அத்தியாயம்-32
இனிய காலைப் பொழுதில், திறந்திருந்த ஜன்னல் வழியாக சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோத மெல்லக் கண்விழித்தாள் சித்ரா. விழித்ததும் அவள் விழிகளில் தெரிந்தது நன்றாக உறங்கும் கணவனின் கம்பீரமான முகமே! அதுவும் வெகு அருகாமையில்!
தன்னை மறந்து அவன் முகத்தையே பார்த்து ரசித்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிய, தேகம் முழுவதும் பரவியிருந்த இனிமையோடு சில்லிட்ட காற்றின் இதமும் சேர்ந்துகொள்ள, கணவனின் தேகத்தின் சூடு கதகதப்பாக இருக்கவே இன்னும் அவனை அண்டிப் படுத்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தபோதும் மனைவியின் நெருக்கத்தை உணர்ந்து அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொண்டான் ரஞ்சன்.
அவனின் அணைப்புக்குள் இப்படிக் கிடப்பது எவ்வளவு இதம் என்று எண்ணியவளுக்கு, இந்தச் சுகத்தையும் இதத்தையும் இவ்வளவு நாட்களாக இழந்துவிட்டோமே என்று நினைக்கையிலேயே, அதை இழந்ததற்கான காரணங்கள் மெல்ல மெல்ல நினைவலைகளில் மிதந்தன.
அவை மிதக்க மிதக்க அதுவரை அவள் மனதிலும் உடலிலும் இருந்த பரவசம் வடியத் துவங்க, துக்கப் பந்து தொண்டையை அடைக்க அவள் உடலோ இறுகியது.
என்ன காரியம் செய்துவிட்டாள்?
அன்றே அவளாகத்தான் அவனைத் தேடி வந்தாள் என்று சொன்னவன், இன்று நான் அணைத்ததும் மயங்கிவிட்டாயோ என்று கேட்பானோ என்று நினைத்ததுமே அவள் உடல் தூக்கிப்போட்டது.
அதிலே அவன் தூக்கம் கலைய, அவளை அணைத்திருந்த கையால் கன்னம் வருடி, “தூங்கு யாழி..” என்றான், உறக்கம் கலையாத குரலில்.
அவளும்தான் அவன் அணைத்ததும் இணங்கிவிட்டாளே என்று எண்ணியவளின் விழிகளில் இருந்து வழிந்த சூடான கண்ணீர் மிக வேகமாக இறங்கிக் காதுகளை நனைத்தது.
அவளது கன்னத்தை வருடிக்கொண்டிருந்த ரஞ்சன், விரல்களில் ஈரத்தை உணர்ந்து சட்டென விழித்துப் பார்த்தான்.
“யாழி..? என்னமா? ஏன் அழுகிறாய்?”
என்னவென்று சொல்வாள்?
மனதில் நினைப்பதைச் சொல்லவும் முடியாமல், தான் அழுவதை அவனுக்குக் காட்டவும் பிடிக்காமல், அதை மறைக்கவும் தெரியாமல் தடுமாறியவள், அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். உடலோ அழுகையில் குலுங்கியது.
ரஞ்சனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் காதோரமாய் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி, “யாழி! இங்கே பார். அழாமல் என்னவென்று சொல்லு. சொன்னால் தானே எனக்குப் புரியும். ஏன் அழுகிறாய்?” என்றவனின் பேச்சு அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
அவளை அணைத்து, முதுகைத் தடவிக்கொடுத்து ஆறுதலாகப் பேசியும் பார்த்தான். அனைத்துக்கும் பலனின்றிப் போகவே, அடுத்து என்ன செய்வது என்று தெரியாது திகைத்தான் ரஞ்சன்.
சில வினாடிகளை சிந்தனையில் கழித்துவிட்டு, “ஏன் யாழி, இரவு..” என்று ஆர்ம்பித்தவனுக்கு அவன் கொண்ட உறவு அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்த மாத்திரத்தில் வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டன.
