அதற்கு மேலும் அவருடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று எண்ணியவன், “நித்திக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் ஒரு குறை இல்லாமல் செய்து முடித்துவிட்டேன். அதோடு, வீட்டையும் தருகிறேன். ஆனால் கடையைத் தரமுடியாது! அப்பாவின் சொத்துக்களை ஏமாற்றி பறித்த இந்த சுயநல கூட்டத்திடம் என் சொத்துக்களையும் இழக்க நான் தயாரில்லை!” என்றான் முடிவாக.
“ஏன் உனக்கு இவ்வளவு பிடிவாதம். அந்தக் கடையில் அப்படி என்ன இருக்கிறது என்று அதைப் பிடித்துக்கொண்டு இப்படித் தொங்குகிறாய்?” என்றவரிடம், “அதில் இருப்பது என் உழைப்பு! நான் பட்ட கஷ்டம்!!” என்றான் மகன் ஆத்திரத்தோடு!
“என் உழைப்பை யாருக்கும் தாரைவார்க்க என்னால் முடியாது! அண்ணா கடையை எனக்குத் தா என்று நித்தி பாசமாகக் கேட்டிருக்க கட்டாயம் கொடுத்திருப்பேன். அதை விட்டுவிட்டு இவ்வளவு பேருக்கும் முன்னால் வைத்து, மறுக்க முடியாத நிலையில் என்னை நிறுத்திக் கேட்டால், அவளின் மிரட்டலுக்குப் பணிவேன் என்று நினைத்தாளா? பாசத்துக்கு அடங்கலாம் ஆனால் மிரட்டலுக்கு அடங்க முடியாது. என் அம்மா என் தங்கை என்று நான் வாழ்ந்ததும் போதும்! பட்டதும் போதும்! இனியாவது என் மனைவி என் குடும்பம் என்று எனக்காக வாழ்ந்துகொள்கிறேன். அதனால் நாங்கள் இனி உங்கள் வீட்டுக்கு வரவில்லை. தனியாகவே போய்க்கொள்கிறோம்.” என்று அழுத்தமான குரலில் உறுதியாகச் சொன்னவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் எல்லோரும்.
இராசமணியோ மகன் இப்படிச் சொல்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவன் பேச்சில் உறைந்து நின்றவரை விரக்திப் புன்னகையோடு பார்த்தவன், “கவலைப் படாதீர்கள். என் கடமையை என்றும் நான் செய்யாமல் விடமாட்டேன். உங்கள் செலவுக்கு அடுத்தவரின் கையை நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, உங்கள் பெயரில் வங்கியில் பணம் போட்டுவிடுகிறேன். அதோடு அப்பாவின் பென்ஷன் பணமும் நான் இன்னும் திருப்பித் தரவில்லையே! அதையும் வட்டியோடு தந்துவிடுகிறேன்! உங்கள் மகளோடே நீங்கள் இருந்து கொள்ளுங்கள்!” என்று முடிவாகச் சொன்னவன், அவர்களின் பதிலை எதிர்பாராமல் மனைவியை அழைத்துக்கொண்டு மாமனாரிடம் வந்தான்.
“அங்கிள், இன்று ஒருநாளைக்கு இவள் உங்கள் வீட்டில் தங்கட்டும்.” என்றான் அவரிடம்.
“ரஞ்சன், இதென்ன ஒருநாள் என்கிறாய்? காலம் பூரா நீங்கள் எங்களுடனே இருக்கலாம். எங்களுக்கும் வேறு யார் இருக்கிறார்கள். யார் யாரோ என்னென்னவோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் காதில் போடாதே! மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நீயும் வா. நாம் எல்லோரும் ஒன்றாகவே இருக்கலாம்.” என்றவரிடம் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தியவன், “அப்பாவுடன் வீட்டுக்குப் போ..” என்றான் மனைவியைப் பார்த்து.
சம்மதமாகத் தலையை ஆட்டியவளின் விழிகளில் காதலும் பெருமிதமும் நிரம்பி வழிந்தது. பின்னே, அதுநாள் வரை அம்மா, தங்கை என்று இருந்தவன், அவளை மனைவியாக மனமார அங்கீகரிக்காமல் இருந்தவன் இன்று அனைவரின் முன்னாலும் அவளை என் மனைவி என்று சொல்லிவிட்டானே!
தான் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் வீணாகவில்லை என்று நினைத்தவளுக்கு அவனை விட்டுப் போகவே மனமில்லை.
“நீங்கள்..?” என்று கேட்டாள்.
“அதுதான் நீயே சொன்னாயே. எதையும் இடையில் விடாமல் முழுதாகச் செய்து முடியுங்கள் என்று. அவர்களை வீட்டில் விட்டுவிட்டு மிகுதி வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன்.” என்றான் அவன்.
