய் தங்கையரின் செயலில் கோபமாக இருப்பான் என்றுதான் எண்ணினாளே தவிர இந்தளவு தூரத்துக்கு வருந்துவான் என்று நினைக்கவே இல்லை!

 

தன் துயரை அடக்கிக்கொண்டு அவன் தலையை இதமாகக் கோதிவிட்டபடி அவள் நிற்க, அவனோ அவள் வயிற்றுக்குள் புதைத்த தலையை நிமிர்த்தவும் இல்லை. அவள் இடையை இறுக்கமாகக் கட்டியிருந்த கரங்களைத் தளர்த்தவும் இல்லை!

 

அதில் இருந்தே அவன் இன்னும் தன்னைச் சமன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரிந்தாலும், வெளியே அந்த வல்லூறுகள் காத்திருக்கின்றனவே என்று எண்ணியவள், அவன் தலையைக் கோதியபடியே, “ரஞ்சன்..!” என்று இதமான குரலில் அழைத்தாள்.

 

அப்போதும் அவன் அசையாமல் இருக்க, “வெளியே எல்லோரும் காத்திருக்கிறார்கள் ரஞ்சன். நாம் இப்படியே எவ்வளவு நேரத்துக்கு இங்கேயே இருக்க முடியும்…” என்று அப்போதைய நிலைமையை அவனுக்கு எடுத்துரைத்தாள் மனைவி.

 

அதுவரை தனக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தவனுக்கும் சூழ்நிலை மெல்லப் புரிய, அவளது இடையிலிருந்த கரங்களை விலக்காது முகத்தை மட்டும் நிமிர்த்தி அவளை அண்ணாந்து பார்த்தான்.

 

சிவப்பேறிப் போயிருந்த அவன் விழிகளில் தெரிந்த பரிதவிப்பில், வலியில், அடிபட்ட தோற்றத்தில் அவள் நெஞ்சு துடித்தது.

 

“ரஞ்சன்..” என்றாள் கலங்கிவிட்ட விழிகளோடு.

 

“ஏன் யாழி அம்மா இப்படி எல்லாம் பேசுகிறார். நானும் அவர் மகன்தானே. அவர்கள் இருவருக்குமாகத்தானே எல்லாமே செய்தேன்.” என்று நெஞ்சை உருக்கும் குரலில் அவன் கேட்டபோது, எவ்வளவோ அடக்க முயன்றும் முடியாமல் அவள் விழிகளில் இருந்து உருண்ட கண்ணீர்த் துளிகள் இரண்டு அவன் கன்னங்களில் விழுந்து சிதறியது.

 

“விடுங்கள் ரஞ்சன். அவள் பெண்பிள்ளை இல்லையா.. அதனால்தான் அப்படிப் பேசியிருப்பார். மற்றும்படி அத்தைக்கு உங்கள் மேல் பாசம் இல்லாமல் இருக்குமா? அதனால் அவர்கள் கேட்பதைக் கொடுங்கள்.” என்றாள் சமாதானமாக.

 

அவளும் வேறு என்னதான் சொல்வாள்? எல்லாவற்றையும் விட கணவனின் நிம்மதி முக்கியமே!

 

ஆனால், அதைக் கேட்ட ரஞ்சனின் முகத்தில் மெல்ல மெல்லத் தீவிரத் தன்மை குடியேற, தலையோ மறுப்பாக அசைந்தது.

 

“இல்லை யாழி. அது முடியாது! அந்தக் கடைகளைத் திறப்பதற்கு நான் பட்ட பாடுகளும் செய்த வேலைகளும் உனக்குத் தெரியாது. உன் அப்பாவின் கடையில் இருந்து ப….” என்று இறுகிய குரலில் அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவளது தளிர் விரல்கள் கணவனது இதழ்களை மூடின.

 

கேள்வியாகப் பார்த்தவனை கனிவோடு நோக்கி, “அதெல்லாம் இப்போது எதற்கு ரஞ்சன். உங்கள் தங்கைக்குத்தானே கடையைக் கொடுக்கப் போகிறீர்கள். அதனால் யோசிக்காமல் முழுமனதோடு கொடுங்கள். நாம் மற்றக் கடையை வைத்தே முன்னேறலாம். அதுவும் உங்களால் நிச்சயம் முடியும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கிறது..” என்று உறுதியோடு சொன்னவளை, பெருமிதமாகப் பார்த்துப் புன்னகைத்தவன் அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.

 

அவன் அணைப்புக்குள்ளேயே நின்றபடி, “நீங்கள் முன்னின்று நடத்திய திருமணம் இடையில் குழம்பியதாக இருக்கவேண்டாம் ரஞ்சன். அதனால் நித்தி கேட்பதைக் கொடுத்து அவளைச் சந்தோசமாக கணவன் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.” என்றாள் மெல்ல.