நெஞ்சம் முழுவதும் கசந்துவழிய தொண்டையைச் செருமி, “..என்னுடன் வாழ உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று வறண்ட குரலில் கேட்டான்.
கன்னங்களில் வழிந்த கண்ணீரோடு உடனேயே தலையை மறுப்பாக அசைத்தவளின் கரங்கள் மிக வேகமாக அவனை அணைத்துக் கொண்டன.
இனி எல்லாம் சுகமே என்று அவன் நினைத்திருக்க, திடீரென அவள் வடித்த கண்ணீரில் எதையெதையோ நினைத்துக் கலங்கியவனுக்கு அவளின் அணைப்புப் பெரும் இதமாக இருந்தது.
மனம் உருக, “பிறகு என்னமா?” என்று கேட்டவனின் குரலும் உருகிக் குழைந்தது.
“அ..அன்றும் நானாகத்தான் கடைக்கு வந்தேன். நேற்றும் நீங்கள் அணைத்ததும் நா..நான் வந்தேனே.. நீயாகத்தான் என்னிடம் வந்தாய், உனக்கு இதெல்லாம் சாதாரணம் என்று அன்று சொன்னீர்களே. திரும்பவும் அப்படிச் சொல்லிவிடாதீர்கள். என்னால் அதைத் தாங்க முடியாது.” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் விம்மியவளின் பேச்சில் ரஞ்சன் அதிர்ந்து அசைவற்றுப் போனான்.
தாய் தங்கையரின் பிரச்சினைகளை முடித்தாயிற்று, மனைவியுடனும் சேர்ந்து வாழ ஆரம்பித்தாயிற்று. எல்லாமே சரியாகிவிட்டது என்று அவன் நினைக்க, அவளின் அழுகையும் பேச்சும் இன்னும் ஒன்றும் முழுதாகச் சரியாகவில்லை என்பதை உணர்த்தியது.
“உங்கள் மேல் வைத்த அன்பில்தான் அப்படி நடந்தேன். என்னைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பித்தான்.. திரும்பவும் என் அன்பைக் கேவலப் படுத்தி விடாதீர்கள்!” மீண்டும் எதையாவது வலிக்கச் சொல்லிவிடுவானோ என்கிற பயத்தில் அவள் கதற அவன் உள்ளே நொருங்கிக் கொண்டிருந்தான்.
தன் சுயநலத்தால், தன் பேச்சால், தன் குடும்பத்துக்காக என்று அவன் எடுத்த முடிவால் அவள் எவ்வளவு தூரத்துக்குக் காயப் பட்டிருக்கிறாள் என்பதும், தான் காயப் படுத்தியிருக்கிறோம் என்பதும் மிக நன்றாகவே புரிந்தது.
“நீங்கள் என் கணவர். இன்று மட்டுமல்ல அன்றுமே நான் அப்படித்தான் நினைத்தேன். அதனால்தான்.. அன்று.. அப்படி.. நீங்கள் கூப்பிட்டதும் வந்தேன். நீங்களானால் என்னை, என் அன்பை அசிங்கப் படுத்திவிட்டீர்களே…” என்று அழுகையோடு தொடர்ந்தவளின் பேச்சில் உள்ளம் குன்றிப் போனான் ரஞ்சன்.
அவன் செய்த பிழைக்கு அவள் இப்படி வேதனைப் படுகிறாளே என்று துடித்தவன், “லூசாடி நீ? நான் தான் ஏதோ விசரன் மாதிரி உளறினேன் என்றால் நீயும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குவாயா? போடா நீயும் உன் பேச்சும் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டாமா?” என்றான் எரிச்சலுடன், தன் மீது இருக்கும் கோபத்தை அவள் மீது காட்டி.
திடீரென அவன் காட்டிய சினத்தில் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரோடு அவள் திகைத்து விழிக்க, “அன்று நடந்ததற்கும், நேற்று நடந்ததற்கும் நான் மட்டுமே பொறுப்பு யாழி. அது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றான் அழுத்தமான குரலில், அவள் மனதில் பதியும் விதமாக.