“வருவீர்களா?” ஏக்கத்தோடு கேட்டவளின் குரலில் நம்பிக்கையின்மை அப்பட்டமாகவே வெளிப்பட்டது.
அவளுக்கு ஏனோ அவனைப் பிரியவே மனமில்லை. அப்படியே அவனுடன் ஒட்டிக்கொள்ள மாட்டோமா, அவன் கைச்சிறைக்குள் அடங்கிவிட மாட்டோமா என்று மனம் துடித்தது.
என்றும் போல் அன்றும் மனையாளின் விழிகள் பேசிய மொழிகள் புரிய உள்ளே மனம் தடுமாறினாலும், “கண்டிப்பாக வருவேன். நீ போ..” என்றான் எதையும் காட்டிக் கொள்ளாது.
வேறு வழியின்றி சரி என்பதாக தலையை ஆட்டிவிட்டு நடந்தவள், அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள்.
அவள் சென்று மறையும்வரை அவளையே பார்த்திருந்த ரஞ்சனும், தன் வேலைகளைப் பார்க்கச் சென்றான்.
வீட்டுக்கு வந்துசேர்ந்த சித்ராவின் மனம் கணவனையே சுற்றிச் சுற்றி வந்தது.
அதுநாள் வரை அவளை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியை மணக்க நினைத்தவன் தானே என்று எண்ணியவளால் இன்று அப்படி நினைக்க முடியவில்லை.
தாயையும் தங்கையையும் மட்டுமே முதன்மையாக எண்ணி வாழ்ந்தவனுக்குத் தான் இரண்டாம் பட்சமாகத் தெரிந்திருக்கிறோம் என்கிற உண்மை, அவன் தாயுடன் கதைத்ததைக் கேட்டபிறகு மெல்ல மெல்லப் புலப்பட்டது.
ஆனாலும், அன்று கடையில் வைத்து நடந்த சம்பவத்துக்குப் பிறகும் இன்னொருத்தியை மணக்கத் தயாரானதை எப்படி ஏற்கமுடியும்?
எந்தச் சமாதானத்தைச் சொல்லியும் அந்த மனக்குறையை அவளால் நீக்கவே முடியவில்லை.
கணவனைப் பற்றிய எண்ணங்களிலேயே உழன்றவள் தாய் இரவு உணவுக்கு அழைக்க, பசியில்லாதபோதும் அவர் சாப்பிடாமல் விடமாட்டார் என்பதால் பெயருக்குக் கொறித்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.
திருமணத்துக்குச் சென்றுவந்த களைப்பு நீங்க உடல் கழுவி, புழுங்கிக் கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் இதமாக நைட்டியை அணிந்துகொண்டாள்.
அப்படியிருந்தும் அவளருகில் தூக்கம் வருவேனா என்றது.
நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. இனியும் அவன் வீட்டுக்கு வருவான் என்று கொஞ்சமாக இருந்த நம்பிக்கையும் பறந்தோடியது. சாப்பிட்டு இருப்பானா? எங்கே தங்குவான் என்கிற கேள்விகள் தோன்ற, அதற்கு மேலும் சும்மா இருக்க முடியாமல் அவனுக்கு அழைத்தாள்.
அந்தப் புறம் எடுத்தவன், “யாழி… உன்னோடு பிறகு கதைக்கிறேன்..” என்றுவிட்டு, அவளின் பதிலை எதிர்பாராது வைத்துவிட்டான்.
கைபேசியைத் தன் அருகிலேயே வைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தவள் அவனுடைய அழைப்புக்காகக் காத்திருந்தாள். எவ்வளவு நேரம் சென்றதோ.. அதைப் பார்த்தபடியே அவள் விழிகள் மெல்ல மெல்ல மூடின.
நேரம் இரவு பதினொன்றைக் கடந்துகொண்டிருக்க சித்ராவின் வீட்டு அழைப்புமணி ஒலித்தது.
அன்றைய திருமணத்தில் நடந்த களோபரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சந்தானம் தம்பதியர் இந்த நேரத்தில் யார்.. ரஞ்சனாக இருக்குமோ என்று எண்ணியபடி வந்து கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்தான் ரஞ்சன்.
“சாரி அங்கிள், கொஞ்சம் பிந்திவிட்டது. உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிட்டேனா?” என்றான் மன்னிப்புக் கோரும் குரலில்.
“நாங்கள் இன்னும் உறங்கவே இல்லை ரஞ்சன். நீ உள்ளே வா.” என்றவர், அவன் சிறு சங்கடத்துடன் வீட்டுக்குள் வந்ததும், அமர்ந்துகொள்ள இருக்கையைக் காட்டினார்.
அவன் அமர்ந்ததும், “லக்ஷ்மி, சாப்பாட்டை எடுத்து வை. அவன் பசியோடு இருப்பான்..” என்று மனைவியை ஏவினார்.