 

“அப்படி எல்லாவற்றையும் கொடுத்தால் நாம் கடன்காரர்களாக நடுவீதியில் நிற்போம். அதனால் உனக்கு ஒன்றும் இல்லையா? உன் அப்பாவிடம் எதற்கும் கையேந்த எனக்கு விருப்பமில்லை.” என்றான் அவள் மனநிலையையும் அறியும் விதமாக.

 

“அப்படி ஒருநிலை நமக்கு வராது ரஞ்சன். நீங்கள் வர விடமாட்டீர்கள்! அப்படியே நின்றாலும் என்ன, உங்களோடுதானே நிற்கப் போகிறேன். அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இருவருமாக வாழ்க்கையில் போராடித்தான் பார்ப்போமே.” என்று வெகு இலகுவாகச் சொன்னவளை, வேகமாக எழுந்து அதைவிட வேகமாகக் கட்டிக்கொண்டான் கணவன்.

 

சில நொடிகளிலேயே அவளிடம் இருந்து விலகியவனின் முகம் இப்போது தெளிந்திருந்தது.

 

“வா..” என்று அவளையும் அழைத்தவன், அவளின் கரம்பற்றியே வெளியே அழைத்துச் சென்றான்.

 

அங்கிருந்த எல்லோரும் அவர்களையே பார்க்க, ஒருவிதக் கூச்சத்துடன் சித்ரா அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முயன்றாள். அந்தச் செயலில் முகத்தைத் திருப்பி அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

 

அப்படியே தாயின் முன்னால் சென்று நின்று, “அந்த வீட்டை நித்தியே எடுத்துக் கொள்ளட்டும்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,

 

“அப்போ கடை..?” என்று அவசரமாகக் கேட்டது நித்யா.

 

“அதைத் தரமுடியாது!” உறுதியான குரலில் சொன்னான் ரஞ்சன்.

 

“ஏன் தரமுடியாது. அந்தக் கடையும் உங்களின் சொந்தக் கடைதானே. அதுவும் எனக்கு வேண்டும்.” என்றவளை வெறுப்போடு பார்த்தான் ரஞ்சன்.

 

“வாயை மூடு! இனி என்னிடம் எதையும் கேட்கும் உரிமையோ பேசும் உரிமையோ உனக்கு இல்லை! இன்றோடு எல்லாமே முடிந்தது! இதற்கு மேலும் எதையாவது பேசினாயானால் அந்த வீட்டைக் கூடத் தரமாட்டேன்!” என்று கடுமையான குரலில் அவன் சொன்னபோது, நித்தி படக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.

 

பின்னே, தேவையில்லாமல் எதையாவது கதைத்து அந்த வீட்டையும் இழந்துவிட்டால்?

 

ஆனால், மகனின் பேச்சில் இராசமணிக்குக் கோபம் வந்தது.

 

“இதென்ன ரஞ்சன், தங்கையிடம் அதுவும் திருமணமான பெண்ணிடம் இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாய். எங்கிருந்து இப்படிப் பேசக் கற்றுக்கொண்டாய்?”

 

“எல்லாம் நீங்களும் உங்கள் மகளும் கற்றுத் தந்த பாடம்தான்!” என்று தாயிடமும் சீறினான் அவன்.

 

அவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தார் அவர். அவன் கோபக்காரன் என்பதும் அவரிடம் கோபமாகப் பேசுவான் என்பதும் அவருக்குத் தெரிந்ததே. ஆனால், இத்தனை பேர் முன்நிலையில் அதுவும் சம்மந்தி குடும்பத்தையும் வைத்துக்கொண்டு அவன் காட்டிய கடுமையில் அவருக்கு அவமானமாக இருந்தது.

 

“இதென்னடா பழக்கம். எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் வைத்து அம்மாவிடம் மட்டு மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்?” என்று கடிந்துகொண்டவரை ஏளனமாகப் பார்த்தான் ரஞ்சன்.

 

“எல்லோர் முன்னிலையிலும் பேச்சை ஆரம்பித்து என்னைக் குற்றவாளி ஆக்கியது யார்? நீங்கள்தானே. இவ்வளவு பேரும் நிற்கிறார்கள் என்று அப்போது தெரியவில்லையா உங்களுக்கு? இனித் தனியாகக் கதைப்பதற்கு எதுவுமே இல்லை. இன்றே இப்போதே எல்லோர் மத்தியிலும் எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம்..” என்று முடிவாகச் சொன்னவனை மனம் துணுக்குறப் பார்த்தார் இராசமணி.