“பின்னே அன்று அப்படிச் சொன்னீர்களே..” அதைச் சொல்லும்போதே அவள் இதழ்கள் அழுகையிலும் கோபத்திலும் பிதுங்கியது.
“என் யாழி..!” என்றபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் ரஞ்சன்.
“உன் புருஷன் ஒரு மடையன் என்று நினைத்து அதையெல்லாம் மறந்துவிட மாட்டாயா?” என்று தணிவாக அவன் கேட்டபோது, அழுகையில் துடித்த அவள் இதழ்கள் இப்போது புன்னகையில் துடித்தன.
நெஞ்சுக்குள் இருந்த வலியை அவளுக்குக் காட்டாமல், “என்னை மடையன் என்று சொன்னதும் உனக்குச் சிரிப்பு வருகிறதா..” என்று பொய்யாக அதட்டியவன், அவள் நெற்றியில் தன் உதடுகளை நேசத்தோடு பதித்தான்.
அவள் கன்னங்களையும் கண்களையும் இதமாகத் துடைத்துவிட்டான்.
“இதென்ன தொட்டதற்கும் அழுகை. என் யாழி எதையும் எதிர்த்துப் போராடும் வீராங்கனை இல்லையா? ஏனடா அப்படிச் சொன்னாய் என்று என் சட்டையைப் பிடித்துச் சண்டை போடவேண்டாமா?” என்று செல்லமாகக் கடிந்துகொண்டான்.
வியப்போடு அவனைப் பார்த்தாள் சித்ரா. பின்னே, காதல் கணவனாக அவளைக் கொஞ்சுகிறானே! கடிந்துகொள்கிறானே!! காதலித்த.. அதாவது அவனும் அவளைக் காதலிக்கிறான் என்று அவள் நம்பிய காலத்தில் கூட அவன் இப்படி நடந்து கொண்டதில்லையே!
மனதில் குழப்பங்களும், கேள்விகளும் அப்படியே இருந்தபோதும் அதையெல்லாம் வாய்விட்டுக் கேட்கும் தெம்போ தைரியமோ அவளிடம் இல்லை.
அதைக் கேட்டு அவனிடம் இருந்து கிடைக்கும் இந்தப் பரிவையும், பாசத்தையும், நேசத்தையும் இழக்க இனியும் அவள் தயாராக இல்லை! அவை போலியாக இருந்தாலும் கூட!
அவன் அவளை மறுத்தபோது தைரியமாக எதிர்த்து நின்று போராடியவள் இன்று அவன் அன்பையும் நேசத்தையும் காட்டிய போது கோழையாகி நின்றாள்.
அவளை அணைத்தபடி படுத்திருந்த ரஞ்சனின் புருவங்கள் சுளித்திருந்தன.
அவன் மனதில் புதைந்து கிடக்கும் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபோதும், தயக்கமாகவும் இருந்தது.
அவன் சொல்லப் போகும் எதுவுமே அவளுக்கு உவப்பானதாய் இராதே! அவளைக் கௌரவப் படுத்தாதே! அதனால் தான் அவள் கேட்டதற்கு எதையோ சொல்லிச் சமாளித்தான்.
ஆயினும் தகுந்த நேரம் பார்த்து சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தவன் அவளை அணைத்தபடியே கிடந்தான்.
அவளும் எதையும் சிந்திக்காமல் சிந்திக்கத் தோன்றாமல் அவன் கைவளைவுக்குள் கிடப்பதே சொர்க்கம் என்றெண்ணி அப்படியே கிடந்தாள்.
விடியல் பொழுது மிக நன்றாகவே புலர்ந்துவிட்டதை ஜன்னல் வழியே கண்ட ரஞ்சன்,மனமே இன்றித் தன் கரங்களைத் தளர்த்த எழுந்துகொண்ட சித்ரா குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.