அவரும் வேகமாக உள்ளே செல்ல எத்தனிக்க, “இல்லை அங்கிள் எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டுவிட்டேன்..” என்றவனின் பேச்சைக் காதில் வாங்காமல், “கொஞ்சமாகச் சாப்பிடுங்கள் தம்பி. சுடச்சுட தோசை கொண்டு வருகிறேன்..” என்று மருமகனைத் தானும் உபசரித்தார் லக்ஷ்மி.
திருமணம் ஆனபிறகு முதன் முதலாக அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான் என்கிற பரபரப்பு அவர்களுக்கு இருந்தது.
அதை உணர்ந்தபோதும், “இப்போது எதுவும் வேண்டாம் ஆன்ட்டி. எனக்குப் பசியில்லை. காலையில் சாப்பிடுகிறேன்..” என்றவனிடம், “சரி, அப்படியானால் ஒரு கப் பாலாவது அருந்துங்கள்.” என்ற லக்ஷ்மி, அவன் பதிலை எதிர்பாராது வேகமாகச் சமையலறைக்குள் நுழைந்தார்.
ரஞ்சனின் விழிகளோ தூங்கியிருப்பாள் என்று தெரிந்தபோதும் அந்த வீட்டுக்குள் சித்ராவைத் தேடின.
அவன் தேடலின் பொருள் உணர்ந்து, “சித்து அவள் அறையில் இருக்கிறாள்.” என்றார் அவன் மாமனார்.
அவர் தன்னைக் கண்டுகொண்டதை உணர்ந்ததும் மெல்லிய சங்கடம் தோன்ற, “கடையிலேயே தூங்கலாம் என்றுதான் நினைத்தேன். யா.. சித்ரா கவலைப்படுவாள் என்றுதான் வந்தேன் அங்கிள்.” என்றான் அப்போதும் தயக்கத்துடன்.
“இதென்ன பேச்சு ரஞ்சன். உனக்கென்று வீடு இங்கே இருக்கையில் நீ ஏன் அங்கு தூங்கவேண்டும்.” என்று உரிமையோடு கடிந்துகொண்டார் சந்தானம்.
“அதுதானே தம்பி. சித்து கூட இவ்வளவு நேரமும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். தூங்கிவிட்டாள் போல. இல்லாவிட்டால் உங்கள் குரல் கேட்டதும் கீழே வந்திருப்பாள்.” என்றபடி, கையில் பாலோடு வந்த லக்ஷ்மி அதை மருமகனிடம் நீட்டினார்.
நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவனிடம், “திருமண வேலைகள் எல்லாம் முடிந்ததா ரஞ்சன்?” என்று மேலோட்டமாக விசாரித்தார் சந்தானம்.
“ஆமாம் அங்கிள். வீட்டில் எல்லோரையும் விட்டுவிட்டு, எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன். எங்கள் பொருட்கள் அங்கே அம்மா வீட்டில் இருந்தது. அதை எல்லாம் கடைக்கு மாற்றிவிட்டேன்.” என்றவனை அவர் கேள்வியாகப் பார்த்தார்.
“அங்கே பெரிய கடையின் மேல் தளம் ஸ்டோர் ஆகப் பாவிக்கலாம் என்றுதான் முதலில் எடுத்திருந்தேன். இப்போது அங்கேயே நாங்கள் தங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன் அங்கிள்.”
“என்ன ரஞ்சன் இது. வேற வீடு பார்க்கும் வரையிலாவது இங்கே இருப்பீர்கள் என்று நினைத்தேனே.. நீயானால் இப்போது இப்படிச் சொல்கிறாயே..” மனத்தாங்கலுடன் சொன்னார் சந்தானம்.
“அதனால் என்ன அங்கிள். தங்குவது மட்டும்தானே அங்கே. மற்றும்படி கடையில் வைத்து நாம் தினமும் பார்த்துக் கொள்ளத்தானே போகிறோம்.” என்று தன்மையாகச் சொன்னபோதும் அவன் குரலில் உறுதி இருந்தது.
அவனது தன்மானத்தைப் பற்றியும் சுயகெளரவத்தைப் பற்றியும் அறிந்தவர் ஆகையால் மனமில்லாத போதும் அதற்குச் சம்மதித்தார் சந்தானம்.
அருந்தி முடித்த பால் கப்பை மேசையில் வைத்தபடி, “நாளைக்கே அங்கே போய்விடலாம் என்று இருக்கிறேன் அங்கிள். இன்றே கொஞ்சம் வீட்டுக்குப் பொருட்களும் வாங்கிப் போட்டேன். அதுதான் இவ்வளவு நேரம் எடுத்துவிட்டது.” என்றான் ரஞ்சன்.