 

“என்னடா என்னென்னவோ எல்லாம் பேசுகிறாய்..”

 

“ரஞ்சன்.. ப்ளீஸ் அமைதியாகக் கதையுங்கள்..” என்று அருகில் நின்று முணுமுணுத்த மனைவிஇடம் அவன் ஒன்றுமே சொல்லாதபோதும், அவன் கரம் அவள் கரத்தை அழுத்தி ஆறுதல் கொடுத்தது.

 

“அப்படிப் பேசவைத்தது நீங்கள் தானே! இவ்வளவும் நடந்ததன் பிறகும் இனியும் நான் அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை.” என்றான் தாயிடம் அழுத்தமான குரலில்.

 

அதைக் கேட்டவருக்கு மகன் பேசும் விதமே சரியில்லை என்று பட, பேச்சு முற்ற முதலே விஷயத்தை முடிக்க நினைத்தார்.

 

“அதைப் பிறகு ஆறுதலாக நாம் பேசலாம் ரஞ்சன். முதலில் அவள் விருப்பப் பட்டது போல அந்த வீட்டையும் கடையையும் அவளுக்கே கொடுத்துவிடு. இனி நீ உழைப்பது எல்லாம் உனக்குத்தானே.” என்றார் அவசரமாக.

 

தாயை வெறுப்போடு பார்த்த ரஞ்சன், “நானும் அப்பாவுக்குத் தானேம்மா பிறந்தேன்.” என்றான் திடீரென!

 

“ரஞ்சன்!!” என்று கூவியபடி அமர்ந்திருந்த கதிரையில் இருந்தே எழுந்துவிட்டார் இரசமணி.

 

“உனக்கு என்ன பைத்தியமா? எதையும் கதைக்க முதலில் யோசித்துக்கதை!”

 

“ஏன், நான் கேட்டதில் என்ன தப்பு? நித்திக்காக இவ்வளவு கதைக்கும் நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்? கடை திறப்பதற்காக வீட்டை அடமானம் வைக்கக் கூடத் தரமாட்டேன் என்றுவிட்டீர்களே! அந்த வீட்டில் வைத்த பற்றில் கொஞ்சத்தைக் கூட நீங்கள் என்மேல் வைக்கவில்லையே! எப்போது பார்த்தாலும் அப்பா, அப்பா கட்டிய வீடு, அவரின் செல்ல மகள், அவரின் ஆசை என்று சொல்வீர்களே, நானும் அதே அப்பாவின் பிள்ளை தானே. அது மட்டும் மறந்து போனதா உங்களுக்கு?” என்று கேட்டவனை வாயடைத்துப்போய்ப் பார்த்தார் அவர்.

 

“நன்றாக யோசித்துப் பாருங்கள். என்றாவது எனக்காக எதையாவது செய்தீர்களா நீங்கள்? ஆனால் நான், ஆசையாகப் படித்த படிப்பை விட்டு, கௌரவம் பாராமல் செருப்புக் கடைக்கு வேலைக்குப் போய், கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி அனைத்தையும் செய்தது யாருக்காக? உங்கள் இருவருக்குமாகத்தானே. இவ்வளவு செய்தும் எனக்குக் கிடைத்தது என்னம்மா? பொறுப்பில்லாதவன், பேராசைக்காரன், சுயநலக்காரன் என்கிற பெயர்கள்தானே.”

 

அதைக் கேட்டதும் இராசமணிக்கு ஆத்திரம்தான் வந்தது. “பெற்ற தாய்க்கும் கூடப் பிறந்த தங்கைக்கும் செய்ததைச் சொல்லிக் காட்டுகிறாயே.. நீயெல்லாம் என்ன மனிதன்? நானோ உன் தங்கையோ வந்து உன்னிடம் கேட்டோமா எங்களுக்காகக் கஷ்டப்பட்டு என்று. அல்லது உன் படிப்பை விடச்சொல்லி நான் சொன்னேனா? நீயாகப் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்துவிட்டு இப்போது வந்து இப்படியெல்லாம் சொல்கிறாய். எனக்கு நீ இனி எதுவுமே செய்யத் தேவையில்லை. ஆனால் உன் தங்கை கேட்பதை மட்டும் கொடு. அந்தக் கடையைக் கொடுப்பதால் நீ ஒன்றும் குறைந்து போகமாட்டாய். உனக்குத்தான் இன்னொரு கடை இருக்கிறதே. அதோடு, நீதான் வசதியானவீட்டு மாப்பிள்ளை ஆயிற்றே!” என்று சொன்னவரை முற்றிலும் வெறுத்துப்போய்ப் பார்த்தான் அவன்.

 

“தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!” என்றான் கசப்போடு.

error: Alert: Content selection is disabled!!